மணிப்புறாவும் மாடப்புறாவும்- epilogue 

 Epilogue 

 அன்று தீபாவளி. நேரம் அதிகாலை 5:00 ஆகியிருக்க இன்பா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். வெளியே வெடி சத்தம் கேட்டாலும், ஏசி அறையில் கதவுகள் ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் பெரிதாக சத்தத்தின் பாதிப்பில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தான்.

 திடீரென அறைக்குள்ளிருந்து வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு பதறிப் போய் எழுந்தமர்ந்தான் இன்பா.

“ஹாப்பி தீபாவளி” என கோரஸாக, இன்பாவின் மனைவி தர்ஷினியும் அவனது ஆறு வயது மகன் சந்தோஷும் சத்தமாக கூறிக்கொண்டே ஆளுக்கொரு பக்கமாய் அவனை அணைத்துக் கொண்டனர். ‘ரூம்ல வெடி வெடிக்கல , தர்பூசணிதான் மொபைல்ல இருந்து வெடி வெடிக்க விட்டிருக்கா’ என்று புரிந்துகொண்டு, 

“ஹேய் வாலுங்களா… ஹாப்பி தீபாவளி” என்றவன், தன் மகனின் தலையை கோதிவிட்டு, “நீ எப்ப பாரு உன் அம்மா கூட சேர்ந்துக்கிட்டு, என்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்கடா” என்றான்.

“என்ன வம்பு பண்ணினோம்… தீபாவளி விஷ் பண்ணினது வம்பா?” எனக் கேட்டாள் தர்ஷினி.

“இப்படிதான் பயமுறுத்தி எழுப்பி விடுவீங்களா?” 

“நீ எதுக்குப்பா பயந்த? அம்மா எதுக்காவது பயப்படுறாங்களா?” எனக் கேட்டான் வாண்டு. 

“உன் அம்மாதானே…?  அவ மத்தவங்களைதான் பயமுறுத்துவா. அதுவும் என்னை பயமுறுத்தி டென்ஷன் பண்றதுன்னா ரொம்ப இஷ்டம் அவளுக்கு”  என்றான் இன்பா.

“சாமி கும்பிட நேரமாச்சு. சீக்கிரமா வாங்க” என லட்சுமி குரல் கொடுக்க, “சாமி கும்பிட்டாதான் குளிச்சிட்டு புது டிரஸ் போட முடியும்.  பாட்டி குலோப்ஜாமுன் எல்லாம் தரேன்னு சொன்னாங்க. நான் போறேன்” என ஓடினான் சந்தோஷ்.

“நீயும் சீக்கிரம் வா” என கூறிக்கொண்டு தர்ஷினி எழ பார்க்க, அவளை எழ விடாமல் பிடித்துக் கொண்டவன், “என் பொண்ணு வரட்டும்டி. உங்க ரெண்டு பேரையும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வம்பிழுப்போம்” என கூறிக்கொண்டே, ஏழு மாத கருவை சுமந்து கொண்டிருக்கும் தர்ஷினியின் வயிற்றில் கைவைத்து வருடிக் கொடுத்தான்.

 தன் தந்தை சொல்வதை ஆமோதிப்பது போல, உள்ளேயிருந்த சிசுவும் மெல்ல எட்டி உதைத்தது. 

“என் பொண்ணு சரின்னு சொல்லிட்டா” என்றான்.

“ரொம்பதான் ஆசை. இதுவும் பையனா இருந்தா என்ன பண்ணுவ?”

“வயித்துல பொண்ணு இருந்தா அம்மாவோட அழகு கூடிக்கிட்டே போகுமாம். நீயும் அப்படித்தான். பிரக்னெண்ட் ஆனதிலிருந்து நாளுக்கு நாள் ரொம்ப அழகாகிட்டே வர” என்றான். 

“இது யார் சொன்னா?”

“அதுதான் தடவைக்கு தடவை உன் அம்மாவும் என் அம்மாவும் சொல்லி சொல்லி பேத்தி வரப்போறதா சந்தோஷப்பட்டுக்குறாங்களே…”

“பார்ப்போம் பார்ப்போம். அப்படியே பொண்ணு பிறந்தாலும் அவளும் எங்க கூட்டணி தான். எல்லோரும் சேர்ந்து உன்கிட்டதான் வம்பு பண்ணுவோம்” என்றாள்.

“நீ நல்லா பாருடி. என் பொண்ணு எனக்குதான் சப்போர்ட் பண்ணுவா” என இன்பா கூறிக்கொண்டிருக்க, லட்சுமி மீண்டும் சத்தமிட்டார்.

“உன் மாமியாருக்கு பொறுக்காதே. நீ போ. நான் பிரஷ்பண்ணிட்டு வரேன்” என்றான்.

 இன்பா இப்பொழுது பிரபலமான கிரிமினல் லாயராக இருந்தான். அவனிடம் சென்று விட்டால் வழக்கு எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. அதற்காக எல்லா வழக்குகளையும் ஏற்றுக்கொள்ளாமல், நியாயத்தின் பக்கமே நின்றான். இல்லையென்றால் தர்ஷினிக்கு யார் பதில் சொல்வது?

 தர்ஷினி செங்கதிர் பத்திரிக்கையின் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தாள். முழு எழுத்து சுதந்திரம் அவளுக்கு இருந்தது. மன நிறைவுடன் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். எதிர்ப்புகள் வரத்தான் செய்கின்றன. இன்பாவின் துணைகொண்டு தைரியமாக அவற்றையும் எதிர்கொள்கிறாள். அவ்வப்போது பொதுநல வழக்குகள் போட்டு பிரபஞ்சனின் உதவியுடன் வழக்கிலும் வெற்றி பெறுகிறாள். இன்பாவையும் விட்டு வைப்பது இல்லை. இன்னும் நிலுவையில் 6 வழக்குகள் இருக்கின்றன.

 ரவி தன் அண்ணனைப் போலவே சட்டம் பயின்று இன்பாவிடமே ஜூனியர் வக்கீலாக பணிபுரிகிறான்.

 ரம்யாவுக்கும் சுபாஷினிக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். 

 சரவணன் கோயமுத்தூரில் சில வருடங்களும் மதுரையில் சில வருடங்களும் பணியாற்றிவிட்டு சென்ற மாதம்தான் சென்னைக்கு மீண்டும் மாற்றலாகி வந்திருந்தான்.

 சாமி கும்பிட்டு விட்டு சாரங்கபாணி எல்லோர் தலையிலும் எண்ணெய் வைத்து விட்டார். எல்லோரும் குளித்து விட்டு புத்தாடைகள் அணிந்து கொண்டு கோயிலுக்கும் சென்று திரும்பி விட்டனர். 

 தர்ஷினி சந்தோஷுடன் பலகாரங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு ரஹீம் பாய் வீட்டிற்கு சென்றாள். பஷீரின் மகன் ரியாஸ் ஓடிவந்து சந்தோஷை கட்டிக்கொண்டு “ஹாப்பி தீபாவளி” என்றான். இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாக படிக்கும் தோழர்கள். 

 நசீருக்கும் திருமணமாகி அவன் மனைவி 6 மாதங்கள் கருவுற்றிருந்தாள். சிறுது நேரத்தில் தலை தீபாவளி கொண்டாட ரம்யா சுபாஷினி கூட அவர்களது கணவர்களுடன் இங்கு வந்து விட்டனர்.

 சரவணன் அவன் மனைவி சுப்ரியா மற்றும் மகள் ஸ்வாதி ஆகியோருடன் வந்திருந்தான்.

 வீடு கலை கட்டியிருந்தது. ஸ்வாதியும் சந்தோஷ் படிக்கும் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அது என்னவோ சந்தோஷுக்கும் ஸ்வாதிக்கும் ஆவதே இல்லை. எப்பொழுது பார்த்தாலும் இருவருக்குள்ளும் சண்டையே. 

 ரியாஸ் ஸ்வாதிக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூற, சந்தோஷ் அவளைக் கண்டு கொள்ளாமல் நின்றான். ஸ்வாதியும் அவனை கண்டுகொள்ளவில்லை.

 பிள்ளைகள் வெடி வெடிக்க ஆசைப்பட, சாரங்கபாணி ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த பெரிய மூங்கில் குச்சிகளை எடுத்து கொடுத்து வெடிக்கச் சொன்னார். சந்தோஷ், ஸ்வாதி, ரியாஸ்ஆகியோரின் தந்தைகள் அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு ஊசி வெடிகளை வெடிக்க உதவி செய்து கொண்டிருந்தனர்.

 மத்தாப்பு புஸ்வானம் ஆகியவையும் வேண்டும் என பிள்ளைகள் அடம் செய்ய, அவற்றையும் ஏற்றினர். புஸ்வானம் ஒன்று எரிந்து கொண்டிருக்க திடீரென வெடித்து ஸ்வாதியின் பக்கத்தில் வந்து விழுந்தது. ஸ்வாதி பயந்து போய் அழ ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் எல்லோருக்கும் ஒரே பதட்டமாகி விட்டது. நல்லவேளையாக அவளுக்கு எதுவும் ஆகவில்லை. சுப்ரியாதான் மிகவும் பயந்து போயிருந்தாள். 

 சிறிது நேரத்தில் ஸ்வாதி சமாதானமாகி விட பிள்ளைகள் விளையாட ஆரம்பித்தனர். 

 வெளியில் சுப்ரியா அமர்ந்திருக்க, திடீரென இருட்டானது போலிருந்தது. மெல்ல வெளிச்சம் வர, ஏதோ விசேஷம் நடப்பது போல இருந்தது. உற்று கவனித்தாள். திருமண வைபவம் நடந்துகொண்டிருந்தது. மணமேடையில் அழகிய  மணமக்கள் அமர்ந்திருக்க சுப்ரியா முகத்தை கூர்ந்து நோக்கி பார்த்தாள். பெண்ணின் முகம் தன் மகள் ஸ்வாதி போல இருக்க அருகில் இருந்த பையனின் முகம் சந்தோஷ் போல இருந்தது. 

“ஹேய் சுப்பு என்னடி ஆச்சு?” என தர்ஷினி அவளை  உலுக்க அவள் கண்ட காட்சியும் மறைந்து போனது. சுப்ரியா தர்ஷினியிடம் இதை பகிர்ந்து கொள்ள, சிரித்த தர்ஷினி,

“பரவாயில்லையே… ரொம்ப நாளைக்கு அப்புறம் உன்னோட இ எஸ் பி வேலை செஞ்சாலும் நல்லவேளையா கெட்டது எதையும் பார்க்காம நல்ல விஷயத்தை பார்த்திருக்க” என்றாள்.

“நல்ல விஷயம்தான். ரெண்டு பேரும் எப்ப பாரு எலியும் பூனையுமா இருக்காங்க. இது எப்படி நடக்கும்?” எனக் கேட்டாள் சுப்ரியா.

“நானும் இன்பாவும் கூட அப்படித்தான் இருந்தோம். ஒத்த குணம் உள்ளவங்க சேர்ந்தா த்ரில் ஏது? நீ இதை யார்கிட்டயும் சொல்லாத. இது நடக்க பல வருஷம் இருக்கு. நடக்குதான்னு பார்ப்போம்” என்றாள்.

 எல்லோரும் பேட்மிண்டன் விளையாட தயாராக, “எப்படியும் உன் அண்ணா இருக்கிற டீம் ஜெயிக்க போகுது. நான் இப்பவே முடிவைச் சொல்லிட்டேன்” என்றான் ரம்யாவின் கணவன்.

“அண்ணி…” என தர்ஷினியை ரம்யா அழைக்க, 

“இந்த நிலையில் நான் எப்படி விளையாட முடியும்? நான் வரலை போடி..“ என்றாள் தர்ஷினி.

“நீங்க விளையாட வேண்டாம். நான் இருக்கிற டீமுக்கு சப்போர்ட் பண்ணி நில்லுங்க” என்றவள்,  “இப்போ அண்ணி சப்போர்ட் பண்ற டீன் தான் ஜெயிக்கும்” என தன் கணவனைப் பார்த்து கூறினாள். 

இவர்கள் இருவரும் இதுபற்றி செல்ல சண்டை போட்டுக் கொண்டிருக்க, இன்பா சரவணனுடன் அங்கே வந்தான்.

“என்ன ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை? என்கிட்ட சொல்லுங்க தீர்த்து வைக்கிறேன்” என்றான் இன்பா.

“நீயே சொல்லுண்ணா. நீ விளையாடுற டீம் ஜெயிக்குமா? இல்ல அண்ணி சப்போர்ட் பண்ற டீம் ஜெயிக்குமா?” எனக் கேட்டாள் ரம்யா.

 இன்பா தர்ஷினியின் முகத்தை பார்க்க, அவள் இன்பா என்ன சொல்லப் போகிறான் என கேட்க ஆர்வமாக காத்திருந்தாள்.

 இன்பா தன் தங்கை கணவனைப் பார்த்து, “மாப்ள… விளையாட்டோ, ஆர்கியூமெண்டோ, சண்டையோ நீங்க ஜெயிக்கிறது தோக்குறது மேட்டர் இல்லை. பொண்டாட்டியை ஜெயிக்க வச்சா நம்ம லவ் லைஃல நாம ஜெயிக்கலாம். உங்களுக்கு எது முக்கியம்? விளையாட்டுல ஜெயிக்கிறதா…வாழ்க்கையில ஜெயிகிறதா…?” எனக் கேட்டான்.

“வாழ்க்கையில் ஜெயிக்கிறது தான் முக்கியம்”

“அப்போ ரம்யா கேட்ட கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்க”

“இதுல என்னம்மா சந்தேகம்? நீ சொன்ன மாதிரி உன் அண்ணி சப்போர்ட் பண்ற டீம்தான் ஜெயிக்கும்” என்றான் ரம்யாவின் கணவன்.

 எல்லோரும் வாய்விட்டு சிரிக்க,  ‘எப்படி…?’ என்பது போல கண்களாலேயே தர்ஷினியை கேட்டான் இன்பா.

‘நீ உண்மையிலேயே காட்டுப்பூச்சி இல்லடா காதல் மன்னன்தான்’ என மனதிற்குள் நினைத்து கொண்டு காதலாய் தன் கணவனைப் பார்த்தாள் தர்ஷினி.