மஞ்சள் காட்டு மைனா 19 2 10078 “நாங்க கிளம்புறோம்” என்ற ஜெயலட்சுமியை மகன் மாலை வரை விடவில்லை. “எல்லாமே உன் இஷ்டமா தேவா. நாந்தான் உன் அம்மா ஞாபகம் வைச்சுக்கோ. வளர்ந்துட்டா என்னை கஷ்டப்படத்தியே ஆகணுமா என்ன?” என்று மகனின் தோளில் அடிப்போட்டார் அன்னை. “லட்சுமி. அவனுக்கு எதாவது காரணம் இருக்கு. விடு” என்று பசுபதி சொல்ல. “என்ன காரணமா இருந்தாலும் இப்படி பண்ணலாமாங்க. நம்ம வீட்டுக்கு வராம. எனக்கென்ன இன்னொரு மகனா இருக்கான். பொண்டாட்டியோட வந்து விளக்கேத்த? இவன் ஒருத்தனை தான் பெத்தேன். இவன் என்னடான்னா“ “ம்மா. அப்போ இன்னொரு மகன் இருந்தா என்னை டீல்ல விட்டிருப்ப இல்லை நீ” என்று மகன் கடுப்பாகிவிட்டான். “ஆமா உன் அராஜகத்துக்கு கண்டிப்பா விட்டிருப்பேன். போடா“ “அண்ணி. நீங்க புது வீட்டுக்கு சீக்கிரம் கிரஹப்பிரவேசம் பண்ண நாள் பாருங்க” என்றார் வைரவேல். அதில் தான் அன்னையும், தந்தையும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துக்கொள்ள, “சித்தப்பா” என்றான் தேவா ஆட்சேபமாக. “அண்ணி கஷ்டப்படுறாங்க தேவா. என்னால பார்க்க முடியாது“ “அப்போ சரிதான். உன் பொண்டாட்டி இடது கால் வச்சு வீட்டுக்குள்ள வந்ததுக்கு தான் தனி வீடு கட்டுறேன்னு நான் சொன்னது சரிதான் இல்லை” என்றார் ஜெயலட்சுமி. “ம்மா. அவர் ஏதோ சொல்றார்“ “நம்பிட்டேன் தேவா. ஏங்க சீக்கிரம் நாள் பாருங்க. புது வீட்ல முடிஞ்ச வேலை வரைக்கும் போதும். மீதி எல்லாம் அப்புறம் பார்த்துப்போம்” என்று கணவருக்கு சொல்லி வீட்டுக்குள் வந்துவிட்டார். ஆண்கள் தோட்டத்தில் வைத்து நாள் பற்றி பேசி முடிவெடுத்தனர். இரு மகள்களும் அறையில் தங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்துகொண்டிருக்க, வளர்மதியும் மாலதியும் டீ போட்டு கொண்டிருந்தனர். “துளசி எங்கண்ணி?” என்று கேட்டு ஹாலுக்கு செல்ல. “அத்தை” என்று எழுந்தாள் பெண். மாமியாரும், மருமகளும் இப்போது தான் தனியாக சந்திக்க, துளசிக்குள் லேசான கலக்கம். ஜெயலட்சுமி “உட்காரு வா” என்று அவளுடன் இருக்கையில் அமர்ந்து கொண்டபடி, “இன்னும் கொஞ்ச நாள் இங்க தான் இருப்பீங்க. புது வீடு பால் காய்ச்சிட்டு அங்க குடி போயிடலாம்” என்றார். “நான் எதுவும் அவர்கிட்ட சொல்லலை அத்தை” என்று துளசி சொல்ல. ஜெயலட்சுமி புருவம் சுருங்கியது. புருஷன், பொண்டாட்டி சமாச்சாரம். அவங்களுக்குள்ள பார்த்துக்கட்டும் “எனக்கு தெரியும் துளசி. உன் புருஷனை பத்தி நீயும் கொஞ்சம் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு” என்றார். வளர்மதி இவர்களுக்கு டீ எடுத்துவர, மற்ற எல்லோரும் கூட ஹாலுக்கு வந்துவிட்டனர். ஜெயலட்சுமி சாதாரணமாக பேச, மகனை வம்பிழுக்க என்று சூழ்நிலை இயல்பிற்கு திரும்பியது. வளர்மதிக்கு நிம்மதியானது. அகல்யா ஏதோ சொல்லி அக்காவின் காதை கடிக்க, செல்வி புன்னகைத்தாள். “என்ன சிரிப்பு? எனக்கும் சொல்லுங்கக்கா” என்று இருவருக்கும் இடையில் அமர்ந்தான் தம்பி. “ம்ம். அதுக்குள்ள அம்மாவுக்கு மந்திரம் போட்டுட்டேன்னு சொன்னேன்” என்று அகல்யா சொல்ல, “க்கா” என்றான் தம்பி. “மச்சான், அப்படியென்ன மந்திரம்ன்னு சொன்னீங்கன்னா நானும் உங்க அக்காக்கு போடுவேன்” என்று சின்ன மாமா கிண்டலாக கேட்க. “அக்காக்கு எல்லாம் எந்த மந்திரமும் வேலைக்கு ஆகாது. என் அக்கா சூப்பர் ஸ்ட்ராங்” “அப்போ என் பொண்டாட்டி வீக்னு சொல்றியா?” என்று பசுபதி இடையில் வர, “வீக்கா? என் அம்மாவை நோஞ்சான் சொல்றீங்களாப்பா? தப்பு. இது ரொம்ப தப்புப்பா” என்றான் மகன். “நான் உங்களுக்கு நோஞ்சானா? அதுவும் மருமகங்க முன்னாடி. உங்களை வீட்டுக்கு வாங்க” என்று ஜெயலட்சுமி இப்போதே கணவரை ரவுண்ட் கட்ட தயாராக ஆரம்பித்தார். தேவா தந்தையை பார்த்து கமுக்கமாக சிரிக்க, “இது எனக்கு தேவைதான்” என்றார் பசுபதி. தலைவர் கெத்து எல்லாம் ஊருக்குள் தான். வீட்டுக்குள் வந்துவிட்டால் அவர் சராசரி கணவன் தான் என்பதை ஜெயலட்சுமி உணர வைத்துவிடுவார். “பார்த்து இருங்க. அண்ணியை ரொம்ப தொந்தரவு கொடுக்காத. அவங்க பாவம்” என்று ஜெயலட்சுமி கிளம்பும் முன் மகனுக்கு புத்தி சொல்ல, “அவங்களா பாவம். இந்த முட்டியை கொஞ்சம் பாருங்க. லைட்டா வளைஞ்சு இல்லை. அதுக்கு காரணம் இவங்க தான்” என்று மாமியாரை கை காட்டியவன். “எதுக்கும் நீங்க மிஸ்கிட்ட சொல்லிட்டு போங்க. சட்டுன்னு கம்பை எடுத்துட கூடாதுன்னு” என்றான் தேவா. “எடுத்தாலும் தப்பில்லை. அண்ணி அங்க வரதுக்குள்ள இந்த எடக்கு மடக்கை எல்லாம் கொஞ்சம் தட்டி அனுப்பி விடுங்க. மேய்க்க முடியலை என்னால” என்று கிளம்பினார் அன்னை. “ம்மா” என்ற மகனின் கத்தல் எல்லாம் அன்னையின் காதில் விழுகவில்லை. வைரவேல், மாலதி தம்பதி அங்கேயே இருக்க, இரவு உணவு சாதாரண பேச்சுடன் முடிந்தது. மாலதி அதன் பின் துளசியை அலங்காரம் செய்ய சொல்லி, அறைக்குள் அனுப்பி வைத்தார். தேவா கட்டிலில் அமர்ந்திருக்க, துளசி கதவை மூடி வந்தாள். எதாவது பேசுவான் என்று பார்க்க, முழு மௌனம். “என்னாச்சு?” என்று துளசி கேட்க, “உண்மையிலே எனக்கு கிறுக்கு பிடிச்சிருக்குன்னு தான் தோணுது” என்றான் தேவா. துளசி இதென்ன என்று விழிக்க, “எங்கம்மா அடிக்கடி சொல்வாங்க. எனக்கு உன் கிறுக்கு பிடிச்சிருக்குன்னு. உண்மை தான் போல. இன்னைக்கு நான் பண்ணது எல்லாம் அதைத்தான் காட்டுது” என்றான். “நான் என்ன பண்ணேன். ப்ளீஸ் சொல்லுங்க” என்று துளசி அவனக்கருகில் சென்று கேட்க, நிமிர்ந்து பார்த்தவன், “இல்லை. இப்போ எதுவும் பேச வேண்டாம். தூங்கலாம்” என்றான். “ஏன்? நாம பேசி முடிச்சிடலாமே. எனக்கு உறுத்தலா இருக்கு“ “பேசினா மொத்தமா முடிஞ்சிடும். பரவாயில்லையா“ “எந்த அர்த்தத்துல சொல்றீங்க?” என்று பெண் கட்டிலை பார்க்க, “ஹாஹா” என்று தேவா எழுந்து நின்று சிரித்தான். அந்த சிரிப்பில் ஜீவன் இல்லை. ஆனாலும் சிரித்தான். “நீ இரண்டாவது. ஏற்கனவே உன்னை ஒருத்தன் தொட்டிருக்கான். அப்புறம் எப்படி நான் உன்னை தொடுவேன். ஆஹ்ன்?” என்று கேட்டான். துளசி உதட்டை அழுத்தமாக மூடி திறந்தவள், “இதை கேட்டதுக்கு அப்பறம் தான் என்னை பொண்ணு கேட்க சொன்னீங்க இல்லை” என்று சரியான இடத்திற்கு வந்தாள் பெண். “ஆமா” என்றான் தேவா. “ஏன்? ஏன் இப்படி? நான் எதார்த்தத்தை சொன்னேன்“ “உனக்கு எதார்த்தம். ஆனா எனக்கு? நான் உனக்கு யாருமில்லை. ஆனா நீ எனக்கு?” “உங்களை காயப்படுத்தியிருந்தா சாரி. ஆனா எனக்கு இல்லாத ஒண்ணை நான் எப்படி பீல் பண்ண முடியும்?” “சோ என் காதலை நீ பீல் பண்ணதே இல்லை“ “இல்” என்று சொல்ல வந்து வாய் மூடி கொண்டாள். வைரவேல் திருமணத்தில் உணர்ந்தாளே! எந்த பெண்ணிலும் என்னை தேடும் அவன் காதலை கண் கூடாக கண்டாளே! “எனக்கு நேரம் கொடுங்க” என்று கேட்டாள். “எதுக்கு? மொத்தமா என்னை முடிச்சு விடவா?” என்று தேவா பதிலுக்கு கேட்டான். துளசி அவனை கண்களை சுருக்கி பார்க்க, தேவா அவளை உறுத்து பார்த்தான். இருவர் கண்களும் அவரவர் கதை பேசியது. துளசி கொஞ்சம் தயங்கி அவன் விரல் பற்றினாள். தேவா விலக்கவில்லை. துளசி அவன் விரலை தன் கைகளுடன் பிணைத்து கொண்டாள். “உனக்கு எப்போவும் என் விரல் மட்டும் போதுமா?” என்று கணவன் கேட்க, “இப்போதைக்கு எனக்கு இருக்கிறது அது ஒன்னு தான்” என்றாள் துளசி. “மொத்தத்தையும் கொடுக்கிறேன். எடுத்துக்கோ” என்று அவளை நெருங்கி நின்றான். “என். என்ன பண்றீங்க?” என்று துளசி பின் நகர, அவளின் முழங்கை பற்றி தனக்கருகில் நிறுத்தியவன், “விரல் மட்டுமில்லை. மொத்தமா என்னை எடுத்துக்கோ சொல்றேன்” என்றான். “விளையாடாதீங்க“ “ச்சு. இல்லை. நிஜமா தான் சொல்றேன். பேச்சை நிறுத்திக்கலாம். வேற ஏதாவது செய்யலாம்“ “அதுக்காக நான், என்ன செய்ய?” “என்னால எதுவும் செய்ய முடியாது. ஒரு மாதிரி வலிக்குது, கோவமா வருது“ “படுத்து தூங்குங்க. சரியா போயிடும்“ “இல்லை போகாது” “நான் உங்களுக்கு தலை கோதி விடுறேன். வாங்க. தூங்குங்க. தூங்கலாம்” என்று கட்டிலில் அமர்ந்தாள். “தூக்கம் வரலைன்னா நீ எதாவது செஞ்சு தான் ஆகணும் சொல்லிட்டேன்” என்ற மிரட்டலோடு படுக்க, துளசி தயங்கி அவன் தலை கோதி கொடுத்தாள். “கண்ணை மூடினா தானே தூக்கம் வரும்” என்று கொட்ட, கொட்ட விழித்திருந்தவனிடம் சொன்னாள். “தூக்கம் வந்தா தானே கண்ணை மூடிக்குவேன். நீ ஒழுங்கா கோதி கொடு“ துளசி மேலாக கோதி கொடுக்க, “இங்க தூக்கம் வரலை” என்று சட்டென அவள் மடியில் படுத்துவிட்டான். “ஆஹ்” என்று பெண் அதிர, “ம்ம். இப்போ சரியா இருக்கு. தூக்கம் வந்திடும் நினைக்கிறேன்” என்றான். “கொஞ்சம் தள்ளி படுங்க” என்று இடையில் முட்டியவன் தலையை லேசாக தள்ளிவிட்டவள், நன்றாக கோதி கொடுத்தாள். “நலங்கு வாசனை உன்மேல” “உங்க மேலயும் தான்” துளசி அவன் கழுத்தோர முடிகளை கோதும் போது சிலிர்த்து போனான் தேவா. “ம்ஹூம். அங்க போகாத” என்று அவள் கை பற்றி மாற்றிவிட்டான். துளசி அவளின் தயக்கம் விலகி நன்றாக வருடிவிட, “பொண்டாட்டி கட்டிக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு” என்றவன், அந்த சுகத்துலே கண் அசந்தான்.