மஞ்சள் காட்டு மைனா 26

‘இதென்ன சொல்றான்?’ பசுபதி கேள்வியுடனே வீட்டிற்குள் நுழைந்தார்.

“தனிக்காட்டு ராஜா தேவா!” என்று வைரவேல் சொல்லி முடிக்க,

“ஆமா. நான் தனிக்காட்டு ராஜா தான். இப்போ என்னாங்குறீங்க நீங்க?” என்று தேவா கேட்டிருந்தான்.

“தேவா” என்ற அதட்டலில் தந்தையை கவனித்தவன்,

“உங்க பங்காளி என் பங்காளியா நிக்கிறார்ப்பா” என்றான் மகன்.

“டேய். என்ன பங்காளின்னு சொல்ற” என்று வைரவேல் சத்தமிட,

“வார்த்தையை பார்த்து விடு தேவா” மகனை அடக்கினார் பசுபதி.

“ப்பா. என்னப்பா என்னையே அதட்டுறீங்க. உங்க தம்பி இவ்வளவு நேரம் சலங்கையே இல்லாம எப்படி ஆடுனார் தெரியுமா?”

“எதாவது கோவம் இருக்கும். உனக்கு அவனை தெரியாது, நீ பேசாம இரு”

“எனக்கு அவரை தெரியாது, சரிதான். உங்களுக்கு தான் அவரை தெரியலை. உங்க தம்பிக்கு சுந்தரம்ன்ற பேய் பிடிச்சிருக்கு. அவரை இனி தனியா விடாதீங்க”

“டேய் என்ன விட்டா ஓவரா பேசிட்டிருக்க?” வைரவேல் மகன் மேல் ஏறிக்கொண்டு செல்ல,

“வேலு. என்னய்யா இது? அவன் சின்ன பையன். அந்தளவு கூறு இல்லை. அவனோட போய் சரிக்கு சமமா நிக்கிற” என்று பசுபதி தம்பிக்கும், மகனுக்கும் இடையில் வர,

“ப்பா. என்ன? கூறு இல்லை சொல்றீங்க? சின்ன பையன்னு என்னை சொல்றீங்க? உங்க தம்பிக்கு தான் மனசுல சின்ன பையன்னு நினைப்பு. பாருங்க எகிறி எகிறி சண்டை போடுறதை” என்று தேவா கடுப்பாகி குதித்தான்.

“ண்ணா. முதல்ல அவனை வாய் மூட சொல்லுங்க. அதிகமா போறான். நாம இல்லாமலா அவன் வந்துட்டான்” என்றார் வைரவேல்.

“ப்பா. உங்க தம்பி சொன்னார்ன்னு என்னை வாய் மூட சொல்லிடாதீங்க. அப்புறம் தேவாவோட இன்னொரு முகத்தை தான் பார்ப்பீங்க” என்று எச்சரித்தான் தேவா.

“ஓஹ். என் அண்ணனையே மிரட்டுற அளவு வந்துட்ட நீ? என்னடா பண்ணுவ? என்னமோ வேற முகத்தை பார்ப்பீங்கன்னு சொல்ற? எங்க காட்டுடா பார்ப்போம்” என்று சின்ன தந்தை நிற்க,

“உங்களுக்கு காட்ட முடியாது. என் அப்பாக்கு நான் காட்டிப்பேன். முதல்ல நீங்க எதுக்கு என்கிட்ட பேசுறீங்க? பேசாதீங்க” என்றான் தேவா.

“உன்கிட்ட பேச நானும் இங்க ஒத்த கால்ல நிக்கலை. போடா. பெரிய இவன்?”

“பெரிய இவன்னு அடிக்கடி சொல்றீங்க? என்ன சமாச்சாரம்? அப்புறம் நானும் உங்களை பத்தி பேச வேண்டியிருக்கும்”

“அடேங்கப்பா. என்ன பேசுவ நீ? எங்க பேசு பார்ப்போம்”

“சித்தி முகத்துக்காக தான் பார்க்கிறேன். இல்லை”

“வேணும்னா உங்க சித்தியை திரும்பி நிக்க சொல்லிட்டு பேசுடா”

“ஆஹ். ஜோக்கு. என் அப்பாக்கு தம்பின்னு உங்களை பார்க்கிறேன்”

“நானும் அதே தாண்டா. என் அண்ணனுக்கு மகன்னு பார்க்கிறேன், இல்லைன்னா இந்த முரடன்கிட்ட எல்லாம் மனுஷன் சகவாசம் வைச்சுப்பானா?”

“நான் முரடன்னா நீங்க யாராம்?”

“நான் யாரா இருந்தா உனக்கென்னடா?”

“எனக்கில்லை. அந்த சுந்தரத்துக்கு தான் இருக்கு”

“ஆமா அவனுக்கு தான் இருக்கு. வீட்ல என்னென்ன நடக்குதுன்னு அவன்தான் என்கிட்ட சொல்றான்”

“நீங்களும் அதை கேட்டுட்டு வந்து சண்டைக்கு நிக்கிறீங்க இல்லை” தேவா வாடி போனான்.

‘சுந்தரத்தின் வேலை. என்கிட்ட பேசின மாதிரி வைரவேல் மாமாகிட்டேயும் பேசியிருக்கார்’ துளசிக்கு புரிந்தது.

மாலதி கசங்கிய முகத்துடன் நின்றிருக்க, ஜெயலட்சுமிக்கு மனது கஷ்டம். கொழுந்தனின் சில பேச்சுக்களை அவர் ரசிக்கவில்லை.

பசுபதி மட்டுமே நிதானமாக, இடைநிலையாக நின்றவர், “என்ன வேலு ஆச்சு?” என்று தம்பியிடம் விசாரித்தார்.

“நீங்களும் உங்க மகனும் என்ன செஞ்சுக்கணுமோ செஞ்சுக்கோங்க. ஆனா என்கிட்ட சொல்ல மட்டுமாவது செய்ங்க” என்றார் வைரவேல்.

“வேலு. உனக்கு நல்லா தெரியும். எப்போவும் நான் உங்க இரண்டு பேரையும் கண்காணிச்சுட்டு தான் இருப்பேன்னு. அப்படி நானே கண்டுபிடிச்சு தான் அவன்கிட்ட தான் கேட்டேன்” பசுபதி சொல்ல,

வைரவேலுக்கு மனது ஏற்கவில்லை. அமைதியாக நிற்க, பசுபதிக்கு தம்பியை புரிந்தது.

“வேலு. முதல்ல இருந்தே நாம அளவுக்கு அதிகமா சுதந்திரத்தை இவனுக்கு கொடுத்து வளர்த்துட்டோம். என்னால எல்லாம் முடியும்ன்னு முன்னுக்கு நிக்கிறான். முடியலைன்னா சமாளிக்க நாம இருக்கோம்ன்னு அவனுக்கு தெரியும். நமக்கும் தெரியும். அப்புறமென்ன வேலு? ஏன் இவ்வளவு கோவம்? எது உன்னை பாதிச்சதுன்னு சொல்லு?” என்று விசாரித்தார் பசுபதி.

மற்ற தம்பி போல் வைரவேல் இருந்திருந்தால் அண்ணனும் விட்டிருப்பார். ஆனால் வைரவேல் அப்படி இல்லையே! அண்ணன் குடும்பத்தை தன் குடும்பமாக பார்ப்பவர். அண்ணன் மகனை தன் மகனாக வளர்த்தவர்!

எப்போதும் தேவாவிற்கு ஒன்று என்றால் பசுபதியை விட வைரவேல் தான் ஓர் அடி முன்னால் நிற்பார். தேவாவுமே அப்படி தான். அது தெரிந்து தானே சுந்தரமும் ஏதேதோ சொல்லி இருவரையும் பிரிக்க பார்ப்பது!

பசுபதிக்கு பிரிந்துவிடுவார்களோ என்ற அச்சம் இல்லை. தம்பியின் வருத்தத்தை போக்க வேண்டும்.

“கோவத்துல, அவசரத்துல, முரட்டு தனத்துல நீங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் வேலு. சட்டுன்னு வார்த்தை பாய்ஞ்சிடும். அப்புறம் நீங்களே சமாதானம் பண்ணிக்கிறேன்னு”

“ண்ணா. சமாதானமா? இனி அந்த பேச்சுக்கே இடமில்லை” என்று வைரவேல் உடனே சொல்ல,

“ப்பா. எப்போ அவர் மகனான்னு என்னை கேட்டாரே அப்போவே எல்லாம் முடிஞ்சு போச்சு. போக சொல்லுங்க” என்றான் தேவா.

“முதல்ல நான் முடிச்சிடுறேன். சமாதானம் பண்ணிக்கிறேன்னு நீங்க திரும்ப ஒரு சண்டை தான் போடுவீங்க. அதுக்கெல்லாம் எனக்கு தெம்பு இல்லை. உங்களுக்குள்ள என்னமோ நீங்களே பார்த்துக்கோங்க” என்ற பசுபதி,

“தேவா. நீ எதுவும் சொல்லலைன்னு தான் வேலுக்கு கோவம். அது சரியும் கூட. நீ சொல்லியிருக்கணும். எங்க எல்லார்கிட்டயும் கலந்து பேசியிருக்கணும். இப்போ நீ தனியாள் இல்லை. துளசி இருக்கு. துளசி உன்கிட்ட ஏதும் சொன்னானா?” என்று மருமகளிடம் கேட்க,

“இல். இல்லை மாமா” என்றாள் துளசி.

“நீ பேசாதடி” என்று உடனே வெடித்தான் தேவா.

“இப்போ எதுக்கு துளசிகிட்ட பாயுறான்’ண்ணா?” என்று வைரவேல் கேட்க,

“ஆஹா. எனக்கு ஒரு நியாயம்? உங்க மருமகளுக்கு ஒரு நியாயமா? அந்த சுந்தரம் அவகிட்ட பேசினதை உங்க மருமக முதல்ல என்கிட்ட கேட்டாளா? இல்லை சொன்னாளா?”

“நான் எப்படி?” துளசி திணற,

“உன் சின்ன மாமனார் கேட்கலை. என்கிட்ட சண்டை போடலை. ஆயிரம் இருந்தாலும் என் சித்தப்பா, சித்தப்பா தான்”

“ஐஸ் வைச்சதும் உருகிட்டேன் போடா போ” என்றார் வைரவேல்.

“ஆஹ்ன். வைச்சாங்க ஐஸ். அந்த நினைப்பு எல்லாம் வைக்க வேணாம்னு உங்க தம்பிகிட்ட சொல்லுங்கப்பா” என்றான் மகன்.

“அடச்சீ. உங்களோட முடியலை. நிறுத்தி தொலைங்கடா முதல்ல” என்று பசுபதி காண்டாகிவிட்டார்.

“ஆயிரம் குடிகாரங்களுக்கு பஞ்சாயத்து பண்ணிடுவேன். உங்க இரண்டு பேருக்கும் என்னால பஞ்சாயத்து பண்ண முடியாது”

“குடிகாரங்களுக்கு பஞ்சாயத்து பண்ணா, தெளிவா இருக்க எங்களுக்கு பண்ண முடியாது தான்” தேவா சொல்ல,

“சரியா சொன்ன. என்னமோ இவரை தீர்த்து வைக்க சொல்லி கேட்ட மாதிரி பேசுறார்” என்றார் வைரவேலும்.

“எனக்கு இது தேவைதான். இனி நீங்க சண்டை போடுறதா இருந்தா தோட்ட வீட்டுக்கு போயிடுங்க. எப்போவும் அப்படித்தானே கட்டி உருளுவீங்க? இப்போ என்ன புதுசா வீட்ல வைச்சு. பாருங்க அம்மா, மாலதி, துளசி எல்லாம் பயந்துட்டாங்க” என்றார் பசுபதி.

“கையில் பாப்கார்ன் மட்டும் தான் இல்லை. நல்லா வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. இவங்க பயந்துட்டாங்களா? என்னம்மா. சொல்லுங்க” என்று தேவா அம்மாவிடம் கேட்க,

“இல்லை. இன்னைக்கு நீங்க இரண்டு பேருமே எல்லை தாண்டிட்டீங்க” என்றார் ஜெயலட்சுமி.

“அண்ணி நான்”

“தம்பி. பொதுவுல வைச்சு நீங்க மாலதி பத்தி பேசியிருக்க கூடாது”

வைரவேல் தன் தவறை உணர்ந்தே இருந்தவர், “கோவத்துல. மன்னிச்சிருங்க அண்ணி” என.

“சித்திகிட்ட தான் மன்னிப்பு கேட்கணும்” என்றான் தேவா படுநியவாதியாக.

“என் பொண்டாட்டிகிட்ட நான் கால்ல விழுந்து கூட கேட்டுப்பேன். நீ பேசாதடா” என்றார் வைரவேல்.

“பேச்சு இங்கேயே வந்ததுக்கு அப்புறம் இங்கேயே பேசிடலாம் தேவா” என்றார் மாலதி.

“மாலதி. இவங்களை மாதிரி நாமளும் நடந்துக்க கூடாது” என்று ஜெயலட்சுமி சொல்ல.

“க்கா. மறைச்சு பேச எல்லாம் ஒன்னுமில்லை. தேவா உங்ககிட்ட சொல்லியிருப்பான்னு நினைச்சேன்”

“சித்தி. அப்பாம்மாக்கு தெரியும். சித்தப்பாகிட்ட நீங்க சொல்லியிருப்பீங்கன்னு” என்று தேவா சங்கடம் கொண்டான்.

“உங்க சித்தப்பாக்கு தெரியாதுன்னு எனக்கு இப்போ தான் தெரியும்” என்றார் மாலதி கண்ணீருடன். அவருக்கு சந்தோசம் கொள்வதா, இல்லை வருத்தமடைவதா? என்று தெரியவில்லை.

“ப்ளீஸ். எனக்கு எதுவுமே தெரிய வேணாம் மாலதி. தேவாகிட்ட கோவம். அதுல உன் பேர் வந்திடுச்சு” என்று வைரவேல் சொல்ல, மாலதிக்கு சூழ்நிலை புரிந்தது.

நான் சொல்வேன் என்று தேவாவும், அவன் பெற்றவர்களும் இருக்க, அவர்கள் சொல்லியிருப்பார்கள் என்று நானும் இருந்துவிட்டேன்.