தன் மீது கை போட்ட சசியின் கரத்தை விலக்கி விட்டாள் தென்றல்..
“ப்ச் என்ன தென்றல்.. ஏற்கனவே செம காண்டுல இருக்கேன். நீயும் புரிஞ்சிக்க மாட்ற”.. மீண்டும் அவளை தன் கை வளையத்திற்குள் கொண்டு வந்தான் சசி.. குழந்தைகள் விழித்து விடுவார்கள் என்பதால் குரலை மிகவும் தாழ்த்தி பேசினான்.
தென்றலுக்கு சற்று முன்பு நடந்த அவமானம் கண் முன் வந்து போனது.. மனதை கல்லாக்கி கொண்டாள் தென்றல்.. சசியின் கரம் அத்து மீறியது.. தென்றல் அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்தாள். அவளுக்கு பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அதற்கு மேலும் விரும்பமில்லாமல் கூட அவன் மனமே இடம் தரவில்லை.
ஒரு கையை தலைக்கு அடியில் கொடுத்து இன்னொரு கரத்தை நெற்றியில் வைத்திருந்த சசி,
“நாளைக்கு எனக்கு ஒரு பத்தாயிரம் வேணும் டி.. ஜிபே பண்ணிடு”அசால்ட்டாக அவன் கூற தென்றல் எழுந்தே அமர்ந்து விட்டாள்.
“எதுக்கு அவ்ளோ…”அவள் குரல் அவசரமாக வெளிப்பட்டது.
“ஓ எஸ் போச்சி லேப்டாப்ல.. நாளைக்கு ஈவினிங் எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. அதுக்குள்ள லேப்டாப் வேலை பாக்கணும்.. உனக்கு சம்பளம் போட்ருக்குமே.. இந்த மாசம் கூட்டு அமௌன்ட் வரும்னு சொன்னியே”.. பொங்கி வந்த ஆத்திரத்தை சமன் செய்ய முடியாமல் சில நொடிகள் அமைதியாக கழித்தாள் தென்றல்.
“அந்த அமௌன்ட் உங்களோட வெட்டி செலவுக்கு கிடையாது..பெரிய பாப்பாக்கு ஒரு கம்மல் எடுக்கணும்னு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சது.. வெக்கமா இல்லை உங்களுக்கு? என் காது கழுத்துல இருந்த எல்லாத்தையும் மொட்டை அடிச்சிட்டிங்க.. பசங்க காதுல கூட ஒரு பொட்டு தங்கம் கிடையாது. பேரு தான் பெரிய நகை கடைக்காரங்க வீடு. உங்க அம்மா இந்த வயசுலயும் உடம்பு பூரா நகை போட்டுட்டு வீட்ல இருக்காங்க. சின்ன புள்ளைங்க. ஒரு கிராமுக்காவது தோடு எடுத்து போட்டு இருக்கலாம் இல்ல.
இந்தப் பிள்ளைங்க என்ன எனக்கு மட்டுமா பொறந்துச்சுங்க? அப்பா நீங்க தானே? உங்க அம்மா தானே உங்கள பெத்தாங்க? என் பிள்ளைங்க வேணாம் நான் வேணா ஆனா நீங்க மட்டும் வேணும்..” எரிந்து விழுந்தாள் தென்றல்.
சசிக்கு தென்றலின் ஆதங்கம் தேவையில்லாத ஒன்று. அவனுடைய எண்ணம் முழுவதும் லேப்டாப்பை சரி பண்ணுவதிலிருந்தது.. அம்மாவிடம் காசு கேட்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
அதனால் மனைவியிடம் பணிந்து போக ஆரம்பித்தான்.
” என்னடி பேசுற.. உனக்கே தெரியும் என் நிலைமைக்கு நான் சொகுசா கால் மேல கால் போட்டுட்டு முதலாளி நாற்காலியில உட்கார முடியும்.. எதுக்காக நாய் மாறி அலைஞ்சுகிட்டு இருக்கேன் என் கனவை தேடி.. சினிமா என்னோட கனவு. என் அப்பா மட்டும் எனக்கு பினான்ஸ் பண்ணிருந்தா இந்நேரம் நம்ம ரேஞ்சே வேற.. பெத்த பிள்ளைய கை தூக்கி விட மாட்றாங்க..
எனக்கு உன்ன விட்டா வேற யாரு இருக்கா? யாருகிட்ட போய் நான் கை நீட்ட முடியும்? உன்னை ராணி மாதிரி வச்சுக்கறதுக்கு தான் நான் எல்லாம் பண்றேன். உனக்கே அது புரியலன்னா வேற யாருக்கு புரிய போது.. ” திரும்பி படுத்து விட்டான் சசி.. இம்மாதிரியான பல டிராமாக்களை அவள் இந்த பதினோரு வருடத்தில் சந்தித்து விட்டாள்.
ஆம் டிராமா தான்.. எப்படியும் தன்னிடமிருந்து பணத்தைப் பெற்று விடலாம் என்பது சசியின் எண்ணம் என்று புரிந்து கொண்டிருந்தாள் தென்றல்.. தன்னை நம்பி இந்த உலகத்தில் அவதரித்த இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று அவன் சிந்தையில் துளி யோசனை கிடையாது..
அவனுடைய கனவு. அவனுடைய சினிமா. அவனுடைய எழுத்து. கற்பனை உலகத்தில் மட்டுமே எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் திரிலோகன் அவன்.. நிகழ்காலத்தைப் பற்றி அடியோடு மறந்து போயிருந்தான். தன்னுடைய வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் படும் அவமானத்தை துளியும் உணராமல் எப்படியாவது கற்பனை கோட்டையை எட்டிப் பிடித்து விட துடித்துக் கொண்டிருக்கும் கற்பனைவாதி.
நாளை உறுதியாக தான் கேட்ட பணம் வந்து விடும் என்கிற நிம்மதியில் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றான் சசி மித்ரன்.. தென்றலுக்கு உடல் அசதியாக இருந்த போதிலும் உறக்கம் வர மறுத்தது. அடுத்த மாதம் அவள் தங்கையின் திருமணம்.
அக்காவாக ஒரு மோதிரமாவது போட்டாக வேண்டும்.. குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.. கணவனின் மெத்தன போக்கு அவள் வயிற்றில் புளியைக் கரைத்தது..
மின்னி மிளிர்ந்து கொண்டிருந்த அறை விளக்கின் ஒளியில் கணவனின் முகத்தை ஆராய்ந்தாள். எதை பார்த்து அவனை காதல் கொண்டால்? எவ்வளவு யோசித்தாலும் அந்த ஒற்றைக் கேள்விக்கு பதில் என்னவோ பூஜியம் தான்.
கணக்குப் போட்டு செலவுகளை சமாளிக்க முடியாமல் மாத இறுதியில் கையை பிசையும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள் இளந்தென்றல்.. அப்பா பரசுராம் பேங்கில் கிளர்க். அம்மா வாசுகி இல்லத்தரசி. தென்றலுக்கு ஒரு தங்கை வான்மதி.. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கொள்கையோடு இரண்டு பிள்ளைகள் பிறந்ததும் உடனே ஓடிச் சென்று குடும்ப கட்டுப்பாட்டு சிகிச்சையை மேற்கொண்ட நல்ல மனிதர் பரசுராம்.
கணவன் கொடுக்கும் சம்பளத்தில் வீடு கட்ட வாங்கிய லோன், வீட்டு செலவு, மருத்துவ செலவு, பிள்ளைகள் செலவு இதுபோக பரசுராமின் தங்கை மாதம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி அண்ணன் வீட்டிற்கு வந்து அமர்ந்து விடுவார். அவளுக்கு தண்டம் அழுதேயாக வேண்டும்..
மேலும் மாதத்தில் பாதி நாட்கள் உறவுகளின் இம்சை வேறு. செய்முறை செய்தே கையில் இருந்த சேமிப்பு எல்லாம் கரைந்து போனது.. அம்மா அப்பா தங்கை இவ்வளவுதான் தென்றலின் குட்டி உலகம். மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட குழந்தை அவள்.
தன்மானத்தையும் சுயமரியாதையையும் சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்திருந்தார் வாசுகி.. அனைத்துமே சரியாக தான் சென்று கொண்டிருந்தது..
இளந்தென்றல் பத்தாவது தொடும் வரை.. அந்த வருட விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு செல்லும் வரை.. அனைத்திற்கும் மேலாக அத்தை மகன் அகிலனின் நண்பனான சசி மித்ரனை காணும் வரை.
புலி தன்னுடைய காயங்களை வலிக்க வலிக்க நக்குவதை போல தன்னுடைய காதலின் காயத்தை வலிக்க வலிக்க நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள் இளந்தென்றல்.
அப்பொழுது கோயம்புத்தூரில் அவள் பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.. பரீட்சை முடிந்து விடுமுறை ஆரம்பித்தது.. மாதவி பரசுராமின் ஒரே தங்கை.. சென்னையிலிருந்து மாதம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி அண்ணன் வீட்டிற்கு வந்து விடுவார். ஒவ்வொரு வருட விடுமுறையின் போதும் மாதவிக்கும் அவரின் பிள்ளைகளுக்கும் பரசுராமின் வீடு தான் அடைக்கலம்.
மாதவி செய்யும் அக்கப்போரை கண்டாலே தென்றலுக்கு பற்றி கொண்டு வரும்.. இத்தனைக்கும் வாசுகி ஒரு வார்த்தை பேச மாட்டார். முடிந்த அளவிற்கு நாத்தனாரை நன்றாகவே கவனித்து அனுப்புவார். வீட்டுப் பெண்களை நன்றாக பார்த்தால் தன் பெண்கள் போகிற வீட்டில் நன்றாக வாழ்வார்கள் என்ற எண்ணம் அவருக்கு.
பரசுராமின் அம்மா இருந்தவரை மருமகளுக்கு முழு ஆதரவு கொடுத்தார். மாதவியின் ஆட்டம் பங்கஜத்திடம் செல்லாது.
” என்னடி உன் ஆட்டம் ஓவரா இருக்கு.. கட்டிக் கொடுத்து அனுப்பிட்டா அது தான் உன் வீடு. சும்மா அண்ணன் நொண்ணன்னு இங்க வந்து இருக்கறதையும் புடிங்கிட்டு போக பாக்காத. ஊரை சுத்தி கடன் வாங்கி தான் என் மகன் உன்னை கட்டிக் கொடுத்தான்.. இதுக்கும் மேல செய்ய எங்களுக்கு சக்தி பத்தாது.. வந்தியா சாப்டியா ஊர் கத பேசினியான்னு ஊர பார்த்து கிளம்பு..அனாவசியமா என் மருமகளை குறை சொல்லிட்டு இருந்த நல்லா இருக்காது பாத்துக்கோ..” பங்கஜம் மாதவியை கடிந்து கொள்ள அண்ணனிடம் கண்ணை கசக்குவார் மாதவி.
“ம்மா நம்மள விட்டா அவளுக்கு யாரு இருக்கா.. ஏன் இப்படி பேசுற.. இது அவ வீடு.. என்னால முடிஞ்ச வர என் தங்கச்சிய பாத்துக்குவேன்”..மகன் தங்கை மேல் வைத்திருந்த பாசம் பங்கஜத்திற்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் மகளின் குணம் அவருக்கு வேதனையை அளித்தது.
மாமியாருக்கு ஆறுதல் கூறினார் வாசுகி. வாசுகியின் பொறுமை மட்டுமே அந்த உறவை இழுத்து பிடித்தது.. அந்த முறை விடுமுறைக்கு ஊருக்கு வரவில்லை என்று வாசுகியிடமிருந்து தகவல் வந்தது..
” அவர் என்ன சொல்ல போறாரு.. கிரகப்பிரவேசம். இந்த நேரத்தில் அங்க வந்து உட்கார்ந்தா வேலை யார் பார்க்கிறது.. “
” அடுத்த வாரம் தானே கிரகப்பிரவேசம்.. ஒரு வாரம் இங்க வந்து நல்லா சந்தோஷமா இருந்துட்டு போறது..” மாதவிக்கு பெருமையாக இருந்தது.
” அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நீ என்ன பண்ணு உடனே குடும்பத்தோட கிளம்பி இங்க வந்துரு.. ” என்னதான் மாதவி அண்ணனிடம் வழிப்பறி பண்ணினாலும் அவருக்கும் பரசுராமை விட்டால் வேறு உறவுகள் கிடையாது.
கணவனின் வீட்டு உறவுகள் மட்டுமே வீடு முழுவதும் இப்பொழுதே நிறைந்திருக்க தொடங்க தனக்கும் உறவுகள் உண்டு என்பதை காட்டுவதற்காகவே அண்ணனை ஒரு வாரம் முன்பாக கிரகப்பிரவேசம் நடந்த போகும் வீட்டிற்கு அழைத்தார் மாதவி.
” அதெல்லாம் சரி படாது இங்க வேலை இருக்கு.. அடுத்த வாரம் வரேன்” மாதவியின் எண்ணம் பரசுராமிற்கு புரிந்தே இருந்தது. நாசுக்காக தவிர்த்து விட்டார்.
” நீ வரலைன்னா என்ன பிள்ளைங்க ரெண்டு பேரையும் அனுப்பி விடு. நீயும் அண்ணியும் அப்புறம் வாங்க.. ” தனியாக பிள்ளைகளை அவ்வளவு தூரம் அனுப்புவதில் பரசுராமுக்கு உடன்பாடு கிடையாது.
” வயசுக்கு வந்த பிள்ளைகளை தனியா எப்படி அனுப்புறது அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. ” அண்ணன் எதனால் மறுக்கிறார் என்பதை புரிந்து கொண்ட மாதவி
” சரி நான் அகிலன அனுப்புறேன். அவன் கூட பசங்கள அனுப்பி வை.. வீடு முழுக்க அவங்க சொந்த பந்தம் தான் நிறைஞ்சிருக்கு. பிள்ளைங்க வந்தாலாவது எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். எனக்கு உங்கள விட்டா இவரை யாரு இருக்கா” இந்த ஒரு வார்த்தை போதும் பரசுராமின் இதயத்தை கரைக்க.
சொன்னதைப் போலவே அடுத்த இரண்டு நாட்களில் வந்து நின்றான் அகிலன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்.. அகிலனின் ஆர்வமான பார்வை தென்றலின் மீது படிவதை ஒரு தாயாய் வாசுகிக்கு உணர முடிந்தது. கணவனிடம் கூறினால் எங்கே திருமணம் பந்தத்திற்கு இப்பொழுது முடிச்சு போட்டு விடுவார்கள் என்கிற பயத்திலே வாயை மூடிக் கொண்டார். பரசுராமை பொறுத்தவரை எப்பொழுது என்ன முடிவு எடுப்பார் என்பது அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஆயிரம் பத்திரங்கள் கூறி இரண்டு பெண்களையும் அகிலனோடு சென்னை அனுப்பி வைத்தார் வாசுகி..
முதல்முறையாக பெற்றோரை பிரிந்தது வருத்தம் என்றால் தனியாக இவ்வளவு தூரம் ரயில் பயணம் செய்வது சுகமாக இருந்தது. அதிலும் அகிலன் அவளை விழுந்து விழுந்து பார்த்துக் கொள்ள சிறிது கர்வம் கூட ஏற்பட்டது.. தங்கையோடு பேசிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஓரக் கண்ணால் தன்னை சைட் அடிக்கும் அத்தை மகன் அகிலனை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டாள் இளந்தென்றல்.
அவளின் ஓர விழி பார்வை அகிலனுக்கு பல வண்ணக் கனவுகளை அள்ளிக் கொடுக்க சுகமாக கனவு காண ஆரம்பித்து விட்டான்.
யாருக்கு எப்படியோ ஆனால் இந்த பயணம் இளந்தென்றலின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.