“சரிங்கண்ணா” என்றவன் அவளை எழுப்ப, அவளோ அசைவேனா என்று தூங்கிக் கொண்டிருந்தாள். அகரனோ வேறு வழியின்றி அருகில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளிக்க, தூக்கம் தடைபட்டதில் எரிச்சலுடன் முழித்தவள், அகரனை உக்கிரமாய் முறைத்தாள்.
“ஆத்தி, இதுக்கு நான் ஆள் இல்லை. நீ எழுப்ப சொன்ன, நான் எழுப்பினேன். அவ்வளவு தான். பேச்சு பேச்சா இருக்கணும்.” என்றவன்,
“அண்ணா நான் மேல போறேன்” என்றவன் அடுத்த நிமிடம் ஓடியே விட்டான்.
“இவனை” என்று முறைத்தவள், முகத்தை துடைத்துக் கொண்டு மீண்டும் தூங்க முற்பட,
“வேதா” என்ற விஜயின் குரலில் அப்போது தான் அவனைத் தெளிவாக பார்த்தாள்.
“சொல்லுங்க சார்”
“வந்து இதை எழுதி முடி. கொஞ்சம் கூட பொறுப்பு கிடையாது” என்றான்.
“பொறுப்பை பத்தி எல்லாம் நீங்க பேசாதிங்க. உங்களால தான் நான் எழுதலை. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது.எனக்கு இப்போ தூக்கமா வருது. அது எழுதாட்டி கிடக்குது. எனக்கு இன்டெர்னல் மார்க்கும் வேண்டாம் ஒரு மார்க்கும் வேண்டாம். ஆளை விடுங்க சாமி” என்று மீண்டும் தூங்கப் போக,
“இங்க வந்து உட்கார போறியா இல்லையா?” என்றான் கடுப்பாக.
“இதென்ன சார் வம்பா போச்சு. எனக்கு நிஜமாவே தூக்கத்தை கன்ட்ரோல் பண்ண முடியலை.” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை அழைத்தான் ஆனந்த்.
“இவன் வேற” என்று சலித்தவள்,
“சொல்லுடா” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.
“மச்சான் இன்னும் நீ அனுப்பவே இல்ல” என்றான் அவன் குறையுடன்.
“அடேய்! நான் இன்னும் எழுதவே இல்லை.” என்றாள்.
“அடிப்பாவி, உன்னை நம்பி ஒரு ஜீவன் இருக்கேன்னு ஒரு பொறுப்பிருக்கா உனக்கு?” என்றான் அதிர்ந்த குரலில்.
“இங்க பாரு, உனக்கு என்ன தோணுதோ அதை எழுதிட்டு போய் குடு. இல்ல முடியாதுன்னா,நாளைக்கு எப்படியும் நான் பனிஷ்மென்ட் வாங்குவேன் அந்த ஆள்கிட்ட. நீயும் சங்கத்துல ஜாயின்ட் பண்ணிக்கோ. அவ்வளவு தான். இப்ப போனை வை” என்று போனை கட் செய்தவள்,
“சாரி சார்..!” என்று தூக்கக் கலக்கத்துடனேயே,அனைத்தையும் எடுத்துக் கொண்டு எழுந்து செல்ல முற்பட்டாள்.
‘கொஞ்சம் கூட இவளுக்கு பயமே இல்லையா? என் முன்னாடியே என்னைய இப்படி மரியாதை இல்லாம பேசுறா. நான் இல்லாதப்பா என்னென்ன பேசுவா?” என்று பல்லைக் கடித்தவன்,
அவளின் கையைப் பிடித்து இழுக்க, அவனருகிலேயே மீண்டும் தொப்பென்று அமர்ந்தாள்.
“ இப்ப என்ன சார் உங்க பிரச்சனை?” என்றாள் சலிப்பாக.
அவள் கையிலிருந்ததை வாங்கியவன்,
‘எல்லாம் என் நேரம்’ என்று அவனே எழுத ஆரம்பித்தான்.
“என்ன சார் பண்றிங்க?” என்றவள், சிறிது நேரத்தில் மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள். மாத்திரை போட்டதின் விளைவு என்று அவனுக்கும் புரிந்தது.
அவனின் இடது கையேடு தன் கைகளை கோர்த்து அணைத்தபடி அவன் மேல் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவனுக்கு, அத்துணை நேரம் மனதில் இருந்த கோபம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்று மறைந்திருந்தது.
நிமிடங்கள் கடந்து செல்வதைக் கூட அறியாமல் அவளையே பார்த்திருந்தவனை, அவளின் அசைவு தான் நிஜத்திற்கு இட்டு வந்தது.
தலையை உலுக்கி சன்ன சிரிப்புடன் தன்னை சமன் செய்தவன், எழுத் ஆரம்பித்தான். அவன் எழுதி முடித்து, அனைத்தையும் எடுத்து வைத்த பிறகு கண்டது என்னவோ, தன் மடி மீது தலை வைத்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை தான்.
“நான் குடுத்த அசைன்மெண்ட்டை என்னையே எழுத வச்சுட்டு,எப்படி ஒய்யாரமா தூங்குறா பார்” என்று அவளின் கன்னத்தை வருட, அந்த வருடலில் அவனை இடுப்போடு அணைத்துக் கொண்டாள். அவளின் திடீர் செய்கையில் முழித்தான்.
“இவ என்னை ஒரு வழியாக்காம விட மாட்டா போல.”என்று உள்ளுக்குள் ஆனந்தமாய் அதிர்ந்தவன், குனிந்து அவள் நெற்றியிலும், கன்னத்திலும் முத்தமிட, தூக்கத்தில் உணர்ந்தாளோ என்னவோ, இதழ்கள் மெல்லிய சிரிப்புடன் விரிந்தது. விரிந்த இதழ்களில் முத்தமிட தோன்றிய உணர்வை கஷ்ட்டப்பட்டு அடக்கியவனுக்குள் ஒட்டு மொத்த ஹார்மோன்களும் அவனுக்கு எதிராக வேலை செய்ய,
“இது சரிப்பட்டு வராது” என்று முனங்கியபடி, அவளின் தலையை நகர்த்தி சோபாவில் வைத்தவன் எழுந்து விட்டான்.
எப்போதும் போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தவள்,தன்னுடைய அறையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள்.
“நான் எப்ப மேல வந்தேன். கீழ தான தூங்குனேன்” என்று யோசித்துக் கொண்டிருந்தவள், தூக்கக் கலக்கத்தில் விஜய் எழுப்பியது, எழுத சொன்னது, தான் மறுத்தது என்று ஒவ்வொன்றாய் ஞாபகம் வர, தலையில் கை வைத்துவிட்டாள்.
“கடவுளே..! எனக்குன்னே நடக்கும் போல. இன்னைக்கும் பேச்சு வாங்கியே ஆகணும்னு இருந்தா அதை யாரால மாத்த முடியும். சீக்கிரமா குளிச்சு போய், முடிஞ்ச அளவுக்கு எழுதப் பார்ப்போம்” என்று எண்ணியவள், வேகமாய் குளித்துவிட்டு கத்தரிப்பூ நிறத்தில் சுடிதார் அணிந்தவள், வேகமாய் கீழே வந்தாள்.
வந்தவள் கண்டது என்னவோ எப்போதும் காணும் காட்சி தான். அமுதா வீல் சேரில் அமர்ந்திருக்க, விஜய் கோலமிட்டுக் கொண்டிருந்தான்.
மெல்ல அமுதாவின் அருகில் சென்றவள்,
“குட்மார்னிங் ஆன்ட்டி” என்றாள்.அமுதா அவளைப் பார்த்து சிரிக்க, அவளின் குரலில் தான் நிமிர்ந்தான் விஜய்.
தலையில் கட்டிய துண்டுடன், அழகிய மலராய் நின்றவளை, ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன்,
“காலங்காத்தாலையேவா?” என்று தனக்குள் முனங்கிக் கொண்டான்.
அவனை சோதிப்பதற்காகவே அவனருகில் சென்றாள்.
“நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?” என்றவள், அவனை நெருங்கி அருகில் இருந்த கலர் கோலப்பொடியை எடுக்க,
“இல்ல, ஏன் தினமும் ஆன்ட்டியை இப்படி வெளியே வீல்சேரில் உட்கார வச்சுட்டு நீங்க கோலம் போடுறிங்க. வேலைக்கு ஆள் வச்சிருக்கலாமே?” என்றாள்.
அவளை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன்,
“வச்சிருக்கலாம் தான். ஆனா, நான் அவங்களுக்கு ஒரே பையன். சோ சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா கூட நான் ரொம்ப குளோஸ். இதோ இப்ப நீ பார்க்குற இந்த சீன் தலைகீழா நடக்கும். நான் எப்பவும் அப்படி உட்கார்ந்திருப்பேன். என்கிட்டே பேசிட்டே அம்மா கோலம் போடுவாங்க. எங்க டேவே அப்படி தான் ஸ்டார்ட் ஆகும். அம்மா இந்த டைமிங்க ரொம்ப லைக் பண்ணுவாங்க. எனக்கும் இப்படி குளிர்ல உட்கார்ந்து அவங்க போடுற கோலத்தை பார்த்துட்டே, அவங்ககிட்ட பேசிட்டு இருக்குறது அது ஒரு விதமான பீல் குடுக்கும். இப்போ அவங்களுக்கு முடியலை. சோ நான் போடுறேன். அவங்க பார்க்குறாங்க. எது எப்படின்னாலும் சீன் ஒண்ணுதான். இதை நாங்க ரெண்டு பேருமே மிஸ் பண்ண விரும்பலை.” என்றவன் கோலத்தை முடித்திருந்தான்.
வேதா அவனையே இமைக்காமல் பார்த்திருக்க,
“டன் மாம்.உங்க அளவுக்கு இல்லைன்னாலும் ஓகே லெவல் தான?” என்றவன் அமுதாவின் கழுத்தோடு அணைத்துக் கொள்ள, அவரின் கண்கள் கலங்கியிருந்தது.
“பீல் பண்ணாதிங்க மாம். அவ்வளவு மோசமாவா இருக்கு” என்று அவன் சிரிக்க,
“சார் அது கோலம் இல்லை. டிராயிங்” என்றாள் வேதா சிரிப்புடன்.
“அது என்னவோ? எனக்கு என்ன வருதோ அதான். இல்லையா மாம்” என்றவனின் கேள்விக்கு பதில் என்னவோ அமுதாவின் கண்கலங்கிய சிரிப்பு தான்.
“நீ என்ன இவ்வளவு இயர்லியரா வந்திருக்க?” என்றான் அமுதாவை உள்ளே அழைத்துச் சென்றபடி.
“நான் என்னோட புக்ஸ எடுக்க வந்தேன். அசைன்மென்ட் எழுதப் போறேன்.உங்களால தான் நேத்து நான் எழுதலை” என்று குறை சொன்னாள்.
“சரித்தான், ரொம்ப நல்லது” என்று நக்கலாய் கூறியவன், அமுதாவை அவரின் அறையில் விட்டுவிட்டு வந்தான்.
அதற்குள் அசட்டையாய் அனைத்தையும் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு, அங்கே கண கச்சிதமாய் எழுதி முடிக்கப்பட்டிருந்த அசைன்மெண்ட்டை பார்த்ததும் அப்படி ஒரு சந்தோசம்.
“நான் எழுதலையே? யார் எழுதியிருப்பா?” என்று யோசித்துக் கொண்டு திரும்ப, கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் விஜய்.
“ஹேண்ட்ரைட்டிங் மட்டும் தான் அழகா இருக்கா?” என்றான் ஒரு விதமான ஏகாந்த குரலில்.
“அப்கோர்ஸ்..! அதை எழுதினவரும் அழகு தான்” என்றாள் ரசனையுடன்.
தனது நோட் புக்சை கையில் எடுத்துக் கொண்டவள், அவன் அசந்த நேரம் அவன் கன்னத்தில் பட்டென்று முத்தமிட்டிருந்தாள்.
“தேங்க்ஸ்..! அசைமென்ட் எழுதி கொடுத்ததுக்கு..” என்றவள் திரும்பி செல்ல, அவனோ அவளின் திடீர் முத்தத்தில் ஆனந்த அதிர்ச்சியில் நிற்க, வேகமாய் திரும்பி வந்தவள்,அவனின் மற்றொரு கன்னத்திலும் முத்தமிட்டாள்.