சாலையின் இருபுறமும் வயல்களில் நீர் தேங்கி இருக்க, விடாது பெய்து கொண்டிருந்த மழை சிறிது ஓய்வெடுக்க, கரு மேகங்களின் போர்வையில் மாலை நான்கு மணி விடியற்காலை நான்கு மணி போல் காட்சி கொடுத்தது. சாலையில், ஆங்காங்கே தேங்கிக் கிடந்த தண்ணீரில் வண்டியை லாவகமாக இறக்கி, ஏற்றி, வளைத்து, நெளித்து பின் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரையும் பாதிக்காமல் கவனமாக ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் திடீரென்று பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார். பின்பக்கத்தில் அமர்ந்திருந்த சிவமூர்த்தியும் காவேரியும் முன்பக்க இருக்கையில் மோதிக் கொள்ளும் முன், கைகளை நீட்டி, முன் இருக்கையை இறுக பிடித்து தங்களைக் காத்துக் கொண்டனர்.
“என்ன ராஜா? எதுக்கு இப்போ திடீர்னு பிரேக் போட்ட?” என்று காவேரி கேட்க, அவரருகே அமர்ந்திருந்த சிவமூர்த்திக்குக் காரணம் தெரிருந்திருந்ததால் எதுவும் கேட்காமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
“முன்னாடி திடீர்னு நிறைய தண்ணீர் ஓடி வந்திருச்சு ம்மா.” என்றார் ராஜா.
இருள் பரவிக் கொண்டிருந்த மழைக்கால மாலை வேளையில், மழைத் துளிகளின் தாக்குதலினால் பொட்டு பொட்டாக காயப்பட்டுக் கொண்டிருந்த பக்கவாட்டு கண்ணாடி வழியாக காவேரிக்கு அனைத்தும் ஈரமாக, மங்காலகத் தெரிந்தது. முன்புறத்தில் இருந்த கண்ணாடி வழியாக எட்டிப் பார்க்க அவரது பருமனான உடல் ஒத்துழைக்காது என்பதால் அவரருகில் அமர்ந்திருந்த கணவரிடம்,
“ரோட்டை மறைச்சுக்கிட்டு இப்படித் தண்ணி ஓடுதே திரும்பிப் போயிடலாமா?” என்று கேட்க,
“இனி மழை வராது..இந்தத் தண்ணி கொஞ்ச நேரத்திலே வடிஞ்சிடும்.” என்று வானிலை வல்லுநர் போல் பதில் கொடுத்த சிவமூர்த்தி அதோடு நிற்காமல்,”அப்படியே வந்தாலும் நீ வண்டிலே இரு…நான் நீந்திப் போயிட்டு வரேன்.” என்றார்.
சில விஷயங்களில் மனைவியின் பேச்சிற்குத் மறுபேச்சு பேசாதவர் வெகு சில விஷயங்களில் செவிடாகி விடுவார். இந்த விஷயம் அப்படிபட்ட ரகத்தைச் சேர்ந்தது தான். தன்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்க மாட்டார் என்று தெரிந்திருந்ததால் தான் கோவிலிருந்து நேரே வீட்டிற்கு தான் போக வேண்டுமென்று அவர் அடம் பிடிக்கவில்லை.
இப்போது இயற்கை செய்த சதியைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள காவேரி நினைக்க, என்ன நடந்தாலும், நான் நினைத்தது நடக்க வேண்டுமென்ற முடிவோடு அமர்ந்திருந்தார் சிவமூர்த்தி. அந்த நேரத்தில் அவருடைய கைப்பேசி ஓசை எழுப்ப, அழைப்பை ஏற்று,
“சொல்லு டா உத்தம்.” என்றார் சிவமூர்த்தி.
அந்தப் புறம் சொன்னதைக் கேட்டு,”இன்னும் அரைமணி நேரமாகும் டா..ஓர் இரண்டு மணி நேரமா நல்லா மழை பெய்ஞ்சிட்டு இருந்திச்சு..அதான் லைன் கிடைக்க மாட்டேங்குது போல..ரோட்டெல்லாம் தண்ணியா இருக்கு..நீயே அவங்களுக்கு ஃபோன் செய்து நான் வந்திட்டு இருக்கேன்னு தகவல் சொல்லிடு.” என்று கட்டளையிட்டு விட்டு இணைப்பைத் துண்டிக்க இருந்தவரின் கையிலிருந்து கைப்பேசியைப் பறித்து,
“அகிலா என்ன டா செய்திட்டு இருக்கா?” என்று மகனிடம் கேட்டார் காவேரி.
கைக்குழந்தையையும் மீனாட்சியிடம் கொடுத்து விட்டு உறங்கிக் கொண்டிருந்த மகள் மீது கோபப்படாமல்,“மதியம் சரியான நேரத்திற்கு மீனா சாப்பாடு செய்து கொடுத்தாளா?” என்று கோபமாக காவேரி கேட்டது நாராசமாக சிவமூர்த்தியின் காதில் விழுந்தாலும் எப்போதும் போல் அதை அமைதியாகக் கடந்தார்.
“டிஃபன் செய்தாங்க..லன்ச் வெளியே ஆர்டர் செய்திட்டேன்..இராத்திரிக்கு மாமா வரேன்னு சொல்லியிருக்காங்க..அவர் வந்ததும் அவரைக் கேட்டிட்டு ஆர்டர் போடலாம்னு இருக்கேன்.” என்றான் உத்தம்.
“மாப்பிள்ளைக்கு வெளியே சாப்பாடு வாங்கிக் கொடுக்க முடியாது..மீனாவைச் சமைக்க சொல்லு..” என்று சொன்னவர்,’அவகிட்டே ஃபோனை கொடு..நானே சொல்றேன்.” என்றார்.
இடுப்பில் இருந்த ஹரிக்கும் அவரை ஒட்டி நின்று கொண்டிருந்த திவ்யாவிற்கும் மரம், செடி, பறவைகளை வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த மீனாட்சியிடம் கைப்பேசியை கொடுத்த உத்தம்,”அம்மா பேசறாங்க.” என்றான்.
அதை வாங்கி காதில் வைத்த மீனாட்சி, சில நொடிகள் கழித்து அதை உத்தமிடம் திருப்பிக் கொடுத்த போது,”அக்காவை எழுப்பி இவனை அவங்கிட்டே விட்டிடுங்க தம்பி.” என்று ஹரியைக் கொடுக்க முயன்றார்.
“குட்டி பையா, அம்மாகிட்டே போகலாம் வாங்க.” என்று குழந்தையை வாங்கிக் கொள்ள உத்தம் கையை நீட்ட, ‘வர மாட்டேன்’ என்று ஹரி முகத்தைத் திருப்பிக் கொள்ள, திவ்யாவும் மீனாட்சியின் புடவையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
அப்போது வீட்டின் தொலைப்பேசி மீண்டும் ஒலிக்க, “நான் பார்த்துக்கறேன் மீனாம்மா.” என்று வலுக்கட்டாயமாக குழந்தைகள் இருவரையும் அவனோடு அழைத்து சென்று அழைப்பை ஏற்றவன், யாரென்று சரியாக யுகித்து, அவர்கள் பேசும் முன்,”அப்பா வந்திட்டு இருக்காங்க..ரோட்டெல்லாம தண்ணியா இருக்குதாம்..கொஞ்ச நேரத்திலே அங்கே இருப்பாங்க.” என்று பட்டென்று பதில் சொல்லி விட்டு, குழந்தைகள் இருவரையும் பார்த்தபடி நின்றிருந்த மீனம்மாவிடம்,”நீங்க வேலையப் பாருங்க மீனாம்மா..நான் இவங்களைப் பார்த்துக்கறேன்.” என்று வரவேற்பறையில் அமர்ந்து இருவருக்கும் விளையாட்டு காட்ட ஆரம்பித்தான்.
அதே நேரம் உத்தமோடு பேசி முடித்த பின் வாசல் திண்ணையில் அமர்ந்து சிவமூர்த்தியின் வருகையை எதிர்பார்க்க ஆரம்பித்தனர் அந்த வீட்டு ஆண்கள்.
சாலையில் எக்கசக்கமாக நீர் வரத்து இருந்ததால் எதிர் திசையிலிருந்து வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி,”ரோட்டு மேலே இப்படி ஓடுதே..இதிலே வண்டி ஓட்டிட்டுப் போக முடியுமா?” என்று ஓட்டுநர் ராஜா கேட்க,
“போகலாங்க..இந்த ஓர் இடம் தான் இப்படி..மற்ற இடத்திலே இன்னும் தண்ணி ரோட்டைத் தாண்டலை.” என்று அவர்கள் சொல்ல, நன்றி சொல்லி விட்டு காரை கிளப்பினார் ராஜா.
சிறிது நேரத்திற்குப் பிறகு,“எப்போ போய்ச் சேருவோம்ங்க?” என்று சிவமூர்த்தியிடம் விசாரித்தார் காவேரி.
“அரைமணிலே போயிடணும்.” என்றார்.
“இராத்திரி தங்க மாட்டோம் தானே?” என்று காவேரி கேட்க,
சிவமூர்த்தியிடமிருந்து அந்தக் கேள்விக்குப் பதில் வரவில்லை. இனி என்ன கேட்டாலும் கணவர் வாயைத் திறக்க மாட்டாரென்று உணர்ந்த காவேரியும் வாயை மூடிக் கொண்டார். முக்கால்மணி நேரம் கழித்து அந்தச் சிறிய ஊரினுள் கார் நுழைந்த போது தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வீதியின் இருபுறமும் வீடுகள் இருந்தன. மொத்தம் இருபது வீடுகள் இருக்கும். அதில் இடதுப் புறத்தில் இருந்த ஒரு வீட்டின் முன் கீத்துப் பந்தல் இருந்ததை வைத்து அந்த வீடு தான் என்று அடையாளம் கண்டு கொண்டார் காவேரி. அதே நேரத்தில்,
“ராஜா, பந்தல் போட்டிருக்கற வீடு.” என்று ஓட்டுநரிடம் தெரிவித்தார் சிவமூர்த்தி. அந்த வீட்டின் அருகில் கார் போய் நின்றவுடன், திண்னையில் அமர்ந்திருந்த இளைஞனும் நடுத்தர வயது ஆணும் எழுந்து, வேகமாக காரருகே வந்தனர். கார் கதவைத் திறந்து முதலில் சிவமூர்த்தி இறங்க, அவரை அடுத்து காவேரி இறங்கினார். உடனே,
“சாரதி, மேடமை உள்ளே அழைச்சிட்டுப் போ.” என்று அந்த இளைஞனுக்கு கட்டளையிட்டார் அந்த நடுத்தர வயது நபர்.
“வாங்க.” என்று காவேரியை அழைத்தான் சாரதி. அது காதில் விழாதது போல் அங்கேயே நின்று கொண்டிருந்தார் காவேரி. மீண்டுமொருமுறை அழைத்தால் போகலாமென்று காவேரி காத்திருக்க, இன்னொருமுறை அழைக்க வேண்டுமென்று சாரதிக்குத் தோன்றவில்லை. எனவே, அவனும் அவரைப் போல அமைதியாக நின்றான்.
அந்த வீட்டைத் தாண்டி இரண்டு வீடுகள் தான் இருந்தன. அதன் பின் வெட்டவெளியாக இருந்ததால் அங்கேயிருந்து சிலு சிலுவென்று காற்று அடித்துக் கொண்டிருக்க, காவேரியின் உடல் குளிரில் நடுங்கியது. டிக்கியைத் திறந்து அவர்களுடைய பெட்டியை ராஜா வெளியே எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து,
“சாரதி, பெட்டியை உள்ளே கொண்டு போ.” என்றார் அந்த நடுத்தர வயது நபர்.
ராஜாவிடமிருந்து பெட்டியை வாங்கிய சாரதி அதை எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவனைப் பின் தொடர்ந்து சிவமூர்த்தி, காவேரி, கடைசியில் அந்த நடுத்தர வயது நபர் என்று ஒவ்வொருவராக வீட்டினுள் நுழைந்தனர்.
கூடத்தின் தரையில் அமர்ந்தபடி மடியில் இருந்த குழந்தையை உறங்க வைத்துக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியும்,”வாங்க மேடம்.” என்று அழைக்க, காவேரிக்கு,’என்ன இது, சாவு விழுந்து வீட்லே இத்தனை வரவேற்பு.’ என்று மனம் சுணங்க அது அவரது முகத்திலும் தெரிந்தது. வீட்டினுள்ளே, சமையலறை வாசலில் நின்றபடி விருந்தினர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள் பதின்பருவ சிறுமி ஒருத்தி. கிட்டதட்ட இரண்டு வருடங்களாக அவர்கள் வீட்டோடு சித்தி வந்த பின் எதையும் கண்டு கொள்ளாமல், தேவைக்குக் கூட வாயைத் திறக்காமல், சொன்னதை, சொல்லாததை, குறிப்பால் உணரும் பழக்கத்தைக் கற்றுக் கொண்டு அதைக் கவனமாகக் கடைப்பிடித்து வருகிறாள். அந்தப் பழக்கத்தில், கூடத்தில் இருந்த ஒரே நாற்காலியில் சிவமூர்த்தி அமர்ந்து கொண்டவுடன் பக்கவாட்டு அறையிலிருந்து எடுத்த வந்த பாயை, காவேரி அமர்வதற்காக தரையில் விரித்தாள் அந்தச் சிறுமி.
அதில் அலட்சியமாக அமர்ந்து கொண்ட காவேரி வீட்டை பார்வையால் அளக்க ஆரம்பித்தார். சிறுமியின் செயல் சிவமூர்த்தியின் மனத்தை இளக வைக்க, அது அவரது கண்களில் தெரிய,
“தாங்க்ஸ் ம்மா” என்று அவர் நன்றியுரைக்க, காவேரியின் முகம் அதில் கடுகடுக்க, அமைதியாகப் போய் அதே இடத்தில் நின்று கொண்டாள் அந்தச் சிறுமி.
“கிட்டதட்ட பத்து நாளா உங்க நம்பருக்கு முயற்சி செய்திட்டு இருந்தேன்..லைன் போகவேயில்லை..உங்களுக்கு எப்படிச் செய்தியை சொல்றதுன்னு தெரியலை..காரியமெல்லாம் முடிஞ்சதும் சென்னைக்கு வந்து நேர்லே சொல்லலாம் நினைச்சிட்டு இருந்தேன்.” என்றார் அந்த நடுத்தர வயது நபர்.
அவரைத் தொடர்ந்து,”நேத்து அக்காவோட அலமாரியை சுத்தம் செய்த போது பழைய டைரிலே உங்க வீட்டு ஃபோன் நம்பர் எழுதி இருந்தது.” என்றார் அந்தப் பெண்மணி.
அந்தக் கூற்றை எந்தப் பிரதிபலிப்புமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவளுடைய அம்மாவின் டைரியை வீசி எறிந்து,’இதெல்லாம் எதுக்கு வைச்சிருக்கா? இதை வித்தா என்ன கிடைக்கப் போகுது?’ என்று சித்தி கத்திய போது, கூடத்தில் போய் விழுந்த அந்த டைரியைப் பிரித்துப் பார்க்க, சில பேரின் வீட்டு முகவரி, தொலைப்பேசி இலக்கு இருந்ததைப் பார்த்தது அவள் தான். அதில், முக்கியமாக, சிவமூர்த்தி மாமா வீட்டு தொலைப்பேசி இலக்கு இருந்ததைக் கண்டுபிடித்ததும் அவள் தான். உடனே,
“எத்தனை முறை அவருக்கு கால் செய்திட்டேன்..அந்த நம்பர் போகவே மாட்டேங்குது.” என்று சித்தப்பா பதில் கொடுக்க,
“இது அவங்க வீட்டு ஃபோன் நம்பர் சித்தப்பா.” என்றாள்.
“கொடு.” என்று அதை வாங்கிப் பார்த்தவர்,”ஆமாம்.” என்றவுடன்,
“இப்போவே அந்த நம்பருக்கு ஃபோன் செய்து பாருங்க.” என்று சித்தி கட்டளையிட,
இரவு நெருங்கி விட்டதை உணர்ந்து, அவர் தெரியப்படுத்த வேண்டிய விஷயத்தைக் காலையில் கூட தெரியப்படுத்திக்கலாம் என்பதால்,”கைப்பேசி இணைப்பு கிடைக்கலை..இந்த நம்பர் இன்னும் இருக்குமான்னு சந்தேகமா இருக்கு…காலைலே முயற்சி செய்து பார்க்கறேன்.” என்று அடுத்த நாளைக்கு அந்த வேலையைத் தள்ளிப் போட்டார் சித்தப்பா.
இன்று காலையில் ‘தப்பான நம்பரா இருந்தா என்ன செய்ய? முதல்லே நீயே பேசு..அப்புறம் நான் பேசறேன்.’ என்று அந்த வேலையை அவள் தலையில் கட்ட, பத்து மணி போல் அந்த நம்பருக்கு அவள் தான் அழைத்தாள். ‘ஹலோ’ என்று அவளது அழைப்பை ஏற்றவனின் குரலைக் கேட்டு ஏனோ வார்த்தை வராமல் நா வறண்டு போனது.
“யார், யார் பேசறது?” என்று உத்தம் இரண்டு முறை கேட்க,’ஏதாவது ராங் நம்பரா இருக்கும்..பதில் சொல்லலைன்னா கட் பண்ணு டா உத்தம்.’என்று அகிலா பின்னணியில் பேசியது மணியின் காதில் விழ, உத்தம் என்ற பெயர் முன்பே அறிமுகமானதாக இருந்ததால் சரியான இலக்கை தான் அழைத்திருக்கிறோம் என்று புரிய, எங்கே அழைப்பைத் துண்டித்து விடுவானோ என்ற அச்சத்தில்,”நான் மனோ.” என்று பதில் அளித்தவள் அப்படியே அவளுடைய அப்பா, அவனுடைய அப்பா என்று இருவரின் நட்புறவைப் பற்றி சுருக்கமாக சொல்ல, அவளிடமிருந்து கைப்பேசியைப் பறித்து விட்டார் சிதம்பரம்.
அவர் சொன்னஅனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டவன் அவனை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனுடைய அப்பா, அம்மா இருவரும் அவர்களின் குலதெய்வக் கோவிலுக்கு வந்திருப்பதாக தெரிவித்து, அவனுடைய அப்பாவின் வேறொரு கைப்பேசி இலக்கை அவருடன் பகிர்ந்து கொண்டான். அந்த இலக்கிற்கு அழைத்துப் பேசினார் சிதம்பரம். விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் அவரது பயணத்திட்டத்தை மாற்றிய சிவமூரத்தி அன்று மாலையே அவர்களைச் சந்திக்க வருவதாகத் தெரிவித்தார்.
இப்போது, அந்த வீட்டில் அமர்ந்திருந்த சிவமூர்த்தி, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த அவருடைய சினேகிதன் புண்ணியகோடியின் புகைப்படத்தையும் அதன் அருகே இருந்த அவருடைய மனைவி கமலத்தின் புகைப்படத்தையும் பார்த்து உள்ளம் உடைந்து போனார். மிகவும் சிரமப்பட்டு அவருடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, நிதானமானக் குரலில்,
“நீங்க தானே சிதம்பரம்?” என்று அந்த நடுத்தர வயது நபரிடம் கேட்டார்.
“ஆமாம்..இவ என்னோட மனைவி ஞானம்..அவ மடிலே இருக்கறது என் பையன் அர்ஜுன்.” என்று தன்னுடைய குடும்பத்தை அறிமுகப்படுத்தினார்.
உடனே, அதுவரை வீட்டை அளந்து கொண்டிருந்த காவேரி ஓர் ஆராய்ச்சி பார்வையோடு சிதம்பரம், ஞானம் இருவரையும் சிரசிலிருந்து பாதம் வரை அளவெடுத்தார். தம்பதி நாற்பது வயதைக் கடந்தவர்கள் என்று சரியாக கணித்தவர், இந்த வயசுலே இத்தனை சின்ன குழந்தையா? அசிங்கம் என்று மனத்தில் தோன்றியது.
காவேரியின் வாழ்க்கையில் பெரிதான மாற்றம், ஏமாற்றம், பின்னடைவு எதுவும் இருந்ததில்லை. பெரிய போராட்டம் இல்லாமல் படிப்பு, கல்யாணம், குடும்பம் எல்லாம் இயல்பாக நடந்தேறியதால், சின்ன விஷயங்களுக்கு போராடுபவர்கள் அசிங்கமாகத் தெரிந்தார்கள். இருபது வயதில் ஆசைப்பட்டது அறுபது வயதில் நிறைவேறினால் காவேரியின் அகராதியில் அது அசிங்கம். வறண்ட நிலம் வறண்ட நிலமாக தான் இருக்க வேண்டும். காலம் தவறி வளமானதாக மாறினால் அசிங்கம். காவேரியின் வாழ்க்கை ஓர் நேர்க்கோட்டில் அழகாக சென்றதால் வறுமை, வயது கோளாறு ஏன் ஆரோக்கிய கேடும் கூட அசிங்கமானதாக தோன்றியது. இப்படிப்பட்ட மனப்பானமையை கொண்ட காவேரியின் வாழ்க்கையில் அவர் நினைத்துக் கூட பார்க்காத அசிங்கம் நுழைந்தது. கடைசிவரை அது வெளியே தெரியாமல் இருக்க காவேரி செய்த செயலும் அசிங்கத்தில் சேர்த்தி என்று அவர் உணரவில்லை. அசிங்கம் பற்றிய அவரது வரைவிலக்கணமும் மாறவில்லை.