தேசிகன், “என்ன இது?” என்று மனைவியிடம் கேட்டான். அவனிடம் சலிப்பே.

சொல்ல போனால் தன்வி தொழில் பற்றி யோசிக்கவே இல்லை. எப்படியும் ராஜேந்திரன் யோசித்திருப்பார் என்று பெண்ணுக்கு தெரியும். இடையில் தந்தை நுழைவார் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளுக்கே என்ன பேச என்று தெரியாது போது, தேசிகனுக்கு என்ன சொல்வாள்?

“சம்மந்தி. இதை உங்க மகளும், மருமகனும் யோசிச்சுட்டு சொல்லட்டும். நேரம் கொடுப்போம்” என்று பெரியவர் அப்போதைக்கு முடிக்க பார்த்தார்.

“யோசிக்க எல்லாம் நேரம் இல்லை. அந்த ப்ரொஜெக்ட் முடியற வரைக்கும் தன்வி அங்க கண்டிப்பா இருக்கணும்”

“புது பொண்ணும், புது மாப்பிள்ளையும் ஆளுக்கொரு இடத்துல இருக்க, எதுக்கு கல்யாணம் பண்ணனும்?” அத்தை கடுப்பாகிவிட்டார்.

“நீங்க தான் எதையும் பார்க்காம இவ்வளவு அவசரமா முகூர்த்தம் வைச்சீங்க. அதோட நான் ஒன்னும் பிரிஞ்சிருக்க எல்லாம் சொல்லலை. என் மகளோட ப்ரொஜெக்ட் முடியற வரைக்கும் உங்க மருமகனும், அங்க இருக்கட்டும். ஏன் என் மகளுக்காக அவர் இதை செய்ய கூட மாட்டாரா என்ன?” என்று கேட்டார் மாமனார்.

“உங்க மகளுக்காக எல்லாம் செய்ய முடியாது. என் பொண்டாட்டிக்காக நான் யோசிக்கிறேன். இப்போ சாப்பிடலாம்” என்று தேசிகன் எழுந்துவிட, எல்லாம் விட்டால் போதும் சாமி என்று உணவுண்ண ஓடிவிட்டனர்.

“ண்ணா. வாழ்த்துக்கள்” என்று இளைஞர்கள் தேசிகனுக்கு போட்டி போட்டு கொண்டு கை கொடுத்தனர்.

“என்னடா. காலையில கூட இந்தளவு விஷ் பண்ணல” என்று தேசிகன் சந்தேகமாக கேட்க.

“இல்லை. இருக்கிற நம்ம சொந்தம் எல்லாத்தையும் உங்க மாமனார் தூக்கி சாப்பிட்டுடுவார் போல. அதுக்கு தான் இந்த வாழ்த்து” என்று அவர்கள் கத்திவிட்டு ஓடிவிட,

“டேய் நில்லுங்கடா” என்ற தேசிகன் சிரித்துவிட்டான்.

“என்ன?” என்று அவன் மலர்ந்த புன்னகையில் தன்வி கேட்க,

“நைட் சொல்றேன்” என்று குறும்பாக இமை சிமிட்டி, உணவுண்ண ஆரம்பித்தான்.

தன்விக்கும் அந்த இரவு என்பது கொஞ்சம் உதைப்பு தான். ம்ம். பார்த்துக்கலாம். பெண் முதல் இரவுக்கு தயாரானாள்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். பாட்டிக்கு மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியது. நடுங்கும் கரங்களுடன் பேரன், பேத்தியை உச்சி முகர்ந்தார் பாட்டி.

சதாசிவத்திடம் வந்த போது தேசிகனுக்கு தன் போல் சிரிப்பு. மாமனாருக்கு அவன் புன்னகையில் கண்கள் சுருங்கியது. “ஆசீர்வாதம் பண்ணுடா” என்று ராஜேந்திரன் அதட்ட,

சதாசிவம் மகளுக்காக வேண்டி நல்ல முறையில் ஆசீர்வாதம் செய்தார். சுதா மகளை அணைத்து கொள்ள, தேசிகன் மாமனாரை அணைப்பது போல் இரு கைகளையும் நீட்டி கொண்டு சென்றான்.

“என்.. என்ன?” என்று சதாசிவம் அரண்டு போய் பின் அடித்து எடுத்து வைக்க,

“அவங்களை மாதிரி” என்றான் மருமகன் கண் காட்டி.

“இல். இல்லை, வேண்டாம். நல்லா இருங்க” என்று கை கூப்பிவிட்டார் மனிதர்.

எல்லோரும் மௌனமாக புன்னகைக்க, தேசிகன் தன்னை முறைத்த மனைவிக்கு கண்ணடித்தான்.

ஸ்ருதி தங்கையை அணைத்து கொள்ள, மனோகர் மிகவும் சம்பிரதாயமாக தேசிகனை வாழ்த்தினான். தேசிகனை கைது செய்தது அவனை அந்த நேரம் திணற வைத்தது.

“அட வாங்கண்ணா” என்று தேசிகன் தானே மனோகரை அணைத்து கொள்ள, மனோகரும் பாரம் குறைந்தவனாக தேசிகனை அணைத்து கொண்டான்.

“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்?” என்று மனோகர் சொல்ல.

“மரியாதை எல்லாம் வேண்டாம்ண்ணா. கேளுங்க” என்றான் தேசிகன்.

“அது. இப்போ வேண்டாம்” என்று தயங்க,

தன்வி அங்கு பேசி கொண்டிருக்க, “நீங்க கேளுங்க” என்றான் தேசிகன்.

மனோகர் அப்போதும் யோசிக்க, “வாங்க நாம ரூமுக்கு போயிட்டே பேசலாம்” என்று மனோகருடன் அறைக்கு நடந்தான்.

“தேசிகன் கிளம்பிட்டான்” என்று தன்வியை அனுப்பி வைத்தனர்.

மனோகர் கேட்ட கேள்வியில் தேசிகன் சாதாரணமாக இருக்க, அவர்களுக்கு பின் வந்த தன்வி தான் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

“வீட்ல இதை சொல்லிடுறது பெட்டர். எப்படியும் இந்த விஷயம் மாமனார் குடும்பத்தை உறுத்திக்கிட்டே தான் இருக்கும்” என்று மனோகர் சொல்ல,

“சொல்லணுமா என்ன?” என்று தேசிகன் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

“என்னை கேட்டா நிச்சயம் சொல்லணும் தான் சொல்வேன். ஏற்கனவே உங்க மேல எல்லாம் கோவத்துல தான் இருக்காங்க”

“அவங்க எப்போ என்மேல கோவம் இல்லாமல் இருந்தாங்க”

“இருந்தாலும் இது வேற”

“சரி நான் பார்க்கிறேன்” என்று தேசிகன் முடித்துவிட, தன்வி தெளிந்து அவர்கள் முன் வந்தாள்.

மனோகர் தலையசைப்புடன் விடைபெற்று கொள்ள, தம்பதிகள் அறைக்குள் சென்றனர்.

“ஸப்பா. இதுக்கு எவ்வளவு போராட்டம்” தன்வி தன் அறைக்குள் நிற்க தேசிகன் சொன்னான்.

தன்வி அவனை கூர்மையாக பார்த்து நின்றிருக்க, “மேடம்க்கு இது நம்மளோட பர்ஸ்ட் நைட் ரூம்ங்கிறது ஞாபகம் இருக்கா?” என்று கேட்டான் தேசிகன்.

“ஏன் உங்க காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கணுமா?” தன்வி பட்டென கேட்க,

“அது அநாவசியம். ஆனா வெட்கபடுறது அவசியம்” என்றான் தேசிகன்.

“அந்த ஸீன் எல்லாம் இப்போ இல்லை. வெளியே என்ன பேசுனீங்க?”

“கஷ்டம். எதை கேட்கிற? ஓஹ் சாப்பிடும் போது சிரிச்சதா? உன் அருமை அப்பா என் சொந்தங்களை எல்லாம் சாப்பிட்டுடுவார்ன்னு சொன்னாங்க. உண்மை தானேன்னு சிரிச்சேன்” என்றான் கூலாக.

“அதெப்படி உண்மையாகும்? உங்க சொந்தங்க மாதிரி எல்லாம் என் அப்பா இல்லை” பெண் சிலிர்த்து கொள்ள.

“அதுக்கு மேல சொல்றியா? கரெக்ட் தான்” என்றான் கணவன் கிண்டலாக.

தன்வி கோபம் அதிகமாக, “பின்ன என்னடி? கல்யாணம் ஆன முதல் நாளே நம்மளை பிரிக்கிறது போலே பேசுறார். அதுவும் இல்லாம நமக்கு பர்ஸ்ட் நைட் வேற. அதுக்கான மூட் டெவெலப் பண்ண விடுறாரா? எப்போ பாரு எதாவது பஞ்சாயத்தை தூக்கிட்டு வந்துடுறார்”

“அவர் பொண்ணுக்கு அவர் பேசாம வேற யார் பேசுவா? அதென்ன பர்ஸ்ட் நைட் மூட்? நான் சம்மதம் சொன்னேனா என்ன?”

“ஓஹ் கல்யாணத்துக்கு பேசும் போதே பர்ஸ்ட் நைட்டுக்கும் சம்மதம் கேட்டுக்கணுமா என்ன? சரிதான். இப்போ இதெல்லாம் தானே ட்ரெண்ட். கல்யாணம் ஒரு நாள், பர்ஸ்ட் நைட் வேற நாள்ன்னு”

“ச்சு. என்ன பேச்சு இது?” தன்வி முகம் சுளித்து கொண்டவள், “நான் கேட்கிறது வேற” என்றாள்.

“நீ முதல்ல இப்படி என் பக்கத்தில உட்கார்ந்து பேசு. ஏதோ டீச்சர் மாதிரி கையை கட்டிக்கிட்டு நின்னு மிரட்டுற” என்றான் தேசிகன்.

“பேச்சை மாத்தாதீங்க”

“தன்வி. என்ன கேட்கணுமோ நேரா கேளு”

“என் அப்பாவை கடத்தினது நீங்க இல்லையா?”

“இல்லை”

“அதை சொல்லாம கல்யாணம் வரை கொண்டு வந்துட்டீங்க. எங்களை ஏமாத்தி இருக்கீங்க நீங்க?” தன்வி குரல் உயர்ந்துவிட்டது.

“நீ எங்களை ஏமாத்தினது விட ஒன்னுமில்லை”

“அது எதுக்கு இப்போ? ஏன் சொல்லாம கல்யாணம் வரை போனீங்க?”

“என் அம்மா உன்கிட்ட கேட்டாங்க தானே, உன் அப்பா கிடைச்சதுக்கு அப்புறமும் என்கூட வாழ உனக்கு சம்மதமான்னு?”

“நான் சம்மதம் சொன்னேன் தான். ஆனா என்கிட்ட நீங்க சொல்லியிருக்கணும்”

“அது உங்க தப்பு. யார் கடத்தினாங்கன்னு பார்க்காம தானே வந்து வண்டியில ஏறினீங்க, சரின்னு மொத்தமா முடிச்சுட்டேன்”

“உங்ககிட்ட நான் இதை எதிர்பார்க்கலை”

“நான் கூடத்தான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. பெரிய தொழில் பண்றீங்க, உங்க பெரியப்பா MP, உன் மாமா SP. ஆனா இந்தளவு வீக்கா இருக்கீங்க” என்று அவ்வளவு நக்கல்.

“எங்க தப்பு தான். உங்களை அப்பா செய்ய நினைச்சதை வைச்சு தப்பா கெஸ் பண்ணிட்டோம். ஆனா நீங்க சொல்ல வேண்டியது தானே?”

“சொன்னேன். நல்லா யோசிச்சு பாரு”

“இல்லை. தெளிவா சொல்லலை”

“எனக்கு அப்போ இருந்த கோவத்துல அவரை தூக்க ஆள் அனுப்பிட்டேன் தான். அப்புறம் உன் அப்பா அளவுக்கு நான் இறங்கணுமான்னு வேணாம் சொல்லிட்டேன். அதுக்குள்ள அங்க சீனே மாறிடுச்சு. யாரோ உன் அப்பாவை கடத்திட்டு போயிட்டாங்க. யாருன்னு விசாரிக்க சொன்னேன்”

“யாருன்னு சொல்லுங்க”

“அதையாவது நீங்களா கண்டுபிடிங்க. எல்லாத்தையும் நானே செய்யணுமா என்ன? உன் அப்பாவை காப்பாத்தி கூட்டிட்டு வந்ததே பெருசு”

“கண்டுபிடிச்சுகிறேன். ரொம்ப பேச வேண்டாம்”

“சரி பேசலை. ஆனா உனக்குள்ள அப்படியே மிஸ்டர் சதாசிவத்தோட ரத்தம் தான்” என்று மிகவும் உறுதியாக சொன்னான் தேசிகன்.

“ஏன் அப்படி சொல்றீங்க?” தன்விக்கு வில்லங்கமாக தான் சொல்வான் என்று நன்றாகவே தெரியும்.

“பின்ன அவரை காப்பாத்தினத்துக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னியா நீ?” என்று தேசிகன் கேட்க,

தன்வி உணர்ந்து சொல்ல வாய் திறக்கும் போதே, “ம்ஹூம், அப்படி இல்லை” என்று நிறுத்தினான்.

“இப்போ நாம புருஷன், பொண்டாட்டி மேடம். சோ கட்டிப்பிடிச்சு தான் நன்றி எல்லாம் சொல்லணும்” என்று மனைவியை நெருங்கி நின்றான்.

“அப்படி எல்லாம் முடியாது” தன்வி உடனே மறுக்க,

“ஏன் முடியாது?” தேசிகன் தீவிரமாக கேட்டான்.

“உடனே நீங்க சீரியஸ் ஆக கூடாது. பொறுமையா இருங்க”

“இருக்கேன். நீ சொல்லு” அதிலே நின்றான் கணவன்.

“ஒரு கட்டி பிடிக்கிறதுல போய் என்ன இருக்கு?”

“கட்டிபிடிச்சா தெரியும்”

“இல்லை வேணாம்” தன்விக்கு அவன் எப்படி கட்டிபிடிப்பான என்று தெரியுமே! பாட்டிக்கு உடல் நிலை சரியில்லாத நேரம் கட்டிபிடித்தானே நல்லவன்.

“இங்க பாருங்க. நாம இதை எல்லாம் அப்புறம் பார்ப்போம். முதல்ல நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிடுறேன். இன்னொரு நாள் நீங்க கேட்கிற மாதிரி சொல்லுறேன்” என்று நல்லவிதமாக சொல்ல,

“நீ முடியாது சொல்ல, சொல்ல எனக்கு முடிஞ்சே ஆகணும்ன்னு தோணுது. என்ன பண்ணட்டும்?” என்று அவளிடமே வில்லனாக கேட்டான்.

“ஒன்னும் பண்ண வேணாம். என் அப்பாவை காப்பாத்தினத்துக்கு தேங்”

“ஆஹ்” தன்வி கணவன் நெஞ்சில் மோதி மெலிதாக அலறினாள்.

தேசிகன் அவள் இடை வளைத்து, இழுத்து தனக்குள் அடக்கியிருந்தான். முழுதான அணைப்பு. ‘பாரு இதுக்கு தான் வேணாம் சொன்னேன்!’ தன்வி விலக முயல, அணைப்பின் இறுக்கம் இன்னும் கூடிப்போனது.

“மூச்சு முட்டுது”

“நான் வேணா மூச்சு கொடுக்கிறேன்”

“இதென்ன முரட்டுதனம்?” அவனை அண்ணாந்து பார்த்து கேட்டாள்.

“நீ தான் பண்ண வைக்கிற? பாரு உதட்டை சுளிக்கிற, எனக்கு பிடிக்கலை. கடிச்சு வைச்சா என்னை கேட்காத”

“போயா” தன்வி முகத்தை அவன் நெஞ்சுக்குள் மறைத்து கொண்டாள்.

தேசிகன் புன்னகையை தான் உதட்டுக்குள் அடக்கி, மனைவியை தன் மார்புக்குள் இறுக்கி கொண்டான்.