இந்த மாதங்களில் சாம்பவி, தான் விரும்பிய IT நிறுவனத்தில் வேலை பார்க்க தொடங்கி இருந்தாள்.. இரண்டு மாதம் ஆகிறது வேலையில் சேர்ந்து கோவையில்தான் வேலை. ‘எங்கும் இடம் மாற்றம் செய்ய மாட்டார்கள்’ என தன் பெரியம்மாவிற்கும் அம்மாவிற்கும் விளக்கி.. கூடவே அருணும்.. ‘அப்படிதான்’ என நிதர்சனத்தை கூறவும் சம்மதித்தனர் வீட்டின் பெண்மணிகள்.
ஆக, சாம்பவி தனக்கு பிடித்த வேலையில் கொஞ்சம் நிம்மதியாக வேலை பார்த்தாள். என்னமோ அவளுக்கு அதுதான் பெரிய சாதனை.. எப்போதும் வீட்டில் ஒரு கோடு போட்டுவிடுவர்.. படிக்கும் போது, அன்னை ‘நீ விடுதியில் தங்கு’ என சொன்னார்.. பெரியம்மா ‘நீ டீச்சர் வேலைக்கு போ’ என்றார். இப்படி அவளுக்கு முன்னமோ ஒரு கோடு போட்டு விடுவர். அதில் சமத்தாக நடப்பதுதான் இவளின் வேலை.
இப்போது முதல் முறை தன்னுடைய எண்ணத்தை சொல்லி, அதற்கு வீட்டில் சம்மதிப்பது என்பது பெரிதாக தெரிந்தது சாம்பவிக்கு. அதனாலோ என்னமோ நாட்கள் இனிமையாக இருந்தது, சொடக்கு போடும் நேரத்தில் எதோ மாறியதாக உணர்ந்தாள் பெண்.
சாம்பவி ஒரு கட்டுபாடில்லா காற்றை சுவாத்தது போல உணர்ந்தாள்.. வீடு ஒரு அமைப்பு என்றால், தன் சொந்த சம்பாத்தியத்தில் சுவாசிப்பது அந்த பெண்ணிற்கு என்னமோ சாதித்த உணர்வை தந்தது. பிடித்த வேலை.. நல்ல தோழமை.. தாங்களே சமைத்து வேண்டியதை உண்டனர்.. நிறைய புது நட்புகள்.. எப்போதேனும் விழா அழைப்புகள்.. வண்ண வண்ண உடைகள்.. வேண்டியதை உண்பது என அவளுக்கு நாட்கள அழகாக சென்றது.
அலுவலகத்தின் அருகிலேயே, அவளும் அவள் தோழியும் அப்பார்ட்மென்ட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். எதோ பிள்ளைகள் சாமான் வைத்து விளையாடுவது போல.. எதோ சமைத்து.. உண்டு.. வீட்டை பார்த்துக் கொண்டு, என தோழிகள் நன்றாகவே இருந்தனர்.
ஈசனுக்கு, சாம்பவி வேலைக்கு செல்லுவது தெரியும். பார்த்திபன் மூலம் தெரிந்துக் கொண்டான்.. மேலும் நிறைய செய்திகள் தெரிந்துக் கொண்டான்.. சங்கர் மாமா, அருண்தான் சாம்பவிக்கு என நிச்சயக்கப்பட்டிருக்கும் வரன்.. என்பது வரை தெரிந்துக் கொண்டான் ஈசன்.
அதனாலோ என்னமோ, தனக்கு பெண் பார்க்கிறார்கள் எனும் போது, சாம்பவி மாதிரி பாருங்க என்றான். அவள் தனக்கு இல்லை என அவனுக்கு புரிந்து போனது. எனவே, அவன் சாம்பவியை அழைக்கவோ.. பேசுவோ.. பார்க்கவோ முற்படவில்லை.
பொறுப்பானவன்.. எது சரி, எது நடக்காது.. என புரியும் பக்குவம் உள்ளவந்தானே.. எதோ பார்த்தான்.. சத்தமில்லாமல் அவனை ஈரத்தாள்தான்.. நெருங்க நினைத்தான்.. அவளோ இன்னும் ஒடுங்கிக் கொண்டாள்.. பண்பாளனுக்கு புரிந்து போனது.. சாத்தியமில்லா விஷயத்திற்கு எதற்கு மருகுவானே! என தள்ளி நின்றுக் கொண்டான்.. அடுத்த கட்டத்திற்கும் நகர கற்றுக் கொண்டான்.
ஈசனின் மனம் தெரிந்த கருணாகரன், தன் மனைவியிடம் கத்த தொடங்கினர்.. ‘இது சரி வராது.. எப்படி அவன் எனக்கு எதிராகவேதான் செய்வானா’ எனதான் சத்தம். ஜானகி நொந்தே போனார்.. மூன்று மகன்கள்.. மகள் இல்லை.. எனவே இன்னமும் தீரவில்லை அவரின் சோகம்.
மேலும் வீட்டில் யாருக்கும் அது குறித்து எந்த எண்ணமும் இல்லை.
கமலேஷ் சொல்லிவிட்டான் “மன்னிப்பு கேட்டோம் கொடுத்தாங்க ஈசா, அதுக்காக பெண்ணை கேட்டால் எப்படி கொடுப்பாங்க. இதென்ன பேச்சு ஈசா, உனக்கு நாங்கள் சொல்லி புரியனுமா, அப்படியாவது அந்த பொண்ணு உன்னை விரும்புதா அதுவும் இல்லை.. இது நடக்காது.. உனக்கு நல்ல பெண்ணாக அம்மா அப்பா பார்ப்பார்கள், தயாராகிக்க” என்றான்.. பெற்றோரின் வாக்காக, தம்பியிடம் சொல்லிவிட்டான் கமலேஷ்.
ஈசனும் ஏதும் பேசாமல் இருந்து சம்மதம் சொன்னான்.
வித்யா கூட அடிக்கடி ஈசன் வாயை பிடிங்குவதுண்டு “என்ன ஈசன்.. முகம் இன்னிக்கு ப்ரகாசமா இருக்கு, உங்க சாம்பவியை பார்த்தீங்களோ” என ஏதேனும் கேட்பாள்.
ஈசன் “உங்க.. எங்க சாம்பவி எல்லாம் இல்ல, சாம்பவி அவ்வளவுதான். அவங்க கோயம்புத்தூர்ல வேலைக்கு போறாங்க.. இப்போவெல்லாம் பார்க்கறதே இல்லை. போதுமா.. பேச கதையில்லைன்னா.. உங்க மச்சாண்டார் கதையை பேசுங்க.. நர்மதா அண்ணி பாவம், அவங்க கதையை ஆரம்பிங்க, விடையாவது கிடைக்கும். தெரியாத்தனமா சொல்லிட்டேன்.. அந்த புள்ளையவே இழுத்துகிட்டு..” என அவ்வபோது கடுகடுத்து விடுகிறான்தான். ஆனாலும் வித்யா கொஞ்சம் துடுக்காக எதாவது கேட்பாள்.
நாட்கள் பறந்தது.
வார இறுதி நாட்களில் தன் வீட்டிற்கு வருவாள் சாம்பவி. அன்றும் அதே போல வீட்டிற்கு வந்தாள் வெள்ளி இரவு.
வீட்டில் பேச்சு குரல்கள் சற்று அதிகமாக கேட்டது. வேணி அக்காவும் அவர் கணவனும்.. தென்னை மட்டைகளை வீட்டு வாசலில் கொண்டு வந்து அடுக்கிக் கொண்டிருந்தனர்.
பத்மா இரண்டுநாள் முன்னமே வந்துவிட்டாள். ரஞ்சனின் விளையாட்டு சாமான் ஆங்காங்கே கிடக்கிறது.. ஆனால், வீட்டில், அவர்களும் குழந்தையும் இல்லை. வாசலில் கார் இல்லை, பார்த்திபன் எப்போதும் அழைப்பதற்கு பஸ் ஸ்டோபிங் வருவான், அவனும் ‘இன்று வேலையிருக்கு, நீயே வந்திடு’ என தகவல் அனுப்பி இருந்தான்., சாம்பவிக்கு.
.மேலும் வீடு எதோ பரபரப்பாக இருந்தது.
அன்னை “வாடா சாம்பவி, வா…” என்றார்.
சாம்பவி “என்ன ம்மா.. அக்கா எங்க..” என்றாள்.
நிர்மலா “வா.. வா.. எல்லாம் நல்ல சேதிதான். போய் முகம் கைகால் கழுவி வா.. சொல்றேன்.” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.
சாம்பவி “அக்கா எங்க” என்றாள் மீண்டும், தன் அன்னையின் பின் சென்றுக் கொண்டே.
நிர்மலா “ஆமாம் டி, நகை வாங்க போயிருக்கா.. வந்திடுவா.. நீ போ, நான் சொன்னதை செய்..” என்றார்.. முன்போல மிரட்டவில்லை.. அக்கறையாக சொன்னார்.
புவனா அம்மா எங்கே பார்க்க.. அவர், ஹாலில் கடைசியில் இருக்கும் டேபிளில் அமர்ந்து ஒரு டைரியை கையில் வைத்துக் கொண்டே யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தார்.
பெரியம்மா எப்போதும் தான் வரும் நேரத்திற்கு.. வாசலில் நிற்பார். பார்த்தி வரவில்லை என்றால், தங்கள் தோட்டத்து வாசலில் நிற்பார்.. ‘நடந்தே வருது புள்ள’ என புலம்பிக் கொண்டே நிற்பார்.. இல்லை, பாதி தூரம் வந்துவிடுவார் ரோட்டிற்கு.
தான் வந்ததை கூட கவனிக்காமல் இப்படி யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் தன் பெரியம்மாவை பார்க்க.. சாம்பவிக்கு, பயமாக வந்தது.. ‘என்ன நடக்குது இங்க.. அக்கா எங்க போயிருக்கா.. புவனாம்மா ஏன் என்னை கவனிக்கலை.. ஒருவேளை அருணுக்கு நிச்சயமோ..’ என உள்ளே எதோ மணியடித்தது பெண்ணுக்கு.
அவசரமாக தன்னறைக்கு சென்று.. முகம் கழுவி வந்தாள்.
தன் பெரியம்மாவிடம் நேராக வந்தாள்.. புவனம் “வா பவிம்மா.. எப்போ வந்த” என்றார்.
சாம்பவி “என்ன பெரியம்மா.. என்ன விசேஷம்..” என்றாள்.
புவனம் “ஏன் அம்மா சொல்லல.. ஏதாவது சாப்பிட்டியா” என்றார்.
சாம்பவி “இப்போதான் வந்தேன் புவனாம்மா, என்ன ஆச்சு சொல்லுங்க” என்றாள்.
நிர்மலா அதற்குள் சின்ன தட்டில் கேக்கும்.. டீயும் எடுத்து வந்தார் தன் பெண்ணின் கையில் கொடுத்தார்.. “சொல்லுவாங்க இரு டி” என்றவர் தன் அக்காவை பார்த்தார்.
புவனம் நான் சொல்லமாட்டேன் என்பதாக தலையசைத்தார். நிர்மலா கண்ணால் ‘சொல்லுங்க சொல்லுங்க’ என கெஞ்சிக் கொண்டிருந்தார். புவனத்திற்கு போன் வரவும் எழுந்து சென்றுவிட்டார்.
நிர்மலா இப்போது தன் பெண்ணின் அருகில் அமர்ந்தார். சாம்பவி கீழேதான் அமர்ந்திருந்தாள்.. அவளின் அருகில் அமர்ந்தார் அன்னை. பெண்ணின் தவித்த முகம் பார்க்க.. சந்தோஷமாக இருந்தது. ம், அருணுக்கு சாம்பவியை பெண் கேட்டு.. இல்லை, நாளை மறுநாள் நிச்சயம் செய்யலாம் என அண்ணி.. வந்து சென்ற நேரத்திலிருந்து இன்னும் தன் கால்கள் தரையில் நில்லாமல் இருக்கிறது அன்னையாக நிர்மலாவிற்கு. எனவே அதை எப்படி தானே மகளிடம் சொல்லுவது என சந்தோஷத்தில் தடுமாறி நிற்கிறார் அன்னை.
நிர்மலா சிரித்தார். இப்போது அவர்களின் கார் வாசலில் வந்து நின்றது. இருவரும் அதில் கவனம் வைத்தனர்.
உறங்கியிருந்த குழந்தை நிரஞ்சனை தூக்கிக் கொண்டு ராகவேந்தர் இறங்கினார். பின் பத்மா என மூவரும் உள்ளே வந்தனர். பத்மா உள்ளே வரும் போதே சாம்பவியை பார்த்து “ஹாய் கல்யாண பொண்ணு, எப்போ வந்த” என கேட்டபடியே உள்ளே வந்தாள்.
சாம்பவி தன் மாமா ராகவேந்தரை பார்த்து, வரவேற்பாய் சிரிக்க இருந்தவள்.. தன் அக்காவின் வார்த்தையில் அதிர்ந்து, தன் அன்னையை பார்த்தாள். அன்னை சாம்பவியை பார்த்து ‘ஆமாம்’ என்பதாக தலையசைத்தாள்.
பத்மா “எப்போ வந்த, சித்தி எதுவும் சொல்லலையா” என்றாள்.
சாம்பவி பேசவேயில்லை.. ஏனென்றே தெரியாமல் கண்கள் கலங்கியது.. இப்போதுதான் வாழ்க்கை வசப்பட்டது.. நான் கேட்டது கிடைத்தது, என் விருப்படி வேலை.. நல்ல சம்பளம்.. கொஞ்சமாக எட்டி பார்த்தேன் வெளி உலகை.. அதற்குள் என்ன கல்யாணம்.. எனக்கு இன்னும் ஆறுமாசம் டைம் இருக்கே..’ என எண்ணிக் கொண்டே தன் அக்காவை பார்த்தாள்.
பத்மா நேரே பூஜை அறை சென்றாள், எதோ நகை வாங்கி வந்திருந்தனர் போல அதை எடுத்து சாமி படத்தின் முன் வைத்து விட்டு.. விழுந்து கும்பிட்டு மீண்டும் அதை எடுத்துக் கொண்டு வெளிய வந்தாள்.
ராகவேந்தர், குழந்தையை தன் பெரிய மாமியார் படுக்கும் கயிற்று கட்டிலில் கிடத்தி, அவரின் நூல் புடவையை போர்த்திவிட்டு வந்தார், ஹால் நடுவில்.
புவனம் வந்தார் இப்போது.. மாப்பிளையிடம் “ரஞ்சன் தூங்கிட்டானா, ஏதாவது சாப்பிட்டானா” என்றார்.
ராகவேந்தர் “வரும் போதே ஹைவேயில் இரண்டு இட்லி வாங்கி காரிலேயே ஊட்டி விட்டாள், அத்தை, பத்மா” என்றார்.
பத்மா இப்போது இரண்டு மோதிரங்களை தாங்கிய நகை பெட்டியை தன் அன்னையிடம் கொடுத்தாள். புவனம் பார்த்ததும் “நல்லா இருக்குடா.. நிரு கிட்ட கொடு” என்றார்.