அவளுக்கு ஆப்ரேஷன் செய்த அதே ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டிருந்தாள் வேதா. அவளை அழைத்து வரும் போது, மூக்கில் இருந்து வடிந்த இரத்தம் வேறு விஜயை கலவரப்படுத்தியிருந்தது.
“இன்னும் எவ்வளவு நேரம்டா பார்ப்பாங்க” என்றவன் பொறுமையின்றி நடந்து கொண்டிருக்க,
“விஜய் ரிலாக்ஸ்..! அவங்க பார்க்க வேண்டாமா? அவளுக்கு சாதாரண மயக்கமாத்தான் இருக்கும். நீ முதல்ல தண்ணியைக் குடி” என்று சரண் அவனை அமைதிப் படுத்த முயல, முடியவில்லை அவனால்.
“எனக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் ரொம்ப ராசி போல. அதான் எனக்கு பிடிச்சவங்க எல்லாரும் இங்கயே வந்து இருந்து, எனக்கு வலியை குடுத்துட்டே இருக்காங்க” என்றான் விரக்தியாய்.
“விஜய் காம் டௌன்” என்ற சரணுக்கு அவனை எப்படி அமைதிப் படுத்துவது என்றே தெரியவில்லை.
“முடியலை மச்சான்..! நானும் மனுஷன் தான். எனக்கும் உணர்வுகள் இருக்கு. எனக்கும் வலிக்கும். இது ஏன் யாருக்கும் புரிய மாட்டேங்குது. முதல்ல அப்பாவுக்கு புரியாம போய் சேர்ந்தார். அப்பறம் அம்மாவும் அப்படி ஆகிட்டாங்க. இப்போ இவளும் இப்படி” என்றவனுக்கு தொண்டையை அடைக்க, அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. முதன் முறையாக தான் உடைந்து போனதை வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறான் விஜய ரகு நந்தன்.
“சார் டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுறார்” என்ற நர்சின் குரலில் வேகமாய் உள்ளே சென்றனர்.
“நீங்க..!”
“நான் அவ ஹஸ்பண்ட் டாக்டர்” என்றான் விஜய் வேகமாக.
“இதுக்கு முன்னாடி அவங்க இப்படி மயங்கி விழுந்திருக்காங்களா?” என்றார்.
“எஸ் டாக்டர்..! இப்போ ரீசண்ட்டா தான். சென்னைல டாக்டர் கிட்ட காட்டினோம். ஸ்ட்ரெஸ்ன்னு சொன்னாங்க” என்றான் பதட்டமாய்.
“எஸ்..! ஆனா, அவங்களுக்கு பிரஷர் ரொம்ப ஹையா இருக்கு. இதே நிலைமைல போனா, மூளைக்கு போற நரம்பு பாதிக்கப்படும். அவங்களுக்கு மறுபடியும் பார்வையிழப்பு ஏற்படலாம். நோஸ்ல ப்ளட் வர்றது இதோட முக்கியமான சிம்டம்ஸ். அவங்களுக்கு தலைவலியும் அதிகமா இருந்திருக்கணும். உங்ககிட்ட சொன்னாங்களா?” என்றார் டாக்டர் கேள்வியாய்.
“ஆல்ரைட்..! இந்த சின்ன வயசுல ஹை பிரஷர் ஆகுற அளவுக்கு என்ன பிரச்சனை அவங்களுக்கு? அவங்களுக்கு ஹராஸ்மென்ட் எதுவும் நடந்ததா, பலமா அடி வாங்குனா தடம் இருக்கு. நகக் கீறல்கள் இருக்கு.” என்றார் .
“முன்னாடி எல்லாம் இல்ல டாக்டர். இப்போ ரீசன்ட்டா நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல அம்மா தவறிட்டாங்க. அதுல கொஞ்சம் இஷ்யூஸ். சர்ஜரி கூட இங்க தான் நடந்தது. அப்ப இருந்து தான் அவளுக்கு இந்த ப்ராப்ளம்..” என்றான் சரண். டாக்டரின் ஹராஸ்மென்ட் கேள்விக்கு பதில் சொல்லாமல் அப்படியே மழுப்பினான்.
“அவங்க கேஸ் பைல் பார்த்தேன். ரொம்ப கிர்டிகள் ஸ்டேஜ்ல இருந்து க்யூர் ஆகியிருக்காங்க. இனி கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க” என்றார்.
“வேற எதுவும்..?” என்று விஜய் தயங்க,
“ஹெல்தி புட்ஸ், நல்ல ரெஸ்ட், பீஸ்புல் மைன்ட், அண்ட் எக்ஸசைஸ் இதெல்லாம் பாலோ பண்ணாலே போதும். முக்கியமா ஸ்ட்ரெஸ் ஆகவே கூடாது. நான் கொஞ்சம் மெடிசன்ஸ் எழுதித் தர்றேன். அதையே கன்டினியு பண்ணுங்க.” என்றார்.
“தேங்க்யு டாக்டர்” என்ற விஜய்க்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்ததைப் போல் இருந்தது.
“என்னடாமா அப்படி பார்க்குற?” என்றான். அமைதியாக அவனருகில் சென்றவள், அவனை அணைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
“கீர்த்தனா என்னாச்சு?” என்று விஜய் திகைக்க, சரணோ அதிர்ந்தான்.
அவள் விடாமல் அழ,
“என்னாச்சு கீர்த்தனா?” என்றான் மீண்டும்.
“சாரிண்ணா..! என்னால தான் எல்லாம். வேதா தலைவலின்னு சொன்னப்பவே நான் உங்க கிட்ட சொல்லியிருக்கனும். கேர்லஸா இருந்துட்டேன். இன்னைக்கு அங்க வரமாட்டேன்னு சொன்னவளை நான்தான் கம்பல் பண்ணி கூட்டிட்டு வந்தேன். எல்லாமே என்னால தான். ஐ பீல் வெரி கில்ட்டி” என்றாள்.
“இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லடா. நடக்கனும்னு இருந்திருக்கு நடந்திருச்சு. இதுல நீ கில்ட்டியா பீல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை..” என்றான் விஜய்.
“வேதா இப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை” என்றாள். அவளுக்கு வேதா தன் அண்ணனை அப்படி பேசியதில் மன வருத்தமிருந்தது.
“நடந்த எதுவும் அவளுக்கு தெரியாது. நான் ஏன் அப்படி சொன்னேன், செஞ்சேன்னும் அவளுக்குத் தெரியாது. அவளோட இடத்துல இருந்து பார்த்தா அவ நினைக்கிறதும் கேட்டதும் சரிதான” என்றான் விஜய். அவன் சாதரணமாக சொல்வதைப் போல் தெரிந்தாலும், அவன் குரலில் இருந்த பேதமையை சரண் உணர்ந்து கொண்டான்.
“மச்சான் நீதான் சொல்லுவியே அவ சின்ன பொண்ணுன்னு. அதான் ஏதேதோ திங்க் பண்ணி அப்படி பேசிட்டா. அங்க நடந்த அதிர்ச்சியில தான் அப்படி பேசியிருப்பா. நீ எதுவும் மனசுல வச்சுக்காத” என்றான் சரண் வேகமாக.
“நீ, நான் நினைக்கிற மாதிரி அவ சின்ன பொண்ணெல்லாம் இல்லை. ரொம்ப தெளிவா யோசிக்கிறா. தெளிவா முடிவெடுக்குறா. இனி எந்த முடிவா இருந்தாலும் அவளே யோசிச்சு எடுக்கட்டும். நீங்க யாரும் எதுவும் தலையிட வேண்டாம்” என்றான் விஜய்.
“அவ ஏதோ கோபத்துல வேண்டாம் அப்படி இப்படின்னு பேசிட்டா விஜய். அவளுக்கு கொஞ்சம் டைம் குடு” என்றான் சரண்.
“சரண் பிளீஸ்..! இதை நாங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சுக்கறோம். நீங்க யாரும் தலையிடாதிங்க” என்று விஜய் பட்டென்று சொல்ல, சரண் அமைதியாகிவிட்டான்.
அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று அவளருகே அமர்ந்தவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மயக்கம் தெளிந்து கண்களைத் திறந்தவளுக்கு எதிரில் தெரிந்தது என்னவோ களைத்துப் போன விஜயின் முகம் தான்.
கண்களை சுருக்கி யோசித்தவளுக்கு, அவன் சென்றதும், தான் கத்தியதும், அப்படியே மயங்கியதும் ஞாபகத்திற்கு வந்தது. அவன் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டிருக்க, சட்டென்று தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
அவள் கோபம் உணர்ந்தவன், கண்களை இறுக மூடித் திறந்தான்.
ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அவளின் மற்றொரு கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள் அழுத்திக் கொண்டான். அவன் எப்போதும் செய்யும் செய்கை. இந்த ஒரு செய்கை தானே அவனையும் நந்தகுமாரையும் வேறு படுத்தி காட்டியது. அவன் அவளுக்குள் கடத்திய அந்த உணர்வு தானே அவனை யார் என்று அவளுக்கு அடையாளம் காட்டியது.
நடந்த ஒவ்வொன்றும் நினைவடுக்குகளில் வந்து போக, கண்கள் கலங்கியது. தன் கரத்தை அவன் கரங்களில் இருந்து விடுவிக்க பார்க்க, முடியவில்லை அவளால்.
அவளின் கண்ணீரைத் துடைத்தவன்,
“பிளீஸ்மா..! அழாத” என்றான் மென்மையான குரலில். ஏனோ அவனின் அந்த மென்மை கூட அவளின் கண்ணீரைக் கூட்டத்தான் செய்தது.
அவன் அறைந்த தடம் அவளின் பால்வண்ண கன்னத்தில் சிவந்து தெரிய, அதை தன் கரங்களால் வருடியவன்,
“ஐ ஆம் சாரிமா !! எவ்வளவு கோபம் இருந்தாலும் உன்னை அடிச்சிருக்க கூடாது” என்றான். அவள் அவனின் எந்த பேச்சிற்கும் பதில் சொன்னாளில்லை. அவளின் அந்த அமைதி கூட அவனை ஒரு வகையில் கொல்லாமல் கொன்றது.
“நான் சரண்-கீர்த்தனாவை வர சொல்றேன்” என்றவன், திரும்பி செல்ல முற்பட கால்கல் நகர மறுத்தது. ஆழ்ந்து மூச்சை எடுத்தவன், திரும்பி அவளைப் பார்க்க, அவ்வளவு நேரம் அவனைப் பார்த்துக் கொண்டிருந்த வேதா பார்வையை மாற்றினாள். எதைப் பற்றியும் யோசிக்காமல், அவளருகே குனிந்து அவள் முகத்தை கைகளில் தாங்கியவன், அவள் நெற்றியில் நீண்ட நெடிய முத்தத்தை பதித்திருந்தான். அவனின் ஒட்டு மொத்த உள்ளத்து உணர்வுகளையும், தவிப்புகளையும் அந்த ஒற்றை நெற்றி முத்தத்தின் வழியாக அவளுக்குள் கடத்திக் கொண்டிருந்தான். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அவனுக்கும்,மொத்த மன உணர்வுகள் மரத்துப் போயிருந்த அவளுக்குமான முதல் முத்தம்.
அவன் முகத்தின் தவிப்பைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள் வேத வர்ஷினி.