“வேதாம்மா..! கங்க்ராட்ஸ்டா” என்ற சரண் அருகில் வந்து தங்கையை அணைத்துக் கொள்ள,

“தேங்க்ஸ்ண்ணா!” என்றாள் அமைதியாக.

“என்னாச்சு வேதா? ஏன் டல்லா இருக்க? ஏதாவது சாப்பிட்டியா?” என்றான் சரண்.

“டீ குடிச்சேன்” என்றாள். கவனம் என்னமோ எழுதுவதில் தான் இருந்தது.

“நாம வீட்டுக்கு போவமா?” என்றான் கீர்த்தனாவிடம்.

“என்னால சமைக்க முடியாது. இன்னைக்கு இங்க தான். அம்மா சமைச்சுடுவாங்க. சாப்பிட்டு போகலாம்” என்றாள் கீர்த்தனா.

“இல்லைன்னா மட்டும் மேடம் வகை வகையா செய்ற மாதிரி” என்று சரண் சிரிக்க, முறைத்தாள் அவள்.

“அண்ணா”

“வேதாம்மா”

“எனக்கு காலேஜ் மேனேஜ்மென்ட்ல ஒரு ஆளைப் பத்தி கம்ப்ளைன்ட் ரைஸ் பண்ணனும். அது யார்கிட்ட பண்ணனும்?” என்றாள் முக்கியமாய்.

“என்னாச்சுடா? யாரு?” என்றான் புரியாமல்.

“எப்ப பார்த்தாலும் பக்கத்துல யார் பேசுனாலும் என்னையவே வெளிய அனுப்பிடுறார் அந்த ஆளு. இன்னைக்கு முக்கியமான யூனிட் லெசன். கவனிக்க முடியாம போய்டுச்சு. என்னையே ஏதோ வன்மம் வச்சு பழி வாங்குற மாதிரி இருக்கு. இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது. அந்த ஆளா இல்லை நானான்னு பார்க்குறேன்” என்றாள்.

“யாரு அது?” என்றான் சரண்.

“நீ எனக்கு அண்ணன் தான? நாளைக்கு காலேஜ்ல வந்து எனக்காக கேட்கணும்.” என்றாள்.

“சரிடா கேட்குறேன். அந்த ஸ்டாப் யாருன்னு சொல்லு?” என்றான் சரண்.

“வேற யாரு? நம்ம டிப்பார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி தான்” என்றாள் சர்வ சாதரணமாய்.

அவள் சொன்ன விதத்தில் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன், விஜயை திரும்பிப் பார்க்க அவனோ நமட்டு சிரிப்புடன்  சரணைப் பார்த்தான்.

“அது வேதா.. நீ நம்ம விஜயை சொல்லலையே?” என்றான் சரண்.

“அந்த ஆளைத் தான் சொல்றேன்” என்றாள்.

“அந்த ஆளா?” என்று உள்ளுக்குள் அதிர்ந்த சரண்,

“ப்ரொபசர அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா வேதா” என்றான்.

“அப்படித்தான் பேசுவேன். நீ நாளைக்கு வந்து எனக்காக பேசுவியா மாட்டியா?” என்றாள்.

“பேசுறேன்மா, கண்டிப்பா பேசுறேன். நீ ஒரு முடிவோட தான் இருக்க” என்றவன்,

“நாம வேணும்னா நைட் வந்து சாப்பிட்டு போகலாம். இப்போ கிளம்பலாம் வா” என்று கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு ஓடியே விட்டான்.

“இப்ப எதுக்குடி பஞ்சாயத்தை கூட்டி அவனை ஓட விட்ட” என்ற விஜய்,

“உள்ள வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

“இங்கயே சொல்லுங்க. எனக்கு படிக்க நிறைய இருக்கு” என்றாள் பிகு பண்ணியபடி.

“நீங்க படிப்பாளி தான் மேடம். நான் ஒத்துக்கிறேன். ஒரு முக்கியமான விஷயம் பேசணும் உள்ள வாங்க” என்றான்.

“மாட்டேன்” என்றாள்.

“ஹேய்.. வாடி” என்று தூக்கிக் கொண்டு போக,

“என்ன பண்றிங்க விடுங்க. ஆன்ட்டி பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றாள்.

“சித்தி உள்ள தான் இருக்காங்க. அப்படியே பார்த்தாலும் கவலை இல்லை” என்றான்.

“இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு?”  என்றாள்.

அவளை இறக்கியவன்,

“நீதாண்டி பிரச்சனை” என்றான்.

“நான் என்ன பண்ணேன்?” என்றாள்.

“மார்னிங் என்ன சொன்ன? சாருக்கு இப்படி சாரி கேட்ட பிடிக்காதுன்னு தான சொன்ன?  சரி எனக்கு பிடிச்ச மாதிரியே இப்ப சாரி கேளு..” என்றான்.

“இதெல்லாம் போங்கு. காலேஜ்ல நடந்தது காலேஜ்லயே விட்டுடனும். இங்கல்லாம் சாரி கேட்க முடியாது.” என்றாள்.

“மேடம் இந்நேரம் வரைக்கும் என்ன பண்ணிங்க. சரண் கிட்ட அதைத்தான பேசிட்டு இருந்தீங்க? இப்ப மட்டும் என்ன?” என்றான்.

“அது..” என்று அவள் இழுக்க,

இன் செய்திருந்த சட்டையை எடுத்து வெளியே விட்டவன், பெல்ட்டை கழட்ட,

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றாள் திக்கித் திணறியபடி.

“மேடம்க்கு கிளாஸ்ல ப்ரப்போசல் எல்லாம் பலமா இருக்கும் போலவே” என்றான் ஒரு மார்க்கமாய் பார்த்தபடி.

“அது சும்மா ஜாலிக்கு” என்று அவள் வார்த்தையை முழுங்க,

“வேதா டார்லிங் வெளிய போனா நிறைய பேருக்கு மனசு வலிக்கும் போலவே” என்றான் சிரிப்புடன்.

“ஆமா..! எல்லாருக்கும் மனசு வலிக்கும். ஒருத்தரைத் தவிர” என்றாள் அவளும்.

“அந்த ஒருத்தருக்கு மனசு வலிச்சதா இல்லையான்னு பார்ப்போமா?” என்றவன் அவளைப் பிடித்து இழுக்க, அவன் மேல் மோதி நின்றவள்,

“ஹெலோ சார்? இங்க மட்டும் என்ன வாழுதாம். எப்ப பார்த்தாலும் கிளாஸ்க்கு மைனர் மாப்பிள்ளை மாதிரி வர வேண்டியது. இவரைப் பார்த்து எல்லாரும் ஜொல்லு ஊத்த வேண்டியது. இது தானே நடக்குது. நீங்க என்னை சொல்றிங்க?” என்றாள் உதட்டை சுழித்தபடி.

“அதான் பார்த்தேனே? நீ பார்த்ததை” என்றான்.

“நானெல்லாம் உங்களைப் பார்க்கவே இல்ல” என்றாள் வேண்டுமென்றே.

“ஆஹான்..! நீ பார்க்கல” என்றான்.

“அது லைட்டா பார்த்தேன்” என்றாள் சட்டை பட்டனை திருகிக் கொண்டே.

“இப்ப முன்னாடி தான நிக்கிறேன். நல்லா பாரு” என்றான் சிரிப்புடன்.

“எனக்கென்ன பயமா? நான் பார்ப்பேன்” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், அவன் பார்வையில் மீண்டும் அவன் நெஞ்சிற்குள் புதைந்து கொண்டாள்.

“எதுக்கு இப்படி பாக்குறிங்க?” என்றாள்.

“பார்த்தது குத்தமா?”  என்றவன்,

“ஆமா, வெளிய இந்நேரம் வரைக்கும் வாய் பேசிட்டு இருந்தாளே  ஒருத்தி, அவளைப் பார்த்த?” என்றான் சிரிப்புடன்.

“எனக்கு படிக்கணும்” என்றாள் முனங்கியபடி.

“நானும் தான் படிக்கணும்” என்றான் உல்லாசமாய்.

“நான் பாடத்தை சொன்னேன்” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“நானும் பாடத்தை தாண்டி சொல்றேன்” என்றான் அவளை கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டே.

“விடுங்க” என்றாள்.

“சரி ஒரு சாரி கேட்டுட்டு போ” என்றான்.

“ம்ம் சரி” என்று சலித்தபடி கட்டில் மேல் ஏறப் போனவளை,

“என்னடி பண்ற?” என்றான்.

“சாரி கேட்கனும்ல” என்றாள்.

“அதுக்கு ஏன் இவ்வளவு சிரமப்படுற? நான் ஹெல்ப் பண்றேன்..” என்று அவளைத் தூக்கி, அவன் சாரி கேட்க வைத்த விதத்தில் சிவந்து தான் போனாள் விஜயின் வேதா.

“வேதாம்மா..!” என்ற சித்தியின் குரலில்,

“வந்துட்டேன் ஆன்ட்டி” என்று கத்தியவள், அவனை தள்ளிவிட்டு ஓடியே விட்டாள்.

“இவளை” என்று பின் தலையை கோதியவனுக்குள் அப்படி ஒரு உல்லாசம்.

வேதா மீண்டும் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்க, அங்கே வந்தவன் லேப்டாப்புடன் அமர்ந்துவிட்டான்.

அதே நேரம் சரியாக வேதாவிற்கு அழைத்தாள் ரம்யா. அவளும் எழுதும் மும்பாரத்தில் ஸ்பீக்கரில் போட்டு விட்டு எழுதிக் கொண்டிருந்தாள்.

“சொல்லுடி”

“மச்சான் உன்கிட்ட கிளாஸ்லயே சொல்ல மறந்துட்டேன்” என்று ரம்யா சொல்ல,

“என்ன சொல்ல மறந்துட்ட?” என்றாள்.

“இன்னைக்கும் கவனிச்சியா? விஜய் சாரும் நீயும் ஒரே கலர்” என்று அவள் சொல்ல,

சட்டென்று வேதா நிமிர்ந்து பார்க்க, அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் விஜய்.

“இப்போ இதை சொல்லத்தான் கால் பண்ணியா?” என்றாள்.

“ஆமாடி. கிளாஸ்லயே கவனிச்சேன். இன்னைக்கு வேற பிரச்னைக்கு வெளிய போயிட்டோமா? அதான் மறந்துட்டேன்” என்றாள்.

“ரொம்ப முக்கியம்?” என்றாள் வேதா.

“அப்போ இது முக்கியமில்லையா?” என்றாள்.

“நான் டார்க் பிங்க். அவர் பேபி பிங்க்.” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“எப்படினாலும் பிங்க் பேமிலி தானடி “ என்றவள்,

“என்னவோ போ மாதவா ஒன்னும் புரியலை” என்றவள் போனை வைக்க, விஜயை முறைத்தாள்.

“இப்ப என்னை எதுக்குடி முறைக்கிற?” என்றான்.

“தினமும் நீங்க பண்ற வேலையால தான், அவ என்னை படுத்தி எடுப்பா. உடனே சார் எங்களை வெளிய அனுப்பிடுவிங்க” என்றாள்.

“நான் என்னமோ வேணும்னு பண்ண மாதிரி பேசுற?” என்றான் சிரிப்புடன்.

“வேணும்னு தான் பண்ணிங்க” என்றாள்.

“ஆமா, நீ வேணும்னு தான் பண்ணேன்” என்றான் கூலாய்.

‘யோவ் வாத்தி, ரைமிங்ல பின்றியே’ என்று மனதிற்குள் நினைத்தவள், அவனைத்தான் ரசித்திருந்தாள்.