மனிதர் மிகவும் செழிப்பாக, பத்து விரல்களிலும் மோதிரம் மினுமினுக்க, “வணக்கம் தம்பி” என்று அமர்ந்தார்.

“சொல்லுங்க” என,

“பெருசா ஒன்னுமில்லை தம்பி. கவர்மெண்ட் வேலை வாங்கி கொடுக்கிறேன்னு சொல்லி ஒரு நூறு பேர்கிட்ட பணம் வாங்கினேன். ஆனா என்னால வாங்கி கொடுக்க முடியலை. அதுக்கு போய் ஏமாத்துறேன்னு கம்பளைண்ட் கொடுத்துட்டாங்க”

“யார் பேரை சொல்லி பணம் வாங்குனீங்க”

“நம்ம MLA ஏகாம்பரம் அய்யா பேர் சொல்லி தான்”

“அவருக்கும் பங்கு போச்சா”

“அவருக்கு முக்கால் பங்கு தம்பி”

“நல்லது. இப்போ நான் என்ன பண்ணனும்?”

“உங்களுக்கு தெரியாததா? பார்த்து செய்ங்க தம்பி”

தேவா திரும்பி அருணை பார்க்க, “கம்பளைண்ட் போனதும், ஸ்கேம் நடந்தது உண்மையான்னு விசாரிச்சிட்டு இருக்காங்க. FIR இன்னும் பைல் ஆகலை. நாளைக்கு போட்டுடுவாங்க. அப்புறம் இவரை அரெஸ்ட் பண்ண வாய்ப்பிருக்கு” என்றான்.

“சரி எங்க சீனியர் லாயர்கிட்ட பேசி அன்டிசிபேட்டரி பெயில் வாங்கிடலாம். அட்வான்ஸா பத்து லட்சத்தை எடுத்து வைங்க” என்றான் தேவா.

“தம்பி அட்வான்ஸ் மட்டுமே இவ்வளுவா?”

“ஒவ்வொருத்தர்கிட்ட எவ்வளவு பணம் வாங்குனீங்க?” என்று தேவா நக்கலாக கேட்டான்.

“அது. அது. சரி தம்பி. நான் கொடுத்திடுறேன்”

“என்கிட்ட சொல்லாம எப்படி கேஸ் நடக்கும்?” என்று தேவா புருவம் தூக்கினான்.

“ஐம்பது லட்சம் வரைக்கும் வாங்கியிருக்கோம் தம்பி” என்று தலையை சொறிந்தார்.

“அப்புறம் பத்து லட்சமான்னு கேட்கிறீங்க. சீனியர் லாயர் வேற எவ்வளவு கேட்கிறார்ன்னு தெரியாது. அருண். இவர்கிட்ட எல்லா தகவலும் வாங்கி வை. அப்புறம் சார் பெயில் கிடைக்கிற வரை, இப்படி வெளியே சுத்திட்டு இருக்காதீங்க. தூக்கிட்டு போய்டுவாங்க” என்றான் தேவா.

“தெரியும். தெரியும் தம்பி. நான் யாருக்கும் தெரியாமல் தான் வந்தேன்” என்றவர் கிளம்பிவிட்டார்.

“த்தூ. இதெல்லம் ஒரு பொழப்பாடா” என்று வைரவேல் கேட்டார்.

“பொழப்பு தான். நீங்க போய் அந்த மகாராணிக்கு வக்கீலை பிடிச்சு கொடுங்க போங்க” என்றான் கிண்டலாக.

“நான் ஏண்டா யாரையோ பிடிக்கணும்? நானே லாயர் தான். துளசி கேஸை நானே எடுத்து நடத்துறேன்” என்று வேகமாக சென்றார் மனிதர்.

“முதல்ல உங்க டிகிரி எங்கன்னு தேடி பிடிங்க. அப்புறம் யுவர் ஆனர் சொல்லலாம்” என்று அவருக்கு பின் நக்கலடித்தாலும்,

‘எப்படி இதை கலைச்சு விடுறது?’ என்று தீவிரமாக யோசித்தான் கிரிமினல் தேவா.

‘வைரவேல் பற்றி சொல்வதற்கில்லை. கேஸ் நடத்தினாலும் நடத்துவார். ம்ஹூம் கூடாது’

தேவா யோசித்தபடி வீட்டுக்கு கிளம்ப, வளர்மதி டீச்சர் வீட்டு முன்பு கார்களின் அணிவகுப்பு.

“க்கும்” தேவாவிற்கு திரும்ப முகம் சூடு கண்டது. அப்படியே உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை எரிந்தது.

எப்போதும் போல கண்டுகொள்ளாமல் செல்ல பார்க்க, வளர்மதி வாசலில் வைத்து கோவமாக கத்தி கொண்டிருந்தார்.

ஊரில் எல்லாம் அவரவர் வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் இவர்கள் வீட்டு முன்பு வந்து நிற்கவில்லை.

“நான் அனுப்ப மாட்டேன்னா அனுப்ப மாட்டேன் தான். உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க” என்று வளர்மதியின் கத்தலில் தேவாவின் கை தன்னை போல பிரேக் அடித்து நின்றது.

“எங்க வீட்டு மருமகளை நீ என்ன அனுப்ப மாட்டேன்னு சொல்றது. நாங்க அவளை கூட்டிட்டு போகாம விட மாட்டோம்” என்று பெரியவர் ஒருவர் எகிறி கொண்டு இருக்க, சற்று தள்ளி ஒருவன் துளசியைவே வெறிக்க பார்த்து கொண்டிருந்தான்.

அவன் தான் துளசியின் கணவன் சந்தோஷ்.

துளசி யாரையும் பார்க்காமல் மண்ணுக்குள் புதைந்து போவது போல் நிற்க, “இவ நிமிர்ந்து நின்னு பேசிட்டாலும்” என்று நக்கலாக தலையசைத்து கொண்டான் தேவா.

“உன்கிட்ட எங்களுக்கு என்ன பேச்சு. நீ தள்ளு அண்ணி, டேய் சந்தோஷ் முதல்ல போய் மருமகளை இழுத்துட்டு வாடா” என்று பெண் ஒருவர் சத்தமிட, துளசி வேகமாக அம்மா பின் மறைந்தாள்.

“துளசி. அமைதியா என்னோட வந்திடு, எதுவா இருந்தாலும் நாம வீட்ல போய் பேசிக்கலாம். ஏற்கனவே உன்னால நிறைய சீன் ஆகிடுச்சு” என்று சந்தோஷ் அவளை எச்சரிக்க,

“நான் வர மாட்டேன்” என்று துளசி மறுப்பாக தலையசைக்க,

“என்னடி வர மாட்டேன். உன் அப்பன் தான் எங்களை எல்லாம் வேணாம்னு சொல்லிட்டு வந்துட்டான். அண்ணா பொண்ணு நீயாவது எங்களோட இருக்கட்டும்ன்னு கல்யாணம் பண்ணி வைச்சா எங்களுக்கு ஆட்டமா காட்டுற” என்று அத்தைக்காரி துளசியின் கை பற்றி இழுக்க,

“என் பொண்ணை விடுங்க, விடுங்கன்னு சொல்றேன் இல்லை” என்று வளர்மதி அவருடன் போராட, தேவா நன்றாக வேடிக்கை பார்த்து நின்றிருந்தான்.

“தம்பி. நீயாவது போய் இந்த அநியாயத்தை கேட்கலாம் இல்லை” என்று ஊர்க்காரர் தேவாவிடம் மெல்ல கேட்க,

“யோவ் உன்னை மாதிரி நானும் வேடிக்கை பார்க்க வந்தவன் தான். போயா” என்றான் தேவா.

“என்ன இருந்தாலும் நம்ம அய்யாவோட மகன் நீங்க. பிரச்சனைன்னா வேடிக்கை பார்க்கலாமா” என்று ஆதங்கம் கொண்டார்.

“இங்க பாரு பெருசு இது அவங்க குடும்ப பிரச்சனை. அவங்கதான் பார்த்துக்கணும். நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாதயா” என்று வாகாக வண்டியில் சாய்ந்து நின்று கொண்டான்.

அங்கு துளசி வரமாட்டேன் என்று போராட, வளர்மதி கத்தி சண்டையிட, அத்தைக்காரியும் விடாமல் மருமகளை இழுக்க என்று தேவாவிற்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தது.

எங்கிருந்தோ வேகமாக வந்த வைரவேல் மகனை பார்வையாலே எரித்துவிட்டு, “துளசி கையை விடுங்கம்மா” என்று குரல் உயர்த்தி சத்தமிட்டார்.

“நீ யாருயா இடையில. பேசாம போயிடு” என்று ஒருவன் அடியாள் போல் வந்து மிரட்ட,

“நான் துளசியோட வக்கீல். இனி எதுவா இருந்தாலும் கோர்ட் மூலமா தான் பேச்சு. இப்போ கிளம்புங்க” என்றார் வைரவேல்.

“ஒஹ் வக்கீலா நீ?” என்று அவரை மேலும் கீழும் பார்த்து எல்லாம் நகைக்க, வைரவேலுக்கு பற்றிக்கொண்டு வந்தது.

“எங்க குடும்ப பிரச்சனையில வக்கீல், கோர்ட்டுக்கு எல்லாம் இடமில்லை. எல்லாம் நாங்க தான். நீ பேசாம எங்க முன்னாடி வாதாடு. நாங்களே தீர்ப்பு சொல்லிடுறோம். நாங்க தான் உனக்கு ஜட்ஜ்” என்று லொள்ளு பேச,

“இப்போ நீங்க கிளம்பலை நான் போலீசை கூப்பிட வேண்டி வரும். டேய் தேவா போன் பண்ணுடா” என்று மகனுக்கு சொல்ல,

“ம்ஹூம். என்னோட கிளையண்ட் இவங்க. நான் ஏன் போன் பண்ணனும்” என்றான் தேவா.

“அட நம்ம வக்கீலு. வா சார்” என்று இவன் கைப்பற்றி அழைத்து வந்தனர்.

“அதானே எல்லா பிராடு பசங்களுக்கும் இவன் தானே வக்காலத்து” வைரவேல் பொறுமினார்.

“உங்க சொந்தக்காரா சார்” என்று வைரவேலை காட்டி கேட்க.

“சித்தப்பா தான் சார். கேஸ் எதுவும் கிடைக்கலைன்னு இந்த கேஸ் எடுக்கிறார் போல. நான் பேசிக்கிறேன் சார்” என்றான் தேவா.

“டேய் நீ என்னடா பேசுறது? நான் நிச்சயம் இந்த கேஸ் நடத்துவேன்” என்று வைரவேல் குதிக்க,

“நம்ம லாயர் சார் சித்தப்பாவா போயிட்டீங்க. இதென்ன சில்லறை கேஸ். நாங்க உங்களுக்கு நல்ல பெரிய கேஸா கொடுக்கிறோம்” என்றார் பெரியவர்.

“யோவ் உங்க கேஸ் யாருக்குயா வேணும்? எல்லாத்தையும் இந்த கிரிமினல் பையனுக்கே கொடுங்க” என்று வைரவேல் சொல்ல,

“பெரியவர்கிட்ட மரியாதையா பேசணும். இல்லை அவ்வளவு தான்” என்று வைரவேல் நெஞ்சில் கை வைத்து மிரட்ட.

அவர் கோவமாக அவன் கையை தட்டிவிட்டவர், “மகனாடா நீ?” என்று தேவாவிடம் கேட்டார்.

“உங்களை யார் இதுக்குள்ள வர சொன்னா. பேசாம நில்லுங்க” என்று தேவா அவரிடம் பேசினான்.

“முடியாது”

“ச்சு இவரோட. சார். இன்னைக்கு விடுங்க. இன்னொரு நாள் பார்த்துப்போம்” என்றான் தேவா.

“உனக்காக போறோம் வக்கீல் தம்பி” என்ற பெரியவர்,

“மருமகளே சீக்கிரம் அங்க வந்திடுவ” என்று குடும்பத்தினரை அழைத்து சென்றார்.

தேவாவிற்கு கை கொடுத்து சென்றான் சந்தோஷ்.

“நீ எல்லாம் மனுஷன் தானா?” என்று தேவாவிடம் கேட்டார் வளர்மதி.

“நான் மனுஷன் இல்லைன்னு தானே உங்க பொண்ணை எனக்கு கொடுக்கலை. அப்புறம் என்ன புதுசா கேட்கிறீங்க” என்று அவருக்கு மேல் கேட்டான் தேவா.

“எதுக்கு எதை பேசுற?”

“வேறெதுக்கு இதை பேச? நீங்களே அதையும் சொல்லி கொடுத்திடுங்க டீச்சர்”

“ச்சே” என்று வளர்மதி முகத்தை சுளித்துவிட்டு செல்ல,

“ஹேய் பொம்மை நீ என்ன சும்மா நிக்கிற? கண்ணுல தண்ணீர் நின்னுடுச்சு பாரு. அழுது சீனை முடிச்சு வைச்சின்னா நான் திருப்தியா பார்த்துட்டு கிளம்பிடுவேன்” என்று துளசியிடம் சொன்னான் தேவா.

துளசிக்கு ஐயோ என்றிருந்தது. ஏற்கனவே கை இழுப்படத்தில் அங்கங்கு கீறி, சிவந்து  வீக்கம் கண்டிருந்தது.

இதில் இவன் பேச்சு இன்னும் தளர்வை கொடுக்க, “பொம்மை தான். அதனால தான் எனக்கு உணர்ச்சி இல்லை போல” என்று முனகி விட்டு சென்றாள்.

தேவா உதட்டை சுளித்து கொண்டவன், “கிளம்புங்க சித்தப்பா. உங்களால எல்லாம் சீக்கிரமே முடிஞ்சு” என்றான்.

“உன்னோட மனுஷன் வருவானா. போடா” என்று அவர் தனியே சென்றார்.

எனக்கென்ன போங்க என்று தேவா தோளை குலுக்கி கொண்டு கிளம்பினான்.