அதுவும் சாவித்திரி அவர் வேலையை விட்டு உடனே வந்து, “பத்திரமா போய்ட்டு வாங்கண்ணா” என்று மெல்லிய புன்னகையுடன் கை குவிக்க, மனிதருக்கு பதில் புன்னகை சிந்தவே தடுமாற்றம்.

அவரின் மகன் தானே இவரின் மருமகன்! என்னோட பேச்சு இவங்களை பாதிச்சிருக்கும் இல்லை. இனிமேல் இவங்களுக்கவாவது நான் பொதுவுல கவனமா நடந்துக்கணும். திடீர் ஞானோதயம்!

தேசிகன் அவரை வழியனுப்பி வைக்க வராததில், மாமனாருக்கு கூடுதல் மகிழ்ச்சி.

அதிலே பாட்டியிடம் உடல்நிலை பற்றி விசாரித்து, ஆண்களிடம் தொழில் பற்றி இரண்டொரு வார்த்தை பேசி, இளையவர்களை லேசாக வம்பிழுத்து, பெண்களிடம் சிரித்த முகமாக சொல்லி கொண்டு, மிகவும் நல்ல முறையிலே மகளின் வீட்டில் இருந்து கிளம்பினார் சதாசிவம்.

அப்பா எப்போவும் இப்படியே இருந்தா நல்லா இருக்கும் என்று மகள் பேராவல் கொண்டாள்.

தேசிகனிடமும் அவள் அதை சொல்லி, “நீங்க இருந்திருந்தா அவர் உங்ககிட்டேயும் அப்படி தான் பேசியிருப்பார்” என்றும் சொல்ல,

“நீ வளரவே இல்லையாடி” என்று அவளின் நெற்றியில் விரலை வைத்து தட்டினான் கணவன்.

“ஏன்? என்ன?” என்று மனைவி சிலுப்பி கொள்ள,

“நான் இல்லாததனால தான் உன் அப்பா அவ்வளவு நல்லா பேசிட்டு போயிருக்கார்” என்றான்.

வீட்டின் இளையவர்களும் அண்ணன் உணவுண்ணும் நேரம், “ண்ணா. இனிமேல் அண்ணியோட அப்பா இருக்கிற இடத்துல நீ இருக்காத. மனுஷன் எவ்வளவு நல்லா, அழகா பேசறார் தெரியுமா?”

“ஆமா எங்ககிட்டேயும், “எதையும் மனசுல வைச்சுக்காம வீட்டுக்கு வாங்கம்மான்னு சொல்லிட்டு போனார்” என்று அத்தை சொல்ல,

“எங்களுக்கு என்னமோ உன்மேல தான் சந்தேகம். அவர் நல்லவர் தான். உன்னை பார்த்தா மட்டும் அப்படி மாறிடுறார்” என்றார் தேசிகனின் மாமாவும்.

“எப்படி உடுக்கை அடிச்சா சாமியாட ஆரம்பிச்சிடுவாங்களே அப்படியா?” என்று தேசிகன் கிண்டலாக கேட்க,

“ஏங்க” என்று தன்வி கோபமானாள்.

“இல்லைடி. ஜஸ்ட் உதாரணம் சொன்னேன்” என்றவன், “சரி உங்க எல்லோரட விருப்பத்தை மதிச்சு இனி நான் அவர் இருக்கிற இடத்துக்கே வரலை. சந்தோஷமா?” என்று கேட்க,

“இது என்னமோ எங்களுக்காக சொன்ன மாதிரி தெரியலை” என்றார் பெரியவர்.

“எனக்காக கூடத்தான் இருக்கட்டுமே. இப்போ என்ன தாத்தா? என் மாமனார் சந்தோஷம், என் சந்தோஷம்” என்று பேரன் சொல்ல.

“படவா. நீ என்ன அர்த்தத்தில சொல்றேன்னு எங்களுக்கு புரியாதுன்னு நினைச்சியா?” என்று தேசிகன் தோளில் தட்ட, தன்விக்கே புன்னகை எனும்போது மற்றவர்களுக்கு கேட்கவும் வேண்டுமா?

அறைக்கு வந்த மனைவியிடம், “உன் அப்பாகிட்ட பேசுனியா?” என்று கேட்டான் தேசிகன்.

தன்வி அவனிடம் எல்லாம் சொல்ல, “சரி என்ன பண்ண போறாராம்?” என்று கேட்க,

“தெரியலைங்க. பெரியப்பா உள்ள வர முடியாதுன்னுட்டார். ஒரே கட்சி. அந்தாளும் பணம், பதவின்னு ரொம்ப ஸ்ட்ராங்கா தான் இருக்கார். அதான் அப்பா அவங்களோட மல்லுக்கட்ட முடியாதுன்னு அக்ரீமெண்டை கேன்சல் பண்ண பார்த்துட்டிருக்கார்”

“அந்தாள் பணத்தை திரும்ப கொடுக்க ஒத்துக்கிட்டானா”

“ம்ஹூம். வாசுதேவன் அண்ணா அவர் கான்டெக்ட் மூலமா முயற்சி பண்றார். பொண்ணுக்கு கொடுத்த பணம் திரும்ப வராது, எனக்கு கொடுத்ததுலயும் ஒரு பங்கு எடுத்துட்டு தான் கொடுப்பேன்னு சொல்றார். அதான் பேச்சு வார்த்தை போயிட்டிருக்கு”

“ஏண்டி உன் பேர்ல அக்ரீமெண்ட் போட்டு கேன்சல் பண்ணுவாரா உன் அப்பா” என்று தேசிகன் கோபம்கொள்ள,

“வேறென்ன பண்ண முடியும்? அவங்க கேட்டுட்டே இருக்கிற பணத்தை கொடுத்துட்டே இருக்க முடியாது இல்லை”

“பணம் கொடுத்தது, கொடுத்தது தான்னு எழுதி வாங்க வேண்டியது தானே”

“சொத்தை எழுதி கொடுக்கணும்ன்னா இன்னும் இவ்வளவு கேட்கிறாங்க” என்றாள் தன்வி.

“ரைட்” என்று தேசிகன் முடித்துவிட்டவன், “நீ தூங்கு. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என,

“இந்த நேரத்துக்கு எங்க கிளம்புறீங்க?”

“வீட்டுக்குள்ள தான். முரளி வருவான். பேசிட்டு வரேன்” என, தன்வி கணவனை உர்ரென பார்த்து தூங்க சென்றாள்.

அவளுக்கு கணவனிடம் சிலது பேச வேண்டும். முரளின்றதும் பேசாமல் விட்டவள், மறுநாளும் கணவனை பிடிக்க முடியாமல் கடுப்பானாள்.

காலை அவள் தூங்கி எழும்போதே தேசிகன் அறையில் இல்லை. தூங்க வந்தது தெரியும், கிளம்பியது தெரியவில்லை.

“உனக்கு ஓகேன்னா என்னோட ஆபிஸ் வரியா?” என்று சாவித்திரி தனியே அமர்ந்திருந்த மருமகளிடம் கேட்க,

“வரேன் அத்தை” என்று உடனே பெண் கிளம்பிவிட்டாள்.

சாவித்திரி மேற்பார்வையில் தான் மசாலா பொருட்கள் தயாரானது. தரம் வாரியாக பிரித்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றதும், “எங்களுக்கு இந்த மாதிரி கொடுக்கிறதில்லை” என்று கேட்டாள் மருமகள்.

“இதெல்லாம் வெளிநாட்டுக்கு போறது. நீயும் அந்த விலையை கொடு. உனக்கே எல்லாம் கொடுக்கிறேன்” என்று மாமியார் சொல்ல,

“ஆஹ். அந்த விலை எல்லாம் எங்களுக்கு கட்டுபடியாகாது” என்று மருமகள் உடனே பின்வாங்கிவிட்டாள்.

சாவித்திரி மெலிதாக புன்னகைக்க, “அத்தை. உங்களுக்கு தெரியாதது இல்லை. நாங்க மூலப்பொருட்களை இந்த விலைக்கு வாங்கினா, மசாலா விலையும் கூட்டணும். மார்க்கெட்ல எல்லாம் வாங்கிற விலைக்கு எங்க பொருள் கிடைச்சா தான் எங்களுக்கு லாபம். இல்லைன்னா இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான்” என.

“தெரியும். அதனால தான் உங்களுக்கு வேற தரத்துல பொருள் கொடுக்கிறது. உன் பெரியப்பாக்கு தெரியாததா சொல்லு” என்றவர், மருமகளுக்கு மற்ற எல்லாவற்றையும் கூட காட்டினார்.

அவரின் நடை, பேச்சு, தேவைப்படும் நேரத்தில் வெளிப்படும் ஆளுமை என்று மருமகளுக்கு சாவித்திரியை விட்டு வேறு பார்க்க முடியவில்லை.

“ரொம்ப நல்லா பண்றீங்க அத்தை” என்று வாய்விட்டும் சொல்ல,

“வாங்கின அடி அதிகம், அனுபவமும் அதிகம்” என்றார் அவரின் புன்னகையிலே.

அதில் வலியும் மருமகளுக்கு புரிய, தன்னை போல் அவரை அணைத்துவிட்டாள்.

சாவித்திரி இயல்பாக மருமகளை அரவணைத்து கொள்ள, “ம்ம். நடக்கட்டும். நடக்கட்டும்” என்று வந்தான் அரவிந்தன்.

“அண்ணி. என் அம்மாகிட்ட அண்ணன் கூட எனக்கு போட்டிக்கு வர மாட்டான். நீங்க என் ரூட்ல அதிகமா கிராஸ் ஆகுற மாதிரி இருக்கே” என்று செல்ல மகன் உரிமை குரல் எழுப்ப,

“ஓஹோ இதுவேற நடக்குதா? இனி உன் அண்ணன் இடம் எனக்கு தான்” என்றாள் தன்வி அவனை வம்பிழுத்து.

“என் அண்ணனே உங்களுக்கு தான். ஆனா அம்மா மட்டுமே எனக்கே எனக்கு” என்று அவனும் பேச, சாவித்திரியோ அவர் வேலையை பார்க்க போயாச்சு.

“ச்சே. கிரேட் இன்சல்ட்” என்று அரவிந்தன் நெற்றி குத்தி கொள்ள, தன்விக்கு மலர்ந்த புன்னகை.

“அண்ணி. சிரிச்சது போதும். அண்ணா எங்க? போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறான்” என்று கேட்க,

“தெரியலையே?” தன்வி உடனே கணவனுக்கு அழைத்தாள். போன் அணைத்து வைக்கப்பட்டிருக்க, “உங்க மாமாகிட்ட கேட்டீங்களா?” என்று கேட்டாள்.

“மாமாக்கு தெரிஞ்சாலும் சொல்ல மாட்டார்”

“அவர் எங்க இருக்கார்ன்னு கூடவா?”

“அண்ணா சொல்ல சொல்லியிருந்தா சொல்லுவார். இல்லைன்னா வாய்ப்பில்லை” என,

சாவித்திரி வந்தவர் இருவரையும் கேள்வியாக பார்க்க, அரவிந்தன் இப்படி என்று சொன்னான்.

என்னமோ அவரிடம் சட்டென ஓர் கோவம். உடனே போன் எடுத்து அவரின் அண்ணனுக்கு அழைத்தபடி அங்கிருந்து செல்ல, “அண்ணா. அம்மாக்கு பிடிக்காதது ஏதோ பண்ண போயிருக்கான் போல” என்றான் அரவிந்தன்.

“எப்படி சொல்றீங்க?” தன்வி புரியாமல் கேட்க,

“போன் ஸ்விட்ச் ஆப். நமக்கும் அவனை பத்தி தெரியலை. ஆள் ஆப்ஸ்காண்ட். சோ” என்று தோள் குலுக்க,

“அப்படியென்ன பண்ண போறார்?” என்றாள் தன்வி.

“சீக்கிரம் தெரிஞ்சிடும்” என்றான் அரவிந்தன்.

தன்வியின் போன் ஒலிக்க, சதாசிவம். “தன்வி அங்க நீ ஓகே தானே?” என்று வேகமாக கேட்க,

“என்னாப்பா ஆச்சு? நான் ஓகே தான்” என,

“இல்லை. சும்மா கேட்டேன்” என்று தந்தை வைக்க போக,

“ப்பா. எனக்கு சொல்லிட்டு வைங்க” என்றாள் மகள் நிலையாக.

“நான் இப்போத்தான் வீட்டுக்கு வந்தேன். எனக்கு முன்ன அந்தாள் வீட்ல வந்து எல்லோரையும் மிரட்டிட்டு இருக்கான்”

“எந்த ஆளுப்பா”

“அதான்டா. அந்த கட்டிடத்துக்காரன். சொத்தை எழுதி கொடுக்கலைன்னா என் பையனை தூக்கிடுவீங்களா? நைட்டுக்குள்ள என் மகன் வீட்டில் இருந்தாகணும். இல்லை உங்க வீட்ல ஒருத்தரை விட மாட்டேன்னு மிரட்டிட்டு போனான். அதான்டா”

“ப்பா. நீங்க எதுவும்”

“இல்லைடா. பெரியப்பா தான் அதெல்லாம் பண்ணுவார். ஆனா அவர், நான் இல்லைன்னு உறுதியா சொல்றாரே”

“அப்புறம் அந்தாள் எதுக்கு வந்து நம்மளை மிரட்டணும். நீங்க உடனே அவர்மேல போலீஸ் கம்பளைண்ட் கொடுங்கப்பா. எவ்வளவு தைரியம் அவருக்கு” என்று தன்வி பேச,

“பெரியப்பா வேணாம் சொல்றார் தன்வி. நான் கூப்பிடுறேன் இரு” என்று தந்தை வைத்துவிட, அரவிந்தன் அதிர்ந்து நின்றிருந்தான்.

“என்ன அரவிந்த்” என்று தன்வி கேட்க,

“அண்ணி” என்றவன் ஏதோ சொல்ல வந்தவன், முரளி அங்கு வரவும் உறுதி செய்துவிட்டான்.

“நீங்க வீட்டுக்கு கிளம்பணும் அண்ணி” என்றான் முரளி இவளிடம்.

“ஏன்? நான் ஏன் போகணும்?” தன்வி அவன்மேல் உள்ள கடுப்பிலே கேட்டாள்.

“அண்ணாவோட ஆர்டர். நாம செஞ்சுதான் ஆகணும்” என்று முரளி அழுத்தமாக சொல்ல.

“அண்ணி. முரளிண்ணா பேச்சை கேளுங்க. கிளம்புங்க” என்றான் அரவிந்தன் வற்புறுத்தி.

முரளி நீ வந்து தான் ஆகணும் என்பது போல் நிற்க, சாவித்திரியும் அவளுக்கு அழைத்து கிளம்ப சொல்ல, தன்வி வேறு வழி இல்லாமல் அவனுடன் கிளம்பினாள்.

கழுத்து வரைக்கும் கோவம். எனக்கு முரளி பிடிக்காது தெரிஞ்சும் அவனை விட்டு செய்வாரா?

அன்றிரவு தேசிகன் வீட்டுக்கு வரவில்லை. தன்வி எங்கும் செல்ல அனுமதியும் கிடைக்கவில்லை.

மனோகர் மறுநாள் வீட்டுக்கு வந்து நிற்க, “என்ன மாமா” என்றாள் தன்வி குழப்பத்துடன்.

“நீ என்னோட சென்னை வரணும் தன்வி” என்றழைத்து சென்றான் மனோகர், உடன் முரளியும்.

தன்வி கார் நேரே பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல, அங்கு நின்றிருந்தான் தேசிகன்.

சுற்றி அவ்வளவு ஆட்கள். போலீசும் காணப்பட, பெண்ணுக்கு கணவனை நெருங்கி எது கேட்கவும் லேசான அச்சம்.

எனக்கு பிடிக்காதது எதுவும் செஞ்சிருந்தா?

“தன்வி உள்ள வா” என்று மனோகர் அவளை அழைத்து செல்ல, சதாசிவம் அங்கு தயாராக இருந்தார்.

“கையெழுத்து போடு” என்று பேனா கொடுக்க, தன்விக்கு வாங்க விரல் நீளவில்லை.

“போடு தன்வி” என்று வாசுதேவன் கண்டிப்புடன் சொல்ல, அந்த பேனாவை தூக்கியெறியும் வேகம்.

“தன்வி போடுடா” என்று சதாசிவம் மகளை ஊக்க, பல்லை கடித்து கொண்டு கையெழுத்து போட்டு வந்தாள் தன்வி.

தேசிகன் காரை அவள் முன் நிறுத்த, தன்வி காருக்குள் அமர்ந்து கதவை சாற்றிய நொடி, கார் வேகமெடுத்தது.