“அடேய்..! இனி அண்ணி வேற தனியா வாங்கித் தரணுமா? ரெண்டு பேர் கிப்ட்டும் இது தான்” என்றான் சரண்.
அவர்கள் உலகில் அவர்கள் மட்டும் பேசிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு ஏனோ தான் மட்டும் அங்கே அதிகப் படியாய் இருப்பதைப் போன்ற தோற்றம். தனித்து விடப்பட்டதாய் ஒரு மாயை கூட தோன்றியது.
அவனும் மனிதன் தானே. என்னதான் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்ட போதிலும், தன்னையும் மீறி சில சமயம் அவள் மேல் விழும் உரிமைப் பார்வைகளை என்ன சொல்லி தடுப்பான்.
“வாடா நல்லவனே செல்பி எடுப்போம்..!!” என்று வேதா அவன் தோளில் கைபோட்டு செல்பி எடுத்துக் கொண்டிருக்க, அவர்கள் பிரேமில் விழுந்தான் விஜய், அந்த தனிமைப் பார்வையுடன்.
அதற்கு மேல் அவனால் அங்கிருக்க முடியவில்லை. அகரனுக்கு வாழ்த்துக்களை சொன்னவன், அவன் பங்கிற்கு ப்ராண்டேட் கிரிக்கெட் கிட் ஒன்றை பரிசாக அளித்தான்.
“வாவ்..! தேங்க்யு சோ மச் அண்ணா..!” என்ற அகரனின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
“ஓகே அகரா..! குட் நைட்..!” என்றவன் யாரையும் திரும்பியும் பாராது பட்டென்று சென்று விட்டான். முகத்தில் அடித்ததைப் போல் இருந்தது அவனின் செய்கை. அவன் சென்ற திசையையே வேதா அதிர்வாக பார்த்துக் கொண்டிருக்க,
“நாங்களும் கிளம்புறோம்..” என்றான் சரண்.
“அண்ணா..! அன் டைம் ஆகிடுச்சு. இங்கயே தூங்குங்க..” என்று வேதா சொல்ல, மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் சரிதான் என்று அங்கேயே தங்கிவிட்டனர்.
அப்போது தான் கவனித்தாள் டீபாய் மேல் இருந்த போனை.
“இது யாரோட போன்?” என்று யோசிக்க, அகரனுக்கு கேக்கை ஊட்டும் போது, விஜய் அங்கே வைத்தது ஞாபகத்தில் வந்தது.
“அண்ணா..! உங்க பிரண்ட் போனை விட்டுட்டு போய்ட்டார்..” என்று சொல்ல, சரணோ, அகரனின் அறையில் படுத்துவிட்டான்.
“டேய் அகரா..! இதைப் போய் குடுத்துட்டு வா..” என்றாள். அவனோ அதையெல்லாம் காதில் வாங்காமல் ஐபோனை செட் செய்யும் வேலையில் இருந்தான்.
‘இந்தா ஆரம்பிச்சுட்டான்ல’ என்று நினைத்தவள்,
‘நாமளே போய் குடுத்துட்டு வருவோம்’ என்று எண்ணியபடி வெளியே செல்ல,
அதுவரை அமைதியாக படுத்திருந்த சரணின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. அகரனைப் பார்க்க அவனும் சிரித்தான்.
“இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” என்றான் அகரன்.
போனை திருப்பிப் பார்த்துக் கொண்டே சென்ற வேதா அங்கிருந்த பூந்தொட்டியில் கால் இடறி , போனை எடுக்க திரும்பி வந்து கொண்டிருந்த விஜய்யின் மீது மோதிய வேகத்தில் அவனும் தடுமாறி விழப் போக, சுதாரித்து அவளை விழாமல் இடையோடு இறுக்கிப் பிடித்தவன்,
“ஹேய்..!! பார்த்துமா..!!” என்றபடி
படிக்கட்டு கிரில் கம்பியை ஒரு கையால் பிடித்து, இருவரும் விழாமல் பார்த்துக் கொண்டான். பயந்து ஒரு நிமிடம் அவனுக்குள் அடங்கியவள், அவள் இடையில் இருந்த அவன் கரங்களின் அழுத்தத்தில் தோன்றிய குறுகுறுப்பில் சுய உணர்வு பெற்று சட்டென்று அவனிடமிருந்து விலகினாள். அந்த நிமிடங்களை கடக்க முடியாது, மூச்சு விடுவதே அவளுக்கு சிரமம் போல் அவஸ்தையாய் இருக்க,
“ஆர் யு ஓகே..!!” என்றான் விஜய்.
“நா..நான் ஓகே தான் சார். உங்க போன்..!” என்று அவன் போனை நீட்ட,
“தேங்க்ஸ்..!! இதை எடுக்கத் தான் வந்தேன்..!!” என்றவன்,
“நடக்கும் போது கவனம் பாதையில இருக்கணும். இப்படி எப்பவும் தாங்கிப் பிடிக்க யாராவது வர மாட்டாங்க..” என்றான் விஜய்.
“சாரி சார்..! யாரும் தாங்கிப் பிடிப்பாங்கன்னு நாங்களும் எதிர்பார்த்துகிட்டு இல்லை. எனிவே தேங்க்ஸ் போர் யுவர் டைம்லி ஹெல்ப்” என்றாள் படபடப்பை மறைத்தவாறு.
“ம்ம்..! குட்நைட்” என்றபடி வேகமாக கீழே இறங்கி வந்தவன், அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டான். முன் சிகையை அழுந்த கோதியவனுக்கு… உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது.
‘இன்னைக்குத் தூங்குன மாதிரித்தான்’ என்று தனக்குள் முனுமுனுத்தபடி சென்றான் விஜய். பாதிப் படிகள் வரை வந்து அவனுடைய செயல்களை பின்னிருந்து நோட்டம் விட்டுச் சென்ற வேதாவை அவன் கவனித்திருக்கவில்லை.
“போனைக் குடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?” என்றான் சரண், தீவிரமாய் கையில் இருந்த போனை பார்த்துக் கொண்டு.
“நீ முதல்ல போனை வச்சுட்டு தூங்குடா..” என்று பல்லைக் கடித்தவள், அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். ஏற்கனவே அங்கே கீர்த்தனா உறங்கிக் கொண்டிருக்க, அவளுக்குத் தான் உறக்கம் வருவேனா என்றது.
அவள் அறிவுக்கு எட்டியவரை, நினைவில் நின்ற அனைத்தையும் ஒன்றுடன் ஒன்றை தொடர்புபடுத்தி பார்த்தாள். விஜய் தான் அது என்று அவளுக்கு உறுதியாகத் தெரிந்தாலும், அவள் குடும்பத்தினர் அதை தெளிவு படுத்த வேண்டும் என்று நினைத்தாள். அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டலில் வைத்து நர்ஸ் சொன்னது ஞாபகத்தில் வந்தது.
ஹாஸ்பிட்டலில், அவள் உடல் நலம் தேறி, கண் கட்டை அவிழ்க்கும் போது இருந்த பய உணர்வை எல்லாம் வாழ்நாளில் அவள் அனுபவித்ததில்லை. ஒரு கண்ணில் பார்வை வருமா வராதா என்ற நிலையில் கட்டவிழ்க்கப்பட்டவுடன் எதிரில் இருந்தவர்கள் மங்கலாகவே தெரிந்தார்கள்.
பார்வை இனி இல்லை என்று அவள் முடிவு செய்யும் நேரம், கண்கள் தெளிவடைந்திருந்தது. இமைகள் கனமாய் கணக்க, தலைவலி வேறு பின்னி எடுத்தது. எதிரில் ராமச்சந்திரனின் முகம் தெரிய, கண் கலங்கினாள். அத்தனை பேரும் இருக்க அவள் எதிர்பார்த்த காதம்பரியும் இல்லை. நந்தகுமாரும் இல்லை. அதுவே அவளுக்கு அந்த நிமிட ஏமாற்றம் தான். இதயத்தை கசக்கிப் பிழிவதைப் போன்ற வலியை ஏற்படுத்தியது.
“எங்கம்மா உன்னோட ஹஸ்பண்டை இன்னைக்கு காணோம்? இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள்?” என்று அந்த நர்ஸ் கேட்டிருக்க, அவளிடம் பதில் தான் இல்லை. அவளின் மௌனத்தை கண்டு அவரே தொடர்ந்தார்.
“இந்த காலத்துல இப்படி ஒரு பையன் கிடைக்குறது எல்லாம் ரொம்ப கஷ்ட்டம்மா..! நீங்க ஆக்சிடென்ட் ஆகி இங்க வந்து அட்மிட் ஆனதுல இருந்து நானும் இன்னொரு சிஸ்டரும் தான் டியூட்டி நர்ஸ். சும்மா சொல்லக் கூடாது அந்த பையன் தவிச்ச தவிப்பெல்லாம் இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கு. அதுலயும் முதல்நாள் அட்மிட் பண்ணும் போதெல்லாம் சட்டையெல்லாம் ரத்தக்கறை. அந்த சட்டையோடவே ஒரு நாள் முழுக்க இந்த ஹாஸ்பிட்டல்ல இருந்தாரு.உன்னோட புடவை, நகைகளை எல்லாம் நான்தான் கொண்டு போய் கொடுத்தேன். அப்போ அந்த பையன் கை நடுங்குன நடுக்கமெல்லாம் சொல்லி மாளாது.உன் கண்டிஷன் என்னன்னு எங்ககிட்ட கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ள எங்களுக்கு நாக்குத் தள்ளிடும். உனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சு முதல் மூணு நாள் இங்கயே கிடையா கிடந்தாரு. அந்த பையன் கண்ணுல இருந்த தவிப்பையும், கண்ணீரையும் என்னால மறக்கவே முடியாதுமா..! கடவுள் புண்ணியத்துல உனக்கு கண்ணும் சரியாகிடுச்சு. இன்னைக்குன்னு பார்த்து அவரைக் காணோமே? ரெண்டு பேரும் இனியாவது சந்தோஷமா இருங்க” என்று கூறி விட்டு சென்றிருந்தார்.
விஜய் செய்த செயல்கள் அனைத்தையும் நந்தகுமாரே செய்ததாக எண்ணி அவள் உருவகப் படுத்தியிருக்க, இப்போது அந்த செயல்களின் உண்மையான முகம் அதன் இடத்தில் பொருந்தி போயிருந்தது. தன்னிடத்தில் அனைவரும் ஏதோ ஒன்றை மறைக்கிறார்கள் என்ற வரை அவளுக்கு தெரிந்திருந்தது. ஆனால் அது இப்படி இடியாக வருமென்று அவளுக்குத் தெரியாது.
மீண்டும் தலை வலிப்பதைப் போல் இருக்க, யோசனைகளை தள்ளி வைத்துவிட்டு உறங்க முற்பட்டாள். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
மறுநாள் விடியல் அவளைத் தெளிய வைக்கும் முயற்சியுடன் விடிந்திருந்தது போல.
காலையில் சீக்கிரமாகவே முழிப்பு வந்திருந்தது அவளுக்கு. ஒரு முடிவு எடுத்தவளாய், குளித்து முடித்து ஒரு ஸ்கேர்ட்டும் டாப்பும் அணிந்தவள்,கீர்த்தனாவை எழுப்பாமல், மெதுவாக சென்று சரணை எழுப்பினாள்.
“என்ன வேதம்மா..! “ என்றான் தூக்கக் கலக்கத்தில்.
“எழுந்து பிரஷாகிட்டு வாங்கண்ணா..! ஒரு வாக் போயிட்டு வரலாம்” என்றாள்.
அவள் அழைப்பில் தூக்கம் மொத்தமும் கலைய, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“நான் ஏன் நிஜமாவே உங்களைக் கொல்லக் கூடாது” என்றாள் யோசனையாய்.
“வர வர இந்த வீட்ல உசுருக்கு உத்தரவாதம் இல்லை..” என்று புலம்பிய சரண்,
“நான் என் பொண்டாட்டிகிட்ட சொல்லாம எங்கேயும் வர மாட்டேன்” என்றான்.
“ஆணியே புடுங்க வேண்டாம்..! நீங்க வரவே வேண்டாம்..” என்று கோபமாய் சொன்னவள், வேகமாய் கீழே இறங்கி சென்றாள்.
கீழே கோலமெல்லாம் போட்டு, வீட்டினுள் இருந்து ஊதுபத்தியின் நறுமணம் சுகந்தமாய் வீச…அந்த சுகந்தத்தை தன்னுள் பரப்பியவள், நடையின் வேகத்தைக் கூட்டினாள்.
ஜாகிங் செல்வதற்காக ஷூ அணிந்து கொண்டிருந்தனின் கண்களில் விழுந்தாள் வேதா. காலையிலேயே குளித்து அன்றலர்ந்த மலராய், முகம் முழுவதும் கோபத்துடன் சென்று கொண்டிருந்தவளை, ஒரு நிமிடம் ரசித்து பின் யோசனையுடன் பார்த்திருந்தான் விஜய்.
“வேதாம்மா நில்லுடா..! நான் வரேன்..!” என்று சரண் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். வந்தவன் விஜய்யைப் பார்க்க,
“என்னவாம்?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“ஒண்ணுமில்லை மச்சான். சும்மா ஒரு வாக் போகலாம்னு..” என்று வேகமாய் சொன்னவன், வேதாவுடன் சென்று இணைந்து கொண்டான்.
“ஸ்கேர்ட் டாப் போட்டுட்டா வாக்கிங் போவாங்க?” என்று எண்ணிய விஜய், இணைந்து செல்லும் இருவரையும் யோசனையுடன் பார்த்திருந்தான்.