“ஏண்டி நீ பல்பு வாங்குன கோபத்தை என் மேல ஏ காட்டுற! என்ன அடிக்கிறயே எங்க அவன் தலையில கொட்டு பாப்போம்” என்று வலியில் தலையை தேய்த்து கொண்டே துவாராகேஷ் கூற
“ச்சே ச்சே என்னோட விஜி கண்ணாவா நா அடிக்க மாட்டேன் ரொம்ப நல்ல பையன் என்மேல அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு! நீ யாருடா என்ன கிண்டல் பண்றதுக்கு” என்றவள் விஜயனை ரசனையுடன் பார்வையில் காதலை தேக்கி கொண்டு பார்க்க அவனோ கண்கள் சிவந்து நெற்றி கண்ணை திறந்த ருத்திர மூர்த்தியை போல பார்வையாலேயே எரித்து விடுபவனை போல் பார்த்தவன் அவளின் அழுத்தமான ஆழமாய் ஊடுருவும் பார்வையை கண்டு “ச்சே உன்னையெல்லாம்” என்று பல்லை நறநறவென கடித்து கொண்டு வெடுக்கென முகத்தை திரும்பி கொண்டான்
“உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை..” என்று துவாரகேஷ் சோகமான முக பாவனையுடன் பாட
“அட ச்சே கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா” என்று பொறுமையிழந்து சீற்றத்தை உமிழ்ந்த விஷ்ணு “முதல நீங்க ரெண்டுபேரும் இங்கிருந்து போங்க எந்த நேரத்துல விளையாடுறதுன்னு தெரியாம டென்ஷன் பண்ணிட்டு எவ்ளோ முக்கியமான விஷயம் கேட்டுட்டு இருக்கேன் கொஞ்ம் கூட மேனஸ் இல்லாமா எல்கேஜி பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கீங்க! போங்க” என்று கத்தினான்
இருவரும் தலையை தொங்க போட்டுகொண்டு அமைதியாக அவ்விடத்தை விட்டு சற்று தூரம் நகன்று வந்து “எல்லாம் உன்னால தாண்டா எருமை மாடு” என்று வைஷாலி கொதிக்க
“உன்னால தாண்டி அவன்கிட்ட நா திட்டு வாங்கிருக்கேன், ஒரு நாள் கூட அவன் என்கிட்ட இப்டி பேசுனதே இல்ல போடி பக்கி காட்டெருமை” என்று ஒருவரின் மேல் ஒருவர் குற்றம் சுமத்தி கொண்டு மீண்டும் தங்கள் சண்டையை செவ்வென செய்து கொண்டிருந்தனர்
இருவரையும் வெறுப்பை தாண்டிய முகசுழிப்புடன் பார்த்து கொண்டிருந்த விஜயன் “இதையெல்லாம் திருத்தவே முடியாது” என்று நினைத்து கொண்டு “டேய் விஷ்ணு இவன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல இப்போவே சொல்லு இவன இந்த இடத்துலயே ஷுட் பண்ணிடுறேன்” என்று ட்ரிகரை அழுத்தினான்
சற்று யோசனை செய்தவன் “சரி முடிச்சிறு” என்றதும் “சார் சார் என்ன ஒன்னும் பண்ணீறாதிங்க நா உண்மைய சொல்லிடுறேன் ஊருக்கு ஒதுக்கு புறமா இருக்குற பங்களா விட்டுல தான் அந்த பொண்ண அடைச்சு வச்சுருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்துல அவளுக்கும் எங்க அண்ணனுக்கும் கல்யாணம்” என்று மனதில் கலவரம் உதிக்க பயத்துடன் கூற
“எந்த பங்களாடா அது எங்க இருக்கு யாரு உங்க அண்ணே” என்று விஷ்ணு துருவி கேட்க
“கதிரேசன் அண்ணா தான் கடத்த சொன்னாரு நேத்து நீங்க போனீங்களே அந்த பழைய வீட்டுல தான் இருக்காங்க அங்க தான் போலீஸ் அதிகாரி ஒருத்தரை விஷம் கொடுத்து கொலை பண்ணோம்” என்று கேட்காத ஒரு விஷயத்தையும் படப்படப்பில் சேர்த்து கூற
இருவரும் அதிர்ந்துபோயினர் இவன் கூறுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் பொய் இருக்கும் என்று இருவராலும் கண்டு கொள்ள முடியவில்லை ஒருவேளை கூறுவது உண்மையென்றால் நிச்சயம் அதில் மறைந்திருக்கும் பல மர்மமான விஷயங்கள் வெளிவரலாம் குற்றவாளியும் அவனுக்கு ஒத்து ஊதி உதவி செய்துகொண்டிருக்கும் அந்த மரம் நபரும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யலாம் என்று மூளையில் கண நேரத்தில் தோன்றிய சிந்தனைகள் அத்தனையும் ஒரே ஒரு கேள்வியில் புதைந்து சிதைந்து போனது, அவன் கூறுவது உண்மைதானா என்று அறிந்து தெரிந்து கொண்டு அவனிடம் அடுத்த விசாரணையை தொடங்காலம் என்று தீர்மானித்த விஷ்ணு
உடனே காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து ஜீப்பை கொண்டுவர சொல்லிவிட்டு விஜயனிடம் “நானும் துவாரகாவும் அந்த பங்களா வீட்டுக்கு போறோம் அட்ரஸ் உனக்கு மெசேஜ் பன்றேன் கான்ஸ்டபிள் வர்ற வரைக்கும் இவன பத்திரமா பாத்துக்கோ நீங்க ரெண்டுபேரும் ஸ்டேஷன்ல போய் இவன விட்டுட்டு சீக்கிரம் அங்க வந்து சேருங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு தெரியல” என்று வேகமாக கூறிவிட்டு துவாரகாவை அழைத்து கொண்டு அவ்விடத்திற்கு வந்தான் என்பதை கூறிமுடிக்க
கண்ணை இருட்டி கொண்டு வந்தது வைதேகிக்கு “இவ்ளோ நடந்துருக்கா ஹப்பா” என்று அதிசயித்தவள் ” ஐயர் வேஷம் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருந்துச்சு யார் ஐடியா விணு, சத்தியமா உங்களுக்கு அப்டி ஒரு ஐடியா தோணியிருக்காது” என்று முகத்தை சுளித்து கூற
“எல்லாம் துவாரகா யோசனை தான் அந்த வீட்டுக்கு வர்ற வழியிலயே ஐயர் ரெண்டுபேரையும் மறைச்சு நாங்க யாரு இங்க என்ன நடக்க போகுதுன்ற விஷயத்தை சொன்னதும் வந்தவங்க ரெண்டு பேரும் பயந்துட்டாங்க அவங்க போட்டுவிட்ட வேஷம் தான் அது போதுமா இப்போ உன்னோட டவுட் கிளியர் ஆகிருச்சா” என்றவன் “போடி எனக்கு பசிக்கிது நா சீக்கிரம் போகணும்” என்று அவசர அவசரமாக உண்ண தொடங்கியவன் அரைகுறையாக உண்டு விட்டு எழுந்து சென்றவனை சிறு புன்னகை அரும்ப பார்த்தாள் வைதேகி
காவல் நிலையம் வந்தவன் “என்னடா ஏதாவது சொன்னாங்களா கொலை பண்ணது யாரு என்னன்னு தெரிஞ்சிருச்சா!” என்று உள்ளே நுழையும் போதே அதிகார குரலில் கேட்டு கொண்டே வர
“இல்ல விஷ்ணு இப்போ வேற ஒரு குழப்பம் வந்துருக்கு இவங்களோட ஆளு இவன் இல்லையாம் வேற ஒருத்தனாம்” என்று துவாரகேஷ் குழப்பமான பார்வையுடன் சொல்ல
“அப்டின்னு யார் சொன்னது!”
“இதோ இவங்க ரெண்டுபேர் தான் சொல்றாங்க” என்று கதிரேசனையும் அவனது கூட்டாளியையும் துவாரகா கைகாட்டினான்
“என்ன கதிரேசா இவன் உங்க ஆளு இல்லையா? அப்டின்னா இவன் யாரு? எதுக்கு உங்கள தெரிஞ்சவனா காட்டிக்கணும் சொல்லுங்க, முணுபேரும் கூட்டு சேந்து சதி திட்டம் ஏதாவது போட்டிங்க அப்றம் என்ன நடக்கும்னு தெரியாது! முணுபேர் மேலயும் கொலை கேஸ் ஃபைல் பண்ணி வெளிய வர முடியாத படி பண்ணிருவேன், ஒழுங்கா.. உண்மைய சொல்லுங்க கொலை பண்ணது யாரு இப்போ வாய் திறக்குறிங்களா இல்லையா!” என்று லத்தியை கையில் ஆட்டி கொண்டே கேட்க
அவன் குரலில் தெரிந்த அதிகாரம் முகத்தில் தெரிந்த கடுமை லத்தியை ஆட்டும் விதம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து கதிரேசனின் இதயத்தை தடதடக்க செய்து அடிவயிற்றில் கிலியை கிளப்ப “விஷ்ணு இவன் யாருன்னே எனக்கு தெரியாது நிஜமாவே உண்மைய தான் சொல்றேன்” என்று கதிரேசன் அச்சத்தில் குரல் நடுங்க கூறினான்
“டேய் உண்மை நிஜம் ரெண்டும் ஒன்னு தாண்டா” என்று இடையில் புகுந்து வைஷாலி பிழை திருத்தம் செய்ய
அவளை தீயாய் முறைத்த விஜயன் “டேய் நீ விசாரிச்சுட்டு இரு நாங்க ரெண்டுபேரும் வெளிய இருக்கோம்” என்று வலுக்காட்டாயமாக வைஷாலியின் கைப்பற்றி வெளியே இழுத்து நிறுத்தி தன் அரச்னையை செவ்வனே தொடர்ந்தான்”எந்த இடத்துல எப்டி நடந்துக்கணும்னு உனக்கு தெரியாது சிரியஸா பேசிட்டு இருக்கும் போது ஜோக் அடிக்கிற உன்ன சிரிப்பு போலீஸ்னு சொல்றதுல தப்பே இல்ல” என்று கோபத்தில் பொங்க
அவனின் கோபம் கூட அவளை ரசிக்க தூண்டியது அவன் அழுத்தமாய் பற்றிய இடம் இன்னும் உணர்வை சொறியாமல் சுகமாய் இதமாய் சிலிர்ப்பை அளிக்க “இப்போ நா என்ன சொல்லிட்டேன்னு இப்டி திட்டுற நீ வேணா நெருப்புல வெந்த கரிக்கட்டை மாதிரி எப்பவும் முகத்தை விறைப்பா வச்சுட்டு இரு என்னால அப்டி இருக்க முடியாது!, உனக்கு தான் சிரிக்க வராது அடுத்தவங்க சிரிச்சா கூட உன்னால பொறுத்துக்க முடியாதா?” என்று முகம் சுருக்கி ஆவேசத்தில் பொங்கியவள் “பிழை திருத்தம் பண்ணேன் இது தப்பா சிரிப்பு போலீஸ்னு என்ன தானே சொல்றாங்க உன்ன இல்லையே சொன்னா சொல்லிட்டு போகட்டும் அத பத்தி எனக்கு கவலையில்ல நா கிளம்புறேன் என்ன விஷ்ணு வீட்டுல ட்ராப் பண்ணிரு என்னோட திங்கஸ் எல்லாமே கார்ல தான் இருக்கு நீ பாட்டுக்க அடுத்தவன் பைக்க வாங்கிட்டு என்னையும் கூட்டிட்டு வந்துட்ட பைக்க வாங்குனவன் கிட்ட கொடுக்க வேணாம்” என்று உதட்டை சுளித்து கொண்டு கூற அப்போது தான் நினைவு வந்தது கொண்டு வந்தது தனது வாகனம் இல்லை என்று
அமைதியான ஆனால் ஆழ்ந்த பார்வையை அவளிடம் செலுத்தி “சரி இரு நா போய் அவங்ககிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவன் உள்ளே சென்று இருவரிடம் விடைபெற்று வைஷாலியை அழைத்து கொண்டு ஜெகநாதன் வீட்டிற்கு விரைந்தான்
மூவரையும் முட்டி போட வைத்து ஒவ்வொருவரின் முகத்தையும் நிமிண்டி விசாரித்து கொண்டிருந்தவன் “சார்” என்ற குரலில் திரும்பி பார்க்க கான்ஸ்டபிள் பரஞ்சோதி தனது பிடியில் இருந்து திமிறி கொண்டிருந்தவனின் சட்டை காலரை கொத்தாக பற்றியபடி நின்றிருந்தான் இருவரையும் மாறி மாறி பார்த்தவன்”என்ன?” என்று கேட்க
“இந்த ஆளு சந்தேகப்படுற மாதிரி ரோட்டுல நின்னுட்டு இருந்தான்னு ரெண்டுபேர் கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க” என்றதும் “சரி நீங்க போங்க” என்ற விஷ்ணு அவனை ஏற இறங்க பார்த்து கொண்டிருக்க
“விஷ்ணு இவன் தான் என்னோட ஆளு” என்று போன உயிர் திரும்பி வந்தது போல கூவிய கதிரேசன் “எங்கடா போய் தொலைஞ்ச என்ன பண்ணி வச்சுறுக்க” என்று அவன் மீது எரிந்து விழுந்தான் விட்டால் அடுத்து துவைத்து பிழிந்துவிடுவான் போல் இருந்தது அவனது தோற்றம்
“அண்ணே அது வந்து… கடை திறந்துருந்தாங்க அதான் ஒரு கட்டிங் போட்டுட்டு வரலாம்னு போனேன் சாரிண்ணே” என்று தலையை சொறிந்தவன் அருகில் அமர்ந்திருந்தவனை கண்டு”சார் நீங்களா? நீங்க எப்டி இங்க..” என்று ஆச்சர்யம் ததும்ப சந்தேகமாய் இழுத்து நிறுத்த
“உனக்கு இவன முன்னாடியே தெரியுமா?”
“அண்ணே பார்ல எனக்கு கம்பெனி கொடுத்தே இவரு தாண்ணே ஆனா இவர எதுக்கு அரஸ்ட் பண்ணிருக்காங்க…” என்று இழுத்தான் கதிரேசனின் கூட்டாளி
“அட நாசமா.. போனவனே! நம்ம பிளான் எல்லாத்தையும் வெளிய சொன்னதுமில்லாம என்னைய கொலை கேஸ்ல மாட்டி விட்டுடயே உன்ன..!” என்று கோபம் கொப்பளிக்க மின்னலாய் எழுந்த கதிரேசன் அவனை எட்டி மிதிக்க
டேபிளின் அருகில் சென்று குப்புற விழுந்தவன்”அய்யோ என்ன மன்னிச்சுறுங்க ண்ணே போதையில ஏதோ உளறிட்டேன் அது இந்த அளவுக்கு வரும்னு நா நினைக்கல” என்று அழுது புலம்பி மன்றாட மறுமுறை அடிப்பதற்கு முன்னால் சென்ற கதிரை இழுத்து நிறுத்தி சமாதனம் செய்தான் விஷ்ணு