கோவையின் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த பழமையும் புதுமையும் கலந்த அழகான ஊர் பேரூர்.
புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நொய்யல் ஆறு, ஆங்காங்கே தென்படும் தென்னை மரங்கள், சிறிய கடைகள், குறுகிய தெருக்கள் என அந்த ஊருக்கென்று தனித்துவமான அழகு இருந்தது.
நகரத்தின் வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், ஊரின் ஒதுக்குப்புறங்களில் இன்னும் கிராமத்து மணம் மாறாத சிறிய ஓட்டு வீடுகளும், எளிய மக்களின் வாழ்க்கையும் தொடர்ந்து கொண்டிருந்தன.
அப்படிப்பட்ட பேரூரின் ஒதுக்குப்புறத்தில்தான் அந்தச் சிறிய வீடும் அமைந்திருந்தது.
அதிகாலை ஐந்து மணி.
இன்னும் இருள் முழுமையாக விலகாத அந்தப் பொழுதில், கோழிகளின் கூவலும் பறவைகளின் சத்தமும் ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கியிருந்தன.
அந்தச் சிறிய ஓட்டு வீட்டுக்குள் மட்டும் அப்போதே வேலைகள் தொடங்கிவிட்டிருந்தன.
சமையலறை என்று தனியாகச் சொல்ல முடியாத ஒரு மூலையில், அடுப்பில் விறகுகளை அடுக்கி ஊதுகுழலால் ஊதித் தீப்பற்ற வைத்துக்கொண்டிருந்தாள் ஓர் இளம்பெண்.
பழைய பருத்திப் புடவை அணிந்திருந்தாள். பின்னால் நீளமாகப் பின்னப்பட்டிருந்த அவளுடைய கூந்தலில் சிறிய கலைவு இருந்தாலும், அவளுடைய இயல்பான அழகை மறைக்க முடியவில்லை.
அவள்தான் இளம்பிறை!
பெயருக்கு ஏற்றாற்போல் அழகான பிறைநிலவைப் போன்ற முகம். பெரிய கண்கள், அடர்த்தியான புருவங்கள், மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம் எனப் பார்ப்பதற்கு அழகான டஸ்கி அழகி.
அவளுக்கு வயது இருபத்து மூன்று.
அந்த வயதில் பல பெண்கள் தங்களுடைய எதிர்காலக் கனவுகளோடு கல்லூரிகளிலும் அலுவலகங்களிலும் சுற்றிக்கொண்டிருக்க, இளம்பிறையோ தன்னுடைய குடும்பத்தின் அடுத்த வேளை உணவுக்கான வழியைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய வீட்டில் அம்மா மீனாட்சி, தம்பி செல்வமணி, பாட்டி எனச் சிறிய குடும்பம் இருந்தது.
ஒருகாலத்தில் அவர்களுடைய வாழ்க்கையிலும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. சிறிய அளவில் விவசாயம் செய்துகொண்டும், கிடைக்கும் வேலைகளைச் செய்துகொண்டும் குடும்பத்தை நடத்தி வந்தார் அவளுடைய அப்பா.
ஆனால், அவருடைய திடீர் மரணம் அந்தக் குடும்பத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
அப்பா இறந்தபோது இளம்பிறைக்குப் பதினாறு வயது. தம்பி ஆரம்ப பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். குடும்பத்தின் ஒரே வருமானமாக இருந்த அப்பாவும் இல்லாமல் போனதால், அவர் விவசாயத்திற்காக வாங்கிய கடனும் குடும்பப் பொறுப்புகளும் அவர்களைச் சூழ்ந்துகொண்டன.
அன்றிலிருந்து வறுமை என்றால் என்னவென்று ஒவ்வொரு நாளும் அனுபவித்துப் பழகிவிட்டாள் இளம்பிறை.
இருந்தாலும், அவள் வாழ்க்கையிடம் தோற்றுப்போகவில்லை.
அன்று காலையிலும் அடுப்பில் கஞ்சி வைத்துவிட்டு, பக்கத்தில் இருந்த பழைய அரிசி டப்பாவைத் திறந்தாள்.
அதில் கொஞ்சமாக அரிசி மட்டுமே இருந்தது.
‘இன்னைக்கு மதியத்துக்கு என்ன சமைக்கிறது? அரிசி தீரப்போகுதே! அம்மாகிட்ட வேற பணம் இல்லை. நேத்து வேலை பார்த்த வீட்டுல கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் இன்னும் கொடுக்கலை.’
அந்த நேரத்தில் உள்ளேயிருந்து இருமல் சத்தம் கேட்டது.
“இளா… இளம்பிறை!”
“இதோ வரேன், அம்மா!”
அடுப்பிலிருந்த கஞ்சியை இறக்கி வைத்துவிட்டு, வேகமாக உள்ளே சென்றாள்.
பழைய மரக்கட்டிலில் படுத்திருந்த அவளுடைய அம்மா மீனாட்சி, எழுந்து உட்கார முயன்றுகொண்டிருந்தார்.
“என்னம்மா? எதுக்கு எழுந்துட்டீங்க? இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருங்க.”
“இல்லம்மா. மணி என்ன ஆகுது? நீ வேலைக்கும் போயிட்டு வந்து வீட்டுலயும் வேலை செய்ற.!”
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். முதல்ல நீங்க இந்தக் கஞ்சியைக் குடிங்க.”
“நீ எப்பப் பார்த்தாலும் என்னைப் பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கே. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா, இளா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் இளம்பிறையின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“என்னம்மா, காலங்காத்தாலேயே ஆரம்பிச்சிட்டீங்களா?”
“நான் என்ன ஆரம்பிச்சேன்? உனக்கு இருபத்து மூணு வயசாகுது. உன் வயசுல இருக்கிற பொண்ணுங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகிக் குழந்தையே பிறந்திருக்கு. நீ மட்டும் இன்னும் நம்ம குடும்பத்துக்காகவே உழைச்சுக்கிட்டு இருக்கியே!”
“அதனால என்னம்மா? நான் உங்களைக் கவனிச்சுக்கிறதுல எனக்கு என்ன கஷ்டம்?”
“உனக்குக் கஷ்டம் இல்லாம இருக்கலாம். ஆனா, உன்னோட வாழ்க்கையை நினைச்சா எனக்குக் கவலையா இருக்கு. நாளைக்கு எனக்கு ஏதாவது ஆகிட்டா உனக்கு யாரும்மா இருக்கா?”
இளம்பிறையின் புன்னகை மெல்ல மறைந்தது.
அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அருகில் அமர்ந்தாள்.
“அம்மா, என்னை நம்புங்க. எனக்கு நீங்க இருக்கீங்க. தம்பி இருக்கான். நம்ம பாட்டி இருக்காங்க. இதைவிட எனக்கு வேற என்ன வேணும்?”
“எல்லாம் சரிதான். ஆனா, ஒரு பொண்ணுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கணுமில்லையா?”
“இருக்கணும்.”
“அப்போ நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போற?”
சில நொடிகள் அமைதியாக இருந்த இளம்பிறை மெல்லச் சிரித்தாள்.
“எனக்குக் கல்யாணம் பண்ணிக்க ஆசை இல்லன்னு நான் சொன்னேனா? எனக்கும் ஆசை இருக்கு. என்னையும் அன்பா பார்த்துக்கிற ஒருத்தர் இருக்கணும்னு ஆசை இருக்கு. நான் சோர்ந்து போய் வீட்டுக்கு வரும்போது, ‘இளா, உட்காரு… நான் பார்த்துக்கிறேன்’னு சொல்ல ஒருத்தர் இருக்கணும்னு ஆசை இருக்கு.”
அவளுடைய குரல் மெல்லத் தழுதழுத்தது.
“ஆனா, அந்த ஆசைக்காக உங்களையும் தம்பியையும் விட்டுட்டுப் போக என்னால முடியாதும்மா. நம்ம வீட்டுக் கடன் இன்னும் முடியல. தம்பி படிச்சு ஒரு நல்ல நிலைக்கு வரணும். உங்க உடம்பும் சரியாகணும். இதையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் எப்படி என் வாழ்க்கையைப் பார்க்க முடியும்?”
மீனாட்சியின் கண்களில் கண்ணீர் தேங்கியது.
“நீ எப்பவும் இப்படியே பேசாதம்மா. உன்னோட தியாகத்தை நினைச்சு எனக்குப் பெருமையா இருக்கு. ஆனா, உன் வாழ்க்கையை நீயே தள்ளிப்போட்டுக்கிட்டே இருக்கியேன்னுதான் பயமா இருக்கு.”
“சரி, சரி… இப்போ இதைப் பத்திப் பேச வேண்டாம். நீங்க கஞ்சியைக் குடிங்க. நான் வேலைக்குக் கிளம்பணும்.”
பேச்சை மாற்றியபடி எழுந்தாள் இளம்பிறை.
அவளுக்குத் தெரியும். அம்மாவின் கவலை நியாயமானதுதான். ஆனால், குடும்பத்தின் நிலைமை அவளை வேறு எதையும் சிந்திக்க விடவில்லை.
அவளுடைய வாழ்க்கையில் கனவுகளுக்கு இடமில்லாமல் இல்லை. ஆனால், அந்தக் கனவுகளுக்கு முன்னால் குடும்பத்தின் தேவைகள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன.
—
“அக்கா!”
வாசலிலிருந்து வந்த குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் இளம்பிறை.
அவனுக்கு வயது பதினான்கு. ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.
“என்னடா, செல்வா?”
“அக்கா… உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.”
“என்னடா? சொல்லு.”
“என்னோட நோட்டு எல்லாம் தீர்ந்து போச்சுக்கா. புதுசா நோட்டு வாங்கணும். கணக்கு நோட்டுல கடைசி பக்கம்கூட முடிஞ்சிடுச்சு. தமிழாசிரியரும் புதுசா நோட்டு வாங்கிட்டு வரச் சொல்லியிருக்காரு.”
இளம்பிறை அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.
“எத்தனை நோட்டு வாங்கணும்?”
“மூணு நோட்டு வாங்கணும் அக்கா. கணக்கு, தமிழ், அறிவியல்… அப்புறம் பேனாவும் தீரப்போகுது.”
வீட்டுச் செலவு, அம்மாவின் மருந்து, அரிசி என ஏற்கெனவே கையில் இருந்த சிறிய தொகைக்குப் பல வேலைகள் காத்திருந்தன.
இப்போது தம்பியின் படிப்புச் செலவும் சேர்ந்துவிட்டது.
ஆனால், அவள் முகத்தில் கவலையைக் காட்டவில்லை.
“சரிடா. இன்னைக்கு சாயங்காலம் எப்படியாவது பணம் ஏற்பாடு பண்ணித் தரேன். நாளைக்கு நோட்டு வாங்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போ.”
“அக்கா, உன்கிட்ட பணம் இருக்கா?”
அந்தக் கேள்வி அவளுடைய மனதைச் சற்றே வலிக்கச் செய்தது.
“இப்போ கொஞ்சம் கம்மியாத்தான் இருக்குடா. ஆனா, நான் பார்த்துக்கிறேன். நீ அதைப் பத்திக் கவலைப்படாதே. நல்லாப் படிக்கிற வேலையை மட்டும் பாரு.”
“சரிக்கா.”
“ஆமா, பள்ளிக்கூடத்துல சாப்பாடு கொடுக்கிறாங்களே… அதனால மதியத்துக்கு உனக்குச் சாப்பாடு கட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனா, காலையில வீட்டுல சாப்பிட்டுட்டுப் போ. சரியா?”
“சரிக்கா. இன்னைக்கு கஞ்சிதானே?”
“ஆமாடா. இன்னைக்கு கஞ்சி. ரெண்டு நாள்ல அரிசி வாங்கிடலாம்.”
அவள் சிரித்தபடி சொன்னாலும், அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த வலியைச் செல்வமணியால் உணர முடிந்தது.
“அக்கா, இப்போ நோட்டு வாங்கித் தர முடியலன்னாலும் பரவாயில்லை. பழைய நோட்டுல காலியான பக்கங்களைப் பயன்படுத்திக்கிறேன்.”
அவள் அவன் தலையில் மெதுவாகக் கொட்டினாள்.
“அடேய்! உன்னைப் படிக்க வைக்கத்தானே நான் இவ்வளவு கஷ்டப்படுறேன்? நோட்டு வாங்கித் தர முடியாத அளவுக்கு உன் அக்கா ஒண்ணும் போயிடல. நீ நல்லாப் படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போயிட்டா, நம்ம குடும்பமே நல்ல நிலைக்கு வந்துடும். அதுதான் எனக்கு வேணும்.”
“நான் நல்லாப் படிப்பேன், அக்கா. உன்னை எப்பவும் கஷ்டப்பட விட மாட்டேன்.”
அவனுடைய வார்த்தைகளைக் கேட்டதும் இளம்பிறையின் கண்கள் கலங்கின.
“அதெல்லாம் சரி. இப்போ நேரமாச்சு. போய் கஞ்சி குடிச்சுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பு.”
அவன் உள்ளே சென்றதும், வாசலில் நின்று வானத்தைப் பார்த்தாள்.
‘கடவுளே… என்னை எப்படியாவது காப்பாத்திடு. நான் கஷ்டப்படுறது ஒரு பக்கம் இருக்கட்டும். என் குடும்பத்தை மட்டும் நல்லா வச்சுக்கோ.’
அதுதான் அவளுடைய தினசரிப் பிரார்த்தனை.
தனக்கென்று அவள் பெரிதாக எதையும் கேட்டதில்லை. ஒரு நல்ல ஆடை, நகை, வசதியான வீடு என எந்த ஆசையையும் வளர்த்துக்கொள்ள அவளுக்கு நேரமில்லை.
அவளுக்குத் தேவையானது ஒரே ஒரு விஷயம்தான்.
தன்னுடைய குடும்பம் யாரிடமும் கையேந்தாமல் வாழ வேண்டும்!
அந்த ஒரு கனவுக்காகத்தான் அவளுடைய ஒவ்வொரு நாளும் விடிந்தது.
—
காலை ஏழு நாற்பத்தைந்து மணிக்கெல்லாம் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாரானாள் இளம்பிறை.
அவள் ஊரில் இருந்த இரண்டு வீடுகளில் வேலை செய்து வந்தாள். ஒரு வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, மற்றொரு வீட்டில் சமையலுக்கும் வீட்டு வேலைகளுக்கும் உதவுவது எனக் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தாள்.
மாதக் கடைசியில் கிடைக்கும் பணத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்த வேண்டியிருந்தது.
“நேத்து உங்க அம்மாவைப் பார்த்தேன். உடம்பு இன்னும் சரியாகலையாமே?”
“கொஞ்சம் இருமல் இருக்கு பாட்டி. மருந்து கொடுத்திருக்கேன்.”
“நீயும் கொஞ்சம் உன் உடம்பைப் பார்த்துக்கோம்மா. காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் ஓடிக்கிட்டே இருக்க.”
“எனக்கு என்ன பாட்டி? நான் நல்லாத்தான் இருக்கேன்.”
“உனக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லுவே. ஆனா, உன் முகத்துல இருக்கிற சோர்வே எல்லாத்தையும் சொல்லுது.”
இளம்பிறை சிரித்தாள்.
“சரி பாட்டி. நான் போயிட்டு வரேன்.”
அவள் தெருவில் நடக்கத் தொடங்கினாள்.
அந்தச் சிறிய கிராமத்தில் அவளைப் பார்த்துப் பழகியவர்கள் பலர். சிலர் அவளுடைய உழைப்பைப் பாராட்டினார்கள். சிலர் வறுமையைப் பார்த்து இரக்கப்பட்டார்கள். இன்னும் சிலர் அவளுடைய குடும்பச் சூழலைப் பற்றிப் பின்னால் பேசினார்கள்.
ஆனால், யார் என்ன சொன்னாலும் அவள் தன்னுடைய வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு முன்னேறினாள்.
வறுமை அவளுக்குப் பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருந்தது.
யாரிடமும் எதிர்பார்க்காமல் வாழ்வது எப்படி, கண்ணீரை மற்றவர்கள் பார்க்காமல் மறைப்பது எப்படி, எத்தனை கவலைகள் இருந்தாலும் முகத்தில் புன்னகையை வைத்துக்கொள்வது எப்படி என எல்லாவற்றையும் அனுபவத்திலேயே கற்றுக்கொண்டிருந்தாள்.
ஆனால், தன்னையும் யாராவது அன்பாகக் கவனித்துக்கொள்வார்கள் என்று நம்புவதற்கு மட்டும் அவளுடைய மனம் இன்னும் பழகவில்லை.