“வேதாம்மா..! உன்னை குற்றவாளி ஆக்கனும்னோ, இல்லை குற்ற உணர்ச்சில தள்ளனும்னோ நான் இதை சொல்லலை. புருஷன் பொண்டாட்டினா, ஒருத்தரோட கஷ்ட்டமான நேரங்கள்ல இன்னொருத்தர் ஆறுதலா துணையா இருக்கணும். அப்பவும் நீயா, நானான்னு போட்டி போட்டுட்டு இருக்கக் கூடாது. உன்னோட எல்லா கஷ்ட்டமான சூழ்நிலையிலும் அவன் கூட இருந்திருக்கான். உனக்காக அழுதிருக்கான், தவிச்சிருக்கான். ஏன்? பைத்தியம் பிடிக்காத குறையா சுத்தியிருக்கான். காதும்மா இறந்த சமயத்துல அவன் மட்டும் இல்லைண்ணா, எங்களால ஒண்ணுமே பண்ணியிருக்க முடியாது. ஏன் உன்னைய காப்பாத்தியிருக்க முடியுமான்றதே சந்தேகம் தான். நாங்க எல்லாரும் நிலைகுலைஞ்சு போய் இருந்தப்ப அவன் ஒரு ஆளா எல்லாமே பண்ணான். நாங்க அத்தனை பேர் இருந்தும் அவனைத் தான் எதிர்பார்த்தோம்.
ஆனா, அவனுக்குன்னு ஒரு பிரச்சனை வரும் போது அந்த இடத்துலையும் அவனையே குற்றம் சொல்லி தள்ளி நிறுத்துறதுல என்ன ஞாயம் வேதா?
“நல்லா யோசிடா.” என்றவன், அவளின் கைகளை பிடித்துக் கொண்டான்.
“உனக்கு இப்போ வரைக்கும் பிடிக்கலைன்னாலும் இனிமேல் பிடிக்கிற மாதிரி பார்த்துக்கோடா. ஏன்னா இன்னொரு இழப்பையெல்லாம் அவன் தாங்க மாட்டான். உங்க எல்லாருக்கும் இப்ப இருக்குற விஜயை தான தெரியும். ஆனா, நிஜமா அவன் அப்படி கிடையாது. கோபத்துலையும் எக்ஸ்ட்ரீம் லெவல் போவான். பாசத்துலையும் எக்ஸ்ட்ரீம் லெவல் போவான். எங்க கேங்க்லையே விஜய் தான் அவ்வளவு கலகலப்பா இருப்பான். ஆனா, இப்பல்லாம் சிரிக்கிறதுக்கே காசு கேட்குறான். ஸ்டடீஸ்,ஸ்போர்ட்ஸ், டான்ஸ்ன்னு எல்லாத்துலையும் ஆல்ரௌண்டர் அவன். ஆனா அவன் கல்யாணம் நின்னு,அமுதா ஆன்ட்டி இப்படி ஆன பிறகு அவனுக்குள்ளயே அவனைத் தொலைச்சிட்டான்.
அதுக்காக அவன் பண்ணது எல்லாம் சரி. நீ பண்றது தப்புன்னு நான் சொல்லலை வேதாம்மா. நீ குழப்புத்துல இருந்தப்போ அவன் தெளிவா இருந்தான். இப்போ அவன் குழப்பத்துல இருக்கான். நீ தெளிவா இருன்னு சொல்றேன். நான் சொல்றது புரியுது தானடா” என்றான் அவளின் தலையை கோதி.
“அண்ணா, நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும். நாங்க புருஷன் பொண்டாட்டிங்கறது எப்பவும் மாறாது. நீங்க சொன்ன மாதிரி என் மேலயும் சில தவறுகள் இருக்கு. நான் பார்த்துக்கறேன்” என்றாள் தெளிவாய்.
“அண்ணா மேல ஏதாவது கோபமாடா?” என்றான் சரண், அவளை ஆதரவாய் அணைத்துக் கொண்டு.
“அப்படியெல்லாம் இல்லண்ணா..! நீங்கல்லாம் இல்லைன்னா நான் என்னாகியிருப்பேன்” என்றவள் அழ,
“வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற உறவுகள் தானண்ணா பெரிய விஷயம். அப்படி கிடைக்கிற உறவுகளும் நல்ல முறையில் அமையனும்.அந்த வகையில நான் அதிர்ஷ்ட்டசாலி இல்லையாண்ணா?” என்றாள் சிரிப்புடன்.
“வேதாம்மா..!” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.
“எவ்வளவு நேரம் இன்னும் பாசப் பயிரை கண்ணீர்லயே வளர்ப்பிங்க. கொஞ்சம் சோறு போட்டும் வளர்க்கலாம்.” என்றான் அகரன்.
“ஆமாம்ல..எனக்கும் கூட பசிக்குது. இன்னும் யாரும் சாப்பிடலை. லஞ்ச் டைமே வரப் போகுது. நான் போய் கீர்த்தனாவை ஏதாவது சமைக்க சொல்றேன். இல்லைன்னா ஆர்டர் போடுறேன்” என்றான் சரண்.
கீழே வந்த வேதாவை ஆச்சர்யமாய் பார்த்தாள் கீர்த்தனா.
“அண்ணி..! அமுதா அத்தைக்கு ஏதாவது சாப்பிட குடுத்திங்களா?” என்றாள்.
“மார்னிங் அம்மா சாப்பிட வச்சுட்டாங்க வேதா. நடந்த பிரச்சனையில அவங்களும் எப்படியோ வருதுன்னு போய் படுத்துட்டாங்க. லஞ்ச் நாம ஆர்டர் போட்டுக்கலாம்” என்றாள்.
“இல்லண்ணி நான் சமைச்சுடுறேன்” என்றவள், சமையல் வேலையில் இறங்க, அவளை ஆச்சர்யமாக பார்த்தாள் கீர்த்தனா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அப்படி அழுதுட்டு போன பொண்ணா, இப்ப இப்படி வந்து பம்பரமா சமைக்குது என்ற எண்ணம் தான்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா வேதா?” என்றாள் கீர்த்தனா.
“இதை மட்டும் கட் பண்ணி குடுங்க”
“என்ன சமைக்க போற வேதா?” என்றாள்.
“பிரிஜ்ல வேற காய் எதுவும் இல்ல அண்ணி. அதனால சாம்பார், ரசம், சேனை வறுவல் பண்ணிடலாம். வேணும்னா கொஞ்சம் வத்தக்குழம்பு வச்சுக்கலாம்.” என்றாள்.
“சூப்பர் மெனு” என்றவள் அவளுக்கு உதவி செய்ய அடுத்த ஒரு மணி நேரத்தில் கடகடவென்று சமைத்து முடித்தாள்.
“அண்ணி நான் போய் குளிச்சுட்டு வரேன்.நீங்க எல்லாம் சாப்பிடுங்க” என்றாள்.
“நீ குளிச்சுட்டு வா வேதா. சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள் கீர்த்தனா.
“இல்லண்ணி அகரன் பசிக்குதுன்னு சொன்னான். நீங்க முதல்ல சாப்பிடுங்க. நான் அவனை வர சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டான் அகரன்.
“வாசனையே என்னை இழுத்துட்டு வந்திடுச்சு” என்றவன் டைனிங் டேபிளில் அமர,
“டேய் இது நமக்கு சமைச்சது இல்லை. அவ புருஷனுக்கு சமைச்சது. ஏதோ நெல்லுக்கு பாயிற நீர் புல்லுக்கும் பாயிற மாதிரி நாமளும் சாப்பிட்டுக்க வேண்டியது தான்” என்றான் சரண்.