துளசி அதிர்ந்து கணவனை பார்க்க, மனைவி கையில் இருந்த உணவை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டு முடித்தான்.
துளசி அவன் கை பிடித்து தடுத்ததை எல்லாம் தேவா கண்டுகொள்ளவில்லை.
“என்னடா நடக்குது இங்க? உங்க இரண்டு பேருக்கும் என்னதான் ஆச்சு?” என்று ஜெயலட்சுமி மகனிடம் கேட்க,
“உன் பொண்டாட்டி தான் பசிக்குதுன்னு அவ்வளவு ரகளை பண்ணிட்டா. நீயும் ஏன் தேவா இப்படி பண்ற? பெரியவங்க, குழந்தைங்க எல்லாம் பசியில இருக்கும் போது உங்களுக்கு மட்டும் என்னடா?” என்று அகல்யாவும் தம்பியை பேசினாள்.
“இப்போ அவ சாப்பாட்டை நீ சாப்பிட்டுட்ட. பாரு அவ அழவே செய்றா?” என்று துளசியின் கண்கள் கலங்கி போனதில் செல்வி தம்பியை அடி போட,
“அடேங்கப்பா. இது ரொம்ப அதிகம்டா தம்பி. அவ பசிக்கு நீ சாப்பிட்டா அவளுக்கு பசிக்காதா? ஓவர் டிராமாட்டிக்கா இருக்கு. என்ன துளசி. பசிக்குதுன்னு நிக்க மாட்ட இல்லை” என்றாள் அகல்யா கிண்டலாக.
வளர்மதிக்கு மகளின் செயலில் வருத்தமாகி போக, முகம் சுருங்கி போனது. மாலதி ஆதரவாக அவரின் கை பற்றி கொண்டார்.
“அகல்யா. போதும். நீ போய் பந்தி போட சொல்லு. போ” என்று செல்வி தங்கையை அனுப்பிவிட,
துளசி தண்ணீர் பாட்டிலை எடுத்து கணவனுக்கு நீட்டினாள். தேவா குடித்து வைத்தவன், “இப்போ பந்தி போடலாம் தானே?” என்று மனைவியிடம் கேட்டான்.
ஏதோ அவன் மனைவியிடம் அனுமதி கேட்பதாக ஜெயலட்சுமிக்கு தெரிந்தது.
உடனே பந்தி நடக்க, “வா உட்காரு” என்று துளசியை அழைத்தார் ஜெயலட்சுமி.
“இல்லை அத்தை, எனக்கு பசிக்கலை” என்று ஓரமாக அமர்ந்து கொண்டாள் பெண்.
“ஏன் ஜெயா உன் மருமகளுக்கு பிடிச்சு தானே கல்யாணம் நடந்தது. பொண்ணு முகத்தை பார்த்தா அப்படி தெரியலையே” என்று பாட்டி ஒருவர் கேட்க,
“பெரியம்மா. என்ன கேள்வி இது? புது ஜோடிங்க டையர்டா இருப்பாங்க. வேறொன்னும் இல்லை” என்று ஜெயலட்சுமி சமாதானமாக சொன்னார்.
“நம்ம தேவா முகத்துல களையே இல்லை. மருமக சுருங்கி போய் உட்கார்ந்திருக்கா. புது ஜோடிங்க இப்படியா இருப்பாங்க” என்று அவர் மேலும் குடைய,
“அத்தை. சும்மா இருங்க. அண்ணி தான் சொல்றாங்க இல்லை” என்று அவரின் மருமகள் அவரை அடக்க,
“பெரியம்மா அப்படித்தான்னு எனக்கு தெரியாதா? நீங்க சாப்பிட வாங்க” என்று ஜெயலட்சுமி சென்றார்.
“உங்களுக்கேன் இந்த வேண்டாத வேலை? சும்மா இருக்க மாட்டிங்களா?” என்று அந்த பாட்டியை உறவில் ஒருவர் அதட்ட,
“எனக்கு வந்த தகவல் அப்படி. அந்த பொண்ணு பேர்ல எக்கச்சக்க சொத்து இருக்காம். தேவாகிட்ட விவாகரத்து கேசுக்காக வந்த பொண்ணை இவனே கட்டிக்கிட்டான். அதான் கேட்டேன்”
“தேவா அந்த பொண்ணை பல வருஷமா விரும்பியிருக்கான். நீங்க ஏதோ பேசாதீங்க” என்று வேறொருவர் பேச,
“நம்ம தேவாக்கு இல்லாத சொத்தா?”
“அந்த பொண்ணோட மில் மதிப்பே சில கோடியில சொல்றாங்க. மெயின் ரோட்லே ஏக்கர் கணக்குல இருக்காம்”
“அப்படியா? எவ்வளவு வந்தாலும் வேணாம்ன்னு சொல்ல தோணுமா என்ன? எப்படியோ நல்லா இருந்தா சரி” என்று பேசி அவர்களே கலைந்து செல்ல, கேட்டிருந்த துளசி, ஜெயலட்சுமியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருந்தனர்.
மறுபுறம் அமர்ந்திருந்த துளசியை அழைக்க தான் ஜெயலட்சுமி வந்ததே. இடையில் அவர்கள் பிடித்து வைத்து பேச, தொடர்ந்த பேச்சுக்களும் மாமியார், மருமகளுக்கு ஒப்புதலாக இல்லை.
மாமியார் முகம் கோவத்தில் இருக்க, துளசி அதிர்ந்து போயிருந்தாள்.
“அத்தை நான்”
“எதுவும் பேசாத துளசி. வந்து சாப்பிடு. எங்களுக்கு அதுவே போதும்” என்றார் மாமியார்.
அமைதியாக அவருடன் வந்து பந்தியில் அமர்ந்தவளுக்கு, தேவா தான் பரிமாறினான்.
“நீயும் வந்து உட்காரு வா” என்று ஜெயலட்சுமி மகனை அழைக்க.
“ம்மா. நாந்தான் சாப்பிட்டேன் இல்லை” என்றான் மகன்.
“திரும்ப சாப்பிடு” என்று அன்னையாக ஆணையிட்டார்.
தேவா புருவம் சுருக்கி அம்மாவை பார்த்தபடி மனைவி பக்கத்தில் அமர, வைரவேல் மகனுக்கு பரிமாறினார்.
தன் இலையில் வைத்த இனிப்பை எடுத்து துளசி இலையில் வைத்தவன், அடுத்து வைத்த உணவுகளையும் மனைவிக்கு வைத்து கொண்டே இருந்தான்.
“மருமகளுக்கு நாங்க வைச்சுப்போம். நீ சாப்பிடு தேவா” என்று கிண்டல் செய்ய,
“என்ன இருந்தாலும் புருஷன் வைக்கிற மாதிரி இருக்குமா?” என்று தேவாவும் சொன்னான்.
“இதுக்கு நீ ஊட்டியே விட்டிருக்கலாம் மகனே”
“பெரியவங்க முன்னாடி என் பொண்டாட்டி வெட்கப்படுவா” என்று பேச, சூழ்நிலை கொஞ்சம் சாதாரணமாக தெரிந்தது.
துளசி தான் உணவை விழுங்க முடியாமல் விழுங்கி வைக்க, தேவா அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான்.
ஏற்கனவே சொதப்பியாகிவிட்டது. இனி கவனமா இருக்க வேண்டும் என்று துளசி மிதமான புன்னகையுடனே உறவினர்களுடன் உரையாடினாள்.
நல்ல முறையில் எல்லாம் விடைபெற்று கிளம்ப, தேவா குடும்பம் அவர்கள் வீட்டிலே இறங்கி கொண்டனர்.
“வீட்டுக்கு வந்துட்டு நாளைக்கு போலாம்” என்று வளர்மதி அழைக்க,
“எப்படியும் விருந்துக்கு வரணும் தானே. அப்போ பார்த்துப்போம்” என்று ஜெயலட்சுமி மறுத்துவிட்டார்.
வளர்மதி என்ன பேச? மகள் ஏன் இப்படி நடந்து கொண்டாள் என்று அவருக்கும் தெரியவில்லையே.
மகள் புகுந்த வீட்டில் மனக்கசப்பை சம்பாதித்து கொண்டாள் என்பது மட்டும் அன்னைக்கு விளங்கியது.
“வேலு. நீ துணிமணி எடுத்துக்கிட்டு தேவா கூட இரண்டு நாள் போயிரு” என்று பசுபதி தம்பியை கிளம்ப சொன்னார்.
“நானும் அதைத்தான் நினைச்சேன்ண்ணா” என்ற வைரவேல் சொல்ல,
“மாமா ஏதும் பிரச்சனையா? காலையில இருந்து உங்க யார் முகமும் சரியில்லை” என்று செல்வியின் கணவர் கேட்டார்.
“அதான் ப்பா. நானும் கேட்க நினைச்சேன். தேவா கோவமா இருக்கான். துளசியும் சரியில்லை. அவளுக்கும் தம்பிக்கும் எதுவும் சண்டையா?” என்று அகல்யா கேட்க,
“பிரச்சனை எதுவும் இல்லை மாப்பிள்ளை. தேவா பத்தி நமக்கு தெரியாதா? முரட்டு பையன். வீட்ல உங்க மாமியார் செல்லம் கொடுத்து அப்படி இருக்கான். பொண்டாட்டி வந்துட்டா இல்லை சரியாகிடுவான்” என்று முடித்து கொண்டார் பசுபதி.
அவர் சொல்வதை யாருக்கும் நம்ப முடியவில்லை. மேலும் கேட்க பசுபதி இடம் கொடுக்காமல், “என்ன வேலு. கிளம்பு” என்றார் தம்பியிடம்.
வைரவேலுக்கு மனைவியை அழைத்து கொண்டு செல்வதா என்ற கேள்வி.
அண்ணனின் மகள்கள், மருமகன்கள் இருக்கும் போது மனைவியை தனியே விட்டு செல்வது அவருக்கு உறுத்தலை தந்தது.
மாலதியிடம் எல்லாம் நல்ல முறையில் தான் நடந்து கொள்கின்றனர் என்றாலும், அவர் தன்னுடன் இருப்பதே நல்லது.
“மாலதி. கிளம்புங்க போலாம்” என்று எல்லார் முன்பும் சொல்ல, பசுபதி மனம் மகிழ்ந்து போனார்.
தேவா மில்லுக்கு கிளம்ப, துளசியும் உடன் வந்துவிட்டாள். சுந்தரம் வைத்த வெடி பொருட்களை கைப்பற்றி இருந்தனர்.
“வெடிச்சிருந்தா நஷ்டம் அதிகமாகியிருக்கும் தேவா” என்று அருண் சொல்ல, துளசி அந்த வெடி பொருட்களை அச்சத்துடன் பார்த்தாள்.
“ஆளுங்க பக்கத்துல இருந்திருந்தா உயிருக்கு கூட ஆபத்தா முடிஞ்சிருக்கும்” என.
“டேய் சும்மா இருடா. இவன் வேற” என்று நண்பனை அதட்டி, மனைவியை அறைக்கு அழைத்து கொண்டு வந்தான்.
துளசி அவள் இருக்கையில் அமர்ந்தவள், தேவா வெளியே செல்லவும் அவன் கைப்பற்றி நிறுத்தினாள்.
“ச்சு” தேவா கையை இழுத்தான்.
“ப்ளீஸ்” என்றாள் பெண்.
தேவா அமைதியாக நிற்க, துளசி அவனுக்கு முன் வந்து நின்றவள், “சந்தோஷ் எங்க?” என்று கேட்டாள்.
தேவா முகம் சிவந்து விட, “அவனை பத்தி உனக்கென்ன?” என்று கேட்டான்.
“அவனை விட்டுடுங்க ப்ளீஸ்”
“விட முடியாது”
“அவன் உங்கிட்ட இருக்கிறவரை நாம நிம்மதியா இருக்க முடியாது”
“அந்த *** என்கிட்ட இல்லை”
“ஏன் இவ்வளவு கோவம்? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. அவனால நமக்கு தான் தேவையில்லாத பதட்டம்”
“உனக்கெந்த பதட்டமும் வேண்டாம். என்னை தாண்டி தான் அவன் உன்கிட்ட வரணும்”
“உங்ககிட்ட கூட அவன் வர வேண்டாம். அவன் நமக்கு யாருமில்லை. அவனால நான் ஏன் கஷ்டப்படணும். அவனை விட்டு தொலைங்க”
“ஏய் என்னடி கத்துற? பேசாம போயிரு. காலையில இருந்து நீ பண்ணிட்டிருக்கிறதுக்கு நான் உன் முகத்தை கூட பார்க்க கூடாது” என்றவன் கோவத்தில் நெஞ்சம் வேக வேகமாக ஏறி இறங்கியது.
“உனக்கு. உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா டெஸ்ட் பண்ண சாப்பிடுவ? சந்தேகம் வந்தா நீ என்கிட்ட தானே வரணும்? தப்பி தவறி அதுல எதாவது கலந்திருந்தா?”
“என்னோட துரதிஷ்டம்னு ஏத்துக்கிட்டு இருப்பேன்”
“அப்போ நான், நான் என்னடி? எனக்கென்ன பதில் சொல்ல போற? உனக்கு தான் வாழ ஆசை இல்லை. எனக்கு இருக்கு. கழுத்து வரைக்கும் இருக்கு”
குழந்தைங்களா! தேவா நெஞ்சத்தை தடவி கொண்டவன், “உன்னை விட்டுட்டு, என்னை, என் குடும்பத்தை மட்டும் காப்பாத்திக்க சொன்ன” என்று கேட்டான்.
“சொன்னேன். என்னால நீங்க யாரும் கஷ்டப்பட கூடாதுன்னு சொன்னேன். என் தலையெழுத்தை நானே தான் சுமக்கணும். பாரத்துல நான் இரண்டா உடைஞ்சு போனாலும் நான் சுமந்து தானே ஆகணும். அதுக்காக எனக்கு ஆசை இல்லைன்னு எப்படி சொல்லலாம்?”
“உனக்கு என்னை பிடிக்காது. நான் முரடு” நினைவு படுத்தினான் நல்லவன்.