மஞ்சள் காட்டு மைனா 23

தேவா அழுத்தமாக உச்சரித்த, “காதல்”, அவன் மனைவியை மிகவும் தொந்தரவு செய்தது.

தங்கள் உறவுக்குள் காதலை எதிர்பார்க்க கூடாது என்றல்லவா சொல்லிவிட்டான்.

‘அப்புறம் ஏன் இந்த  கல்யாணம்?’ வார்த்தைகள் சீறி வர, ம்ஹூம். உதடுகளை அழுத்தமாக கடித்து கொண்டாள் பெண்.

“தேவா. என்ன இன்னும் சாப்பிட ஆரம்பிக்கலையா? சாப்பிடுங்க” என்று வைரவேல் வர,

“இதோ சித்தப்பா” என்றவன், “சாப்பிடு” என்றான் மனைவியிடம்.

துளசி உண்ணத்தான் நினைக்கிறாள். ஆனால் இயலவில்லை.

சிறிதளவு உண்டவள், “எனக்கு போதும்” என்றாள்.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு” என்று தேவா சொல்ல,

“பேசுறதை பேசிட்டு, சாப்பிடுன்னு வேற சொல்வீங்களா?”  கோவமாகவே கேட்டாள் மனைவி.

ஏன் எதற்கு என்றே தெரியாமல் அவ்வளவு கோவம் அவளுள் வீறு கொண்டு எழுகிறது.

“எதுக்குடி இப்போ ஏறிக்கிட்டு வர?”

துளசி பல்லை கடித்து, “எனக்கு பசிக்கலை” என்றாள்.

“எனக்கு பசிக்குது” என்றான் கணவன்.

“ஆனா சாப்பிட முடியல. தொண்டையில் இருந்து இறங்க மாட்டேன்னு சதி பண்ணுது. அதுக்காக அலட்டிக்க கூடாது. தண்ணீர் குடிச்சு முழுங்கிடணும். பல வருஷ அனுபவம்” என்றான் சாதாரணமாக.

தேவா இப்போதும் சாப்பிட்டதை விட, தண்ணீர் குடிப்பது அதிகம்.

துளசி மனது கேட்காமல், “ப்ளீஸ். வேணாம்ன்னா விட்டுடுங்க” என்றாள்.

“விட முடியாம தான் இந்த போராட்டம்” என்றான் கணவன்.

துளசிக்கு இப்போது உணவே உண்ணாமல் தொண்டை அடைத்தது. ஏன் இப்படி? இமை சிமிட்டி கொண்டாள்.

அவன் காதலும் குற்றமில்லை. நான் மகிழ்வாக வாழ நினைப்பதும் குற்றமில்லை.

பின் இதற்கு என்னதான் பதில்?

எதிர்காலம் அவளை இந்த நொடி அச்சுறுத்தியது.

தேவா பந்தியை விட்டு எழவும் துளசியும் எழுந்துவிட்டாள்.

“துளசி. என்னம்மா. சாப்பிடலையா நீ?” என்று வைரவேல் உடனே இவர்களிடம் வந்துவிட,

“சாப்பிட்டேன் மாமா. போதும்” என்றாள் மருமகள்.

“தேவா. என்னடா. உங்களுக்கு வைச்சதெல்லாம் அப்படியே இருக்கு. அப்படி என்னதான் சாப்பிட்டீங்க இரண்டு பேரும்” என்று மகனை சத்தமிட,

“சித்தப்பா. போதும். டீ கிடைக்குமா பாருங்க” என்றான் தேவா.

“பசியில தலை வலிச்சிருச்சா?” என்ற வைரவேல் உடனே மகனுக்கு டீ ஏற்பாடு செய்தவர், துளசிக்கும் பாதம் பாலை மனைவியிடம் கொடுத்துவிட்டார்.

“துளசி எங்க?” என்று வீட்டில் தேட,

“நாங்க கூப்பிட, கூப்பிட ரூமுக்கு போய் கதவை சாத்திக்கிட்டா” என்றார் பெரிய அத்தை முறையுள்ளவர்.

“ஆமா கையில என்ன?” என்று விசாரிக்க,

“பாதம் பால்” என,

“எங்களுக்கு எல்லாம் இல்லையா? மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு”

“அவ சரியா சாப்பிடலைன்னு தான் அத்தை”

“ஆமா முகம் கூட சுருங்கி போயிருந்துச்சு. நல்லா தானே இருந்தா? அதுக்குள்ள என்ன ஆச்சு?”

“வைரவேல் அண்ணன் புது மாப்பிள்ளையும், பொண்ணும் ஏன் சாப்பிடலைன்னு  சத்தம் போட்டுட்டு இருந்தார்”

“புருஷனும், பொண்டாட்டியும் சாப்பிடும் போது ஏதோ சீரியஸா பேசிட்டிருந்தாங்க. அவங்களுக்குள்ள ஏதாவது இருக்கும்” என்று தங்களுக்குள் பேச,

மாலதி அமைதியாக துளசி அறைக்கு சென்று கதவை தட்ட, “அஞ்சு நிமிஷம்” என்றாள் துளசி.

“துளசி நான் தான்” என்று மாலதி சொல்லவும்,

“நானே வரேன் அத்தை ப்ளீஸ்” என்றாள் பெண்.

மாலதி அவளை தொந்தரவு செய்யாமல் விலகி வர, “என்ன மருமகளுக்கு கொடுக்கலையா?” என்று அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்தனர்.

“தூங்கிட்டா போல” என்று மாலதி சொல்ல,

“தூங்கிட்டாளா? நம்ம வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா? கல்யாணம் முடிஞ்ச கையோட அம்மா வீட்டுக்கு வந்துட்டா. சரி மறுவீடு முடிச்சு வருவான்னு பார்த்தா மருமகளுக்கு அம்மா வீட்டை விட்டு கிளம்புற எண்ணமே இல்லை போலவே” என்று பாட்டி ஒருவர் கேட்க,

மாலதிக்கு இதென்ன புதுசா முளைக்குது என்ற அதிர்ச்சி.

“ஜெயலட்சுமி எங்க? நல்ல நேரம் பார்த்து மகனையும், மருமகளையும் கிளப்பிகிட்டு போகாம என்ன பண்ணிட்டு இருக்கா? மாமியார் ஆகிட்டா இன்னும் இதெல்லாம் சொல்லி கொடுத்துட்டு இருக்க முடியுமா” என்றார் பெரிய அத்தை.

“அக்கா வெளியே இருக்காங்க. நான் சொல்றேன்” என்று மாலதி நழுவ பார்க்க,

“நானே வரேன்” என்று ஜெயலட்சுமியை தேடி சென்றனர்.

“அத்தை நீங்க படுக்கலையா? காபி ஏதும் கொடுக்க சொல்லவா?” என்று ஜெயலட்சுமி இவரை பார்த்ததும் கேட்க,

“நிம்மதியா படுக்கிற மாதிரியா இங்கெல்லாம் நடக்குது?” என்று நொடித்தார் அவர்.

மாலதி அக்காவை பரிதாபமாக பார்க்க, கவனித்த ஜெயலட்சுமி, “என்னாச்சு அத்தை?” என்று விசாரித்தார்.

“உன் மருமக ரூமுக்குள்ள போய் அடைஞ்சுட்டா”

“டையர்டா இருக்கும் அத்தை. வந்திடுவா?”

“ஏன் லட்சுமி. நல்ல நேரம் பார்த்தியா இல்லையா?”

“எதுக்கு அத்தை நல்ல நேரம்?”

“இப்போ தானே புரியுது. நீயே இப்படி இருந்தா உன் மருமக எப்படி இருப்பா?”

“என்னாச்சு அத்தை?”

“மகனையும், மருமகளையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போற எண்ணமே உனக்கு இல்லையா என்ன?”

ஜெயலட்சுமிக்கு புரிந்து போனது. பதில் தான் என்ன சொல்வது என்ற தடுமாற்றம்.

“என்னக்கா? அத்தை கேட்கிறது அப்போ சரிதானா? தேவா மாமியார் வீட்டோட இருக்க போறானா?” என்று உடனே கேள்வி வந்தது.

“அப்படியெல்லாம் இல்லை. நம்ம வீட்டுக்கு வருவாங்க” அகல்யா சொல்ல,

“நீதான் சொல்ற. உங்க அம்மா அமைதியா இருக்காங்க” என்றார் அவர்.

“என்னம்மா? தேவா, துளசி இப்போ நம்மளோட வரலையா என்ன?” என்று அகல்யா அம்மாவிடம் சந்தேகமாக கேட்டாள்.

 துளசியை வழியனுப்பி வைக்க என்று எந்த ஏற்பாடும் நடக்கவில்லை.

வளர்மதி கிச்சனில் எல்லோருக்கும் குடிக்க தயார் செய்து கொண்டிருக்க, துளசி அறைக்குள் அடங்கி கொண்டாள்.

“சீர்வரிசை ஏதும் கண்ணுக்கு தெரியலை” என்று ஒருவர் சொன்னார்.

“அப்புறமா கொடுக்க சொல்லிட்டோம்” என்றார் ஜெயலட்சுமி.

“ஏன் இப்போ கொடுத்தா என்ன? நாங்க எல்லாம் பார்க்க கூடாதா? என் மருமக வீட்ல கொடுத்ததை, என் சொந்தபந்தங்களுக்கு காட்டிட்டு தான் விட்டேன். மூணு லாரி இறங்குச்சு” பெருமையாக அடித்து விட்டார்.

‘இது வேறயா?’ ஜெயலட்சுமிக்கு தலை வலித்தது.

தள்ளி ஏதோ பேசி கொண்டிருந்த மகனை பார்க்க பற்றி கொண்டு வந்தது. ‘இவனை பெத்துட்டு நான் படுற பாடு இருக்கே’ என்று உள்ளுக்குள் அங்கலாய்த்து கொண்டார் அன்னை.

“லட்சுமி” என்று அந்த பாட்டி அருகில் வந்தவர் ரகசியமாக, “அப்போ தேவா வீட்டோட மாப்பிள்ளையா இருக்க போறானா என்ன?” என்று கேட்டார்.

‘க்கும். எல்லோருக்கும் கேட்கிற மாதிரி ஒரு ரகசியம். இதுக்கெதுக்கு கிட்டக்க வரணும்’ ஜெயலட்சுமி கடுகடு முகத்தை சாதாரணமாக மாற்றி கொள்ள,

“ம்மா. என்னம்மா. பாட்டி சொல்றது உண்மையா” என்று அகல்யா வேகமாக கேட்டாள்.

“அகல்யா நீ அமைதியா இரு” என்று செல்வி தங்கையை அடக்க,

“எப்போ பார்த்தாலும் என்னையே நீ அமைதியாக்கிடுறக்கா. ஏன் நான் எதுவும் தெரிஞ்சுக்க கூடாதா?” என்று தங்கை பொறுத்து பார்த்து சண்டைக்கு வந்துவிட்டாள்.

திருமண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து அவள் எது கேட்டாலும், செல்வி அவளை அடக்குவதை தங்கையும் கவனிக்காமல் இல்லையே.

ஜெயலட்சுமி மகளை அடிக்கண்ணால் முறைத்து, ‘இனி நீ பேசின அவ்வளவு தான்’ என்று பார்வையால் எச்சரித்தார்.

பல வருடம் கழித்து அம்மாவின் டெரர் லுக்கில் மகள் வாய் மூடி கொண்டது. பிள்ளைகள், கணவன் முன்பு பூஜை வாங்க அவள் தயாரில்லை.

“என்ன லட்சுமி பதில் பேச மாட்டேங்கிற. தேவா இனி இங்க தானா?” என்று வெகு ஆவலாக அவரை பார்த்திருந்தார்கள் சொந்தபந்தங்கள்.

“வளர்மதிக்கு ஒரே பொண்ணு. அதான் பொண்ணை அனுப்ப மனசில்லையோ என்னமோ?”

“அப்படி பார்த்தா நம்ம லட்சுமிக்கும் ஒத்த மகன் தான். அவ எப்படி அனுப்புவா? என்ன நான் சொல்றது சரிதானே லட்சுமி?” என்று அவரிடமே கேட்டனர்.

“இப்போ என்ன நடந்து போச்சுன்னு ஆளாளுக்கு ஒன்னு பேசுறீங்க. தேவாவும், மருமகளும் நம்ம வீட்டுக்கு தான் வர போறாங்க” என்றார் ஜெயலட்சுமி.

ஆர்வம் குறைந்து போக, “சரி. அப்போ என்ன சட்டு புட்டுன்னு நல்ல நேரம் பார்த்து கிளம்புவோம்” என்றவர், அப்போதே நேரத்தையும் கணித்து உறுதி செய்தார்.

“தேவாவை வர சொல்லு” என்று லட்சுமி மகனை தனியே பிடித்தவர்,

“நம்ம வீட்டுக்கு போலாம் தேவா” என்றார்.

“ம்மா”

“ஏதும் பேசிடாத. மகன்னு கூட பார்க்க மாட்டேன்”

“ம்மா. ஏற்கனவே தலை வலிக்குது. நீங்க வேற ஏன்ம்மா?” என்றான் மகன்.

“எனக்கு தலையே வெடிக்குதுடா. நான் பேசாம செல்வியோட நிறுத்தியிருக்கணும். அதுக்கு அப்புறம் பொறந்த இரண்டும் என் உசுரை வாங்குதுங்க” என்று வெடித்தார் அன்னை.

“க்கா. அம்மாவை என்ன பண்ண நீ?” என்று அகல்யாவிடம் பாய்ந்தான் நல்லவன்.

“அம்மா. உன்னையும் தான் சொன்னாங்க” என்றாள் அக்கா முறைப்புடன்.

“சொந்த பந்தம் எல்லாம் எப்போ கிளம்புறோம்ன்னு கேட்கிறாங்க தேவா” என்றார் செல்வி.

“க்கா. குடிக்க வந்திட்டு இருக்கு, டீ, காபி குடிச்சுட்டு கிளம்பிடுங்க”

“நீயும், துளசியும் வரதை பத்தி கேட்கிறாங்க” என்று அகல்யா சொல்ல,

தேவா அம்மாவை தான் பார்த்தான். “என்னடா. என்னை எதுக்கு பார்க்கிற. பதில் சொல்லு” என்றார் அன்னை.

“ம்மா. திரும்ப, திரும்ப ஏனம்மா. நாங்க வரோம்”

“முடியாது. இப்போவே எங்களோட கிளம்பு. வந்துட்டு நாளைக்கு கூட இங்க வந்துடுங்க”

“ம்மா. வர மாட்டோம்”

“நான் துளசிகிட்ட பேசிக்கிறேன்”

“உங்க மகன் காலத்துக்கும் அவன் வீட்டுக்கு வர மாட்டான். பரவாயில்லைன்னா பேசுங்கம்மா”

“தேவா, வார்த்தையை பார்த்து விடு” செல்வி தம்பியை கண்டிக்க,

“அப்படி என்ன ஆகிப்போச்சுன்னு நீ இப்படி பேசுற” என்று அகல்யா கேட்டாள்.

ஜெயலட்சுமி மகனை வருத்தத்துடன் பார்த்து வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

அக்காக்களும் தம்பியை அதிருப்தியுடன் பார்த்து அம்மாவின் பின் செல்ல, “அக்கா கேட்கிறது நியாயம் தேவா.  உன் சொந்தம் ரொம்ப பேசுறாங்க” என்றார் மாலதி.

“சித்தி. கொஞ்ச நாள். சீக்கிரம் வந்துடுறோம்” என்றான் தேவா.