மஞ்சள் காட்டு மைனா 2

சட்ட கல்லூரி மைதானத்தில், “இன்னைக்கு என்ன பிளான்? எங்க போலாம்?” என்று திட்டமிட்டு கொண்டிருந்தான் தேவா.

“படத்துக்கு” என்று ஒருவன் சொல்ல,

“போரடிக்குதுடா. ரிலீஸ் ஆன எல்லா படத்தையும் பார்த்தாச்சு” தேவா சலித்து கொண்டான்.

“சும்மா அப்படியே பைக்ல சுத்திட்டு வருவோம்டா”

“நெக்ஸ்டு”

“டீக்கடைக்கு போவோம்டா”

“அதுதான் தோணுற நேரம் எல்லாம் போறோமேடா”

“அப்போ வேறெங்க தான் போறது”

“டேய் தேவா. விஷயம் தெரியுமா? வளர்மதி டீச்சர் பொண்ணு நம்ம காலேஜ்ல சேர்ந்திருக்கா” என்று ஒருவன் ஓடி வர,

“டேய் அது ஒரு புள்ள பூச்சி. அவ போய் நம்ம காலேஜ்க்கு வருவாளா?” என்றான் அருண்.

“உண்மையா தான் சொல்றேன். இதோ அங்க பாரு” என்று கைகாட்ட, வெள்ளை சுடியில் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் பெண்.

சொந்த ஊர் சேலம் என்பதால் அங்குள்ள சட்ட கல்லூரியிலே படித்து கொண்டிருந்தனர்.

தேவாவின் ஊர் பிள்ளைகள் அங்கு கணிசமாக இருக்க, எல்லோருக்கும் வளர்மதி டீச்சர் பற்றி நன்றாகவே தெரியும்.

அரசாங்கம் பிள்ளைகளை அடிக்க கூடாது என்ற சட்டம் கொண்டு வருவதற்குள், ஊரில் அந்த நேரம் படித்து கொண்டிருந்த எல்லா பிள்ளைகளும் அவரிடம் அடி வாங்கியிருந்தார்கள்.

தேவாவும் அதில் ஒருவனே!

ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை அவர் தான் கணித ஆசிரியர்.

மேத்ஸ் டீச்சர் வளர்மதி என்றாலே வேப்பங்காய் தான்!

இதோ இப்போதும் கல்லூரி வந்து விட்ட பிறகும் அந்த கசப்பு தொண்டையில் இறங்க, முகத்தை சுளித்து கொண்டான் தேவா.

உடன் அவன் கண்கள் விரல்களின் முட்டிக்கு சென்று வந்தது.

இப்போதும் அந்த வலி உணர முடிய, “வளர்மதி டீச்சர் பொண்ணை வலுவா கவனிக்கணும்டா மாப்பிள்ளை” என்றான் தேவா.

“கவனிச்சே ஆகணும்டா மாப்பிள்ளை. இத்தனை நாள் தான் அவ அம்மா பின்னாடியே மறைஞ்சிட்டிருந்தா. இப்போ சிக்கிட்டா இல்லை, நசுக்கிட வேண்டியது தான்” என்றான் மற்றவன்.

“ஹேய் வளர்மதி டீச்சர் பொண்ணே” என்று தேவா அவளை சத்தமாக அழைத்தான்.

அதில் அவள் இவர்களை மிரண்ட பார்வை பார்க்க, “இங்க வா” என்றான் தெனாவட்டாக நின்றிருந்த தேவா.

தயங்கி தயங்கி வந்த பெண்ணிடம், “உண்மையாவே நீ வளர்மதி டீச்சர் பொண்ணா?” என்று தான் முதலில் கேட்டான் தேவா.

“ஆமா” என்று அவள் முனக,

“ச்சு” என்று திரும்ப வேப்பங்காய் கசப்பு தொண்டையில் ஹெவியாக இறங்க,

“பேர் என்ன?” என்று கடுப்பாக கேட்டான்.

“துளிசி” என,

“நல்ல பேர் தான். ஆனா அதுக்காக நீ அவங்க பொண்ணு இல்லைன்னு ஆகிடாது தானே” என,

துளசி இதற்கு என்ன சொல்ல என்று பார்க்க, தேவா சட்டென அவள் முன் தன் கையை நீட்டினான்.

பெண் அதிர்ந்து சட்டென பின்னால் நகர, “ஹேய் என் கை முட்டியை பாரு” என்று உள்ளங்கையை திருப்பி காட்ட, பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை.

“விரல் முட்டி எல்லாம் கருப்பா, கொஞ்சம் வளைஞ்சது போல இல்லை?” என்று கேட்க,

துளசிக்கு அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை, ஏன் என்றால் நம் ஆள் திராவிட கலரில் தான் இருந்தார். இதில் அங்கு மட்டும் கருப்பாக இருக்கிறது என்றால்?

“என்ன பதில் சொல்லு” என்று மிரட்ட, பெண் குத்து மதிப்பாக தலை ஆட்டிவைத்தாள்.

“இது எப்படி ஆச்சு தெரியுமா உன் அம்மாவால. ஹோம் ஒர்க் பண்ணலைன்னு, டெஸ்ட்ல பெயில் ஆகிட்டேன்னு, கிளாஸ்ல பேசினேன்னு எல்லாத்துக்கும் மர ஸ்கெல் வைச்சு அடி”

இது எல்லாம் தப்பு தானே? துளசி முழித்தாள்.

“டேய் மாப்பிள்ளை பாருடா நம்மளை எல்லாம் அடிச்சு கருப்பாகிட்டு, அவங்க பொண்ணை மட்டும் பொன்னாட்டம் வச்சிருக்கிறதை” என்று ஒருவன் பொருமினான்.

“நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிடுவேன். கிளாஸ் பர்ஸ்ட் நான்” என்றாள் துளசி வேகமாக.

தேவா அவளை முறைத்து பார்க்க, மற்றவர்களும் பல்லை கடித்து கொண்டனர்.

“அப்போ நாங்க எல்லாம் மக்கு. நீ தான் புத்திசாலியாற்றே? உனக்கு இங்கென்ன வேலை?” என்று தேவா அவளை மிரட்டலாக கேட்க,

“அம்மா தான் லா படிக்க சேர்த்து விட்டாங்க” என்றாள் துளசி சுணங்கி.

“லா பிடிக்கலையா?”

“ம்ஹூம். எனக்கு அம்மா போல டீச்சருக்கு படிக்கணும்”

“அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட” என்றான் அருண்.

“லா படிக்க மட்டும் இவ சரிப்பட்டு வருவாளா? முழியை பாரு. ஒழுங்கா பாரு. இல்லை கண்ணை பிடிங்கிடுவேன்” என்று தேவா அவள் கண்களுக்குள் நெருங்கி வந்து விரலை நீட்டி கண்களை பிடுங்வது போல செய்ய, பெண்ணுக்கு அச்சத்தில் கண்கள் கலங்கி போனது.

மகள் தைரியமாக வர வேண்டும் என்று அவளுக்கு பிடிக்காத படிப்பில் சேர்த்து விட்டிருந்தார் வளர்மதி.

முதல் நாளே இவர்கள் வேறு வம்பிழுக்க, இன்னும் பிடிக்காமலே போனதின் விளைவு தான் அந்த கண்ணீர்.

“உடனே மூக்கை உறிஞ்சின கொன்னுடுவேன்” என்று அரட்ட,

துளசி கலங்கிய கண்களை அடக்கி கொண்டு நிற்க, “அதென்ன சொன்ன உடனே டேம் மூடிடுச்சு. அப்போ என்கிட்ட அழுகிற மாதிரி நடிச்சியா?”  என்று அதற்கும் கடித்து வைக்க, எதோ கிறுக்கனிடம் சிக்கி கொண்டது போல் நின்றாள் துளசி.

தேவா அவளை குறுகுறுவென பார்த்து நிற்க, “நான் க்ளாஸ்க்கு போகட்டாண்ணா?” என்று கேட்டாள் துளசி.

“அண்ணாவா? வளர்மதி டீச்சர் பொண்ணுக்கு எல்லாம் அண்ணா ஆக முடியாது. மாமா கூப்பிடு”

“டேய் தேவா” என்று அருண் கண்டிக்க,

“ஏன் டீச்சருக்கு என்னை விட மருமகன் கிடைச்சிடுவானா?” என்று கேட்டான் தேவா.

“நீ போற ரூட்டே சரியில்லை. யம்மா பொண்ணே நீ கிளம்பு” என்று அவளை போக சொல்ல, துளசி விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட்டாள்.

தேவாவிற்கு ரசனையான புன்னகை உதட்டோரம் உதயமானது.

இன்று

துளசி அவன் அலுவலகத்தில் விவாகரத்து வேண்டி நிற்க, தேவாவிற்கு உடலெல்லாம் பத்தி கொண்ட உணர்வு.

‘என்னை பிடிக்கலைன்னு சொல்லி இன்னோருத்தனை கல்யாணம் பண்ணிட்டு போனவ எந்த தைரியத்துல என் முன்னாடி வந்து நிக்கிறா?’

அவளை கண்டபடி கத்தி தீர்க்க வாய் பரபரத்தது.

வேகமாக சுவிங்கத்தை எடுத்து வாயில் போட்டு கொண்டவன், கால்களை வேகமாக ஆட்டினான்.

அவன் கையில் இருந்த பேனாவை டேபிளில் தட்டி, அதிக சத்தத்தை எழுப்பினான்.

ம்ஹூம். அவன் மனதின் இரைச்சலுக்கு முன் இந்த சத்தம் எல்லாம் போதவில்லை.

தன் முன் பரிதாபமாக அமர்ந்திருக்கும் பெண்ணை பார்க்க, பார்க்க பற்றி கொண்டு வந்தது.

‘இந்த கேஸ் கட்டை வைச்சு அவ மண்டைய பொளந்திடலாமா?’ வெகுதீவிர யோசனை.

“தேவா என்னடா யோசிக்கிற?” என்று வைரவேல் எதோ சொல்லி கொண்டிருந்தவர், மகனின் தீவிர பார்வையில் அவன் தோள் தட்டினார்.

“தேவா. உன்னை தான்” என்று திரும்ப தட்ட,

“ம்ம். இவ மண்டையை உடைச்சிட்டா என்னன்னு யோசிக்கிறேன்” என்றான்.

“ஐயோ” என்று துளசி கை தானே தலைக்கு போக,

“தேவா” என்று வைரவேல் மகனை கண்டித்தார்.

“இப்போ துளசி நம்ம கிளைண்ட். ஒழுங்கா பேசு” என,

“முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன்” என்று சட்டமாக சொன்னவன்,

“ஹேய் ஒழுங்கா எழுந்திருச்சு ஓடிடு, இல்லை கண்டிப்பா உன்னை எதாவது பண்ணிடுவேன்” என்றான் அவளிடமே மிரட்டலாக.

துளசிக்கு கண்கள் கலங்கி போனதுடன், சட்டென பெண் தலை குனிந்து கொண்டாள்.

“ஹேய், என் முன்னாடி அழுது சிம்பதி கிரியேட் பண்ண தொலைச்சிடுவேன்”

“தேவா. என்ன பண்ணிட்டிருக்க நீ? புள்ள ஏற்கனவே ரொம்ப நொந்து போய் வந்திருக்கு. நம்ம ஊர்ல ஒருத்தன் கூட துளசியோட கேஸ் எடுக்க மாட்டேங்கிறான்”

“அதான் தெரியுமே. எல்லார்கிட்டயும் போய் கெஞ்சிட்டு இருந்தாளே”

“தெரிஞ்சும் ஏண்டா இப்படி பேசுற?”

“பின்ன இவ எல்லார்கிட்டயும் கேட்டுட்டு கடைசியா போனா போகுதுன்னு என்கிட்ட வருவா? நான் இவளுக்கு செய்யணுமா?” என்று எகிறினான்.

“நீங்க எனக்கு செய்ய மாட்டீங்கன்னு நினைச்சு தான் வரலை” என்று துளசி சொல்ல,

“தெரியுது இல்லை. அன்னைக்கு என்னை வேணாம் சொல்லிட்டு, அந்த ஆணழகனை கட்டிட்டு போன இல்லை. அப்படியே ஓடிடு”

“ப்ளீஸ். ஏற்கனவே நிறைய ஓடிட்டேன். இனியும் என்னால முடியல” துளசி சோர்ந்த விழிகளுடன் இவனை கண்டாள்.

விரும்பிய பெண்ணின் வலி இவனையும் எங்கோ தாக்கி செல்ல, ‘ம்ஹூம். கூடாது. இவளுக்கு நான் எதுவும் செய்ய மாட்டேன்’ திரும்ப இறுக்கி பிடித்து கொண்டான்.

தேவாவின் வலி அவனுக்கு நினைவிற்கு வந்துவிட்டது.

காதலை கெஞ்சி கேட்டவன் இவன். கிடைக்கவில்லை.

இப்போது எதற்காக நான் இவளுக்கு யோசிக்க வேண்டும். என் வலியை இவளும் படட்டும். குரூர எண்ணம் அவன் முகத்தில் ஓர் விபரீத புன்னகையை கொண்டு வந்தது.

“ஓட முடியலையா?” என்று கேட்டான்.

துளசிக்கு அவன் பாவனை நல்லதாக படவில்லை.

“சித்தப்பா ஓட முடியலைன்னா என்ன ஆகும்? கீழே விழுந்திடுவாங்களா? விழட்டுமே. அதனால இப்போ என்ன? யாருக்கு லாஸ். ஒருத்தருக்கும் இல்லை. அப்படியே மண்ணோடு மண்ணா இரு. உனக்கு அது ஒன்னும் புதுசு இல்லை தானே?” என,

துளசி அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. அமைதியாக வெளியேறிவிட்டாள்.

வைரவேலுக்கு மகனின் இந்த குணம் அறவே பிடிக்கவில்லை. “என்னடா ஆச்சு உனக்கு?” என்று பொருமினார் மனிதர்.

“உனக்கு என்ன ஆச்சு முதல்ல?  நாலு பேர் பார்க்க உன் மகனை பிடிக்கலைன்னு சொன்னவளுக்கு போய் கொடி பிடிச்சிட்டு நிக்கிற?” என்று அவருக்கு மேல் எகிறினான் மகன்.

“தேவா. புரிஞ்சுக்கோடா. உன் விஷயம் வேற, துளசி விஷயம் வேற”

“எனக்கு எல்லாம் ஒன்னு தான். டேய் அருண் அந்த போர்ஜெரி பண்ண ஆள் எங்கன்னு கேளுடா” என்று நண்பனை சத்தமிட்டான்.

“வெளியே தான் இருக்கார் தேவா. வர சொல்றேன்” என்றவன், கையோடு ஒருவரை அழைத்து வந்தான்.