நாட்கள் வேகமாகக் கடந்திருந்தன. ஆனால், கலைவாணியின் வீட்டிலிருந்து மட்டும் எந்தப் பதிலும் வரவில்லை.
விக்ரம் – மாலதி திருமணம் குறித்தும், கார்முகிலரசன் – கலைவாணி திருமணம் குறித்தும் ராஜசேகர் குடும்பத்தினர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
ஒரு மாதமாகப் பொறுமையாகக் காத்திருந்த பாக்கியலட்சுமி, இனியும் காத்திருக்க விரும்பவில்லை. தன் மகன் முகிலின் திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று முடிவெடுத்து, இந்திராணியைத் தொலைபேசியில் அழைத்தார்.
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவும்,
“ஹலோ…”
“வணக்கம் இந்திராணி. நான் பாக்கியலட்சுமி பேசுறேன்.”
“சொல்லுங்க பாக்கியலட்சுமி. நல்லா இருக்கீங்களா?”
“நல்லா இருக்கேன். உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னுதான் போன் பண்ணினேன்.”
“சொல்லுங்க.”
“நாம பேசி முடிவு பண்ண வேண்டிய விஷயத்துக்காக ஒரு மாசமா உங்க பதிலுக்காகக் காத்திருந்தோம். ஆனா, இதுவரைக்கும் உங்ககிட்ட இருந்து எந்தப் பதிலும் வரலை.
உங்க மகள் கலைவாணியை எங்க முகிலுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறதுல எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே மாதிரி, எங்க மாலதியை உங்க மகன் விக்ரமுக்குத் திருமணம் செய்து கொடுக்கவும் சம்மதம் தெரிவித்திருந்தோம்.
ஆனா, அதைப் பத்தி நீங்க இன்னும் எந்த முடிவும் சொல்லலை.
எனக்கும் என் பிள்ளைகளோட வாழ்க்கையைப் பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு. இப்படியே எவ்வளவு நாள்தான் காத்திருக்க முடியும்?
அதனால, எங்க முகிலுக்கு வேற இடத்துல பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். அதை உங்களுக்கு முறைப்படி தெரிவிக்கணும்னுதான் போன் பண்ணினேன்.
என்னோட இறுதி முடிவையும் சொல்லிடுறேன். இனிமேல் பெண் கொடுத்து பெண் எடுக்கிற இடத்தில்தான் என் மகன் முகிலுக்கும், என் மகள் மாலதிக்கும் சம்பந்தம் பேசப் போறேன். இதுதான் என்னுடைய முடிவு.
இனிமேலும் இந்தச் சம்பந்தத்துக்காக எங்களால காத்திருக்க முடியாது. அதனால, இந்தப் பேச்சை இத்தோட நிறுத்திக்கலாம். நீங்களும் உங்க பிள்ளைகளுக்கு வேற இடத்துல சம்பந்தம் பார்த்துக்கோங்க.”
என்று தன்னுடைய முடிவைத் தெளிவாகக் கூறினார்.
அதைக் கேட்ட இந்திராணி சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“பாக்கியலட்சுமி… கொஞ்சம் பொறுங்க. நாங்க இன்னும் எந்த முடிவும்…”
“இல்லைங்க. ஒரு மாசம் பொறுமையா இருந்துட்டோம். இனிமேலும் எங்களால காத்திருக்க முடியாது. முகிலோட வாழ்க்கையையும் பார்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. உங்களுக்கு முறைப்படி தகவல் சொல்லணும்னுதான் இப்போ அழைத்தேன்.”
என்று கூறியவர் அழைப்பைத் துண்டித்தார்.
மறுமுனையில் இந்திராணியோ, பாக்கியலட்சுமியின் திடீர் முடிவைக் கேட்டு என்ன செய்வதென்று புரியாமல் கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அலுவலகத்திலிருந்து ராஜசேகர், விக்ரம், அர்ஜுன் மூவரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
அவர்களின் பேச்சுச் சத்தம் கேட்டு அறையில் இருந்த கலைவாணி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.
அப்போது வீட்டில் வேலை செய்யும் பெண் அனைவருக்கும் காபியும் பலகாரமும் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தார்.
ராஜசேகர் சோபாவில் அமர்ந்தபடி காபியை எடுத்துக்கொள்ள, அருகில் விக்ரமும் அர்ஜுனும் அமர்ந்திருந்தனர்.
“என்னை எங்க அந்தப் பொம்பளை பேச விட்டா? அவளே பேசிட்டு, நான் சொல்றதைக் கூடக் கேட்காம போனை வச்சிட்டா!”
என்று கோபத்துடன் கூறினார் இந்திராணி.
அப்போது விக்ரம் தன் அம்மாவைப் பார்த்து,
“அம்மா, நீங்க என்னைத் தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்கலை. ப்ளீஸ்… சாரி. ஆனா, கலைக்கு வேற நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து, நான் சொன்ன மாதிரியே திருமணம் செய்து வைக்கிறேன்.”
என்றான்.
அதைக் கேட்ட ராஜசேகர்,
“இல்லை விக்ரம். நான் என் பொண்ணுக்காகப் பார்த்துப் பார்த்து மாப்பிள்ளை தேடியிருக்கேன். கலைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். அந்தக் கார்முகிலரசன் கையில என் பொண்ணைப் பிடிச்சுக் கொடுத்தா, அவ காலம் முழுக்க சந்தோஷமா இருப்பான்னு என் மனசு சொல்லுது. எப்படியாவது இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கணும்னு நினைக்கிறேன்.”
என்றார்.
ஆனால், விக்ரமோ தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான்.
இந்திராணி தன் கணவரைப் பார்த்து ஆதங்கத்துடன்,
“ஏங்க, நீங்க அந்த முகில்தான் வேணும்னு ஒரே முடிவா இருக்கீங்க. அந்த அம்மா எப்படி பேசுறாங்க பார்த்தீங்களா? நான் பேசுறதைக்கூட முழுசா கேட்காம, உடனே தன்னோட முடிவைச் சொல்லிட்டு போனை வச்சிட்டாங்க.
நம்மகிட்ட எவ்வளவு பணமும் செல்வாக்கும் இருக்கு. அப்படியிருக்க, ஒண்ணுமே இல்லாதவங்ககிட்ட நாம ஏன் இவ்வளவு இறங்கிப் போகணும்? இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை.
நம்ம விக்ரம் சொல்ற மாதிரி, வேற இடத்துல அவனைவிட நல்ல மாப்பிள்ளையா பார்த்து கலைக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம். கொஞ்சம் பொறுமையா இருங்க.”
என்றார்.
ராஜசேகர் இந்திராணியைப் பார்த்து,
“நான் ஒரு மாசம் பொறுமையா இருந்ததுக்குக் கிடைச்ச பலன் இதுதான். இன்னைக்கு அந்த அம்மா போனை எடுத்து, எங்க பையனுக்கு வேற பொண்ணு பார்க்கப் போறோம்னு ஒரே முடிவா சொல்லிட்டாங்க.
இன்னைக்கு ஈவினிங் இல்லாட்டியும், நாளைக்கே தரகர் மூலமா வேற இடத்துல பொண்ணு பார்த்து ஜாதகத்தைப் பரிமாறிக்கிட்டாங்கன்னா நம்ம என்ன பண்றது?
எனக்கு அந்தப் பையனோடதான் கலைவாணிக்குக் கல்யாணம் நடத்தியாகணும். அதுக்கு என்ன செய்யணும்னே புரியலை.”
என்று கவலையுடன் கூறினார்.
அந்தக் கார்முகிலரசனைத் தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர் மனதை விட்டு அகலவே இல்லை.
இதற்கிடையில் இந்திராணியின் கோபம் கலைவாணியின் பக்கம் திரும்பியது.
“எல்லாமே இந்த ஓடுகாளியாலதான் வந்தது. இவ மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா, ஒருத்தனைக் காதலிச்சு அவன் பின்னாடி போகாம இருந்திருந்தா, படிப்பு முடிஞ்சதும் நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம்.
அதனாலதான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்துட்டா, அவ அவனோட பொறுப்புன்னு நினைச்சேன். அதுக்காக ஒழுக்கமா இருக்கிற என் பையனோட வாழ்க்கையையும் இவளுக்காகச் சேர்த்துக் கெடுக்க முடியுமா?”
என்று தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
ராஜசேகர் இந்திராணியைப் பார்த்து,
“இந்திரா, சும்மா சும்மா அவளைத் திட்டாத. ஏதோ அவளோட காலக்கஷ்டம் அப்படி இருந்திருக்கு. நாமளும் அவ பக்கம் திரும்பிப் பார்த்து ஒரு வார்த்தை பேசினோமா?
நீயும் அம்மா ஸ்தானத்துல இருந்து அவளைக் கவனிக்கலை. நானும் பிசினஸ், பிசினஸ்னு ஓடிக்கிட்டே இருந்தேன். அவளுக்கு ஆதரவா இருந்த தாத்தா, பாட்டியும் இப்போ இல்லை. அந்த ஏக்கத்துலதான் அவ தடம் மாறிப் போயிட்டா.
ஏதோ யார் செஞ்ச புண்ணியமோ, பெரிய அளவுல எதுவும் நடக்காம இந்த அளவோட முடிஞ்சுச்சுன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.
அதோட, அவனுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனையையும் நான் வாங்கிக் கொடுத்துட்டேன். அதனால இனிமேல் இந்த விஷயத்தைச் சொல்லி கலையை நீ திட்டக்கூடாது. இதுதான் கடைசி. அடுத்து என்ன செய்யணுமோ அதை யோசிப்போம்.
எப்படியாவது அந்த முகிலனை நம்ம வீட்டு மாப்பிள்ளையா கொண்டு வந்தாகணும்.”
என்று உறுதியான குரலில் கூறினார்.
விக்ரமோ தன்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாகச் சொல்லிவிட்டான். அவனிடம் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் ராஜசேகர் யோசனையில் ஆழ்ந்தார்.
அப்போது இந்திராணி,
“என்னங்க, விக்ரம்தான் வேண்டாம்னு சொல்லிட்டானே… நம்ம அர்ஜுன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுப் பாருங்களேன். அவனாவது என்ன சொல்றான்னு பார்க்கலாம்.”
என்றார்.
இந்திராணி சொன்னதைக் கேட்ட ராஜசேகர் அர்ஜுனைப் பார்த்தார்.
“அர்ஜுன், உனக்கு இப்போ திருமணம் செய்துக்கச் சம்மதமா? நீ யாரையாவது காதலிக்கிறியா? அப்படி யாரும் இல்லன்னா, அப்பா உனக்கு ஒரு பொண்ணைப் பார்த்துச் சொன்னா, சம்மதிச்சுக் கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கியா?”
என்று கேட்டார்.
ராஜசேகர் அப்படிக் கேட்டதும் அர்ஜுன் சற்று நேரம் யோசித்தான். அப்போது விக்ரம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
“இப்போ நான் வேணாம்னு சொன்னதும் உடனே அவன் பக்கம் திரும்பிட்டீங்களா டாட்? என்னதான் பிரச்சினை உங்களுக்கு? அவன்தான் மாப்பிள்ளையா வேணும்னு ஏன் இவ்வளவு உறுதியா இருக்கீங்க?
ஏன் இப்படி நடந்துக்கிறீங்கன்னு எனக்குக் கொஞ்சம்கூடப் புரியல.
எனக்கு இந்த விஷயமே பிடிக்கலை. ஏதோ சந்தையில காய்கறி வாங்கும்போது, வண்டிக்காரன் சொல்ற விலைக்கு வாங்குற மாதிரி இந்தக் கல்யாண விஷயத்தைப் பேசிட்டு இருக்கீங்க. ஒரு பொண்ணோட வாழ்க்கை, ஒரு பையனோட வாழ்க்கைன்னு கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?”
என்று தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினான்.
அதைக் கேட்ட ராஜசேகர்,
“முதல்ல நான் பாக்கியலட்சுமி அம்மாவுக்குப் போன் பண்ணிப் பேசுறேன். இன்னும் ரெண்டு நாள் மட்டும் அவகாசம் கொடுக்கச் சொல்லி, எங்களோட இறுதி முடிவை நானே சொல்றேன்னு கேட்டுக்கிறேன்.
அர்ஜுன், உனக்கு அவசரமே வேண்டாம். பொறுமையா யோசிச்சு உன் முடிவைச் சொல்லு. அந்தப் பொண்ணை நீ ஏற்கெனவே பார்த்த ஞாபகம் இருக்குமா, இருக்காதான்னு எனக்குத் தெரியல. ஒருவேளை ஞாபகம் இல்லைன்னா, அந்தப் பொண்ணோட புகைப்படத்தைக் கேட்டு வாங்கலாம்.
ஆனா, அப்படிக் கேட்டுவிட்டு உனக்குப் பிடிக்காமப் போனால், அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்த மாதிரி ஆகிடும். அதனாலதான் உன்னோட முடிவு எனக்கு முக்கியம்.
உனக்கு அந்தப் பொண்ணை ஏற்றுக்கொள்ளும் மனசு இருந்தால் சொல்லு. புகைப்படம் வாங்கித் தரச் சொல்றேன். அழகான, லட்சணமான பொண்ணுதான். ஆனாலும் அவசரப்படாம நிதானமாப் பாரு.
விக்ரம் சொன்ன மாதிரி, இந்தப் பொண்ணு எனக்குச் சரிவராது, இந்தத் திருமணமே வேண்டாம்னு உனக்குத் தோணினாலும் தயங்காம சொல்லிடு.
எனக்கு என் பிள்ளைகளோட விருப்பமும் முக்கியம். காலம் முழுக்கச் சேர்ந்து வாழப்போற வாழ்க்கையை யாரும் கட்டாயத்துல வாழக்கூடாது.
ஒருவேளை உனக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லைன்னு சொன்னா, நானே அந்தப் பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து, திருமணத்துக்கான முழுச் செலவையும் ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
அதுக்குப் பிறகு உங்க பையனை எங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்கன்னு கேட்கிறேன். இப்படி வேற ஏதாவது வழி யோசிப்போம்.
எது எப்படியிருந்தாலும் உன்னோட மனசுல என்ன இருக்குன்னு என்கிட்ட வெளிப்படையாச் சொல்லு அர்ஜுன். உனக்குச் சம்மதம்னா சொல்லு. இல்லாட்டி அடுத்தது என்ன செய்யலாம்னு நாம யோசிப்போம்.”
என்று மகனின் எதிர்காலம் குறித்த அக்கறையுடனும், அவனுடைய விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் பாசத்துடனும் பேசினார்.
ராஜசேகர் சொன்னதைக் கேட்ட அர்ஜுன் அமைதியாக யோசிக்கத் தொடங்கினான்.