தன்வியின் அணைப்பில் தன்னை மீட்டு கொண்ட தேசிகன், “கிளம்பலாமா?” என்று கேட்டான்.
“எங்க?” தன்வி கணவன் முகம் பார்க்க,
“என் பொண்டாட்டியை தேடி தான்” என்றான் தேசிகன்.
“ஒன்னும் தேவையில்லை” தன்வி அவனிடம் இருந்து விலகி கொண்டாள்.
“தேவையில்லைன்னா அப்புறம் என் பொண்டாட்டி எனக்கு எப்படி கிடைப்பா?” தேசிகன் பொங்க,
“வேண்டாம்ன்னு தானே விட்டு வந்தீங்க? இப்போ நானா வரவும் என்னை தேட கிளம்புறீங்க?” தன்வியும் பாய்ந்தாள்.
“நீ என்னை தேடணும் நினைச்சேன். ஆனா அது நடக்காது போல. அதான் எப்போவும் போல நானே உன்னை தேடிடலாம்ன்னு”
தன்வி அவனை தீர்க்கமாக பார்க்க, “என்ன தன்வி” என்றான் கணவன்.
“நான் சாரி கேட்க வந்தேன். நீங்க என்னை கேட்க விட மாட்டீங்கன்னு தெரியுது. நான் கிளம்புறேன்” என்றாள்.
“என்னை கோவப்படுத்தாத. என்கிட்ட வந்துட்ட இல்லை. இரு. என்னோடே இருடி” என்றான் சற்று அதிகாரத்துடன்.
“நான் சதாசிவத்தோட மகள் தான், மறந்துடாதீங்க”
“இப்போ எதுக்கு அந்த மனுஷன் பேரை சொல்ற” தேசிகன் பல்லை கடித்தான்.
“அடிக்கடி நீங்க மறந்துடறீங்க”
“உன் அப்பாவை மரியாதை இல்லாமல் பேசினதுக்காக சொல்றேன்னு நல்லா புரியுது. பட் நான் இப்படிதான். அவர் எனக்கு ஆகாதவர் தான். நீ நம்மை பத்தி மட்டும் பேசு”
தன்விக்கு கணவனின் வார்த்தைகள் வருத்தத்தை கொடுத்தது. அவன் இடத்தில் அவன் சரியாக இருக்கலாம். ஆனால் என் இடத்தில், அவருக்கு மகளாக நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
எதுவுமே நடக்காததை போல கணவனோடு அவன் வீடு சென்றுவிட வேண்டுமா என்ன? முடியுமா என்னால்?
நேற்றிரவில் இருந்து இதே கேள்வி தான் அவளை அலைக்கழித்து கொண்டிருக்கிறது. இதுவரை பதில் கிடைத்தபாடில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை.
கனத்த தலையை பிடித்து கொண்டாள் தன்வி.
“ஹேய் என்னடி” தேசிகன் அவளை ஆதரவாக தன்னோடு அணைத்து கொள்ள, தன்வி அவன் அணைப்பை மறுக்காமல் அவனோடு ஒன்றினாள்.
தேசிகனுக்கு அதிலே அவளை புரிந்து போக, “எதுக்கு இப்போ இவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுக்கிற? விடு பார்த்துக்கலாம். நான் இருக்கேன் உனக்கு” என்றான்.
தன்வி நிமிர்ந்து அவனை உர்ரென பார்க்க, “என்ன? ஸ்ட்ரெஸ் கொடுக்கிறதே நீ தாண்டா சொல்றியா? ஆமா அதுவும் நானே! இதுவும் நானே!”
“அப்போ இத்தனை நாள் என்கிட்ட அப்படி தான் இருக்கீங்களா?” என்று அவன் மார்பிலே குத்த,
“கொஞ்சம் அப்படி தான். முறைக்காத. உண்மையான புருஷனா இருந்தா உனக்கு தான் கஷ்டம்”
“இதென்ன புது கதை?” தன்வி சந்தேகமாக கேட்க,
“ஆமா உண்மையான புருஷன் இப்படி சும்மா கட்டிபிடிச்சுட்டு நிற்பானா? தனி ரூம், நாம மட்டும் தான் இருக்கோம். நானும் மேல ப்ரீயா இருக்கேன். நீ என்னை தொட்டுட்டு, கட்டிக்கிட்டு சூடேத்துற? ஆனாலும் அமைதியா தானே இருக்கேன்”
“நான் ஒன்னும் உங்களை கட்டிக்கலை. நீங்கதான் என்னை பிடிச்சு வைச்சிருக்கீங்க” என்று அவனிடம் இருந்து விலக திமிறினாள்.
“ஹேய் ஆடாதடி. பாய்ஞ்சிட போறேன்”
“சும்மா என்னை சீண்டிட்டே இருக்காதீங்க. விடுங்க” என்று கட்டிலில் அமர்ந்தாள் பெண்.
தேசிகன் அவளுக்கு உணவை எடுத்து வர சொன்னவன், உடை மாற்றி கொண்டான்.
“எனக்கு பசிக்கல” என்று தன்வி உணவை மறுக்க,
“சாப்பிடாம இருக்கிறதால எந்த பதிலும் கிடைச்சிடாது. சாப்பிடுடி” என்று அதட்டி அவளை உண்ண வைத்தான்.
அடுத்து என்ன? தேசிகனுக்குமே யோசனை தான்.
தன்வியை அவன் இனியும் எதற்காகவும் கட்டாயப்படுத்த தயாரில்லை.
ஓர் முறைக்கே இந்த நொடி வரை பட்டு கொண்டிருக்கிறான்!
தன்வியின் போன் ஒலிக்க, சதாசிவம் தான். “நான் கூப்பிடுறேன்” என்று மகள் மெசேஜ் மட்டும் அனுப்பி வைக்க,
“நான் ஹோட்டல்ல தான் இருக்கேன்” என்று அவரிடம் இருந்து பதில் மெசேஜ்.
தன்விக்கு சட்டென ஓர் கோவம். இதென்ன? உடனே அப்பாவிற்கு அழைத்தவள், “நீங்க வீட்டுக்கு போங்கப்பா நான் வரேன்” என்றாள்.
“பொண்டாட்டி, அதுவும் பிடிச்ச பொண்டாட்டி. ஆனா உங்க பேரை சொல்ல கூடாது இல்லை” தன்வியும் கோபத்துடன் கேட்டாள்.
“எனக்கு தான் உன்னை பிடிக்கும். உனக்கு என்னை பிடிக்கிறப்போ பேர் சொல்லி கூப்பிடு, வாடா, போடா என்னவும் சொல்லிக்கோ” தேசிகன் அவனின் எதிர்பார்ப்பை சொன்னான்.
தன்வி அவனை வெறித்து பார்க்க, “என்ன பிடிக்கவே போறதில்லைங்கிற மாதிரி பார்க்கிற?” தேசிகன் அவளின் கன்னங்களை தன் கைக்குள் சிறையெடுத்தான்.
“என்னை பிடிக்க வைச்சுக்கோ. விட்டுடாத. விடவும் முடியாது. நான் விடவும் விடமாட்டேன். உனக்கு வேற வழி இல்லை. பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக.
தன்விக்கு அவன் மிரட்டலில் புன்னகையே. “என்னது இது?” என்று அவனிடமே கேட்க,
“சொல்றேன். என் மனசை உனக்கு சொல்றேன்”
“ப்ரொபோஸ் பண்றீங்களா என்ன?” என்று சீண்டலாக கேட்டாள் மனைவி.
“ச்சு. வேலையத்தவன் தான் அதெல்லாம் பண்ணிட்டிருப்பான். நான் உனக்கு ஆர்டர் போடுறேன்”
“உங்களால மட்டும் தான் இதெல்லாம் முடியும்” என்ற தன்வியின் இதழ் விரித்த புன்னகையில் தேசிகன் அவளின் நெற்றி முட்டியவன்,
“ஏதோ பண்ற என்னை? உனக்காக இன்னும் இறங்கி போகத்தான் தோணுது” என்றான் ஆழ்ந்த குரலில் அடிமனதிலிருந்து!
தன்வி கணவனின் வார்த்தைகளில் அதிர்ந்து, அதன் பாரம் தாங்காமல் தளர்ந்துவிட்டாள்.
“நீ வீட்டுக்கு கிளம்பு. நான் வரேன்” என்றான்.
தன்வி முதல் முறையாக கணவனை விட்டு விலக விரும்பவில்லை. அப்படியே, தேசிகனிடமே நின்றாள் பெண்.
“என்னடி. நான் வரேன். எல்லாம் சரி பண்ணிடலாம்” என்று மேலும் சொல்ல,
தன்விக்கு அந்த நொடி எதோ நெஞ்சில் அடைத்து அவளுக்கு வலியை கொடுத்தது.
“என்ன தன்வி?” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்டான் தேசிகன்.
எதுவுமில்லை என்று தலையசைக்க, தேசிகன் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
தன்வி கண்கள் தானாக மூடி கொண்டதுடன், அவளின் நெஞ்சம் விம்மியது. ஏனோ கத்தி அழ வேண்டும் என்று தோன்ற, பெண்ணுக்கே பயம் வந்துவிட்டது.
தேசிகனிடம் இருந்து அவசரமாக விலகி கொண்டவள், “நா. நான் வரேன்” என்று சொல்லி கொண்டு கணவனின் அழைப்பில் நிற்காமல், அவனை பார்க்க கூட துணியாமல் ஓடிவந்துவிட்டாள்.
எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று தெரியாமல், அவளின் அறைக்குள் முடங்கி கொண்டாள்.
ஏனென்றே தெரியாமல் கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
எவ்வளவு நேரம் அப்படி இருந்தாளோ தெரியவில்லை. சுதா கதவை தட்டி மகளை அழைத்தார்.
“ஏன் போன் எடுக்க மாட்டேங்கிற? என்னாச்சுடா?” என்று அவர் விடாமல் கூப்பிட,
“ம்மா. பைவ் மினிட்ஸ் நான் வரேன்” என்று குரல் கொடுத்தவள், ஓய்வறை சென்று கீழிறங்கினாள்.
அழுத முகம் அப்படியே தெரிய, தன்வி அதை கவனிக்கவும் இல்லை.
ஹாலில் எல்லாம் இவளுக்காக காத்திருக்க, சதாசிவம் எடுத்ததும், “அழுதியா தன்வி. என்னாச்சு? உன்கிட்ட கோவப்பட்டானா? பாரு நான் இதுக்கு தான் சொன்னேன், என் பேச்சை கேட்காம என் மகளை அவன்கிட்ட தனியா அனுப்பி வைச்சு” என்று மனிதர் குதிக்க ஆரம்பித்துவிட,
“ப்பா. போதும். ப்ளீஸ்” என்று அவரை நிறுத்தினாள் மகள்.
“உனக்கு கொஞ்சம் கூட பொறுமையே இல்லையா சதாசிவம்” என்று ராஜேந்திரன் கடுப்பாகி போனார்.
“ண்ணா. எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்றீங்க? பாருங்க என் பொண்ணை?”
“நாங்க பார்த்துட்டு தான் இருக்கோம். அவளை மட்டுமில்லை உன்னையும் கூடத்தான்”
“சரி நான் தப்பாவே இருக்கட்டும். என் பொண்ணை ஏன் அழ வைச்சு அனுப்பினான்னு அவன்கிட்ட கேளுங்க” என்று சதாசிவமும் கோவமாக பேச,
“ப்பா. நான் உங்ககிட்ட ஸாரி கேட்கணும்” என்றாள் தன்வி இடையிட்டு.
“நீ ஏன் என்கிட்ட சாரி கேட்கணும் தன்வி” சதாசிவம் புரியாமல் பார்க்க,
“நேத்து தேசிகன் உங்ககிட்ட மரியாதை இல்லாமல் பேசினத்துக்காக”
“அவனுக்காக நீ என்கிட்ட சாரி கேட்பியா?” மனிதர் காண்டாகிவிட,
“நிச்சயமா கேட்பேன். அவர் என்னோட புருஷன். அவருக்காக நான்தான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்பேன். சாரிப்பா அவர் அப்படி பேசியிருக்க கூடாது”
“நான் காலையிலே உங்ககிட்ட கேட்டிருப்பேன். ஆனா நீங்க அப்போ நிதானத்துல இல்லை. இப்போவும் இல்லை தான். ஆனாலும் கேட்க வேண்டியது என்னோட கடமை. கேட்டுட்டேன், அப்புறம் உங்க இஷ்டம்ப்பா” என்ற மகளின் வார்த்தைகளில், தந்தைக்கு ஏதோ போலாகிவிட்டது.
“என்னடா தன்வி” என்றார் சதாசிவம்.
“அவனுக்காக நீ என்கிட்ட சாரி கேட்பியா?” மனிதருக்கு தாங்க முடியவில்லை.
“அவ புருஷனுக்கு அவ கேட்காம வேற யார் கேட்பா தம்பி. இப்போதான் நம்ம மகள் சரியான ரூட்டுல வந்திருக்கா” என்று ராஜேந்திரன் மலர்ந்து போனார்.
“ண்ணா. அவளை கண்டிக்காம எதோ பேசுறீங்க நீங்க” அண்ணனிடம் தம்பி கொதிக்க,
“அவளை ஏன் கண்டிக்கணும்? ஓஹ் சாரி கேட்டதுக்கா? வாஸ்தவம் தான். நீதானே முதல்ல ஆரம்பிச்ச? அப்போ தேசிகன் ஏன் மன்னிப்பு கேட்கணும்?”
“ண்ணா”
“என்ன தம்பி” ராஜேந்திரன் பாசமாக கேட்டார். அவருக்கு தன்வியின் செயல் குளிர வைத்துவிட, பெரியவர் உற்சாகம் கொண்டார்.
“அப்போ நீயும் அவனும் ஒன்னு. நான் வேற சொல்ற இல்லை நீ?” என்று மகளிடம் ஏற்றுக்கொள்ள முடியாமல் கேட்டார் தந்தை.
“நீங்களும் அம்மாவும் வேறயாப்பா. உங்களுக்கு இடையில நான் என்னவா இருக்கேன்”
“என்ன தன்வி? என்ன பேசுற நீ? நானும் உன் அம்மாவும் வேற. நீங்க வேற. அவன் உனக்கு பண்ணது மறந்து போச்சா?”
“நீங்க அவருக்கு பண்ணதும் நான் மறக்கலைப்பா”
“உனக்காக தானேடா செஞ்சேன்”
“உண்மைப்பா. உங்களுக்கும் அவருக்கும் இடையில நான் மட்டும் தான். எனக்காக தான் அவர்மேல கோவம். அதே எனக்காக அந்த கோவத்தை விட்டுடவும் செய்ங்கப்பா. ப்ளீஸ்” என்று கேட்டாள் மகள்.
“தன்வி. எனக்கு, நான்” மனிதர் திணற,
“ப்பா. நீங்க அவரை பேசுறதும், அவர் உங்களை பேசுறதும் என்னை ரொம்ப பாதிக்குது. யாருக்கு நான் சப்போர்ட் பண்ணாலும், யார் மேல நான் கோவப்பட்டாலும் அது தப்பாகிடும்ப்பா”
“அவரும் எனக்காக தான் தண்டனையை ஏத்துக்கிட்டார். நீங்களும் எனக்காக தான் அந்த தண்டனையை அவருக்கு கொடுத்தீங்க. வேணும்ன்னா இரண்டு பேரும் சேர்ந்து என்மேல கோவபட்டுக்கோங்க”
“இன்னும் சொல்ல போனா நீங்க என்மேல தான் கோவப்படணும். நான்தான் அவருக்கு ஓகே சொன்னேன். அதனால தானே அவர் இப்போ உங்க மருமகன்”
“தன்வி என்ன பேசுற நீ? ஏதேதோ”
“ப்பா. நான் சரியா தான் பேசுறேன். உங்களுக்கு அவரை பிடிக்காது, உங்களுக்குள்ள இவ்வளவு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் நான் அவருக்கு சம்மதம் சொல்லியிருக்க கூடாது”
சதாசிவத்திற்கு ஏனோ மகளுக்கு பதில் சொல்ல வார்த்தைகள் சிக்கவில்லை. அவரின் நியாயம் எல்லாம் நினைவிற்கே வரவில்லை.
“நாம வைச்ச ரிசப்ஷன்ப்பா. அவருக்காக தான் அந்த பங்க்ஷன். அதுல அவரையே இன்சல்ட் பண்ணலாமா?” தன்வி அவளின் ஆறாத ஆதங்கத்தை கேட்டாள்.
“இல்லைடா பணம் கேட்டாங்கன்னு நினைச்சு”
“ஏன்ப்பா எனக்கு கொடுக்க மாட்டிங்களா?”
“உனக்கு கொடுக்காம வேற யாருக்கு இந்த பணம் எல்லாம்” தந்தை உடனே பதறி போனார்.
“நேத்து இதையே நான் கேட்டதுக்கு இல்லைன்னு சொன்ன?” என்று ராஜேந்திரன் இடையில் நுழைந்தார்.
“ண்ணா. அது வேற. என் பொண்ணுக்கு நான் கொடுக்க மாட்டேனா” சதாசிவம் உணர்ச்சிவசபட்டார்.
“பணத்தை விடுங்கப்பா. அவர் உங்களை மரியாதை இல்லாம பேசிட்டார். எனக்கு மனசே ஆறலை. என்னால அவர்கிட்ட போய் ஏன்னு கேட்க முடியலை. ஆனா கோவம் மட்டும் இருக்கு. என்ன பண்ணி நான் அதை ஆத்திக்கிறது சொல்லுங்க”
“தன்வி நீ அவர்கிட்ட கேட்கவும் முடியாது. ஆரம்பிச்சது நாம தான்” என்றார் சுதா.
“ஆமா தன்வி. நீ தேசிகன்கிட்ட ஏதும் கேட்டுட்டு இருக்காத. இனி உன் அப்பா மருமகன்கிட்ட இப்படி பேச மாட்டான், என்ன சதாசிவம் சரி தானே?” என்று தம்பியிடம் உத்திரவாதம் கேட்டார் அண்ணன்.
சதாசிவத்தால் உடனே சரி என்று சொல்ல முடியவில்லை. முதல்லே தேசிகன் மீது தீரா கோவம். இப்போது மகள் வேறு அவனுக்காக நிற்க, தந்தைக்கு அதை எப்படி ஜீரணிக்க இயலும்?
“என்னடா சொல்லு” என்று ராஜேந்திரன் அதட்ட,
“ண்ணா. இப்போ நான் சொன்னாலும் அது வெறும் வார்த்தைக்கு மட்டும் தான் இருக்கும். இனி அவர்கிட்ட எட்ட நிக்க முயற்சி பண்றேன்” என்றார் சதாசிவம் தன்னை மறைக்காமல்.