புது மாப்பிள்ளை. ஆனால் முகத்தில் அந்த மகிழ்ச்சியே இல்லாமல் நிற்கிறான்.

வைரவேலை தேடி சென்று அவரை மகனிடம் அனுப்பி வைத்தார் மாலதி.

“சித்தப்பா. தோட்ட வீட்டுக்கு போலாமா?” என்று கேட்டான் தேவா.

வைரவேலுக்கு வேதனையாகி போனது. காதல் தான் இருவரையும் தனிமையை தேடி செல்ல வைத்தது.

உலகத்தின் பார்வையில் இருந்து ஒதுங்கி கொள்ள ஓரிடம். அவர்கள் தோட்டம்.

நான் என் தனிமையில் இருந்து மீண்டு விட்டேன். என் மகன் இன்னும் மீள வில்லையா?

“எல்லோரையும் அனுப்பிட்டு போலாம் தேவா” என்றார் வைரவேல்.

அதுவரை கூட தாங்க முடியும் என்று தேவாவிற்கு தோணவில்லை.

துளசியிடம் பேசிவிட்டான். காதல் இல்லையென்று சொல்லிவிட்டான்.

ஆனால் அவனுள் கனத்து கிடக்கும் காதலை தாங்க முடியாமல் தள்ளாடி நிற்கிறான்.

நான் தப்பு இல்லை. அதே சமயம் நான் சரியும் இல்லை. நியாயம், அநியாயம் எதுவும் காதலில் தெரிவதில்லை.

என் காதலுக்கு எது சரியோ அது உலகத்திற்கு தவறாக தானே இருக்கிறது. ஏன் நான் காதலிக்கும் பெண்ணிற்கே அது தவறாகி தானே போனது.

அவளுக்கு உன் காதலை கொடுக்க முடியாதுன்னு ஏண்டா சொன்ன?

அவகிட்ட என் காதலுக்கான மதிப்பு இல்லை.

பசிக்கிறவனுக்கு தான் சாப்பாட்டோட மதிப்பு தெரியும். கண் முன்னாடி இருக்கு. அதனால நான் எடுத்துகிறேன்னு கேட்டா எப்படி கொடுக்க முடியும்?

என் காதலுக்கான அங்கீகாரத்தை நான் எதிர்பார்க்க கூடாதா?

என்னை பதிலுக்கு காதலிக்க வேண்டாம். என் காதலை புரிந்து கொண்டால் கூட போதுமே.

கடலளவு எதிர்பார்ப்பில் இருந்து கையளவு எதிர்பார்ப்பிற்கு வந்துவிட்டான்.

எனக்காக.. எனக்கே எனக்காக மட்டும் அவள்!

நெஞ்சை வேகமாக தடவி கொண்டான். தண்ணீர் தேடி எடுத்து குடித்தான்.

வைரவேல் அண்ணனிடம் பேசி, அவர்களை கிளம்ப சொல்லி கேட்டு கொண்டிருந்தார்.

“அதுக்குள்ள என்ன வேலு?” என்று பசுபதி புரியாமல் பார்த்தார்.

“இல்லைண்ணா. சும்மாதான்”

“திரும்ப என்னடா? இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே. உன் மகனுக்கா? உனக்கா? தோட்ட வீட்டுக்கு போறீங்களா?” என்று நாடி பிடித்தார் பசுபதி.

“ண்ணா. தேவா, துளசி நம்ம வீட்டுக்கு வரலைன்னு கேட்கிறாங்க. அதான்”

“ம்ம். கேட்கத்தான் செய்வாங்க. நான் பார்த்துகிறேன். நீ உன் மகன்கிட்ட போ” என்ற பசுபதி, உடனே அதற்கான ஏற்பாட்டை பார்த்தார்.

உறவுகள் வழக்கம் போல கேள்விகளை ஆரம்பிக்க, “அவங்க பின்னாடி வருவாங்க, நாந்தான் இங்கேயே கொஞ்ச நாள் இருந்துட்டு வர சொன்னேன்” என்றார் பசுபதி.

“முறைன்னு ஒன்னு இருக்கே”

“இருக்கு. எல்லாம் பத்திரமா இருக்கு. இன்னொரு நாள் அதை பார்த்துப்போம். இப்போ கிளம்பலாம். வேன் ரெடி” என்றார் பசுபதி.

துளசி ஹாலுக்கு வந்துவிட்டிருந்தவள் மாமனார் உடனே கிளம்ப வேண்டும் என்றதில் குழம்பி போனாள்.

வளர்மதி மாலை பலகாரத்துக்கு தயார் செய்ய சொல்லியிருக்க, “மாமா” என்றாள் மருமகள்.

“துளசி. அம்மாவை வர சொல்லும்மா. நாங்க கிளம்புறோம்” என்று அவளை அனுப்பிவிட்டார்.

வளர்மதியும் என்னவோ என்று வேகமாக வந்தவர், “பலகாரம் தயார். சாப்பிட்டுட்டு கிளம்புங்க” என்றார்.

“அதுல போய் என்ன இருக்கும்மா. நாங்க வழியில பார்த்துகிறோம்”

“பக்கத்து ஊருக்கு போறதுக்கு என்னண்ணா? சாப்பிட்டே போலாம்” என்றுவிட்டார் வளர்மதி.

மாமியார், அவரின் மகள்கள் என்று யாரின் முகமும் சொல்லி கொள்ளும்படி இல்லை. துளசி கவனித்து மாலதியை தனியே பிடித்தவள், “என்ன நடக்குது?” என்று விசாரித்தாள்.

“நீ எங்களோட வரது தான் முறை. தேவா வரலைன்னு சொல்லிட்டான், அது தான் வேறொன்னுமில்லை” என்றார் மாலதி.

‘நான் வர தயாராத்தானே இருக்கேன். ஆனா அவர்’ துளசிக்கு இன்னமும் காரணம் புரியவில்லை.

அப்படி என்ன செஞ்சுட்டேன்னு என்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்கிறார்.

மனதில் ஓர் சந்தேகம் உண்டு. அதுவாக இருந்துவிட கூடாது.

 “சரிம்மா மருமகளே நாங்க கிளம்புறோம்” என்று இவளிடம் விடைபெற்றனர்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதம்மா. உன்னை மாதிரி தான் தேவாவும் அவங்க வீட்டுக்கு ஒத்த புள்ள. அவனோட அக்காங்க எல்லாம் இரண்டொரு நாள்ல அவங்க வீட்டை பார்த்து போய்டுவாங்க. பசுபதி, வேலு இரண்டு பேருக்கும் தேவா தான். இதை உன் மனசுல வைச்சுக்கோமா” என்றார் பாட்டி.

துளசிக்கு வார்த்தைகள் வருவேனா என்றது. அதிர்ந்து நின்றாள்.

“என்ன துளசி?” என்று மாலதி இவளுக்கு அருகில் வர,

“ஒன்னுமில்லை அத்தை” என்று சமாளித்து கொண்டாள்.

“அக்கா கூப்பிடுறாங்க வா” என்று அழைத்து செல்ல,

“நாங்க இரண்டொரு நாள்ல ஊருக்கு கிளம்புறோம் துளசி. உனக்கு சொல்லிக்க தான் கூப்பிட்டோம்” என்றபடி செல்வி தம்பி மனைவிக்கு  பூ வைத்துவிட்டாள்.

“நாங்க முறைப்படி எங்க வீடுகளுக்கு கூப்பிடறோம். கண்டிப்பா வந்திடணும்” என்றாள் அகல்யா.

தேவா இதற்காவது என்னை அழைத்து போவானா என்ற சந்தேகத்தில் துளசி நிற்க,

“என்ன துளசி? எங்களுக்கு ஒரே தம்பி அவன். நீங்க விருந்துக்கு வரலைன்னா எங்க மாமியார் வீட்டு ஆளுங்ககிட்ட மரியாதை இல்லாம போயிடும். ஏற்கனவே நீ இங்கேயே இருக்கிறதுல ஏகப்பட்ட கேள்வி” அகல்யா சொல்ல,

“அண்ணி. நான் ஏதோ யோசனையில. நாங்க வரோம். கண்டிப்பா வரோம்” என்றாள் துளசி.

ஜெயலட்சுமி அமைதியாகவே நின்றிருக்க, துளசிக்கு அவரின் மௌனம் உறுத்தியது.

கோவமா கூட பேசலாமே?

“அத்தை” என்றாள் தானே.

“துளசி. எல்லாம் சரியாகிடும். விடு” என்றார் ஜெயலட்சுமி.

அவரின் தவறு அதில் இருக்கிறதே. என் பேச்சில் தானே இடது காலை வைத்து வந்தாள். ம்ம்ம். நியாய மனது!

எல்லாம் கிளம்பிவிட, வளர்மதிக்கு தான் அதிக கவலை.

எல்லாம் நன்றாக ஆரம்பிக்கும். ஆனால் முடிவு சுபமாக இருப்பதில்லை. மறுவீடு கூட அப்படியான ஒன்று தானே!

என் மகளின் ராசியே இப்படி தானா? மனதுக்குள் மறுகி கொண்டார்.

தேவாவும் தோட்ட வீடு சென்றுவிட்டவன், இரவு உணவிற்கு தான் வீட்டிற்கு வந்தான்.

பேச்சின்றி உணவு முடிய, அறைக்குள் அடைந்து கொண்டான்.

“எனக்கு வேலையிருக்கு” என்று மறுநாள் கோர்ட் சென்றுவிட்டான்.

அதற்கு அடுத்த நாள் அக்காக்கள் இருவரும் அவரவர் வீடு திரும்புகின்றனர்.

தேவா காலையிலே அவன் வீடு வந்தான். மகன் திருமணம் முடிந்து தனியாக வந்ததில் ஜெயலட்சுமிக்கு எல்லையில்லா வருத்தம்.

“இரு. உனக்கு மட்டுமாவது ஆரத்தி எடுக்கிறேன்” என்று ஜெயலட்சுமி சொல்ல,

“ம்மா. எதுக்கு தேவையில்லாம. அவ என்கூட வரும் போது இதை செய்ங்க” என்றான் மகன்.

“ஆரத்தி கூட தனியா எடுத்துக்க மாட்டியா?”

“ச்சு. அப்படி இல்லை. எனக்கு போய் எதுக்குன்னு”

“அத்தை” என்ற குரலில் தேவா அதிர்ந்து வேகமாக திரும்பினான்.

துளசி! கணவனை பார்த்தபடி அவனுக்கு அருகில் வந்து நின்றாள்.

“ஹேய் துளசி வந்துட்டியா?” என்று அகல்யா சத்தமாக கேட்க, மொத்த குடும்பமும் வாசலுக்கு வந்துவிட்டது.

“செல்வி சீக்கிரம் ஆரத்தி எடுத்துட்டு வா” என்று ஜெயலட்சுமி பரபரப்பாக சொன்னார்.

“நீ எதுக்கு இங்க வந்த?” என்று தேவா மனைவியிடம் கோவமாக கேட்க,

“என் வீட்டுக்கு நான் வந்தேன்” என்றாள் அவன் மனைவி.

“துளசி. நீ கிளம்பு. நம்ம புது வீடு முடிஞ்சதும் வரலாம்” என்று அவள் கைப்பற்றி நடக்க போக, அவன் மனைவியோ அழுத்தமாக அங்கேயே நின்றாள்.

“துளசி. என்னை கோவப்படுத்தாத”

“என் வீடு இதில்லைன்னு சொல்லிடுங்க. போயிடுறேன்”

“துளசி”

“நேரா நில்லுங்க” என்று அவன் சுண்டு விரல் பற்றி கோர்த்து கொண்டாள்.

தேவா விரலை இழுக்க, “ப்ளீஸ்ங்க” என்றாள் பெண்.

நேரெதிரில் மொத்த குடும்பமும் எதிர்பார்ப்புடன் இவர்களை பார்த்திருந்தனர்.

தேவா மனைவியை விட்டு கொடுக்க முடியாமல் நின்றான்.

புது தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு, துளசி கணவனோடு வலது கால் எடுத்து வைத்து வீட்டுக்குள் வந்தாள்.

தேவா கண்கள் ஜோடியாக அடியெடுத்து வைத்த இருவரின் பாதங்களில் நிலைத்தது.

எப்போது அவளின் ஐந்து விரல்களையும் மொத்தமாக கோர்த்து கொண்டான் என்று தெரியவில்லை. இறுக்கமாக பத்து விரல்களும் பிணைந்திருந்தது.

துளசி முதலில் பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றினாள். மனதார வேண்டி கொண்டாள்.

வீட்டினர் உடனே இனிப்பு செய்து, ஒன்றாக அமர்ந்து உணவுண்டு என்று நேரம் மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றது.

“தேவா. உன் ரூமுக்கு கூட்டிட்டு போ. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று வைரவேல் சொல்ல,

மகன் சித்தப்பாவை முறைத்தான். அவர்தான் துளசியை அழைத்து வந்திருந்தது.

துளசி ஆர்வமுடன் கணவனின் அறைக்குள் நுழைந்தாள். தேவா கதவை சாற்றி லாக் செய்தவன், “என்ன திடீர்ன்னு?” என்று கேட்டான்.

“சொந்தக்காரங்க எதாவது சொல்வாங்க. அதுக்காக எல்லாம் வரணும்ன்னு இல்லை” என்றான்.

“நான் அவங்களுக்காக வரலை” துளசி சொல்ல, தேவாவிற்கு ஏனோ படபடத்தது.

“உங்களுக்காக வந்தேன்” என்றாள்.

“எனக்கு நீங்க வேணும்ன்னு வந்தேன்”

தேவா விரல்கள் தன்னை போல் நெஞ்சுக்கு வர, துளசி விரல்கள் அவன் நெஞ்சை அடைந்திருந்தது.

மிகவும் மென்மையாக தன் நெஞ்சை வருடுபவளை திகைத்து போய் பார்த்திருந்தான் தேவா.

“நீங்க எனக்கு வேணும்ன்னு தான் நம்ம கல்யாணம் நடந்தது. முழு மனசோட தான் சம்மதம் சொன்னேன்”

“என்ன சொல்ல வர நீ?” தேவா தெளிய முயன்றான்.

“உங்களை விட மாட்டேன்னு சொல்ல வரேன்” என்றாள் பெண்.

“என்னை விடுற ஐடியா எல்லாம் வைக்காத” கணவன் அவள் விரலை தன் நெஞ்சோடு அழுத்தினான்.

“விட வாய்ப்பே இல்லை. எனக்கு இந்த தேவா வேணும். காதலன் தேவா எப்படின்னு எனக்கு தெரியாது, என் புருஷன் தேவா எப்படின்னு நான் வாழ்ந்தே பார்த்துகிறேன்” என்றாள்.

“ஹேய்”

துளசி விரலை விலக்கி கொண்டவள், கணவனை நெருங்கி நின்றாள்.

தேவா விரல்கள் ஆட்டம் காண ஆரம்பித்தது. வேகமாக மூச்சை விட்டான்.

துளசி நிதானமாக கணவனை அணைத்தவள், அவன் நெஞ்சில் தன் முகம் வைத்தாள்.

“என்னடி பண்ற?” தேவா குரல் அவனுக்கே கேட்கவில்லை.

மனைவிக்கு கேட்டதாக, “உங்களை உணர நினைக்கிறேன்” என்றவள், உரிமையாக கணவனின் இதயம் சேர்ந்தாள்.