“ஏன் பேசக் கூடாது அண்ணா?. நந்தா பேமிலி தானே இவங்க. நான் பேசாம யார் பேசுவா?” என்றாள் மனோவைப் பார்த்து. அப்போது தான் அவனுக்கு உண்மை உரைக்க, நிதானித்தவன்,
“உன்னை பேசக் கூடாதுன்னு சொல்லலை வேதா. அவ்வளவு வேலை கிடக்கு. இப்படி நீ பொறுப்பில்லாம இருந்தா என்ன பண்றது? போ..! மைதிலி சித்தி கூப்பிடுறாங்க” என்றான் பேச்சை மாற்றியபடி.
அவனைப் பார்த்து உள்ளுக்குள் விரக்தியாய் சிரித்துக் கொண்ட வேதா,
“சரிண்ணா..!” என்று சென்றாள்.
“நீங்க எதுக்காக இங்க வந்திங்க? வேதாகிட்ட உங்களுக்கு என்ன பேச்சு?” என்றான் அவர்களைப் பார்த்து கோபமாய்.
“தம்பி உங்க கோபம் புரியுது. நாங்க பேசினதும் அதிகம் தான். ஆனா, என் பையன் வேதாவைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ண முடியாதுன்னு உறுதியா இருக்கான். எங்களுக்கு இருக்குறது ஒரே பையன். எங்களுக்கு வேற வழி தெரியலை” என்றார் நந்தாவின் அப்பா.
“இப்பவும் என் தங்கச்சிக்கு கண்ணு சரியாகாம இருந்திருந்தா வந்திருப்பிங்களா?” என்றான் கேள்வியாய். அவர்கள் பதில் சொல்ல தயங்க,
“கண்டிப்பா வந்திருக்க மாட்டிங்க..! இனி இந்த பேச்சை எடுக்காதிங்க. நான் ரொம்ப பொறுமையா பேசுறேன்” என்றான் மனோகரன்.
“நீங்க நினைக்கிறது ஒரு காலமும் நடக்காது. வேதாவுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிடுச்சு” என்றான்.
“எங்களைத் தவிர்க்க நீங்க இப்படியெல்லாம் சொல்லுவிங்கன்னு தெரியும். நீலாவதி சொன்னாங்க. நாங்க பெரியவங்க கிட்ட பேசிக்கிறோம் தம்பி” என்று அவர்கள் முடித்துவிட, எரிச்சலடைந்தான் மனோகரன். அவனின் கோபம் நீலாவதியின் மீது திரும்பியது.
அதே நேரம் மைதிலி கனியின் மாமியாரை அழைத்து வரச் சொல்ல, அவரைக் அழைக்கச் சென்றாள் வேதா. அவ்வளவு நேரமும் அவளை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த கனியின் கொழுந்தன் சேகர் அவளை தொடர்ந்து சென்று, பட்டென்று ஒரு அறைக்குள் இழுத்து கதவை அடைத்தான். அவள் சுதாரிப்பதற்குள் இதெல்லாம் நடந்து முடிந்திருந்தது.
சேகர் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்காதவள்,
“என்ன பண்றிங்க? விடுங்க?” என்றாள்.
“வேதா ஒரு அஞ்சு நிமிஷம்..! நான் சொல்றதை கேளேன்” என்று அவன் மன்றாடினான்
“என்ன சொல்லணும்? எனக்கு எதையும் கேட்க வேண்டாம்? முதல்ல கதவைத் திறங்க. யாராவது பார்த்தா தப்பா போய்டும்” என்றாள்.
“பிளீஸ் வேதா..! அதான் உன் கல்யாணத்துல பிரச்சனை ஆகிடுச்சே. இப்பவாவது எனக்கு ஒரு வாய்ப்பு தரக் கூடாதா? என்னால உன்னை மறக்க முடியலை பிளீஸ்..” என்று மன்றாடினான்.
“இங்க பாருங்க..! நீங்க எங்க வீட்ல கேட்டிங்க. அவங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. தயவு செஞ்சு கதவைத் திறங்க சேகர். என் அண்ணாங்க பார்த்தா பெரிய பிரச்சனை ஆகிடும்” என்றாள்.
“பொய் சொல்லாத வேதா. உங்கம்மா இறந்து போய், கல்யாணம் தான் நின்னு போச்சே. திரும்ப பேசத்தான அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க. நீலா அத்தை அவங்க கூட பேசினதை நான் கேட்டேன். ” என்றான்.
“சேகர் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க. நீங்க கதவைத் திறங்க. வெளியே போய் பேசிக்கலாம். நான் உங்களுக்கு நிதானமா புரிய வைக்கிறேன்.” என்றாள்.
“இல்ல நீ பொய் சொல்ற. இப்ப விட்டா நீ மறுபடியும் சென்னை போய்டுவ. எத்தனை தடவை உன்னைப் பார்க்க வந்து ஏமாற்றத்தோட திரும்பி வந்திருப்பேன். இன்னைக்கு அப்படியெல்லாம் விட முடியாது” என்றான்.
“நீ இப்போ குடிச்சிருக்க. நிதானத்துல இல்லை. நான் என்ன சொன்னாலும் உனக்கு புரிய போறது இல்லை.யாராவது பார்த்தா தப்பாகிடும். கதவைத் திறக்க போறியா இல்லையா?” என்றவளின் குரலில் மரியாதை துளிக்கும் கூட இல்லை.
“என்ன ஆனாலும் பரவாயில்லை. அப்படியாவது பெரிய மாமா உன்னை எனக்குக் கட்டிக் கொடுப்பார் தான. எனக்கு அது போதும்” என்றான் சேகர்.
“டேய் முட்டாப்பயலே..! இந்தா இருக்கு பாரு தாலி. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நம்பித் தொலைடா.” என்று கத்தினாள். அவள் காட்டிய தாலியைப் பார்த்து அதிர்ந்து நின்றான் சேகர்.
“இப்பவாவது நம்புறியா? கதவைத் திற” என்றாள்.
“யாரை ஏமாத்த பார்க்குற? செயினைக் காமிச்சு தாலின்னு சொல்ற? நம்ம வீட்ல இப்படியா தாலி போடுவோம்? அதுவும் இருக்குறது கூட தெரியாம?” என்றான்.
“ஒருவேளை இவன் நடிக்கிறானோ?” என்ற சந்தேகம் கூட வந்தது வேதாவிற்கு.
‘என்ன ஆனாலும் பரவாயில்லை’ என்று நினைத்தவள் கதவை வேகமாக ஓங்கித் தட்ட ஆரம்பித்தாள்.
“யாராவது இருக்கிங்களா? கதவைத் திறங்க” என்று அவள் ஓங்கி பலமாய் தட்ட,
“வேதா சத்தம் போடாத. அமைதியா இரு” என்று அவள் வாயைப் பொத்த,
“என்மேல கையை வச்ச உடம்புல உயிர் இருக்காது சொல்லிட்டேன்..எடுடா கையை” என்று திமிறினாள்.
“என்னடி விட்டா ரொம்ப துள்ளுற? நான் பொறுமையா தான பேசிட்டு இருக்கேன். என்னமோ நான் உன்னை ரேப் பண்ண ட்ரை பண்ற மாதிரி கத்துற. இப்ப வரைக்கும் எனக்கு அந்த ஐடியா எல்லாம் இல்லை. இப்போ நீயே குடுக்குற. இதுவும் நல்ல ஐடியா தான். நீ எனக்கு சொந்தமாயிட்டா, வாழ்க்கையிலும் சொந்தமாகித் தான ஆகணும்” என்றான்.
“சேகர் நீ தப்பு பண்ற? இப்பவும் சொல்றேன். எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை. கதவைத் திறந்துவிடு. நான் யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேன். பிரச்சனையை இதோட முடிச்சுக்கலாம்.” என்றாள்.
“வேண்டாங்கிறேன். நீ எல்லார்கிட்டையும் சொல்லணும். அது தான் எனக்கு வேணும். அப்ப தான நாம ஒன்னு சேர முடியும். நேர்மையா வந்து பொண்ணு கேட்டப்ப உன் ஆத்தாக்காரி எம்புட்டு பேச்சு பேசுனா? அதையெல்லாம் மறக்க சொல்றிய? இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டி..” என்றான்.
“நான் இன்னொருத்தரோட மனைவி” என்றாள்.
அவள் சொல்வதை நம்ப அவன் தயாராக இல்லை.
“பரவாயில்லை. ஒரு நாள் எனக்கு பொண்டாட்டியா இருந்துட்டு போ..! .” என்றான் இரக்கமில்லாமல்.
கீர்த்தனா இவளைக் காணாமல் தேடிக் கொண்டு வெளியே சென்றவள், விஜய் காரில் இருப்பதை பார்த்துவிட்டு அவனிடம் சென்றாள்.
“அண்ணா, வேதாவை பார்த்திங்களா?” என்றாள்.
“இல்லையே..! உள்ள தான இருந்தா?” என்றான் விஜய்.
“இல்ல அந்த நந்தாவோட பேரண்ட்ஸ் வந்திருக்காங்க. இவளை வேற காணோம்” என்றாள்.
“தெரியலைண்ணா..! ஆனா, இந்த நீலா அத்தை என்னமோ ட்ரை பன்றாங்கன்னு மட்டும் புரியுது” என்று கீர்த்தனா சொல்ல, வேகமாய் காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றான் விஜய்.