ராமச்சந்திரன் இயலாமையுடன் மகளை அணைத்துக் கொண்டு நிற்க,
“யாரா இருந்தா என்ன? சரண் நீ போலீஸ்க்கு கால் பண்றியா? இல்லை நான் பண்ணவா?” என்றான் விஜய்.
“இதுல ரெண்டு குடும்ப மானமும் அடங்கியிருக்கு. எடுத்தோம் கவுத்தோம்னு போலீஸ்க்கு போக முடியாது தம்பி” என்றார் கனியின் மாமனார்.
“சரண் உங்க வீட்டு மானம் முக்கியமா, இல்ல உங்க வீட்டு பொண்ணு மானம் முக்கியமா?” என்றான் ஆக்ரோஷத்துடன்.
சரணும் ஒரு முடிவு எடுத்தவனாய் போலீஸ்க்கு அழைக்கப் போக, நீலாவதி பயந்துவிட்டார். அவரைப் பார்த்த வேதாவிற்கு என்ன தோன்றியதோ,
“வேண்டாம் சரண் அண்ணா..! இதை இதோட விட்ருங்க” என்றாள் குரல் வெளி வராத குரலில். அப்போதும் கண்ணீர் தான் வந்தது.
“இல்ல வேதாம்மா.! எனக்கு விஜய் சொல்றது தான் சரின்னு படுது” என்றான்.
“இல்லண்ணா..! நாமளே நம்மளை அசிங்கபடுத்திகிட்ட மாதிரி ஆகிடும்” என்றாள்.
“ஹோ..! வெளியாளுன்னா அசிங்கபடுத்தலாம். அதே வீட்டு ஆள்னா மன்னிச்சு விட்றலாமா?” என்றான் விஜய். முகம் கோபத்தில் சிவந்திருக்க, வேதாவை முறைத்துக் கொண்டு நின்றான்.
“நீ அவங்களுக்கு யோசிக்கிற, அவங்க அப்படி யோசிக்கலையே?” என்றாள் கீர்த்தனா.
“அண்ணி..! பிளீஸ்” என்றவள்,
“அண்ணா வேண்டாம்..!” என்றாள் மறுப்பாக.
“என்னால இதை அப்படியே விட முடியாது” என்றான் விஜய்.
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை.?உங்களுக்கு என்ன அக்கறை?” என்றாள் கோபமாய் வேதா.
“நான் அக்கறைப் படாம வேற யார் படுவா?” என்றான் அவனும் கோபமாக.
“அது தான் சார் கேட்குறேன்? நீங்க யாரு ?நீங்க யாரு சார் என் மேல அக்கறைப்பட?” என்று வெடித்தாள். அவளின் கோபத்திலும், கேள்வியிலும் இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறந்தது விஜய்க்கு.
“நீங்க யாரு? நீங்க யாரு? நீங்க யாரு? இன்னும் எத்தனை தடவைடி கேட்ப? ஏன் நான் யாருன்னு உனக்குத் தெரியாதா? இல்ல தெரியாத மாதிரியே நடிக்கிறியா?சொல்லு நான் யாருன்னு உனக்குத் தெரியாது?” என்று அவள் தோளை பிடித்து உலுக்கியவன்,ஆக்ரோஷமாய் கத்த ,அவன் கத்திய கத்தலில் அந்த இடமே கப்சிப் என்றிருக்க,
“அண்ணா..!!” என்று கீர்த்தனா அவனை அமைதிப்படுத்த முயல,
“கீது, கேட்குறா பாருடா கேள்வி. இவளைக் காணோம்னு வீடு முழுக்க உசிரைக் கையில பிடிச்சுட்டு தேடிட்டு வந்தா..இதோ இந்த நாய் இவ கிட்ட தப்பா நடக்கப் பார்ப்பானாம். வந்து நம்ம தடுத்து கேள்வி கேட்டா.. இதோ இந்தம்மா பிளான் போட்டுக் குடுத்ததாம். அவங்களை கேட்கத் துப்பில்லை, என்னைப் பார்த்து கேட்குறா, நீங்க யாருன்னு?” என்றான் ஆக்ரோஷமாய் மூச்சு வாங்க.
“இப்பவும் கேட்குறேன், என்மேல உங்களுக்கு என்ன அக்கறை? நீங்க யார் எனக்கு?” என்று அவள் கேட்டு முடிக்கும் முன்,
“புருஷன்டி..! உனக்குத் தாலி கட்டுன புருஷன்டி” என்று கத்தியவன்,
“போதுமா? நான் யாருன்னு உனக்குத் தெரிஞ்சிடுச்சா? இதை என் வாயால சொல்லனும்னு தான எதிர்பார்த்த” என்றான் கோபமாய்.
அவனை நிதனமாய் பார்த்தவள்,
“நீங்க எனக்கு புருஷனா? இல்ல கள்ளப் புருஷனா? நான் உங்களுக்கு பொண்டாட்டியா இல்லை வப்பாட்டியா?” என்ற அவளின் கேள்வியில் அனைவரும் அதிர்ந்து போய் நிற்க, விஜயோ ஒரு படி மேலே சென்று ஆத்திரத்தில் அவளை அறைந்திருந்தான்.
அவன் அடித்த அடியில் சுருண்டு விழப் போனவளை கீர்த்தனா தாங்கிப் பிடித்திருக்க,
“விஜய் என்ன பண்ற?” என்று அவனைத் தடுக்க வந்தான் சரண்.
“உன் தங்கச்சி என்ன கேள்வி கேட்குறான்னு பார்த்தியாடா.?” என்றவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருந்தான்.
“நான் கேட்டதுல என்ன தப்பு? தாலி கட்டினதை வெளியே சொல்லக் கூடாதுன்னு சொன்னா.. தெரியாம தாலி கட்டியிருக்கிறதுக்கு நான் என்ன வப்பாட்டியா? இல்ல யாருக்கும் தெரியாம இருக்கிறதுக்கு நீங்க என்ன கள்ள புருஷனா?” என்றாள் அழுகையும் ஆத்திரமும் கலந்து.
“வேதா என்ன பேச்சு இதெல்லாம்?” என்று ராமச்சந்திரன் அதட்ட,
“அப்பா பிளீஸ்..! என்னால முடியலை. நீங்க எல்லாரும் தான என்கிட்ட இருந்து விஷயத்தை மறைச்சிங்க. இதோ சரண் அண்ணாவை நான் எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்தேன். அவன் வாயைத் திறக்கவேயில்லை.
இவர் சொன்னா அப்படியே கேட்டுப்பிங்களா? இப்பவும் எனக்கா தெரியலைனா நான் இன்னொருத்தனை தான மனசுல நினைச்சுட்டு இருந்திருப்பேன். அது எவ்வளவு பெரிய அசிங்கம்.
நான் கேட்டேனா? இவரை என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நான் கேட்டேனா? சரி அப்படியே பண்ணினாலும் அதை மறைக்குற அளவுக்கு என்ன அவசியம் வந்தது? அப்ப கூட ஏதாவது காரணம் இருக்கும்னு என்னை நானே தேத்திகிட்டேன். ஆனா அப்படி மறைச்சதால தான இவனை மாதிரி கண்ட நாயெல்லாம் என்கிட்டே இப்படி நடந்துக்குறாங்க. அந்த நந்தா எனக்கு கல்யாணம் ஆகலைன்னு நினைச்சு என் பின்னால வர்றார். இதுக்கெல்லாம் யார் காரணம், இதோ இவர் தான் காரணம். இவர் மட்டும் தான் காரணம்.” என்றாள் தீர்க்கமாக.
விஜய் வேதனையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்கள் கலங்கியதைப் போல் இருந்தது. அவன் முகத்தில் தெரிந்தது வேதனையா? ஆற்றாமையா? கலக்கமா? எனத் தெரியவில்லை.அண்ணனைப் பார்த்த கீர்த்தனாவிற்கு வேதனை நெஞ்சை அறுக்க, அதற்குமேல் அங்கு நிற்க முடியாதவன், அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
விஜய்..! அவ ஏதோ புரியாம” என்று சரண் சொல்ல வர, அவனைத் தடுத்தவன் சென்று விட்டான்.
அவன் போவதை விரக்தியுடனும், கோபத்துடனும் பார்த்த வேதவர்ஷினி,
“ என்னை விட்ருங்க. எனக்கு யாரும் வேண்டாம். எனக்கு கல்யாணம் வேண்டாம், புருஷன் வேண்டாம். எதுவுமே வேண்டாம், வேண்டாம் வேண்டாம்..” என்று ஹிஸ்டீரியா பேஷன்ட் போல் கத்த, அடுத்த நிமிடம் மயங்கி சரிந்திருந்தாள்.
“வேதா.. வேதாம்மா..!” என்று ஆளாளுக்கு கத்த, சென்று கொண்டிருந்த விஜயின் காதுகளிலும் அந்த சத்தம் விழுந்து வைத்தது. அடுத்த நான்கு எட்டுக்களில் வேகமாக அவளிடம் வந்தவன்,
“வேதா..!”என்று பதட்டத்துடன் அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான். சேகரையும், நீலாவதியையும் பார்த்தவன்,
“இவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு, உங்க ரெண்டு பேர் உசுரும் உடம்புல இருக்காது, ஜாக்கிரதை” என்றவன்,
“கீர்த்தனா வாடா..!” என்றான்.
அவள் குடும்பத்தினர் அனைவரும் உடன் வர,
“எவனாவது என் கூட வந்திங்க.. என்ன பண்ணுவேன்னு தெரியாது. நீங்க பார்த்து கிழிச்ச வரைக்கும் போதும். என் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும். உங்க குடும்ப மானத்தை காப்பாத்துற வழியை மட்டும் பாருங்க. உங்களுக்கு அது தான முக்கியம்.” என்றவன், தங்கையை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றான்.
“வேதாவுக்கு இப்படி ஆன பதட்டத்துல பேசுறான். நான் போய் பார்க்குறேன். நீங்க இங்க பாருங்க..” என்று அனைவரையும் தேற்றியவன்,
“பார்த்துக்க” என்று அகரனிடம் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
நீலாவதியை அங்கிருந்த அனைவரும் அற்ப புழுவைப் போல் பார்க்க,
“அந்த சின்ன பொண்ணு கிட்ட இருக்குற பெருந்தன்மை கூட உனக்கு இல்லை. நீயெல்லாம் ஒரு பொண்ணைப் பெத்தவன்னு வெளிய சொல்லிக்காத” என்று சிவச்சந்திரன் காரி உமிழாத குறையாக பேசினார்.
“வர மாட்டேன்னு சொன்ன புள்ளைய வம்பா கூட்டிட்டு வந்து, என் புள்ள வாழ்க்கையை நானே கெடுக்கப் பார்த்திருக்கேன்” என்ற ராமச்சந்திரன் ஓய்ந்து போய் அமர,
“நாம இப்படி நடக்கும்னு எதிர்பார்த்தோமா அண்ணா. பாப்பாக்கு ஒன்னும் ஆகாது. நீங்க எதுவும் நினைக்காதிங்க. உங்களுக்கு ஏதாவதுன்னா என்ன பண்றது?” என்று பாலச்சந்திரன் அண்ணனைத் தாங்க,
“போய் சேர வேண்டியது தான்” என்றார் விரக்தியாய். ஏனோ மனம் அவரின் மனைவி காதம்பரியை நினைத்தது.
“நீ இருந்திருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா காதம்பரி” என்று மனதிற்குள் விரக்தியுடன் பேசிக் கொண்டார்.
“அப்பா! வேதாக்கு ஒன்னும் ஆகாது. அதான் மாப்பிள்ளை கூட இருக்கார்ல.” என்று தந்தைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான் மனோ.
அங்கே சரண் காரை ஒட்டிக் கொண்டிருக்க, பின்னிருக்கையில் வேதாவை மடியில் தாங்கியிருந்தவனின் முகம் முழுக்க வேதனை மட்டும் தான்.
“இன்னும் எத்தனை தடவைடி என்னை இப்படி கண்ணீர் சிந்த வச்சுட்டே இருப்ப.உன்னால மட்டும் தான் இந்த கண்ணீர். உனக்காக மட்டும் தான் இந்த கண்ணீர். அது எப்போ தான் புரியும் உனக்கு?” என்று மனதில் அரற்றிக் கொண்டிருந்தவனின் வேதனையை பாவம் வேதா அறியவில்லை.