Advertisement

மயிலிறகு பெட்டகம் 9

படையல் முடிந்த மறுநாள் அனுவை அழைத்த முரளி ஊர் எல்லையில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு வருடாவருடம் ஒரு குறிப்பிட்ட தொகையை தான் கொடுக்கும் வழக்கத்தையும் இவ்வருடம் தன் மருமகளின்  கையால் அதை கொடுக்க விரும்புவதாகவும் சொல்லி காசோலையை அவள் கையில் கொடுத்து மாலை விளக்குபூஜைக்கு செல்லும்போது கோவில் தர்மகர்த்தாவிடம் சேர்க்குமாறு சொல்ல அனுவும் சரியென்று வாங்கி கொண்டாள்.

மாலை கோயிலுக்கு கரும்பச்சை பட்டும் முத்துகளில் அணிகலன்களுமாக அனுரதி ரதியாகவே திகழ்ந்தாள். பூர்வீக வீட்டில் சின்னஞ்சிறு மராமத்து வேலைகளை வந்தபொழுதே பார்த்து விடலாம் என்று முடிவெடுத்த முரளியுடன் சேர்ந்து மற்றவர்களும் அதற்கான வேலையில் ஈடுபட வீட்டுப்பெண்கள் மட்டும் கோவிலுக்குச் செல்வதென ஆனது.

முதல்முறையாக பூஜையில் கலந்துகொள்ளும் பூரணியும் அனுவும் எதற்காக ,எப்படி என்ற கேள்வியை வரிசையாய் அடுக்க,

“ சர்வ ஐஸ்வர்யமும் பெருக, வீட்டில் உள்ள எல்லோரும் நலனோட இருக்கத்தான் வீட்டில உள்ள பெண்கள் விளக்கு பூஜை செய்வாங்க” என்றதோடு இல்லாமல்,

“ கோலம்போட்ட மணப்பலகையில் நுனி வாழை இலையை வைக்கனும், வாழையடி வாழையா குடும்பமும் தழைக்கிறதுக்காக !  அதுமேல பச்சரிசி பரப்பி கிழக்கு பார்த்து குத்துவிளக்கு வைச்சு உச்சியில் ஆரம்பிச்சு விளக்கு அடிவரை எட்டுப்பொட்டு வைச்சிட்டு விளக்கோட ஐந்து முகத்தையும் ஏத்தனும். இடையில தீர்ந்து போகாத மாதிரி நெய் ஊத்தி இன்னோரு துணைவிளக்கா காமாட்சி விளக்கும் ஏத்தி வச்சிட்டு நம்ம வடக்குப் பார்த்து உக்காரனும்..’ என கமலா படிப்படியாக தெளிவான விளக்கம் கொடுத்து அவர்கள் செய்யசெய்யவே தன் விளக்கையும் ஏற்றி முடித்திருந்தார்.

பூஜை முடிந்ததும் தன்னிடம் இருந்த காசோலையை கொடுக்க தர்மகர்த்தாவை அனு தேட, ஏதோ வேலையாக வெளியே சென்று இருப்பவர் வர சிறிது நேரம் ஆகும்  என்றார்கள்.

அதுவரை மற்றவர்களையும் கோவிலில் அமர்த்தி வைக்க அனுவிற்கு விருப்பமில்லை, இவர்கள் போனபின் தான் இரவு உணவு சமைக்க வேறு வேண்டும் என்பதால் தான் இருந்து கொடுத்து விட்டு வருவதாகவும் , தான் சொல்லியப்பின் யாரையாவது கூட்டிச்செல்ல அனுப்பும் படியும் அனு சொல்ல,பூஜை முடிந்ததால் அனைவரும் கிளம்பக்கூடும் என்பதால் கமலாவும் அகிலாவுக்கு அவளை தனியே விட்டுச் செல்ல யோசிக்க, தன் பதினான்கு வயது பெண்னோடு கோவில் வாசலில் சிறிதாய் கடைப்போட்டிருந்த பூக்கார அம்மா கோவில் நடைசாத்தும் வரை தங்கள் குடும்பம் இங்கே தான் இருக்கும் என்றாள். அவள் கணவன்  கோவிலின் பின்னாடி முள் ஒடித்து ஒதுக்கி கொண்டிருக்கிறான் என்றவள் பூசாரியும் கோவிலில் இருப்பார் எனவும் ,

அக்குட்டிப்பெண்ணின் அருகில் அமர்ந்த அனு, “ அப்புறம் என்ன அத்தை, அதான் இவங்க எல்லாம் இருக்காங்களே! நான் அவங்க வந்ததும் இதை கொடுத்துட்டு வந்துடுறேன். நீங்க போய்ட்டு ஒரு அரைமணி நேரம் கழிச்சு யாரையாவது அனுப்புங்க போதும், மாமாவுக்கு நேரத்துக்கு மாத்திரை கொடுக்கணும் அத்தை கிளம்புங்க,போய் சமைங்க, இப்போ நீங்க போகவே முக்கால் மணி நேரம் மேல ஆகிடும், சீக்கிரம் கிளம்புங்க..” என தன் குடும்பத்தை கிளப்பியவள், அக்குட்டிப்பெண்ணோடு கதையளக்க ஆரம்பித்து விட்டாள்.

மனமே இல்லாமல் கிளம்பிச்சென்ற கமலா போனதும் முதல் வேலையாக விக்ரமைத் தேட அவன் மரப்பொருட்கள் பாலிஷ் செய்து தருபவர்களை பார்க்க போயிருக்கிறான் என்றார் முரளி.

உடனே செல்லில் அவனை பிடித்த கமலா வர எவ்வளவு நேரம் ஆகும் எனக் கேட்க,

“ சாமான்களை கொடுத்திட்டேன் மா… பூஜையறை பொருட்களை மட்டும் இப்பவே பாலிஷ் போட்டு தந்திடுறேன் சொன்னாங்க இருந்து வாங்கிட்டு வந்துடுறேன்…,என்ன விஷயம் மா.ஏதாவது வேணுமா…? “ எனகேட்க,

சுருக்கமாக விவரம் சொன்னவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போக சொல்ல, சரியென்று விட்டு வைத்து விட்டான்.

அடுத்து அனுவிற்கும் அழைத்து விஷயத்தை சொன்னவர்,

“ சீக்கிரம் தான்டா வரசொல்லி இருக்கேன், அதுவரை இருந்துப்பியா… இல்லை வேற யாரையும் அனுப்பட்டுமா…” எனக் கேட்க,

இல்லை அத்தை பொறுமையாவே வரட்டும், இன்னும் தர்மக்கர்த்தா வரவேயில்லை, நேரம் ஆகும் போல, இங்கே எனக்கொன்னும் பிரச்சினை இல்லை, பூக்கார அம்மா இருக்காங்க, நீங்க என்னைய பத்தியே நினைச்சிட்டு இருக்காம போய் சமைங்க அத்தை…” என்றபடியே அவள் போனை வைக்க கொஞ்சம் தெளிந்தவராக அவர் அகல்யாவிடமும் கூற, அனுவைப் பற்றி தெரிந்த அகல்யாவும்,

“ விடுங்க அண்ணி, அவ பார்த்து இருந்துப்பா… அவ்வளவு சீக்கிரம் பயப்புட மாட்டா.. “ என்றுவிட அதன்பின் அனு சொன்னது போல உண்மையாகவே வேலை மிகுதியில் மறந்துதான் போனார்கள் பாவம்!

ஒன்பது மணிக்கு மேல் வீட்டிற்குள் நுழைந்தான் விக்ரம். முகப்பில் யாரையும் காணவில்லை. கொள்ளைப்புறமாக வெளியே இருந்த சமையல்கட்டில் பேச்சு சத்தம் கேட்டது. களைப்பாய் உணர்ந்தவன் தன்னறைக்குள் சென்று முகம்கழுவிவிட்டு கட்டிலில் சாய்ந்தான். அப்படியே கண்ணயர்ந்து விட்டவனை எங்கோ தூரத்தில் கிணற்றிருக்குள் இருந்து  ஒலிப்பது போல் கேட்ட ஒலி உசுப்ப, கண்ணைத் திறவாமலேயே தேடி எடுத்தவன் அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தான்.

“ விக்ரம், எங்கப்பா இருக்கீங்க…மணியாச்சே…!” என்று கமலா கேட்டது முதலில் ஒன்றுமே விளங்கவில்லை விக்ரமிற்கு!

“என்னம்மா….” என்றான் தூக்கம் கலையாத குரலில்,

“ என்னடா… எங்க இருக்கீங்க… சாப்பிட வரலையே… அனு என்ன பண்றா… எப்போ வருவீங்க விக்ரம்…? “ என்று கமலா வரிசையாய் கேள்வியை அடுக்க, விஷயம் மெல்ல மெல்ல புரிய சட்டென்று எழுந்து அமர்ந்தவன் மணியைப் பார்த்தான் பத்தைக் கடந்திருந்தது!

இதயத் துடிப்பு ராக்கெட் வேகத்தில் பறக்க,

“ மணியாச்சுமா… நீ..நீங்க தூங்குங்க…நாங்க பார்த்துகிறோம் “ என்று எதையோ உளறிவிட்டு கார்சாவியை எடுத்துக் கொண்டு மின்னலென விரைந்தவன் செல்லும் வழியெல்லாம் அனுவின் அலைபேசிக்கு அழைப்பு விடுக்க, அதுவோ ‘ஸ்விட்ச் ஆப்’ என்ற பாட்டை திரும்ப திரும்ப படித்து அவனை மேலும் மிரட்டியது.

தன்னையே நொந்துக் கொண்டான் விக்ரமாதித்தியன். என்ன மடத்தனம் செய்திருக்கிறான். பாலிஷ் செய்யும் இடத்தில் நினைத்த நேரத்தை தாண்டி வேலை இழுக்க, இருந்த கவனத்திலும் களைப்பிலும் தன் அன்னை சொன்ன வேலையை சுத்தமாய் மறந்து விட்டிருந்தான். ஆனாலும் வீட்டிற்க்குப் போனதும் அவளைத் தேடவில்லையே. அவளிருந்திருந்தால் அவன் வந்தவுடன் தண்ணீர் தம்ளரை நீட்டியிருப்பாள். அதுகூட உரைக்கவில்லையே! எதையும் எதிர்பார்க்காதவள் என்பதால் இந்தளவுக்கு அவன் கண்டுகொள்ளாமல் சுற்றம் உணராமல் இருந்ததை அவனாலேயே இப்பொழுது ஜீரணிக்க முடியவில்லை.

அவளுக்கு மட்டும் ஏதாவதென்றால் அவனாலேயே அவனை மன்னிக்க முடியாது. அவளுக்கு ஏதாவதென்றால்…! இந்த எண்ணம் உதித்ததும் ஸ்டியரிங்கை பிடித்திருந்த கைகள் நடுங்குவதைப் பார்த்தவன் சடாரென்று வண்டியை நிறுத்தினான்.

ஊர் எல்லையில் இருக்கும் கோவிலுக்கு செல்லும் வழி கரடும் முரடுமாய் கல்லும் கருவேலமுள் என பார்த்து தான் வண்டியை ஓட்ட வேண்டும். இதில் அமாவாசை இருட்டு வேறு! இப்படி தடுமாறினால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை உணர்ந்தவன் போல நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் வேறு எதிலும் கவனத்தை திருப்பாமல் வண்டியை ஓட்டலானான்.  கோவில் கண்ணில் பட்டதும் லேசாய் நிம்மதி அடைந்தவனைப் பார்த்து அதெப்படி! என்று விதி சிரித்தது போலும்!

கோவிலின் அருகேயிருந்த ஆலமர திண்டில் முரட்டுத்தனமாக நான்கைந்து ஆட்கள் ஏதோ பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும்…! சுற்றி சிதறி கிடந்த மதுப்பாட்டில்களோடு…!

Advertisement