மேடையில் போட்டோ செஷன் முடிந்து, நண்பர்களின் கேலியும், கிண்டலும், நடனமும் என்று ஆரவாரமாய் இருந்தது. டிஜேவும், அவர்களின் வைபிற்கு ஏற்றவாறு பாடல்களை ஒலிபரப்ப.. ஆட்டமும்,பாட்டமும் ஆனது அவ்விடம்.

“எங்க காலத்துல எல்லாம் மாப்பிள்ளை முகத்தை பார்க்கவே அவ்வளவு வெட்கப்படுவோம். இப்ப இருக்க பிள்ளைங்க எல்லாம் வெட்கம்னா என்னன்னு கேட்குறாக? இதுல ஆட்டம்  வேற ஆடுறாக” என்று ரகுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கோதை பாட்டி கூற,

மலர்ந்து சிரித்தவன்,”இதெல்லாம் இப்ப ட்ரெண்டு பாட்டிமா” என்றான்.

“என்னவோப்பா, சந்தோஷமா குடும்பம் நடத்துனா சரித்தான்..” என்றவர்,

“தம்பியை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே? பொண்ணுக்கு சொந்தமா ?” என்றார்.

“நான் பொண்ணோட அண்ணன் பாட்டிமா! என்னோட சித்தி பொண்ணுதான் கீர்த்தனா” என்றான்.

“அப்படியாப்பா? ராசா மாதிரி இருக்கீக..!” என்று பாட்டி பேசிக் கொண்டிருக்கும் போதே,

கீர்த்தனாவின் தோழிகளின் கூச்சலில் திரும்பிப் பார்த்தான் ரகு. அவர்களோ, வேத வர்ஷினியை நடனமாட அழைத்துக் கொண்டிருந்தனர்.

“நான் மாட்டேன்ப்பா!” என்று ஜிமிக்கிகள் நர்த்தனம் ஆட தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள் வேதா.

“ஹேய் கமான் வேதா !” என்று அழைக்க,

“நாங்க எங்க அண்ணனுக்கு ஸ்பெஷலா ரெடி பண்ணி வச்சிருக்கோம்.. இல்லையா அகரா?” என்றாள் சிரிப்புடன்.

“ஆமாக்கா” என்றான் அகரன்.

“அதனாலென்ன? இப்போ எங்க கூட ஜாயின்ட் பண்ணிக்கங்க!” என்று வற்புறுத்தி அழைக்க, அவள் வேகமாய் திரும்பி அப்பாவையும், அம்மாவையும் பார்க்க, அவர்கள் சிரித்துக் கொண்டே சம்மதம் கொடுக்க, அடுத்த பார்வையாக நந்த குமாரை பார்த்தாள்.

“ம்ம்” என்று சம்மதமாய் அவன் தலை ஆட, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரகு சிரித்துக் கொண்டான். ‘எல்லாரும் பர்மிஷன் கொடுத்தா தான் மேடம் ஆடுவாங்க போல’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

“மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணு வைக்கும்” என்ற பாடல் வரிகளுக்கு அனைவரும் நடனமாட, அழகான நடன அசைவுகளுடன் ஆடிக் கொண்டிருந்தாள் வேதா. முறையாக நடனம் பயின்றவளைப் போல அவள் ஆடிக்கொண்டிருக்க, பேருக்கு ஆடிக் கொண்டிருந்தவர்கள் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த பாடலைத் தொடர்ந்து, “மலையூரு நாட்டாமை, மனசுக் காட்டு பூட்டாம” என்ற பாடல் வரிகள் ஒலிக்க, கீர்த்தனாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

கடைசியில் அகரன் டிஜேவைப் பார்த்து தலையை ஆட்ட,

“என் வாழ்க்கை வரமாக… அட நீயும் பொறந்தாயே” என்ற பாடல் ஒலிக்க, கீர்த்தனாவை ஓரங்கட்டிய வேதாவும், அகரனும் அண்ணனின் இரு புறமும் நின்று கொண்டனர்.

“உன் கூடவே பொறக்கணும்.. உன்கூடவே பொறக்கணும்..” என்ற வரிகளுக்கு தாளம் தட்டியவர்கள்,

“எங்க அண்ணன்..எங்க அண்ணன்.. அன்பை அள்ளிக் கொடுக்குறதில் மன்னன்..” என்று பாடிக் கொண்டே,சரணின் தலை முடியை முன்னும் பின்னுமாக இழுக்க, அவனோ முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு நிற்க, பார்ப்பவர்களுக்கு கவிதையாய் தெரிந்தாலும், சரணுக்கு வலியில் அவஸ்தையாய் இருந்தது. அவனின் முக பாவனைகளைப் பார்த்த ரகுவிற்கு நடப்பது புரிய சிரித்துக் கொண்டான்.

அங்கு அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் வேத வர்ஷினியைத் தான் ரசித்திருந்தது.

அடுத்தடுத்து கலாட்டாக்கள் நடந்து கொண்டிருக்க, தங்கையின் செயல்களில் மனோகரன் கூட சிரித்திருந்தான். அவனுக்கு கொஞ்சம் ஏக்கமாக கூட இருந்தது. கிரிக்கு அவர்களுடன் சென்று கலந்து கொள்ள ஆசை இருந்தாலும் நீலாவதியை நினைத்து அமைதியாய் இருந்து விட்டான்.

ஆடி முடித்து களைத்தவள், வேகமாய் தாயின் அருகே வர,  அவளை அருகே அமர்த்தி அவள் முகத்தில் படிந்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்டார் ராமச்சந்திரன்.

“அக்காவுக்கு ஒரு சோடா பார்சல்” என்று ஜூஸ் பாட்டிலுடன் வந்தான் அகரன். அனைவரும் அவளைத் தாங்க, அதைப் பார்த்த நந்த குமார்,

“இந்த லிட்டில் பிரின்சஸ்க்கு கவனிப்பு எல்லாம் பலமா இருக்கே” என்றான் ரசனையுடன். அவனின் வார்த்தைகளில் அவள் முகம் சிவக்க,

“இவளை வெட்கப்பட வைக்க உங்களால மட்டும் தான் முடியும் மாமா..” என்றான் அகரன்.

“சும்மா இருடா” என்று அவனை அடக்கினாள்.

“நீங்க சாப்பிட்டிங்களா?” என்றாள் மெதுவாக.

“ நீ வராம எப்படி சாப்பிடுறது?” என்றான் அவனும்.

“வாய்லதான் மாமா” என்று அகரன் சொல்லவும், அவர்களுக்கு முன்னால் அமர்ந்திருந்த ரகு சிரித்துக் கொண்டான்.

“வாங்க சாப்பிட போகலாம். அங்கிள், ஆன்ட்டி வாங்க” என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

ராமச்சந்திரன் மகளைப் பெருமையாக பார்க்க,

“ம்க்கும்.. ரொம்ப பெருமைப் படாதிங்க ராம் அப்பா! பெத்த அப்பா உங்களை சாப்பிடச் சொன்னாளா? ஆனா, வருங்கால கணவர், முதற்கொண்டு மாமனார் மாமியார் வரைக்கும் அக்கறையா கூட்டிட்டு போறாங்க மேடம்” என்றான் குறையாய்.

“டேய் வாலு..! எங்களை காலையிலே வம்பா சாப்பிட வச்சு, போட வேண்டிய மாத்திரையும் மறக்காம கொடுத்துட்டா உங்க அக்கா” என்றார் காதம்பரி.

“இதெல்லாம் சரியா பண்ணி ஸ்கோர் பண்ணிடுவாளே!” என்றான் குறைப்பட்டுக் கொண்ட பெருமையுடன். பெரியவர்கள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர,

“ரகு அண்ணா..! நீங்க சாப்பிட்டிங்களா?” என்றான் ரகுவின் அருகில் அமர்ந்தபடி.

“நான் சரண் கூட ஜாயிண்ட்பண்ணிக்கிறேன் அகரா” என்ற ரகு,

“டான்ஸ் பண்ணி டயர்ட்ஆகிட்டியா?” என்றான் சிரிப்புடன்.

“ஆமாண்ணா..! வேதா கூட சேர்ந்து டான்ஸ் ஆடனும்னா… நாக்கு தள்ளிடும். கொஞ்சமும் அசராம ஆடுவா..மேடத்துக்கு டான்ஸ்னா போதும், எங்க இருந்து தான் அவ்வளவு ஸ்டெமினா வரும்னே தெரியாது” என்றான் சிரிப்புடன்.

“ரெண்டு பேரும் ரொம்ப நல்லா டான்ஸ் பண்ணிங்க” என்றான் ரகு.

“எல்லாம் அவ ட்ரெயினிங் தான் அண்ணா” என்றான்.

“டேய் முறைப்படி நான் உனக்கு மாமா வேணும் “ என்றான் ரகு.

“அது இப்போ தானே..! நான் முன்ன இருந்து உங்களை அண்ணான்னு சொல்லியே பழகிட்டேனே” என்றான் பாவமாய்.

“உனக்கு எப்படி விருப்பமோ அப்படியே கூப்பிடு” என்றவன்,

“ ஸ்டடீஸ்  எப்படி போகுது?” என்றான்.

“ம்ம் நல்லா போகுதுன்னா..!லீவ் தான் எடுக்க முடியலை. அடுத்த மாசம் வேதாக்கா கல்யாணத்துக்கு வேற லீவ் எடுக்கணும்” என்றான் பாவமாய்.

“ஒரே ஜாலிதான் போல..! உங்க வீட்ல அடுத்தடுத்து மேரேஜ் பங்க்ஷன்” என்ற ரகு,

“உங்க வேதா அக்கா என்ன படிச்சிருக்காங்க?” என்றான் ஆர்வமாய்.

“உங்களுக்குத் தெரியாதா? சரண் அண்ணா சொல்லலையா? அவ இப்போதான் ரெண்டாவது வருஷம் படிக்கிறா..” என்றான்.

“அப்பறம் ஏன் இப்பவே கல்யாணம்..? அதுவும் படிக்கிற பொண்ணுக்கு” என்றான் புரியாமல்.

“அது என்னன்னு தெரியலை அண்ணா. ஏதோ ஜாதகம் அது இதுன்னு சொன்னாங்க..!இப்போ கல்யாணம் நடக்கலைன்னா அடுத்து ரொம்ப டிலே ஆகும்ன்னு சொல்லியிருப்பாங்க போல. மனோ அண்ணா கல்யாணத்துல வச்சு அவங்களும் இவளைப் பிடிச்சுப் போய் கேட்க, அப்பவே பேசி வச்சுட்டாங்க..!” என்றான்.

“ஹோ..!!” என்றவன் அதோடு நிறுத்திக் கொண்டான். எதற்கு அவளைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று அவனுக்கேத் தெரியவில்லை.

அதற்குள் சரண் அவனை மேடைக்கு அழைக்க, மற்ற சிந்தனைகளை பின் தள்ளி சரணுடன் இணைந்தான் ரகு. கீர்த்தனாவின் தோழிகள் ரகுவைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்க, அவையெல்லாம் கண்ணில் பதிந்தாலும், அவன் கருத்தில் பதியவில்லை.

“அண்ணா  உங்க ரசிகைகள் எண்ணிக்கை கூடிட்டே போகுது.என் பிரண்ட்ஸ் எல்லாம் உங்களை இன்ட்ரோ கொடுக்க சொல்லி ஒரே டார்ச்சர்..” என்றாள் கீர்த்தனா சிரிப்புடன்.

“அப்படியா??” என்ற பாவனையில் அவன் சிரிக்க, அதையும் அவர்கள் வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தான் ரகு என்று நண்பர்களால் அழைக்கப்படும்  விஜய ரகுநந்தன்.