“அப்போ தாலி எடுக்க நீ வருவ” என்றார் ஜெயலட்சுமி கிண்டலாக.
“ஏதாவது சொல்லு மகனே. வாங்கிக்க போறவளை கூட்டிட்டு போங்கன்னு” என்று கேட்க.
“ம்மா” என்றான் மகன் கடுப்பாக.
“மூணு முடிச்சு போட போற மகாராசா நீ தான். ஒழுங்கு எல்லாத்துக்கும் வந்து சேரு” என்று மிரட்டிவிட்டு சென்றார்.
மறுநாள் துளசி சுருங்கிய முகத்துடன் முகூர்த்த புடவை பார்த்து கொண்டிருந்தாள். தேவா ஏன் வரவில்லை?
இப்பொது வரை அவள் தேவாவை பார்க்கவில்லை. “கல்யாணம் முடியற வரை ஆபிஸ் வர வேணாம்மா” என்று வைரவேல் சொல்லியிருக்க, அங்கும் அவளால் தேவாவை காண முடிவதில்லை.
‘ஒருவேளை அவருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோ?’ மாலதி அத்தையும் முதல்ல அப்படித்தானே சொன்னாங்க.
“இந்த புடவை பாரு துளசி” என்று செல்வி எடுத்து காட்ட,
“நல்லா இருக்கு அண்ணி” என்றாள் பெண்.
“அகல்யா நேரா கல்யாணத்துக்கு வந்துடுவா. அவங்க மாமனார், மாமியார் வந்திருக்காங்க” என்று துளசிக்கு, வளர்மதிக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ஜெயலட்சுமி.
உறுதிக்கு அழைக்காத உறவினர்களை எல்லாம் புடவை எடுக்க அழைத்து சமாதானம் செய்தார் ஜெயலட்சுமி. அதனால் ஒரு கூட்டமே கூடிவிட்டது. ஜெயலட்சுமி எல்லோரையும் மருமகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
“தேவா குடும்பம் பெருசு துளசி. பார்த்து நடந்துக்கோ” என்று வளர்மதி மகளிடம் சொல்லியிருக்க, துளசி மிதமான புன்னகையுடனே எல்லோரையும் எதிர்கொண்டாள்.
“நேரம் ஆச்சு. மருமகளை புடவை பார்க்க விடுங்க” என்று பாட்டி ஒருவர் சொன்ன பின்னே, துளசி சாய்வாக அமர்ந்தாள்.
“பெரிய பார்டர் வேணாம் அண்ணி” என்று செல்வியிடம் துளசி சொல்ல,
“சரி துளசி” என்று உடனே வேறு புடவைகளை அவள் முன் விரித்தனர்.
மனதுக்குள் ஏதேதோ குழப்பம் சூழ்ந்திருக்க, கைகள் தன்னை போல புடவையை விலக்கி கொண்டிருந்தது.
“என்னாச்சு துளசி இங்க எதுவும் பிடிக்கலையா? வேற கடைக்கு போலாமா?” என்று செல்வி கேட்க,
“உங்க தம்பி வரலையா அண்ணி” என்று தன் உறுத்தலை கேட்டுவிட்டாள் துளசி.
“வரேன்னு தான் சொன்னான் துளசி. இரு போன் பண்ணி பார்க்கிறேன்” என்றாள் செல்வி. இருவரும் பேசி கொள்வதில்லை என்பது புரிந்தது.
“க்கா. பத்திரிக்கை அடிக்க கொடுக்க வந்துட்டேன்” என்றான் தேவா.
தேவா பக்கம் அமைதி. பின், “அவகிட்ட போனை கொடுங்கக்கா” என்றான்.
“இந்தா பேசணுமாம்” என்று கொடுக்க,
துளசிக்கு ஏனோ பதட்டம். இதென்ன புதுசா? போனை இறுக்கமாக பற்றி காதில் வைக்க, “என்னை கேட்டியா?” என்று தேவா அவள் காதில் கேட்டான்.
“ஆ. க்கும், ஆமா” என்றாள் துளசி.
தேவா அப்படியே போனை வைத்துவிட்டான். துளசி புரியாமல் போனை எடுத்து பார்க்க, “வைச்சுட்டானா? பத்திரிக்கை அடிக்க போயிருக்கான்” என்று செல்வி போனை வாங்கி கொண்டாள்.
“தாலி எடுத்துட்டு அப்படியே கிளம்பிட்டான். நல்ல நேரத்தில பத்திரிக்கையும் அடிக்க கொடுக்கணும் தானே” என்று செல்வி சொல்ல, துளசி வேறென்ன பேச?
முகூர்த்த புடவையும் அடுத்த சில நிமிடத்தில் அமைந்து போனது. துளசி விரும்பியே எடுத்தாள். எல்லோருக்கும் திருப்தி.
வளர்மதி அவரின் பிறந்த வீட்டினரை எதற்கும் அழைக்கவில்லை. கோர்ட்டில் அவர் அண்ணன் சாட்சி சொன்ன கோவம்.
“கல்யாணத்துக்கு கூப்பிடுறேன். அதுவும் கடமைக்கு தான்” என்றுவிட்டவர், பத்திரிக்கை வரவும் தான் மட்டும் சென்று வைத்தார்.
“என்னை மன்னிச்சிடுமா. சூழ்நிலை” என்று அவரின் அண்ணன் வருந்தி மன்னிப்பை வேண்டியதுடன், தாய் மாமாவாக திருமணத்திற்கு முன்தினமே வந்துவிட்டார்.
துளசியின் வீடு அமைதியாக திருமண நாளை எதிர்கொள்ள, தேவா வீட்டில் உறவுகள் சூழ்ந்து கலாட்டாவாக எதிர் கொண்டனர்.
“ஏதோ காதல்ன்னு கேள்விப்பட்டேன் மாப்பிள்ளை. இதுக்கு தான் தேங்காய் தோப்பு எல்லாம் கேட்டீங்களா?” என்று ஜெயலட்சுமியின் ஒன்று விட்ட அண்ணன் தேவாவை கிண்டல் செய்தார்.
“இது எப்போ நடந்துச்சு?” என்று உறவுகள் கதை கேட்க,
“மாமா. தேங்காய் தோப்பு கொடுக்க மாட்டாமா ஏதேதோ சொல்றார்” என்று தேவா அவரை திரும்ப பேச,
“சரி. தேங்காய் தோப்பு உனக்கு தான். கல்யாணத்தை வைச்சுக்கலாமா?” என்று அவர் நிற்க.
“அய்யாக்கு மில்லு வர போகுது. போங்க மாமோய்” என்றான் தேவா.
“டேய். பொண்ணு வீட்ல கேட்டா என்ன நினைப்பாங்க?” என்று பெரியப்பா அவனை கண்டிக்க,
“க்கும். ண்ணா, இவன் நேராவே மில் கொடுங்கனு கேட்டவன் தான்” என்றார் வைரவேல்.
“எப்படியோ உன் அடாவடிக்கும், துளசியோட அமைதிக்கும் சரியா போகும் போ” என,
“யார் அந்த போந்தா கோழி அமைதியா? அவ்வா. அவ்வா. அப்படி நடிச்சு ஏமாத்துறா” என்று வாயில் அடித்தான் தேவா.
“இவனுக்கு எல்லாம் விளையாட்டு தான். நாம நலங்கு வேலையை ஆரம்பிப்போம்” என்று பசுபதி சொல்ல,
“தேவா உன் போன் ரொம்ப நேரமா அடிக்குது” என்று எடுத்து வந்தனர்.
ஆனந்தி தான் அழைத்திருந்தவர், “சந்தோஷ் காணலை” என்றார்.
சென்னையில் தான் அவர்கள் இப்போது இருக்க, “சுந்தரம் சார்?” என்று கேட்டான் தேவா.
“அவர் ஏதோ வேலைன்னு நேத்து தான் கிளம்பினார் தேவா. சந்தேகமா இருக்கு” என,
தேவா உடனே தயாராக சொல்லி வைத்திருந்த ஆட்களுக்கும், போலீசுக்கும் தகவல் கொடுத்தான்.
துளசி வீட்டுக்கு ஏற்கனவே மறைமுக காவல் இருந்தாலும், இப்போது வெளிப்படையாக அவளின் வீட்டின் முன் ஆட்களை நிறுத்தி வைத்தனர்.
“டீச்சர் வீடு வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்” என்று தேவா கிளம்ப,
“இல்லை. கூடாது தேவா. நீ வீட்டை விட்டு நகர கூடாது. நான் போறேன்” என்று வைரவேல் உடன் சில இளைஞர்களை அழைத்து கொண்டு சென்றார்.
கொண்டாட்டம் அப்படியே மாறிப்போக, தேவா கடமைக்கு நலங்கு வந்து கொண்டவன், போன் எடுத்து தனியே சென்றான்.
வளர்மதி வீட்டின் கேமரா இணைப்பு வழக்கு ஆரம்பித்த தினமே வாங்கி கொண்டிருக்க, அதில் பார்த்து கொண்டவன், அருணை அழைத்தான்.