மஞ்சள் காட்டு மைனா 3

துளசிக்கு எப்போதும் அவளை பற்றிய சிந்தனைகளே அதிகம்.

பருவ வயதில் எல்லோருக்கும் தன்னை ரசிக்க தோன்றும். ஆனால் இவளுக்கு ஆராய தோன்றியது.

ஆம். அவளின் தந்தை சரவணன் இருக்கும் வரை, இந்த ஆராய்ச்சி எல்லாம் இருந்ததில்லை.

சரவணனுக்கும், மகளுக்கும் எல்லா விஷயத்திலும் நல்ல ஒற்றுமை. இருவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.

அதனாலே சரவணனால் அவரின் குடும்பத்திடம் ஒன்றி வாழ முடியவில்லை.

அதற்கு வளர்மதி மீது கொண்ட காதல் தான் காரணம் என்று அவரின் குடும்பத்தினர் இன்றளவும் நம்புகின்றனர். உண்மை அதுவல்ல.

சரவணனின் தந்தை வட்டிக்கு விட்டு பல சொத்துக்களை மட்டும் சம்பாதிக்கவில்லை. மகனின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டார்.

சரவணன் அந்த வழியில் செல்லாமல் அம்மாவின் நகை வைத்து தனக்கென தனியாக தொழிலை தொடங்கினார். நல்லதாக சென்றது. வளர்மதி மீது காதல் கொண்டார். அவருக்கு நேரெதிர் குணம் ஈர்த்தது போல.

“உன் அம்மாகிட்ட என் விருப்பத்தை சொல்லவே எனக்கு வருஷம் ஆச்சு துளசிமா” என்பார் அடிக்கடி.

“அவ்வளவு பயம், என்னப்பா?” என்று மகள் வாய் மூடி சிரிப்பாள்.

“ஆமா டீச்சர் ட்ரையினிங் படிச்சிட்டிருந்தா. ஏற்கனவே ஒருத்தன் எதோ வம்பிழுத்தான்னு கொடுத்தா பாரு ஓர் அடி. செம சத்தம்” என்றார் மனிதர்.

“அம்மா செம போல்ட் என்னப்பா” என்றாள் மகள் பெருமிதமாக.

“நானும் அம்மா மாதிரி பிறந்திருக்கலாம், என்னப்பா?” என்று கேட்க,

“துளசிமா” என்றார் தந்தை கண்டிப்புடன்.

“எல்லா மனுஷனும் தனித்துவமானவன். என் பொண்ணும் தனித்துவமானவள். வளர்மதி மாதிரி நீ இருந்தா துளசி இல்லையே நீ”

“இருந்தாலும் அம்மா வேற மாதிரி”

“சரி உன் அம்மாவை இப்படி சாந்தமா பேச சொல்லு பார்ப்போம். என் பொண்ணு மாதிரி பூவா மலர்ந்து சிரிக்க சொல்லு பார்ப்போம், என் பொண்ணு மாதிரி படம் வரைய சொல்லு பார்ப்போம், என் பொண்ணு மாதிரி சூப்பரா படிக்க சொல்லு பார்ப்போம்”

“ப்பா. போதும், போதும்” என்று மகள் மலர்ந்து புன்னகைக்க,

“உன்னால முடியறது அவளால முடியாது, அவளால முடியறது என்னால முடியாது. குணம் வேற, மனுஷன் வேற, நீ வேற, நான் வேற” என்றார் தந்தை.

துளசிக்கு அப்போதெல்லாம் தன்னை ராணி போல உணர வைக்கும் தந்தை இருந்தார். மகளை அப்படியே ஏற்று கொண்ட தந்தை.

ஆனால் அவளின் பருவ வயதில் சரவணன் விபத்தில் இல்லாமல் போனார்.

அதுவரை மகளிடம் குறை காணாத வளர்மதி, அதற்கு பின் நிறைய குறைகளை கண்டார்.

“எதுக்கு இப்படி பூச்சி பிடிக்கிற மாதிரி மெல்லமா பேசுற, சத்தமா பேசு” என்று அதட்டிவிட்டார்.

துளசி அதிர்ந்து போனாள். பின் நாட்களில் அதுவே பழகி போனது.

“அள்ளி சாப்பிடு. வேகமா நட, நல்லா நிமிர்ந்து நில்லு, கணீர்ன்னு பேசு, சும்மா சும்மா அழுகாத” என்று ஆயிரம்.

துளசிக்கு அவள் மேலே சந்தேகம். படிப்பில் கோட்டை விட்டாள். அடி வெளுத்துவிட்டார்.

படிப்பில் மீண்டுவிட்டாள். ஆனால் தன்னம்பிக்கையில் வீழ்ந்து போனாள்.

அதன் விளைவு தான் திருமண வாழ்க்கையின் தோல்வி.

“அண்ணி. என் அண்ணனை தான் நாங்க விட்டுட்டோம். ஆனா என் மருமகளை விடுற மாதிரி இல்லை. என் பையனுக்கு உன் பொண்ணை கொடு” என்று சரவனின் தங்கை வீடேறி வந்தார்.

வளர்மதிக்கு அவரின் திடீர் சம்மந்த பேச்சு ஏன் என்ற கேள்வியை கொடுத்தது.

சரவணன், அவரின் தங்கை ஆனந்தி இருவர் மட்டுமே. ஆனந்தியின் கணவன் அரசியலில் இருப்பதோடு மாமனாரின் வட்டி தொழிலையும் பெரிதாக எடுத்து நடத்தி கொண்டிருக்கிறார்.

சரவணனுக்கு  தங்கையை பிடிக்கும். ஆனால் அவள் செல்லும் வழி பிடிக்காது.

வளர்மதி ஒரேடியாக வெட்டி பேசாமல், “யோசிச்சு சொல்றேன்” என்று முடித்து கொண்டார்.

“என் மகனால தான் துளசி கல்யாணம் நடந்ததா?” என்று வைரவேல் கேட்டார்.

கேஸ் நடத்துவது என்று முடிவான பின், முழுதும் தெரிந்து கொள்ள வந்திருந்தார் வைரவேல்.

“இல்லைண்ணா” என்றார் வளர்மதி.

வைரவேல்க்கு மிகப்பெரிய பாரம் இறங்கிய உணர்வு.

“என் வீட்டுக்காரர் வீட்டை  விட்டு கொடுக்க கூடாதுன்னு நினைச்சேன்” என்றார் வளர்மதி.

“ஒத்த மகன் இல்லாமல் போனதை என் மாமனாரால ஜீரணிக்க முடியல. எல்லா சொத்தையும் துளசி பேர்ல எழுதி வைச்சுட்டார்”

“அப்போ சொத்துக்காக தான் கல்யாணமா?”

“இருக்கலாம்ண்ணா. எனக்கு அந்த சொத்து பத்தி எதுவும் தெரியாது. ஆனந்தி விடாம கேட்டுகிட்டே இருந்தா. ஒரு கட்டத்துல எனக்கும் அங்க கொடுக்க ஆசை வந்திடுச்சு. தப்பு தான். பெரிய தப்பு. என் பொண்ணு வாயில்லா பூச்சு. வெளியே யாருக்கும் கட்டி கொடுக்கிறதுக்கு இவங்களுக்கு கொடுக்கலாம். நல்லா இருப்பான்னு நினைச்சேன்”

“என்னம்மா நீ, கொஞ்சம் கூட விசாரிக்கலையா?”

“விசாரிச்சேன்ண்ணா. பையனை பத்தி முழுசும் விசாரிச்சேன். ஆனா வெளிநாட்டுல வேலை பார்த்த இடத்தை மட்டும் விசாரிக்கலை. அங்க ஒரு பொண்ணோட குடித்தனமே நடத்தியிருக்கான்” என்றார் வெறுப்புடன்.

“உங்களுக்கு எப்போ இந்த விஷயம் தெரிஞ்சது”

“கல்யாணம் ஆன அன்னைக்கேண்ணா. துளசி போன் நம்பரை எப்படியோ கண்டுபிடிச்சு அந்த பொண்ணு போன் பண்ணி பேசிட்டா. ஆதாரம் எல்லாம் அனுப்பினா. குழந்தை கூட ஏதோ இருக்கும் போல”

“தெரிஞ்சு அவங்களை சும்மாவா விட்ட” வைரவேல் கோவமாக கேட்க,

“எப்படி விடுவேன்ண்ணா. கேட்டேனே. ஆனா அவங்க அதுக்கு ரொம்ப சாதாரணமா, இதெல்லாம் ஒரு விஷயமா? அந்த பொண்ணுக்கு செட்டில் பண்ணிடலாம்ன்னு முடிச்சுட்டாங்க” என்றார்.

“ராஸ்கல்ஸ்”

“ஆனா அதுக்கு அப்புறம் நடந்தது தான்” என்றவருக்கு தன்னை போல் கண்கள் கலங்கி போனது.

பேச முடியாமல் நெஞ்சம் அடைக்க, வைரவேல் குடிக்க தண்ணீர் கொடுத்தார்.

உள்ளிருந்த துளசிக்கு அந்த நாளை நினைத்தாலே உடல் நடுங்கியது.

துளசி, சந்தோஷ் திருமணம் முடிந்த அன்று மாலையே  வீட்டில் மிகப்பெரிய பஞ்சாயத்து.

வளர்மதி மகளை கூட்டிக்கொண்டு கிளம்ப பார்க்க, “அண்ணி. அது மட்டும் கூடாது. வீட்டுக்கு வந்த என் மருமகள் அன்னைக்கே எல்லாம் அனுப்ப மாட்டேன். நைட் இங்க இருக்கட்டும். நாளைக்கு பார்க்கலாம்” என்று வற்புறுத்தி, கிட்டத்தட்ட அவர்களை வீட்டுக்குள் சிறை வைத்தனர்.

வளர்மதிக்கு தான் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய தவறு என்று புரிய, மகளின் கை பற்றி அமர்ந்துவிட்டார்.

அவர்களுக்காக பேச ஒருவர் இல்லை. பேசவும் கூடாது என்பது போல, எல்லா சொந்தங்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

வீடே மிக கனமான அமைதியில் மூழ்க, வளர்மதிக்கு ஏனோ திக் திக் என்று அடித்து கொண்டது.

ஆனந்தி எடுத்து வந்த உணவை அவர் தொட கூட இல்லை.

“அம்மா தண்ணீர்” என்று துளசி அரை மயக்கத்தில் கேட்க,

“ம்ஹூம். வேணாம்” என்று மகளை தாகத்திலே இருக்க வைத்தார்.

துளசி முடியாமல் அப்படியே தரையில் படுத்துவிட, வளர்மதிக்கு கண்களை மூடவும் பயம்.

அவர்கள் அறையை லாக் செய்ய முடியாப்படி ஓர் வெறும் கதவு. எப்படி கண் மூட முடியும்?

அப்படியும் வளர்மதி ஓர் நேரத்தில் சில நொடிகளே பசி, தூக்கத்தில் கண்களை மூடிவிட, பக்கத்தில் இருந்த மகளை காணவில்லை.

“துளசி. துளசி” என்று அலறி அடித்து கொண்டு ஓட,

“அம்மா. அம்மா” என்று மகள் எங்கோ கத்தும் சத்தம்.

வளர்மதி வேகமாக மாடியேற போக, அடியாள் போல் இருவர் அவரை வழி மறைத்து நின்றனர்.

“என்னை விடு, விடு. தொடாத” என்று துளசி கத்த,

வளர்மதிக்கு கை, கால்கள் எல்லாம் வெடவெடக்க தொடங்கியது.

சந்தோஷின் அறையில் மகள்.

வளர்மதி ஓடிப்போய் ஆனந்தியின் அறை கதவை படபடவென தட்ட,

“என்ன அண்ணி” என்று தள்ளாடி நின்றார் ஆனந்தி.

“என். என் பொண்ணு ஆனந்தி. ப்ளீஸ் அவளை காப்பாத்து” என்று அவர் முன் கைகளை குவித்து கெஞ்ச,

ஆனந்திக்கு ஒன்றும் புரியவில்லை. “நீ போய் தூங்கு ஆனந்தி. நான் பார்த்துகிறேன்” என்று கணவர் வர.

துளசியின் சத்தத்தில் ஆனந்திக்கு எதுவோ புரிவது போல. எங்கோ அவருக்குள்ளும் ஈரம். அண்ணன் மீது கொண்ட பாசம், அண்ணன் மகளை பாதுகாக்க வைத்தது.

“இன்னும் ஒரு செகண்ட்ல துளசி இங்க இருந்தாகணும்” என்று கணவனுக்கு எச்சரிக்கை விடுத்தாள்.

அவரால் மறுக்க முடியாது. ஆனந்தியை வைத்து தான் எல்லாம். மகனுக்கு போன் செய்தார்.

சந்தோஷ் அறை கதவை திறக்கவும் வளர்மதி ஓட்டமாக ஓடி மகளை காண, துளசி புடவை எங்கோ இருக்க, அறை கலவரமாக இருந்தது.

சந்தோஷ் எரிச்சலுடன் அத்தையை முறைத்து வெளியேற, “அம்மா” என்று வளர்மதி கைக்குள் சரண் புகுந்தாள் மகள்.

வெடவெடன நடுங்கி கொண்டிருந்த மகளை தன்னோடு இறுக்கமாக அணைத்து கொண்டவர், அவளுக்கு புடைவையை சுற்றிவிட்டார்.

“ம்மா. போலாம்மா. பயமா இருக்கு. அடிச்சுட்டாங்க. வலிக்குது. புடவை, புடைவையை” என்றவள் அப்படியே மயங்கி போனாள்.

“டாக்டரை கூப்பிடுங்க” என்று வளர்மதி கத்த,

“அண்ணி. சாதாரண மயக்கம் தான். நம்ம விஷயம் வெளியே தெரிய கூடாது” என்றுவிட்டார் ஆனந்தி.

மகள் முகம், முதுகு, கை எல்லாம் காயமாக இருக்க, வளர்மதி அன்று இரவு முழுவதும் மகளை மடிதாங்கி அமர்ந்திருந்தார்.

நரகத்தை கண்ணில் கண்டார் வளர்மதி.

துளசியின் மயக்கம் தண்ணீர் தெளித்தும் தெளியவில்லை. ஜுரம் கொதித்தது.

வேறுவழி இல்லாமல் மறுநாள் காலை டாக்டரை வரவைத்து, அவளுக்கு வைத்தியம் பார்த்தனர்.

துளசியை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் உறுதியாக சொல்லிவிட, வளர்மதி அதோடு மகளை கூட்டி கொண்டு வந்தவர் தான்.