சரண்- கீர்த்தனா திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. இதோ இன்று அவர்களை சென்னை அழைத்துச் செல்ல கீர்த்தனாவின் குடும்பத்தினரும், அவர்களுடன் ரகுவும் வந்திருந்தான். முன்தினம் பெய்த மழையில் காலநிலையும், சுற்றுப்புறமும் ரசிக்கும் படியாகவே இருந்தது.
அண்ணன் தம்பிகள் மூன்று பேரின் வீடும் அடுத்தடுத்து வரிசையாக, ஒரே மாதிரியான கட்டமைப்பில் இருந்தது. வீட்டினை சுற்றிலும் மரம் செடி கொடிகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை போர்வை போர்த்தியிருந்தது. அவர்களின் வீடுகளை ஒட்டியே அவர்களின் தோட்டமும், வயலும்,தோப்பும் இருக்க அவற்றை ரசித்துக் கொண்டே இறங்கினான் ரகு. என்னதான் சரண் அவனுக்கு நண்பன் என்றாலும் இதுவரை சரணின் சொந்த ஊருக்கு வந்ததில்லை.
இப்போது மறுவீட்டு அழைப்பிற்கு அழைத்து செல்ல வந்துள்ளனர். சரணின் வேலையும் சென்னையில் தான் என்பதால், மறுவீட்டு விருந்து முடிந்து அப்படியே சென்னை வீட்டில் கீர்த்தனாவுடன் குடியேறத் திட்டமிட்டிருந்தான். திருமணத்திற்கு முன்பே எடுத்த முடிவுதான்.
“வாங்க..!!” என்று அனைவரும் முகம் மலர வரவேற்க,
“அண்ணா..!” என்று ஓடி வந்த கீர்த்தனா அவனை அணைத்துக் கொண்டாள்.
“என்னம்மா புதுப் பொண்ணு, புகுந்த வீடெல்லாம் செட் ஆகிடுச்சா? அதுக்குள்ள எல்லாரையும் மறந்தாச்சு போல?” என்று ரகு சிரித்துக் கொண்டே சொல்ல,
“அதை நீங்க சொல்லக் கூடாது. கல்யாணம் முடிஞ்ச கையோட என்னைத் தனியா விட்டுட்டு கிளம்பி போனவங்க தான நீங்க?” என்று கோபம் போல் பேசினாள்.
சமீப காலமாக தனது நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கி வந்து, இறுக்கம் தளர்ந்து அவ்வப்போது சிரித்த முகத்துடன் இருக்கும் விஜய ரகுநந்தனைப் பார்க்கும் போது,சரணிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. யாருடனும் சட்டென்று பழகாத ரகு தனக்காக மட்டுமே இவ்வளவு தூரம் வந்துள்ளான் என்று அவனுக்குத் தெரியும். சரண் அவனையே பார்த்து கொண்டிருக்க,
“என்னடா ஆச்சு?” என்றான் கேள்வியுடன் ரகு. அவனின் கேள்வியில் சட்டென்று நடைமுறைக்கு வந்தவன்,
“இன்னைக்கு தான் மச்சான் நீ உண்மைய பேசியிருக்க? இந்த பாவப்பட்ட ஜீவனோட இடத்துல இருந்து யோசிக்கவும் ஆள் இருக்குன்னு நினைக்கும் போது, என் கண்ணே கலங்குது” என்ற சரண் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க, அவனை முறைத்த கீர்த்தனா,
“ரூம்க்குள்ள பண்ண வேலையெல்லாம் பார்த்தா பாவப்பட்ட ஜீவன் மாதிரி தெரியலையே? நல்லா பக்குவப்பட்ட ஜீவன் மாதிரி இல்ல தெரிஞ்சது” என்று சின்ன சிரிப்புடன் அவன் காதுக்கருகில் முனுமுனுத்தாள்.
“நான் பக்குவப்பட்டு உன்னை பாவப்படுத்துன விதத்துல உனக்கும் வருத்தம் இருந்த மாதிரி தெரியலையே..” என்றான் சரணும் உல்லாசமாய். கீர்த்தனாவின் முகம் குப்பென்று சிவந்து விட,
என்னதான் அவர்கள் மெதுவாக பேசிக் கொண்டாலும், அனைத்தும் ரகுவின் காதில் விழுந்திருந்தது. மனதிற்குள் சிரித்துக் கொண்டவன், பேச்சை மாற்றும் பொருட்டு
“ஈவ்னிங் உனக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்றேன் மச்சான். இப்ப வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான்.
காதம்பரியும்,மைதிலியும் அனைவருக்கும் விருந்து சமைத்துக் கொண்டிருக்க,ராமச்சந்திரனும்,பாலச்சந்திரனும் வந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.
“நான் ஏதாவது செய்யனுமா மைதிலி? அப்பறம் நான் எதுவும் செய்யலைன்னு சொல்லக் கூடாது பாரு?” என்று நீலாவதி மேம்போக்காய் கேட்டு வைக்க,
“வேலையெல்லாம் முடிஞ்சது நீலாக்கா..!கிரியும்,அகரனும் இலை அறுக்க தோட்டத்துக்கு போயிருக்காங்க. எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டா, அடுத்து பரிமாற வேண்டியது தான்” என்றார் மைதிலி.
“ஏன் சித்தி, கீர்த்தனாக்கு எத்தனை சவரன் நகை போட்டாங்க? ” என்றாள் கனிமொழி பேச்சு வாக்கில் கேட்பது போல.
“நாங்க சீர் செனத்திய பத்திப் பேசவேயில்ல கனிமா. நம்மகிட்ட இருக்குறதே போதும் தானே. அவங்க பொண்ணுக்கு அவங்க விருப்பப்பட்டதை செய்றாங்க.” என்றார் மைதிலி.
“இந்த சரண் அண்ணா மட்டும் கீர்த்தனாவ விரும்பாம இருந்திருந்தா, நம்ம சொந்தத்துலயே இன்னும் வசதியான வீட்ல பொண்ணு கட்டியிருக்கலாம். என் வீட்டுக்காரர் வகையில, பொண்ணு கொடுக்க ரெடியா இருந்தாங்க. இந்த அண்ணா, காதல்னு சொல்லி இப்படி எல்லார் ஆசையிலும் மண் அள்ளி போட்டுட்டார்..” என்று கனிமொழி சொல்ல,
“ஸ்ஸ்..! கனிமா பார்த்து பேசு. கீர்த்தனா வீட்ல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. எப்ப எதை பேசணும்னு ஒரு வரைமுறை இருக்கு.வாழப் போறது சரண் தான். அவனுக்கு பிடிச்சிருந்தா போதும். பிள்ளைங்க சந்தோசம் தான் முக்கியம். அதுமட்டுமில்லாம, கீர்த்தனா வீட்லயும் அப்படி ஒன்னும் குறைஞ்சவங்க கிடையாது. நாமளும் ஒன்னும் ஜாமீன் பரம்பரை கிடையாது.” என்றார் மைதிலி பட்டென்று.
“பார்த்தியாம்மா சித்தியை..! மருமக வந்து மூணு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள மருமகளுக்கு முட்டுக் குடுக்குறதை. நான் என்ன அப்படி கேட்டுட்டேன்? அவங்களை விட அவங்க பெரியம்மா குடும்பம் நல்ல வசதின்னு சொன்னாங்க. கீர்த்தனாவும் ‘அண்ணா அண்ணான்னு’ அவங்க பெரியம்மா பையன் ரகு மேல உயிரா இருக்கு. அதான் அவங்க செஞ்சுருப்பாங்கன்னு நினைச்சுக் கேட்டேன்.” என்று நக்கலாய் கூறியவள்,
“எப்படியோ சித்தி, இதே மாதிரி கடைசி வரைக்கும் ஒத்துமையா, மாமியார் மருமக சண்டை இல்லாம இருந்தா சரிதான்” என்றாள்.
இவர்களின் எந்த பேச்சிலும் காதம்பரி கலந்து கொள்ளவில்லை. அவர் ஏதாவது எதார்த்தமாக கூறினாலும், அதை பதார்த்தமாக எடுத்துக் கொண்டு, காரணமே இல்லாமல் அதை பிரச்சனையாக்கி விடுவார்கள் நீலாவதியும்,கனிமொழியும்.
“அக்கா, இந்த வேதா புள்ளைய இன்னைக்கு காலேஜ்க்கு லீவ் போட சொன்னேன். டெஸ்ட் இருக்குன்னு சொல்லி தப்பிச்சு ஓடிட்டா. வேதா இருந்திருந்தா இந்த இடமே கலகலன்னு இருந்திருக்கும்..புள்ள இல்லாம வீடே என்னமோ மாதிரி இருக்கு” என்றார் மைதிலி.
“பார்த்தியாம்மா இந்த மைதிலி சித்தியை? வேணும்னே நம்மளை கடுப்பேத்துறதை..ஏன்? நம்மளைப் பார்த்தா ஆளா தெரியலையாமா?” என்று கனி பல்லைக் கடித்துக் கொண்டு முனங்க,
“நானும் பார்த்துட்டே தாண்டி இருக்கேன், இவளுங்க ஆட்டத்தை. எங்க போய் முடியுதுன்னு பார்ப்போம். அவளுக்குன்னு அமையுது பாரேன். பொண்ணுக்கு வசதியான வீட்டு சம்பந்தம் அமைஞ்ச திமிரு உன் பெரியம்மாக்காரிக்கு” என்று நீலாவதியும் தன் பங்குக்கு பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருந்தார்.
மகளும், தானும் இவர்கள் வாயில் அரைபடுவது தெரியாத காதம்பரி,
“ஆமா மைதிலி..! வேதாக்கு இன்னைக்கு முக்கியமான டெஸ்ட் இருக்குன்னு சொல்லிட்டு போனா. இல்லைன்னா லீவ் போடாம இருப்பாளா?எப்படியும் நாளைக்கு லீவ் தான? அதான் நானும் ஒன்னும் சொல்லலை “ என்றார்.
அகரனும்,கிரியும் வந்துவிட, மதிய விருந்து சிறப்பாக முடிந்திருந்தது. காதம்பரியின் கைப்பக்குவத்தில் உணவு தேவாமிர்தமாக இருக்க,
“உங்க கைல ஏதோ மேஜிக் இருக்குங்க. ரொம்ப டேஸ்டியா இருக்கு எல்லாமே” என்று காதம்பரியிடம் கூறியபடி, ஒவ்வொன்றையும் ரசித்து சாப்பிட்டான் விஜய ரகு நந்தன்.
“என் மூத்த மருமக சமைச்சா எட்டு ஊருக்கு மணக்கும் ராசா” என்று கோதை மருமகள் துதி பாட, சிவச்சந்திரன் குடும்பத்திற்கு தான் அங்கே இருப்பு கொள்ளவில்லை.
“ராசாவுக்கு எப்ப கல்யாணம்?” என்று ரகுவைப் பார்த்து பாட்டி கேட்க,
“இப்போதைக்கு அந்த ஐடியா எல்லாம் இல்லை பாட்டிமா. எனக்கு மேரேஜ்ல இன்டரஸ்ட் இல்லை” என்றான்.
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த நீலாவதிக்கு மனதிற்குள் ஓர் எண்ணம் உதித்தது.
“ஏண்டி கனி..! இந்த பையன் பார்க்க நல்லா அழகா இருக்கான். வசதி வாய்ப்புக்கும் குறைச்சல் இல்லை. பேசாம என் தங்கச்சி மகளுக்கு கேட்டா என்ன?” என்றார் யோசனையுடன்.
“இப்போதானே பாட்டி கேட்டதுக்கு அவங்க பதில் சொன்னாங்க. அப்பறமும் இப்படி பேசுனா எப்படிமா? இந்த விபரீத எண்ணமெல்லாம் தேவையா? அதுவுமில்லாம, இவர் அழகுக்கு முன்னாடி அவ நிக்க கூட முடியாதும்மா” என்றாள் கனி.
“நீ பேசாம இரு. அதெல்லாம் சரியா வரும். அவ ஏதோ இங்க பட்டிக்காட்டு பக்கம் இருக்கவும் கொஞ்சம் கலரு கம்மியா இருக்கா. டவுனு பக்கம் போய்ட்டா நல்லா கலரு வந்துடும். நான் உங்கப்பாகிட்ட சொல்லி கேட்டுப் பார்க்க சொல்றேன்..” என்றார் நீலாவதி.
“அதுக்கு மேல உன்பாடு, அவங்க பாடுமா” என்றவள்,
“நானும் ஊருக்கு கிளம்புறேன்ம்மா..! அவரால கூப்பிட வரமுடியாதுன்னு சொல்லிட்டார். கிரியை வந்து என்னைய விட்டுட்டு வரச்சொல்லுங்க..!” என்றவள், பிறந்த வீட்டு பையை நிரப்ப, அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டாள்.
“ரொம்ப சந்தோசம் சம்பந்தி..! கண்டிப்பா நீங்க எல்லாரும் சென்னைக்கு வரணும். நம்ம வீட்ல விருந்த முடிச்சுட்டு, அப்படியே புது வீட்ல பாலைக்காய்ச்சி பிள்ளைங்கள குடி வச்சுடலாம்.” என்று கீர்த்தனாவின் தாயும், தந்தையும் சொல்ல,
“கண்டிப்பா நாங்க வரோம். நாளைக்கு கொஞ்சம் உழவு வேலை இருக்கு. முடிச்சதும் கிளம்பி வந்துடுறோம். தம்பியையும் மருமகளையும் நீங்க அழைச்சுட்டு போங்க” என்றார் ராமச்சந்திரன்.
“நாங்க இன்னைக்கு நைட் கிளம்புறோம் சம்பந்தி. மாப்பிள்ளையும், கீர்த்தனாவும் நாளைக்கு ரகு கூட வரட்டும்” என்றனர்.
“சரிங்க சம்பந்தி” என்றவர்,
“கேட்கறேன்னு தப்பா நினைக்காதிங்க..! அந்த தம்பியோட அம்மா, அப்பா யாரையும் காணலையே. எதுவும் மனஸ்தாபம் இல்லைங்களே” என்றார் ராமச்சந்திரன் கொஞ்சம் தயக்கத்துடன்.
“அய்யோ.. அப்படியெல்லாம் இல்லை சம்பந்தி. என்னோட மாமா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. அக்காவுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியாம, நடமாட்டமில்லாம இருக்காங்க. இதைப் பத்தி ரகு அதிகம் வெளிய காட்டிக்க மாட்டான்.. அதான்” என்றனர் தயக்கத்துடன்.
“மன்னிச்சுக்கங்க..! அவங்க எதுலையும் கலந்துக்கலைன்னு தான் கேட்டோம். பிரச்சனை இப்படின்னு தெரியாம போய்டுச்சு. நம்ம ரெண்டு பக்கமும் இன்னமும் அதிகம் பேசி பழக்கம் இல்லை தானுங்களே…” என்றார் ராமச்சந்திரன்.
“அதனாலென்ன? இப்பதான் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோமே. நம்ம வேதா பாப்பா கல்யாணத்துக்கு கூட எல்லாரும் குடும்பமா ஒரு வாரத்துக்கு முன்னமே வந்துடுவோம். வேதாவும் எங்களுக்கு பொண்ணு மாதிரி தான்..”என்றனர் கீர்த்தனாவின் பெற்றோர்.
“ரொம்ப சந்தோஷம் சம்மந்தி” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்க,
தனக்குக் கொடுக்கப்பட்ட அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தான் விஜய ரகு நந்தன். அந்த இடமும், இயற்கை சூழலும் அவன் மன இறுக்கத்தை கொஞ்சம் குறைத்திருந்தது. சட்டென்று மேகம் சூழ்ந்து, மண் வாசனை காற்றில் கலந்து வர, ஜன்னல் அருகே நின்றிருந்தவன்.. அதை ரசித்தபடி மண் மணத்தை மனதிற்குள் நிரப்பிக் கொண்டிருந்தான்.
இப்பொழுது வானம் தூறல் போட, அதனுடன் காற்றும் சேர்ந்து கொள்ள, அந்த கூதல் காற்றில் மேனி சிலிர்த்தது அவனுக்கு. நேரம் மாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு இதத்தை அனுபவிக்கிறான். இதற்கெல்லாம் அவனுக்கு நேரம் இருந்ததில்லை. ஆனால் இயற்கையும், மழையும் அவனுக்கு பிடித்தமான தோழர்கள். அங்கிருந்த செடிகளையும், மரங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் விழுந்தாள் அவள்.
வீட்டிற்கு சற்று தூரத்தில் இருந்த சாலையில், மதுரையின் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியின்,கல்லூரிப் பேருந்து நிற்க, சில நிமிடங்களில் அதில் இருந்து இறங்கினாள் வேத வர்ஷினி.
பேபி பிங்க் கலரில் சுடிதார் அணிந்து, துப்பட்டாவை இரண்டு புறமும் அழகாக பின் செய்திருந்தாள். தலைமுடிகள் கலைந்து, கொஞ்சம் சோர்வான தோற்றத்தில் இருந்தாலும் பளிச்சென்று இருந்தாள். தூரலில் நனைந்தபடியே அவர்கள் வீட்டின் முன் பகுதி வரை வந்தவள், வீட்டின் முன் இருந்த சின்ன சின்ன மரங்களைப் பிடித்து ஆட்ட, அதிலிருந்த மழைத் துளிகள் அவள் மீது விழ, அவ்வளவு நேரம் அவள் முகத்தில் இருந்த சோர்வெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.மழைநீர் பட்டு தெறித்ததில் முகம் மினுமினுக்க, அவளின் சிறுபிள்ளை செய்கைகளை ஒருவன் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று அறியாதவளோ
“காதும்மா..!” என்று சத்தமாக காதம்பரியை அழைத்தாள். அவளின் சத்தத்தில் வெளியே வந்த காதம்பரி,
“உள்ள வா வேதா..! மழையில நனையாதன்னு சொன்னா கேட்குறதே இல்லை..” என்று கண்டித்தபடியே அவள் அருகில் வர,
பவளமல்லி மரத்தின் அருகில் நின்றிருந்தவள், காதம்பரி வரவும் அவரையும் வேகமாக அருகே இழுத்தாள். அவளின் செய்கையில் காதம்பரி அவளை முறைக்க, சட்டென்று பவளமல்லி மரத்தை அவள் ஆட்ட, காலையில் தரையில் கொட்டியது போக, மீதமிருந்த பூக்கள் மழைத்துளிகளுடன் சேர்ந்து இருவரின் மீதும் விழ, சிரிப்புடன் தன் அன்னையை அணைத்தவள், அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த காட்சி கவிதையாகவே பட்டது.
“வர வர உன் சேட்டைக்கு அளவில்லாம போட்டு இருக்கு வேதா” என்று கோபமே இல்லாமல் மகளை கடிந்து கொண்டார்.
“கோபத்துல கூட ரொம்ப அழகா இருக்கீங்க மம்மி” என்று அவரின் தோளில் கைபோட்ட படி அவருடன் இணைந்து நடந்தவள்,அங்கிருந்த கொய்யா மரத்தில் இருந்து ஒரு கொய்யாக் காயைப் பறித்து கடித்துக் கொண்டே,
“எல்லாரும் வந்துட்டாங்களா? அண்ணா,அண்ணி என்ன பண்றாங்க?” என்று கேள்விகளை அடுக்க, அவர் பதில் சொல்ல முற்படும் முன்,
“வேதா” என்று கத்தியபடி புல்லட்டில் வந்தான் அகரன்.
“வாவ் அகரா..!” என்று கத்தியவள் தோளில் இருந்த பேக்கை காதம்பரியிடம் கொடுத்துவிட்டு, வேகமாய் அவனருகில் சென்றாள்.
“சாரல் பெருசா வரும் போல தெரியுது. பேசாம உள்ள வாங்க” என்று அன்னை அதட்டியது எல்லாம் இருவரின் காதிலும் விழுந்ததாகவே தெரியவில்லை.
“ஹேய்..! சரண் அண்ணா எப்படி புல்லட்டை தந்தாங்க. நம்மளை எடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருந்தாங்களே” என்றாள் நம்ப முடியாத சந்தோஷத்துடன்.
“போலாமா ஒரு ரைடு..” என்று அவள் தலை சாய்த்து கேட்க,
“கேட்கணுமா? வாடி” என்றான் சிரிப்புடன். அகரன் அப்படித்தான், சில நேரங்களில் வேதா என்றழைப்பான். சில நேரங்களில் அக்கா என்றழைப்பான். சில நேரங்களில் டி போடுவான். அவன் டி போட்டு அழைத்தாள் மகிழ்ச்சியான மன நிலையில் இருக்கிறான் என்று அர்த்தம்.
“ரைடு போலாம் ஓகே. ஆனா, நான் தான் ஓட்டுவேன்” என்றாள் கறாராக.
“ஓகே டன்..!” என்றவன் வண்டியில் இருந்து இறங்கி அவளிடம் ஒப்படைத்தான்.
வண்டியை ஆசையுடன் வருடியவள், அனாசயமாக வண்டியில் அமர்ந்தாள். அவளின் பின்னே அகரன் அமர, வண்டியை எடுத்த விதமே அவள் புல்லட் ஓட்டுவதில் கைதேர்ந்தவள் என்று சொல்லாமல் சொல்லியது.
‘என்ன சொன்னாலும் கேட்குறது இல்லை’ என்று நினைத்த காதம்பரி உள்ளே சென்றார்.
அவர்கள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்த விஜய ரகு நந்தனுக்கு வியப்பாக இருந்தது. அதனையும் மீறி ஒரு ரசனை உணர்வும்.
‘இதுக்கு பேர் தான் வாழ்க்கையை அனுபவிச்சு வாழ்றதோ’ என்று நினைத்தவனுக்கு, நினையாமல் வந்து மனதில் அமர்ந்தது, அவளின் திருமண விஷயம் பற்றி அகரன் சொன்னது.
‘ஒரு குழந்தைப் பிள்ளைக்கு மேரேஜ் பண்ணனும்னு நினைக்கிறாங்களே’ என்று மனதில் நினைத்தவனுக்கு அந்த ஊரும், அந்த வீடும், வீட்டு ஆட்களும், வேத வர்ஷினியும் நீக்க மற மனதில் நிறைந்திருந்தனர்.