“உன் தம்பிக்கு பிடிச்சிருக்கு” என்று ஜெயலட்சுமி சொல்ல,
“பிடிச்சிருக்குன்னா? லவ் பண்றானா?” என்று அகல்யா கேட்டாள்.
மருமகன்கள் முன்பு என்ன சொல்ல என்று அன்னை தயங்க, “அவன் பல வருஷமா துளசியை விரும்பிட்டு தான் இருக்கான். என்னமோ முதல்ல அவனுக்கு கூடிவரலை. இப்போ அமையுது. சேர்த்து வைப்போம்” என்றாள் செல்வி.
“ஏன் முன்ன?” என்று அகல்யா ஆராய வர.
“அகல்யா. முதல்ல வந்த வேலையை பாரு. அப்புறம் கதை கேட்கலாம்” என்றுவிட்ட செல்வி, “ம்மா. கையோட உறுதி பண்ணிட்டு வர மாதிரி தானே?” என்று அன்னையிடம் கேட்டாள்.
“வேணாம்ன்னு சொல்ல என்ன இருக்கு? என் தம்பியை விட அவளுக்கு மாப்பிள்ளை கிடைப்பானா என்ன? அதுவும் இப்போ அவளுக்கு இரண்டாவது”
“அகல்யா” என்றார் பசுபதி கோவமாக.
“இதுதான் நீ துளசியை பத்தி பேசுறது கடைசியா இருக்கணும். துளசி தான் உன் தம்பிக்கு பொண்டாட்டி. இந்த வீட்டு மருமக. அதை மனசுல வைச்சுட்டு நடந்துக்கோ” என்றார் கட்டளையாக.
“ப்பா. நான் தப்பா ஏதும் சொல்லலை. தேவாவை வேணாம்ன்னு சொல்ல என்ன இருக்குன்னு”
“ஏன் உன் தம்பி வானத்துல இருந்து குதிச்சிட்டானா? அவன்கிட்ட குறை இருக்காதா என்ன? துளசி முன்னமே உன் தம்பியை வேணாம்ன்னு தான் சொல்லுச்சு. இப்போவும் துளசி எடுக்கிறது தான் முடிவு” என்றார்.
பசுபதியின் பேச்சிலே துளசி விஷயத்தில் எதுவும் பேசிவிட முடியாது என்று அகல்யா மட்டுமில்லை, வீட்டின் மருமகன்களும் தெரிந்து கொண்டனர்.
“அதான் துளசி முடிவுன்னு தானே அப்பா சொன்னார். அவ முதல்ல சரி சொல்லட்டும். அப்புறம் நாம பொண்ணு கேட்டு போலாம்” என்றாள் அகல்யா அம்மாவிடம்.
ஜெயலட்சுமிக்கும் சின்ன மகள் சொல்வது சரியென்று தோன்றியது. மருமகன்களை எல்லாம் அழைத்து கொண்டு சென்று துளசி மறுத்துவிட்டாள் என்ன செய்வது என்ற கேள்வி அவருக்குள்ளும் உண்டு.
வைரவேல் அழைப்பிற்காக எல்லாம் காத்திருந்தனர். மாலதியுடன் அவர் வளர்மதி, துளசியிடம் பேச சென்றிருக்கிறார்.
மில்லில் வைத்து வைரவேல் விஷயத்தை சொல்ல, “தேவா கேட்க சொன்னானா? இல்லை நீங்களே?” என்று வளர்மதி கேட்க வர,
“தேவாவை பொறுத்தவரை அவன் சொல்றது தான்மா. துளசியை கேட்க சொல்லி அவன்தான் சொன்னான்” என்றார் வைரவேல்.
வளர்மதி மகளை பார்க்க, அவள் விரல்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
வைரவேல்க்கு என்ன சொல்ல என்று யோசனை. தேவா எந்த மனநிலையில் பெண் கேட்க சொன்னான் என்று அவருக்கு தெரியும். ஆனால் அதுமட்டும் தான் காரணமா என்பதும் அவருக்கு உறுதியாக தெரியாது.
காதல் கொண்ட மனதின் தள்ளாட்டம் உணர்ந்தவர் அவர்!
“உனக்கு தேவா மேல நம்பிக்கை இருந்தா சம்மதம் சொல்லு துளசி. மத்தபடி அவன் ஏன் வேணாம் சொன்னான், ஏன் வேணும்ன்னு சொல்றான் எல்லாம் எனக்கு தெரியலம்மா” என்றார் வைரவேல்.
தேவா மேல நம்பிக்கை இருந்தா? நம்பிக்கை! தேவா மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகமே!
இன்னும் சொல்ல போனால் துளசிக்கு தேவா மேல் இருப்பதும் அது ஒன்று தான்!
அதையே வைரவேல் முன்னிறுத்தி கேட்கும் போது துளசிக்கு மறுக்க வேண்டும் என்று தோன்றவில்லை.
யார் யாரையோ நம்பி ஏமாந்தாகிவிட்டது! தேவாவை நம்பாமல் போவதற்கும் என்ன இருக்கு? ஒன்றுமில்லை. ஏமாற்ற மாட்டான். உறுதியாக மனது சொன்னது.
ஆனாலும் ஏனோ ஓர் தடுமாற்றம். முழுதாக சம்மதம் சொல்ல மனம்வரவில்லை.
“எனக்கு சம்மதம் தான் துளசி. இப்போ மட்டுமில்லை, முன்னமும்” என்றார் வளர்மதி மகளின் கேள்வி உணர்ந்தவராக.
“அப்புறம் ஏன்மா சந்தோஷ்?” மகள் வருத்தத்துடன் கேட்க,
“உனக்கு தேவாவை பிடிக்கலை. சந்தோஷ் விஷயத்துல நமக்கு நிறைய காரணங்கள் உண்டு. அப்பா, அவன் அமைதி, சொந்தம்ன்னு பல. அதோட”
“சொல்லுங்கம்மா” என்றாள் அம்மா அமைதியாகிவிட்டதில்.
“நமக்குள்ளும் பெருசா புரிதல் இல்லை துளசி” என்றார் வளர்மதி.
இத்தனை நாட்கள் அம்மாவும், மகளும் பேச தயங்கிய விஷயம் இது.
“துளசின்னா இப்படி தான், அவள் குணம் இதுதான், அவள் பேச்சு மெல்லத்தான், கொஞ்சம் பயந்த சுபாவம் தான்னு என்னால உன்னை அப்படியே ஏத்துக்க முடியாம போச்சு. உன் அப்பா இருந்தவரை உன் கவலை எனக்கு இல்லை. எதுவா இருந்தாலும் அவர் பார்த்துப்பார்ன்னு நம்பிக்கை”
“ஆனா அவர் நம்மளை விட்டு போனதுக்கு அப்புறம் எனக்குள்ள புதுசா முளைச்ச பாதுகாப்பின்மை உன்கிட்ட என்னை அப்படி நடக்க வைச்சிடுச்சு. நீயும் என்னை விட்டு விலக ஆரம்பிச்ச, நமக்குள்ள பேச்சு குறைஞ்சு போச்சு”
“நானும் நீயும் மட்டும் தான். உன் வாழ்க்கை பத்தின கவலை. தேவாவை உனக்கு பிடிக்கலை சொல்லிட்ட, உன்னை வற்புறுத்தவா முடியும்? அந்த நேரத்துல தான் சந்தோஷ். ஏமாந்துட்டோம். நமக்கு நாமே ஆறுதலா மாறிக்கிட்டோம். முன்ன மாதிரி பேசுறோம்”
“ஒருவகையில் நடந்த எல்லாமே நமக்கு படிப்பினை தான். தேவாவை பத்தின உன் புரிதல் மாறியிருக்கு. அவன் கொஞ்சம் அடாவடி, முரடு. மத்தபடி நல்லவன். பெத்தவங்க சொல்றதை விட டீச்சர் சொல்றது சரியா இருக்கும்” என்றார்.
“ம்ஹூம். நீ ஏத்துக்க மாட்ட. நான் அவனுக்காக பேசுறேன்னு கோவம் தான் வந்திருக்கும்” என்று மகளை புரிந்தவராக சொன்னார்.
உண்மை! துளசி ஒத்து கொண்டாள்.
இரவு உணவின் போதும் ஏதோ யோசித்தபடி உண்ண, “துளசி. தேவா வேணாம்ன்னா பிரச்சனையில்லை. வேற மாப்பிள்ளை இருக்காங்க” என்றார் வளர்மதி.
“அவங்க எப்படினு தெரியாதுமா” என்றாள் துளசி.
“விசாரிச்சுட்டு தான் நடக்கும் துளசி. பயப்படாத” என்றார்.
அந்த நேரம் ஆனந்தி போனில் அழைக்க, கேள்வியாக பார்த்தபடி எடுத்தார் வளர்மதி.
“தேவா வீட்ல கேட்டதுக்கு துளசி என்ன முடிவெடுத்திருக்கா அண்ணி?” என்று அவர் கேட்க.
அம்மாவும், மகளும் அதிர்ந்து தான் போயினர். அதுக்குள்ள எப்படி அவங்களுக்கு தெரிஞ்சது?
“துளசி யோசிக்கிறேன்னு சொல்லியிருக்கா” என.
“அவகிட்ட கொடுங்க அண்ணி” என்ற ஆனந்தி,
“துளசி. எனக்கு தேவா காதல் தெரியும். சொல்ல போனால் எல்லோருக்கும் தெரியும். இப்போ நீ இருக்க மனநிலைக்கு ரொம்ப யோசிச்சா முடிவெடுக்கிறது கஷ்டம். தேவா மேல எங்க எல்லோருக்கும் நம்பிக்கை இருக்கு”
“உங்க கல்யாணம் நடந்தா உங்க வாழ்க்கை ஆஹா, ஓஹோவா இருக்குன்னு நான் சொல்ல வரலை. நிச்சயமா கஷ்டப்பட மாட்ட. ஏமாற மாட்ட. முக்கியமா உனக்கு ஒரு பாதுகாப்பு கவசமா தேவா இருப்பான். அப்பறம் உன் இஷ்டம்” என்று வைத்துவிட்டார்.
பாதுகாப்பு கவசம்! தேவா இருப்பான் என்பதை விட இருக்கிறான். துளசிக்கு இது தெரியும்.
அடுத்த நாள் காலையிலே வளர்மதி மகளின் முகம் பார்க்க, “எனக்கு சம்மதம்மா” என்றாள் துளசி.
முகம் மிகவும் தெளிவாக, அம்மாவை நேர்கொண்டு முடிவை சொன்னாள்.
திரும்ப கேட்க அவசியமில்லை என்று புரிந்து கொண்ட வளர்மதி, போனில் அழைத்து “இன்னைக்கே உறுதி வைச்சுக்கலாம்ன்னு சொல்லிடுங்கண்ணா” வைரவேலுக்கு சொன்னார்.
அதற்காகவே காத்திருந்த பசுபதி குடும்பத்தார் நல்ல நேரம் பார்த்து வளர்மதி வீட்டுக்கு கிளம்ப தயாராகினர்.
மாப்பிள்ளை மட்டும் மிஸ்ஸிங். “எங்க இவன்?” என்று எல்லாம் தேட, அருணிற்கு அழைத்தார் வைரவேல்.
“கேஸ் விஷயமா வெளியே வந்திருக்கோம்” என்று அருண் சொல்ல,
“போன் எடுத்து பேச கூட அவனுக்கு கஷ்டமா இருக்கா என்ன? போனை அவன்கிட்ட கொடுடா. துளசி சம்மதம் சொல்லிட்டான்னு அவன்கிட்ட சொல்லணும்” என.
“அவனுக்கு தெரியுமாம். நீங்க உங்க ஏற்பாட்டை பார்ப்பீங்களாம்” என்று வைத்தான் அருண்.