அத்யாயம் 29:

“அம்மாடி வேதா அக்கா உன்னை கூப்பிடுறாங்கடா” என்றவரின் குரலில் கீழே வந்தாள் வேதா.

“என்னாச்சு ஆன்ட்டி?” என்றாள்.

“தெரியலைடா அக்கா தான் கூப்பிட சொன்னாங்க” என்றவர் அவளை அழைத்துக் கொண்டு போக, உள்ளே சென்றவள்,

“சொல்லுங்க அத்தை” என்றாள் அமுதாவின் அருகில் சென்று.

அவளின் கையை தன் நடுங்கிய கரங்களால் தொட்டவர், ஏதோ சொல்ல வர, அவளுக்கோ எதுவும் புரியவில்லை.

“அத்தை என்ன சொல்ல வராங்க ஆன்ட்டி?” என்று வேதா கேட்க, அமுதாவின் பார்வையில் புரிந்து கொண்ட அவரின் தங்கை, அங்கிருந்த பீரோவைத் திறந்து  ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தார்.

அதை வேதாவிடம் கொடுக்குமாறு அவர் சொல்ல முற்பட, புரியாத பாவனையோடு அதை வாங்கிப் பார்த்தவள், உள்ளே இருந்த நகைகளைக் கண்டு அமுதாவைப் பார்த்தாள்.

“இதெல்லாம் எதுக்கு அத்தை?” என்றாள்.

‘உனக்குத் தான்’ என்ற அர்த்தத்தில் அவர் முகம் பாவத்தை வெளிப்படுத்த,

“ஐயோ அத்தை..! இதெல்லாம் கீர்த்தனா அண்ணிக்கு குடுங்க. எனக்கு வேண்டாம்” என்றவளை முறைக்க முற்பட்டார்.

“வேதா, கீர்த்தனாவுக்கு ஏற்கனவே கொடுத்தாச்சு. இது இந்த வீட்டு மருமகளுக்கு சேர வேண்டிய நகை. அதைத்தான் அக்கா உன்கிட்ட குடுக்குறாங்கடா..” என்றார் சித்தி.

“இல்ல ஆன்ட்டி..! எனக்கு..இது” என்று அவள் புரியாமல் தயங்க, மேலும் அமுதா எதையோ பாவனையில் சொல்ல, அவர் ஒரு புடவையையும் கொண்டு வந்து கொடுத்தார்.

“நாளைக்கு வெள்ளிக் கிழமை. இந்த புடைவையை கட்டி, நகையை போட்டு விஜயை கூட்டிட்டு கோவிலுக்கு போயிட்டு வர சொல்றாங்க. அப்படித்தானேக்கா” என்று தங்கை கேட்க, ஆமாம் என்பதைப் போல் அவரின் தலை ஆடியது.

“கோவிலுக்கு போறதெல்லாம் சரித்தான் அத்தை. ஆனா, கண்டிப்பா சேரி தான் கட்டனுமா?” என்றாள் சிரிப்புடன்.

“அக்காவுக்கு மருமகளை சேலை கட்டி பார்க்கனும்னு ஆசை” என்று அவர் சிரிக்க,

“இந்த சேரிக்கு ஆப்ட்டா பிலௌஸ் வேணுமே ஆன்ட்டி” என்றாள்.

“அதெல்லாம் ஏற்கனவே தச்சு ரெடியா இருக்குடா. எல்லாம் கீர்த்தனா உபயம் தான்” என்றவர் சிரிக்க,

“ரைட்டு, ஒரு முடிவோட தான் இருக்கீங்க” என்றவள்,  அமுதாவின் அருகில் அமர்ந்தவள்,

“அத்தை ஆசைப்பட்டு, அதை நான் செய்யலைன்னா எப்படி?” என்று மலர்ந்த முகத்துடன் கேட்க, அவளையே ஆசையாய் பார்த்திருந்தார் அமுதா. கண்கள் கலங்கி அவருக்கு கண்ணீர் வர,

“இப்ப எதுக்கு அழறிங்க அத்தை. நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல விஜய் சாரை பத்தி, எங்க லைப்பை பத்தி கவலைப் படாதிங்கன்னு. நீங்க இவ்வளவு வருத்தப்படுறிங்கன்னு தெரிஞ்சா அவரும் வருத்தப்படுவார்.” என்றவள் அவரை ஆதரவாய் அணைத்துக் கொண்டாள்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்தவள் குளித்து முடித்து, புடவையைக் கட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்த்தவளுக்கு அந்த பட்டுப்புடவையை அவ்வளவு பிடித்திருந்தது. சிவப்பு நிறத்தில் பச்சை கரையிட்ட பார்டரும், பார்டர் நிறத்தில்  பிலௌசும் அவள் நிறத்திற்கு எடுப்பாய்  இருந்தது. அதே மகிழ்ச்சியுடன் கீழே வந்தாள்.

அவள் கீழே வருவதற்கும் விஜய் அமுதாவை அழைத்துக் கொண்டு வெளியே வருவதற்கும் சரியாய் இருந்தது. அதிகாலைப் பனியில் புடவையில் தேவதையாய் எதிரே வந்து நின்றவளைக் கண்டு விஜய் ஒரு நிமிடம் திகைக்க,

“குட்மார்னிங் அத்தை..! புடவை நல்லா இருக்கா?” என்றாள் அமுதாவிடம்.

‘அருமையா இருக்குமா’ என்ற ரீதியில் அவர் முகம் மலர்ந்து விகசிக்க,

“எனக்கும் பிடிச்சிருக்கு. தேங்க்யு சோ மச் அத்தை” என்று அவரின் கன்னத்தில் முத்தமிட, சற்று பொறாமையுடன் பார்த்திருந்தான் விஜய்.

அவனின் முகத்தைப் பார்த்தவள்,

“அத்தை இங்க யாருக்கோ ஸ்டொமக் பார்ன் ஆகுது” என்று சொல்லி சிரித்தாள்.

விஜய் அவளை முறைக்க,

“இன்னைக்கு வேற சீன் சார்” என்று கோலப்பொடியை எடுத்தவள்,

“நீங்க அத்தை கூட இருங்க. நான் கோலம் போடுறேன்” என்றவள், கோலம் போட ஆரம்பிக்க, மருமகளை ஆசை தீர கண்களில் நிறைத்துக் கொண்டார் அமுதா.

அவள் புடவையைக் கட்டிக் கொண்டு கோலம் போடுவது அவனுக்கு தான் உள்ளுக்குள் இன்ப அவஸ்தையாய் இருந்தது.

‘காலங்காத்தால இப்படி கண்ணு முன்னாடி வந்து உசுப்பேத்துனா, நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது. இன்னைக்கு உனக்கு நிறைய சோதனைகள் இருக்கும் போலவே விஜய்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டவன், அவளை சைட் அடிக்கவும் தவறவில்லை.

கோலம் போட்டு முடித்தவள்,

“எப்படி இருக்கு ?” என்றாள்.

‘எப்படி எப்பிடியோ தான் இருக்கு’ என்று முனுமுனுத்தான்.

“என்ன சொன்னிங்க?” என்றாள்.

“அழகா இருக்கு” என்றான்.

“கோலமா?” என்றாள்.

“கோலமும் தான்” என்று அவன் ஒரு மார்க்கமாய் சொன்ன விதத்திலேயே புரிந்து கொண்டவள் அவனை முறைக்க முற்பட, அவர்களை அப்படி பார்த்த அமுதாவிற்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி.

அவரை அறையில் கொண்டு விட்டு வந்தவன்,

“காபி வேணுமா?” என்றான் மந்தகாசமாய்.

“கிடைக்குமா?” என்றாள்.

“என்ன கேட்டாலும் கிடைக்கும்” என்றான் மார்க்க பார்வையுடன்.

“என்ன கேட்டாலுமா?” என்றாள்.

“என்னையே கேட்டாலும்” என்றான் உல்லாசமாய்.

“ரைட்டு, நீங்க ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க. அதுக்கு நான் ஆள் இல்லை. அத்தை கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க. நீங்க போய் கிளம்புங்க” என்றாள்.

“என்ன திடீர்ன்னு கோவிலுக்கு?” என்றான் புரியாமல்.

“என்னைக் கேட்டா, நைட் அத்தை தான் இந்த புடவை, நகையெல்லாம் கொடுத்து, இன்னைக்கு கோவிலுக்கு போயிட்டு வர சொன்னாங்க” என்றாள்.

அவள் ஈரத்தலையுடன் இருப்பதைப் பார்த்தவன்,

“நான் கிளம்புறது இருக்கட்டும். நீ முதல்ல தலையை காய வை. இல்லன்னா தலை வலி வச்சுடும்” என்றான் அக்கறையாய்.

“ம்ம். சீக்கிரம் கிளம்புங்க. கோவிலுக்கு போயிட்டு வந்து காலேஜ் கிளம்பனும். அப்பறம் லேட் ஆகிடும்” என்றாள்.

“கண்டிப்பா இன்னைக்கு காலேஜ் போகனுமா?” என்றவன் அவளுக்கு அருகில் வர,

“சார் கோவிலுக்கு போகணும்” என்றவள் பதறி விலகினாள்.

“வீட்டுக்கு வந்தா இந்த சாரை முதல்ல விட்டுத் தொலைடி. மனுஷனோட அவஸ்தை புரியாம, எப்ப பாரு சாரு மோருன்னுட்டு.” என்றவன் கடுப்புடன் சென்றான்.

அவன் தயாராகி வருவதற்குள் அவளும் ரெடியாகி வர, இப்போது நகையெல்லாம் அணிந்து அம்சமாய் வந்து நின்றவளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.

அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அமுதாவின் அறைக்குள் செல்ல, அவர்களை ஜோடியாக பார்த்தவரின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்து விட்டது.

“எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை” என்று அவனையும் இழுத்துக் கொண்டு காலில் விழுந்தாள். பெற்ற மனம் குளிர்ந்து விட்டது. அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் செல்வது அவனுக்கும் நன்றாகத் தான் இருந்தது.

“அடுத்து என்ன?” என்றான் சிரிப்புடன்.

“கோவிலுக்கு” என்றாள்.

“ரைட் போகலாமா?” என்றவன்,

“மாம் நாங்க போயிட்டு வந்திடுறோம்” என்று அவன் சொல்லிக்  கொண்டிருக்கும் போதே அவனின் சித்தியும் வந்துவிட, அவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினர்.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்குடா. வந்த உடனே சுத்தி போடணும்” என்று அவர் திருஷ்டி முறிக்க, வேதாவிற்கு ஏனோ காதம்பரியின் நினைவு வந்தது. சட்டென்று அமைதியானவளைப் பார்த்து,

“என்ன ஆச்சு?” என்றான்.

“இல்ல ஒண்ணுமில்லை”

“போகலாமா?”

“ம்ம்”

மனைவியுடனான சிறு தனிமைப் பயணம். அதிகாலை நேர காற்றும், அருகில் இருந்தவளின் சுகந்தமும் சேர்ந்து கொள்ள, விஜய் மனதிற்குள் சிறகில்லாமல் பறந்தான்.

“சார் ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது?” என்றாள் அவனையே பார்த்தபடி.

“ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றான் உள்ளார்ந்த குரலில்.

அவள் அமைதியாய் வர,

“என்ன அமைதியா வர” என்றான்.

“தெரியலை. மனசும் அமைதியா இருக்கு. நானும் அமைதியா இருக்கேன்” என்றாள் தலைசாய்த்து.

“வேதா”

“ம்ம்”

“புடவையில அழகா செம்ம பிகரா இருக்கடி” என்றான் உல்லாசமாய்.

அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு வெட்கம் வர,

“ம்ம்..! தேங்க்ஸ்” என்றாள்.

“உன்னோட தேங்க்ஸ் யாருக்கு வேணும்?” என்றான்.

“சாருக்கு வேற என்ன வேணும்?”

“ஒரு கிஸ்” என்றான்.

“நோ”

“அட்லீஸ்ட் ஒரு ஹக்” என்றான் ஏக்கமாய்.

“நோ வே..! நாம கோவிலுக்கு போயிட்டு இருக்கோம்” என்றாள் கண்டிப்பாய்.

“சாமிக்கும் குடும்பம் இருக்கு. அவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்க” என்றான் மந்தகாசமாய்.

“ஒரு ப்ரொபசர்  மாதிரி பேசுங்க” என்றாள்.

“இப்ப நான் உனக்கு புருஷன். அப்ப புருஷன் மாதிரி தான் பேச முடியும்.” என்றான்.