”என்னாச்சு? என்னைத்தான் உனக்கு நல்லா தெரியுமே. அப்புறம் எதுக்கு என்னை யாரோ போல பார்க்குற?”
”இல்லை, சும்மா மேடம்! அது எனக்கு ஒண்ணுமே புரியல. இன்னும் சில விஷயங்களில் எனக்கு clarity வேணும்” என்றவள் தயங்கிக்கொண்டே, ”சத்தியமா எனக்கு ஒண்ணுமே புரியல. எதுக்கு நீங்க என்னை செலக்ட் பண்ணீங்க? உங்களோட மருமகளாக? நான் உங்களை பார்த்துக்கிட்டதால எப்டி உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க முடியும்? உங்களை நான் நல்லா கவனிச்சு பாராட்டு கிடைச்சா, நான் படிச்ச படிப்புக்கு உண்டான பிரயோஜனம். ஆனால் அந்த ஒரு காரணம் மட்டுமே போதுமா? உங்க பையனுக்கு என்னை கட்டி வைக்க?” என்றாள் செம்பருத்தி.
மணியம்மை சிரித்துக்கொண்டே, ”இதை இத்தனை நாள் கழிச்சு இன்னைக்கு கேட்கிற? அதான் மேடம் என்கிட்ட சரியா பேசலையா? இந்த விஷயத்தைப் பத்தி தீவிரமா யோசிச்சீங்களா?”
”கண்டிப்பா மேடம்!”
”இப்போ நான் உங்களுக்கு மேடம் இல்ல. உன்னோட மாமியார். அது நியாபகம் இருக்கு தானே?”
ஆம், இப்பொழுது அவள் மணியம்மையின் மருமகள். குருசேத்ரன் கட்டிய தாலி அவளது கழுத்தில்.
”ஹாங்… அத்… அத்தை” என தயங்கிக்கொண்டே கூறினாள்.
”மேடம்க்கு விளக்கம் இப்போவே கொடுக்கணுமா? இல்ல வீட்டுக்கு போய் கொடுக்கலாமா? உங்களுக்காக எல்லாருமே வெயிட்டிங்” என்றார் மணியம்மை.
செம்பருத்தி சட்டென திரும்பிப் பார்க்க, அங்கே அவர்களுக்காக அனைவரும் காத்திருந்தார்கள்.
”போலாம் அத்தை” என சொன்னாள் செம்பருத்தி.
தர்மன் பிரமிப்புடன் குருசேத்ரனிடம் பேசிக்கொண்டிருந்தான். அனைவரும் நேராக ஹோட்டல் சென்றார்கள். உணவு முடித்து, அப்படியே செம்பருத்தியின் வீட்டுக்கு முதலில் சென்றார்கள். பாரி தன் மகளை சந்தோஷமாகப் பார்த்தார். செல்விக்கு பெருமை தாங்கவில்லை. தானாக பெண் கேட்டு தன் மகள் தான் வேண்டும் என சும்மா கேட்கிறார்கள் என நினைத்தார். ஆனால் கண் முன் செம்பருத்தி அவளின் கணவன் குருசேத்ரனின் அருகில் நின்று கொண்டிருக்கிறாள்.
ஸ்ரீராம் வீட்டுக்கு வெளியே காரின் பக்கம் நின்றிருக்க, உள்ளே குருசேத்ரன், செம்பருத்தி இருவரும் ஜோடியாக சாமிகும்பிட்டார்கள்.
குருசேத்ரன் பாரியின் பக்கம் சென்று, ”MNC ப்ராஜெக்ட் ஒண்ணு போயிட்டு இருக்கு. அந்த வேலையில் பிஸியா இருக்கேன். அடுத்த மாசம் ஒர்க் ஸ்டார்ட் ஆகிடும். அதை பார்த்துக்கிட்டு ரிஷப்சன் வேலையையும் செய்ய முடியாது. அடுத்த மாசம் கண்டிப்பா ரிஷப்சன் வச்சுக்கலாம். நீங்க எதுவும் நினைக்க வேணாம்” என்றான்.
”அய்யோ மாப்ளை! இல்லைங்க! அதெல்லாம் நாங்க எதுவும் நினைக்கல! எங்க பொண்ணை நீங்க நல்லா பார்த்துப்பீங்க அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. எனக்கு உங்க அப்பாவையும் தெரியும். அவர்கிட்ட நான் வேலை செஞ்சிருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன்” என்றார் பாரி.
”ரொம்ப சந்தோஷம்” என வணக்கம் வைத்தான் குரு.
செல்வி புன்னகையுடன், ”மாப்ளை, இப்படி வாங்களேன். டேய் தர்மா, நீயும் வா” என அழைத்தார்.
”மா” என அவன் அருகில் செல்ல, ”இந்தா மோதிரம். இதை மாப்ளை கைக்கு போட்டு விடு” என அரை பவுன் தங்க மோதிரத்தை கொடுத்தார்.
துளசி இயலாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
”என்னாச்சு மேடம்க்கு? முகம் எதுக்கு அப்படி இருக்கு?” என கர்ணன் கேட்க…
”நீங்களும் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்ல” என்றாள் துளசி.
”அந்த மோதிரத்தை வாங்கி கொடுத்ததே நான் தாண்டி!” என்றான் கர்ணன்.
இதை கேட்டதும் துளசி முகம் புரியாமல் சுருங்க…
”செம்பருத்தி நம்ம பொண்ணு மாதிரி, அதான்” என்றான்.
இதை கேட்டதும் துளசி முகத்தில் சந்தோஷரேகை.
”எதுக்கு இதெல்லாம்?” என மணியம்மை கேட்டார்.
”இல்ல மா! இது எங்களோட ஆசை! எங்க பொண்ணுக்கு எதுவும் எங்களால செய்ய முடியல…”
”50 கிலோ தங்க பதுமைதான் உங்ககிட்ட இருக்கே! அதை கொடுத்தால் போதும். இல்ல இல்ல, இனி அது எங்க வீட்டுது” என்றார் மணியம்மை.
செம்பருத்தி புரியாமல் பார்க்க, செல்வி மற்றும் பாரி இருவரும் புன்னகை செய்தார்கள்.
ஸ்ரீராம் வெளியில் இருந்து, ”பாஸ், ஃபார்ச்சூன் ப்ராஜெக்ட் சைட்டுக்கு போகணும், நேரமாகுது” என கூறினான்.
”அப்போ நாங்க கிளம்புறோம். நாளைக்கு அங்க வீட்டுக்கு எல்லாரும் வந்துடுங்க” என குருசேத்ரன் கூறிவிட்டு முன்னால் நடந்தான்.
”உங்க மருமகனே சொல்லிட்டான். கண்டிப்பா நாளைக்கு எல்லாரும் வீட்டுக்கு வரணும். விருந்துக்கு” என்றுவிட்டு, துளசியின் குழந்தைகள் வருடி விட்டு, ”போயிட்டு வரேன் தம்பி” என கர்ணனிடம் கூறிய மணியம்மை, அனைவரிடமும் சொல்லிவிட்டு முன்னால் சென்றார்.
சம்பூர்ணம் தனது அக்காவை பார்த்து கட்டிக்கொண்டு அழுதாள். அங்கே வந்த குருசேத்ரன், சம்பூர்ணத்திடம், ”அந்த புது போன் உனக்கு. அண்ட், உங்க அக்காவோட பழைய போனை அவள்கிட்டயே கொடுத்திடு மா” என்றான்.
”என்ன மாமா சொல்றீங்க?” என சம்பூர்ணம் அதிர்ச்சியுடன் பார்க்க…
”ம்ம், உனக்குத்தான்” என சொன்னவன் செம்பருத்தியை கையுடன் கூட்டி வந்து காரில் ஏற்றினான்.
”அழுது இர்ரிட்டேட் பண்றா! அதான் அவங்க வீட்ல விட போறேன்” என்றான்.
செம்பருத்தி வேகமாக கண்களை துடைத்துக்கொள்ள, மணியம்மை கோபத்துடன், ”என்னடா பேசுற? அவளை சமாதானம் பண்ற போல பேசுடா. அதை விட, கல்யாணம் பண்ணி கொஞ்ச நேரம் கூட ஆகல… இப்போவே கொண்டு போய் விடுறேன்னு சொல்ற?” என்றார்.
குருசேத்ரன் தலையை கோதிக்கொண்டே, ”நம்ம வீட்லதான 4 மாசம் இருந்தாள். அப்புறம் என்ன? இப்போ ஏதோ வைல்ட் ஃபாரஸ்ட்டுக்கு இவளை கூட்டிட்டு போற போல நடந்துகுறா!” என்றான்.
ஸ்ரீராம் சிரிப்பை அடக்கியபடி நேராக அமர்ந்திருந்தான்.
”அய்யோ” என மணியம்மை தலையில் அடித்துக்கொண்டார்.
”இனி அழ மாட்டேன்” என மெல்லிய குரலில் கூறினாள் செம்பருத்தி.
”ம்ம்” என தலையாட்டினாள் செம்பருத்தி. அவளது கண்களுக்கு குருசேத்ரன் மிகவும் பணக்காரனாக தெரிந்தான். அவனது பழக்கவழக்கம் வித்தியாசமாக இருந்தது. எந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் எப்படி ஜடம் போல ஒருவனால் இருக்க முடியும்? என தோன்றியது.
எல்லா பெண்களுக்கும் இருப்பது போல, அவளுக்கும் தனக்கு வரப்போகும் வருங்கால கணவன் மீது சில கனவுகள் இருக்கும். ஆனால், அந்தக் கனவுகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கிறான் குருசேத்ரன்.
இப்படி அவள் நினைவுகளில் லயத்திருக்க, அதற்குள் வீடு வந்திருந்தது. மணியம்மை அவளின் கைகளை கோர்த்துக்கொண்டு, ”கொண்டாட்டமா மேள தாளத்தோட என்னோட மருமகளை அழைக்க நினைச்சேன். ஆனால் அவசரஅவசரமா கல்யாணம் முடிஞ்சிடுச்சு. ஆனாலும் சந்தோஷம்தான். ஆறு மாசத்துக்கு பிறகு கல்யாணம் அப்டின்னா, அது வரை நீ இங்கே வீட்டுக்கு வர முடியாது. அதான் உடனே கல்யாணத்தை வைக்க உங்க வீட்ல சொல்லிட்டேன் மா. நம்ம வரவேற்புல பெருசா பண்ணுவோம்” என்றார் உற்சாகத்துடன்.
வெளியே புன்னகையுடன் சாந்தா நின்றுகொண்டிருந்தார் ஆரத்தி தட்டுடன்.
”அது தான் சாந்தா!” என மணியம்மை உற்சாகத்துடன் கூற…
”நகருங்க” என உள்ளே செல்ல முயன்றான் குரு.
”தம்பி இருங்க. ஆரத்தி எடுத்ததுக்கு பிறகுதான் உள்ளே போகணும்” என இருவரையும் நிற்கவைத்து ஆரத்தி எடுத்தார். சாந்தா நெற்றியில் பொட்டு வைப்பதற்குள் வேகமாக உள்ளே சென்றவன், நேராக அவனது அறைக்கு சென்று விட்டான்.
”காலில் சுடுதண்ணி ஊத்தின மாதிரி எப்டி போறான் பாரு” என மணியம்மை வாய்மொழியாக கூறினார்.
”இல்ல மேடம், நம்ம பாஸ் ட்ரெஸ் மாத்த போயிருக்கார். இன்னைக்கு சைட் விசிட், கூடவே ஃபார்ச்சூன் ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கு. அதுக்கு கட்டாயம் போயே ஆகணும். அதான்” என ஸ்ரீராம் சொல்லிக்கொண்டே வந்தான்.
செம்பருத்தி அவனைப் பார்க்க, மணியம்மை அவளிடம், ”வா மா! விளக்கு ஏத்துடா” என அழைத்துச் சென்றார்.
சாந்தா அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். குத்துவிளக்கை ஏற்றி வைத்தவள், கண்களை மூடி வேண்டினாள். ‘என்ன வேண்டினாள்?’ அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா கண்களை மூடிக்கொண்டு நின்றாள் அவ்வளவே!
”மேடம், இதோ பால் பழம் ரெடி… புது மாப்ளை பொண்ணுக்கு தருவாங்க” என சாந்தா எடுத்து வந்தார்.
”வா வா செம்பருத்தி! இதைக் வாங்கிக்கிட்டு உன்னோட ரூமுக்கு போமா!”
”ஹான் சரிங்க அத்தை” என அவள் கீழே இருக்கும் அறைக்கு செல்ல…
”மேடம், செம்பருத்தியை பாருங்களேன்” என சாந்தா சிரிக்க…
”அட கண்ணு! செம்பருத்தி! எங்கே மா போற?”
”நீங்கதான ரூமுக்கு போய் சாப்பிட சொன்னீங்க?” என செம்பருத்தி கூற…
மணியம்மை சிரித்தபடி, ”நீ தங்கி இருந்தது கெஸ்ட் ரூம். இப்போ உன்னோட ரூம் மேலே இருக்கு. குரு கிளம்பிட்டு இருக்கான். நீ போயிட்டு அவனுக்கும் கொடுத்திட்டு நீயும் சாப்பிட்டு தூங்கு. மதியம் வா!” என்றார்.
”மேலே போகணுமா?” என செம்பருத்தி மீண்டும் கேட்க…
”அவன் உன்னோட ரூமுக்கு வரமாட்டான். நீதான் மேலே போகணும். போமா” என்றார் மணியம்மை.
குரு உடையை மாற்றிக்கொண்டு சட்டை கையில் பட்டன் போட்டுக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தாள் செம்பருத்தி பால் பழ தட்டுடன்…