“அதுவா மச்சி,நம்ம ஆனந்த் இருக்கான்ல..!” என்று ஆனந்தின் தோளில் கைபோட்டு இழுத்த ரம்யா,

“இவனுக்கென்ன?” என்றாள் புரியாமல்.

“மச்சானுக்கு லவ் செட்டாகிருச்சு. சார் நேத்து பர்ஸ்ட் இயர் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்கார். இன்னைக்கு ரிசல்ட்க்காக நாங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வெயிட் பண்றோம். இப்ப நீயும் ஜாயின்ட் பண்ற” என்றாள் ரம்யா.

“டேய் சோடா புட்டி சொல்லவே இல்லை..! நம்ம அறிவாளி ஆனந்துக்கு காதலா..காதலா…” என்று வேதா நான்கு புறமும் திரும்பி கேட்க,

“இவனுங்க என்னை ஓட்றானுங்க வேதா. அப்படியெல்லாம் எதுவுமில்லை.” என்றான் அவன் பாவமாய்.

“நாங்க நம்பிட்டோம்..! ஒழுங்கா இன்னைக்கு ட்ரீட் வை” என்றாள் ரம்யா மிரட்டலாய்.

“என்னைய பார்த்தா பாவமா இல்லையா?” என்றான்.

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஒன்னு இன்னைக்கே லவ் ஓகே பண்ணு. ட்ரீட் வை. இல்லையா பிரேக்கப் பண்ணு, அதுக்கும் ட்ரீட் வை. ஆக மொத்தம் இன்னைக்கு ட்ரீட் வைக்கிற” என்றனர் கோரசாய்.

“இந்த ஆட்டு மந்தையில இன்னைக்கு நான் சிக்கிக்கிட்டேனா?” என்று அவன் நொந்து போக,

“கய்ஸ்..! நம்ம ஆனந்தோட ஆள் வந்தாச்சு. அலார்ட்டா இருங்க” என்றாள் ரம்யா.

வேதாவும் ஆர்வமாய் திரும்பிப் பார்க்க,  ஆனந்தின் அருகில் வந்த பெண்ணோ,

“சாரி அண்ணா..!” என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்ல, ஆனந்தோ முழித்துக் கொண்டு நின்றான்.

“அண்ணாவா?” என்று அவர்கள் சிரிக்க,

“என்ன மச்சான் இப்படி ஆயிடுச்சு” என்று ரம்யா வேண்டுமென்றே உச்சுக் கொட்ட,

“ஓவரா நடிக்காத மச்சான். இதைத் தான எதிர்பார்த்திங்க. பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு சொல்லணும். அதைவிட்டு அண்ணன்னு சொல்லியே கடுப்பேத்துறாங்க மை லார்ட்..” என்றான் அழுகாத குறையாய்.

“அண்ணான்னு சொன்னா உங்களை அவ்வளவு பாதிக்குதா மச்சான்” என்றாள் வேதா சிரிப்புடன். அவளுக்கு விஜய்யின் முகம் ஞாபகத்தில் வந்து போனது.

“சரி சரி விடு ஆனந்து. இவ இல்லைன்னா என்ன?மல்லி இல்லைன்னா அல்லின்னு போயிட்டே இருக்கனும். உன்னோட விடா முயற்சிக்கு சீக்கிரமா பலன் கிடைக்கும் பாரு” என்றாள் ரம்யா சிரிக்காமல்.

“விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி மச்சான்” என்றாள் வேதா. அப்போது கூட்டத்தில் ஒருத்தன்,

“வேதா இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. அக்சப்ட் மை லவ். நம்ம கேங்ல லவ் செட்டான பர்ஸ்ட் ஜோடியா நாம இருப்போம்..” என்றான் ஒருவன்,

“பாருங்கப்பா..! தலைவனுக்கு தைரியத்தை” என்று ரம்யா வம்பிழுக்க,

ரம்யாவை முறைத்தவன்,

“வேதா..! ஐ லவ் யு..!!” என்றான் சத்தமாக.

“மச்சான் ஐ ஹேட் யு..” என்றாள் வேதாவும் சத்தமாக.

“இந்த பாவப்பட்ட அபலைப் பையனுக்கு வாழ்க்கை குடு வேதா வாழ்க்கை குடு..” என்றான் திரைப்பட பாணியில்.

“வேதா ஒரு நிமிஷம் உன் செருப்பை குடு” என்றாள் ரம்யா டைமிங்கில்.

“பேச்சு பேச்சா இருக்கும் போது..நோ வயலன்ஸ். நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன். வாழ்க்கை குடுக்க சொன்னேன். குடுக்க இஷ்ட்டம் இல்லைன்னா குடுக்க வேண்டாம். அதுக்காக அடிதடியிலாம் இறங்கக் கூடாது. பித்த உடம்பு, அடிக்கு தாங்காம மொத்தமா போய்டும்” என்றான் வராத அழுகையுடன்.

“நீயும் அவ இந்த காலேஜ் வந்தப்ப இருந்து எப்படியெல்லாமோ ட்ரை பண்ணி பார்த்துட்ட. எதுவும் வொர்க் அவுட் ஆகலை. அப்பறம் ஏன்? இல்லை ஏன்னு கேட்குறேன்?” என்று ரம்யா காலை வார,

“என்னைக்கா இருந்தாலும் வேதா தான் என் வாழ்க்கையின் வேதம்” என்றான் வசனமாய்.

“மச்சான் வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? எனக்கும் ஆக்சன் சீக்வென்ஸ் இல்லாம போரடிக்குது” என்றாள் வேதா கைகளை நெட்டி முறித்தபடி.

அவர்களை கடந்து சென்ற விஜய்யின் காதுகளில் அவர்கள் பேச்சும், சிரிப்பும் விழ, தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

 “ஹேய் விஜய் சார் போறாருடி” என்றாள் ரம்யா கிசுகிசுப்பாய்.

“அதுக்கென்ன?” என்றாள் ரம்யா.

“அதுக்கென்னவா? அங்க பாரு! அந்த லயா கேங்க் இந்நேரம் வரைக்கும் எதுக்கு வெயிட் பண்ணாங்கன்னு நினைக்கிற? எல்லாம் நம்ம விஜய் சாரை பார்க்கத் தான். இன்னைக்கு நேத்தா நடக்குது?”என்றாள் ரம்யா.

‘இது வேறையா? கிளாஸ்ல தான் சைட் அடிக்கிறான்னு பார்த்தா, இங்க இருந்தேவா?’ என்று மனதிற்குள் நினைத்த ரம்யா,

“யாரு என்ன பண்ணா நமக்கென்ன ரம்யா?” என்றாள்.

“அவங்களைச் சொல்லியும் தப்பில்லை. விஜய் சாரும் இவ்வளவு ஹேண்ட்சமா இருந்தா யாருக்குத்தான் சைட் அடிக்கத் தோணாது” என்றாள் பெருமூச்சு விட்டபடி.

என்னடி மூச்செல்லாம் பலமா இருக்கு?” என்று வேதா சிரித்துக் கொண்டே கேட்க,

“என்னால சைட் அடிக்க முடியலையே. அந்த வருத்தம் தான்” என்றாள்.

“ஏன்? உன்னைய யாரு சைட் அடிக்க வேண்டாம்னு சொன்னா? அதெல்லாம் நம்ம தார்மீக உரிமை. அழகை ரசிக்கிறது தப்பில்லை.” என்றாள். ஆனால் மனதிற்குள்,

‘இந்த பாறாங்கல்லு மூஞ்சிக்காரனை எப்படி சைட் அடிக்கிறாங்க? இல்ல எனக்கு மட்டும் தான் அப்படி தோணுதா?’ என்று எண்ணியவள், அங்கு சென்று கொண்டிருந்தவனைப் பார்க்க,

“ஹேய் வேதா..! சாரை அப்படி பார்க்காத?” என்றாள் எச்சரிக்கையாய்.

“ஏன்?” என்றாள் புரியாமல்.

“அந்த லயா மட்டும் பார்த்தா பேயாட்டம் ஆடுவா” என்றாள் ரம்யா.

“ஏன்? அவ என்ன அவருக்கு பொண்டாட்டியா?” என்றாள் பட்டென்று. வார்த்தைகள் தானாக வந்து விழுந்திருந்தது.

“இப்ப இல்லை. ஆனா பியூச்சர்ல ஆக வாய்ப்பிருக்கு. அவ சொன்னது தான். சமூகம் பெரிய இடம். இந்த டிகிரியை முடிச்ச உடனே வீட்ல பேசி சாரை மேரேஜ் பண்றது தான் அவ லட்சியமே” என்றாள்.

“ஹோ..! இது அந்த சாருக்குத் தெரியுமா?” என்றாள் வேதா நக்கலாய்.

“யாருக்குத் தெரியும்?” என்று தோளைக் குலுக்கினாள் ரம்யா.

“சரி வா..! கிளாஸ்க்கு டைம் ஆச்சு” என்றபடி வகுப்பிற்கு சென்றனர். வேதா தான் யோசனையுடன் இருந்தாள்.

அவள் இத்தனை நாள் கவனித்த வரையில் விஜய் யாரிடமும் தேவைக்கு அதிகமாய் பேசியதும் இல்லை, பார்த்ததும் இல்லை. அவள் உட்பட. அப்படியிருக்க, லயா இப்படி பேசி வைத்திருப்பது அவளுக்கு கவலையளித்தது. இத்தனை நாட்களில் அவளின் பிடிவாதமும், திமிரும் வேதா அறிந்த ஒன்று. எங்கே அவளால் அவனுக்கு எதுவும் கெட்ட பெயர் வந்துவிடுமோ என்று நினைத்தாள்.

அவனுடைய வகுப்பிலும் அவள் அதே சிந்தனையில் தான் இருந்தாள். கைகள் தன் போக்கில் எழுதிக் கொண்டிருந்தாலும், மனம் அதன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தது.