தேவா மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்தவன், “காதல் எப்போ குற்றத்தில கொண்டு வந்தாங்கன்னு எனக்கு தெரியலை” என்றான்.
“துளசியோட காதலை மன்னிச்சு ஏத்துக்கிறார். ம்ஹ்ம். நல்ல பேச்சு. இப்போ என் கட்சிக்காரர் என்ன பண்ணனும்? சந்தோஷை மட்டும் ஏத்துக்கணுமா? இல்லை அவரோட சேர்ந்து வாழ்ந்த அந்த பொண்ணையும், அவங்க குழந்தையையும் கூட ஏத்துக்கணுமா?”
“உடனே அது முடிஞ்சு போன கதைன்னு சொல்ல கூடாது. சந்தோஷ் மேல அந்த பொண்ணு கேஸ் பைல் பண்ணியிருக்கு. கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி என்னோட வாழ்ந்து, என்னையும், என் குழந்தையையும் ஏமாத்திட்டார்ன்னு, அதோட காபி இது” என்று நீதிபதி முன் சமர்ப்பித்தான்.
சுந்தரம் தரப்பு திகைத்து போக, துளசி முகத்தில் மெல்லிய வெளிச்ச கீற்று.
“என் கட்சிக்காரரும் சந்தோஷ் மேல கேஸ் பைல் பண்ண போறார். கல்யாணங்கிற பேர்ல சந்தோஷ் மோசடி செஞ்சிருக்கார். இரண்டு பெண்களோட வாழ்க்கையில விளையாடி இருக்கார்”
“துளசி வேறு யாரும் இல்லை. சந்தோஷுக்கு மாமா பொண்ணுன்னு நமக்கு தெரியும். துளசியோட அப்பா சரவணன் வீட்ல தான் சந்தோஷ் பேமிலி இப்போ இருக்காங்க. அவங்க அனுபவிச்சிட்டிருக்குற சொத்து எல்லாம் என் கட்சிக்காரருக்கு சொந்தாமானது”
“துளசியோட தாத்தா மொத்த சொத்தையும் பேத்தி பேர்ல எழுதி வைச்சிட்டு போயிருக்கார். அந்த சொத்துக்காக தான் இந்த கல்யாணம். நான் சொன்னதுக்கான ஆதாரம் இது” என்று சொத்து பத்திரத்தை நீதிபதி முன் சமர்பித்தான்.
“இல்லை. இல்லை மை லார்ட். இவர் கேஸை திசை திருப்ப பார்க்கிறார்” என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் படபடக்க.
“இருங்க சார் டென்சன் ஆகாதீங்க. உண்மை வெளிச்சத்துக்கு வந்திடுச்சு. நியாயமா பார்த்தா இந்த கோர்ட் சந்தோஷ் மாதிரி ஆளுங்களை கைது செய்து கடுமையான தண்டணையை கொடுக்கணும். ஆனா நாம அவர் பக்கம் இல்லாத நியாயத்தை இருக்கிறதா சொல்லி வாதாடிட்டு இருக்கோம்”
“முதல்ல இருந்தே நாங்க சந்தோஷ் சரியில்லைன்னு சொல்லிட்டிருக்கோம். பதிலுக்கு இவங்க என் கட்சிக்காரர் மேல அவதூறு பரப்ப முயற்சி எடுக்கிறாங்க. கண்ணுக்கு முன்னாடி தெரியற தவறை மறைச்சுட்டு, இல்லாததை நிரூபிக்க போராடுறாங்க”
“இன்னும் சொல்ல போனால், இந்த கேஸை சாதாரண விவாகரத்து வழக்கா நடத்த கூடாது. கல்யாணம் பேர்ல மோசடி நடந்திருக்கு. இரண்டு பெண்களோட வாழ்க்கையை மோசம் பண்ண பார்த்திருக்காங்க” தேவா வலுவாக வாதாட,
“மை லார்ட். இவர் ஏதேதோ சொல்லி கேஸை வேற மாதிரி கொண்டு போறார். சந்தோஷ் மேல வைக்கிற குற்றசாட்டுக்கு நாங்களும் பதில் சொல்லிட்டு தான் இருக்கோம். வெளிநாட்டுல இருந்த பொண்ணுகிட்ட இவர் லிவிங்ல மட்டும் தான் இருந்திருக்கார்” என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் பேச,
“அப்புறம் எதுக்கு அந்த பொண்ணு கேஸ் பைல் பண்ணியிருக்கு?” என்று நீதிபதி கேட்டார்.
“சந்தோஷ்கிட்ட அந்த பொண்ணு அதிகமான பணத்தை டிமாண்ட் பண்ணியிருக்கு. அதனால கூட”
“மை லார்ட். இவங்க இப்படித்தான் வருவாங்கன்னு எங்களுக்கு தெரியும். உண்மை வெளி வரணும்ன்னா அந்த பொண்ணை விசாரிக்கணும். நீங்க அனுமதிச்சா அவங்களை இப்போவே நாங்க சாட்சி சொல்ல வைக்கிறோம்” என்றான் தேவா.
“அந்த பொண்ணு வந்திருக்கா?” என்று எல்லாம் அதிர, நீதிபதி சரியென்றுவிட்டார்.
கையில் குழந்தையுடன் அந்த பெண் சுவாதி வர, சந்தோஷுக்கு வேர்த்து போனது. அதிகமான பதற்றம். நிலை கொள்ளாமல் அங்கும், இங்கும் தவிக்க, சுந்தரம் மகன் கைப்பற்றி கொண்டார். மிகவும் இறுக்கமான பிடியில் அவனை அடக்கி வைத்தார்.
சுவாதி நீதிபதி முன் எல்லாவற்றையும் சொன்னாள். “வேலை பார்த்த இடத்தில் பழக்கம். கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி என்னோட வாழ்ந்தார். கோவம் வரப்போ மட்டும் ரொம்ப அக்ரஸிவா நடந்துப்பார். மற்றபடி நல்லாத்தான் இருந்தோம்”
“இடையில் அவங்க அப்பா அவர்கிட்ட ஏதோ பேசிட்டே இருந்தார். சந்தோஷ் என்கிட்ட இருந்து விலக ஆரம்பிச்சார். கேட்டதுக்கு, ஊர்ல கொஞ்சம் பிரச்சனை, நான் ஊருக்கு போய்ட்டு வரேன்னு சொல்லி கிளம்பினார்”
“வேலையை விட்டுட்டார். ஆனா எங்களை பார்க்க வந்தார். அப்புறம் தான் தெரிஞ்சது அவர்க்கு கல்யாணம் ஆனது. சொத்து எல்லாம் துளசிகிட்ட இருந்து எழுதி வாங்கிட்டு என்னையும், குழந்தையும் ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னார்”
“ஆனா அவருக்கு துளசியை விடுற எண்ணம் இல்லைன்னு எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது. துளசிக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன். நீயும் வேணும், அவளும் வேணும்ன்னு என்கிட்டே சொன்னார்” என்று சுவாதி மிக தெளிவாக அவளின் பக்கத்தை சொன்னாள்.
நீதிபதி அவளிடம் மேலும் சில கேள்விகளை கேட்க, சந்தோஷ் தரப்பிலும் அவளிடம் விசாரணை செய்தனர்.
“நான் அவர்கிட்ட பணம் கேட்கலை. அதுக்கான அவசியமும் எனக்கு இல்லை. என் அப்பா பிஸ்னஸ் பண்றவர். அவருக்கு நான் ஒரே பொண்ணு. அதனால கூட அவர் என்னை காதலிக்கிற மாதிரி நடிச்சிருக்கலாம்” என்றாள் சுவாதி.
சந்தோஷ், சுந்தரத்துக்கு தீ வைத்தது போலானது. உண்மை அது தானே.
“என் அப்பா சப்போர்ட்ல தான் நான் கேஸ் பைல் பண்ணியிருக்கேன்” என, சந்தோஷுக்கு வெடவெடத்துவிட்டது.
சுவாதி அப்பா பற்றி தெரியும். அவருக்கு தெரியாத ஆட்கள் இல்லை. முடிந்தது என் கதை!
“சொத்து, சொத்துன்னு என்னை சிக்க வைச்சுட்டீங்கப்பா” என்று அப்பாவிடம் கத்தினான் மகன்.
“ஷ்ஷ். சும்மா இருடா” என்று சுந்தரம் மகனை அடக்க,
“அடுத்து நான் ஆனந்தி மேடமை சாட்சி சொல்ல அழைக்கிறேன்” என்றான் தேவா.
இவங்க எப்படி? என்று வளர்மதி நம்ப முடியாமல் பார்த்தார்.
ஆனந்தி கணவன், மகனை கண்டு கொள்ளாமல், நீதிபதி முன் சாட்சி சொன்னார். “என் அண்ணா பொண்ணை மருமகளா கொண்டு வரணும்ன்னு நான் தான் ஆசைப்பட்டேன். ஆனா எனக்கு என் மகனை பத்தி தெரியாது” என்றார்.
“கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு நைட் என் மகன் துளசியை கட்டாயப்படுத்தினான். நான் தான் துளசியை அவன்கிட்ட இருந்து மீட்டேன். அவங்களுக்குள்ள தாம்பத்தியம் நடந்துட்டா துளசி என் மகனை விட்டு போக மாட்டான்னு என் கணவர் கொடுத்த ஐடியா தான் அது”
“என் கணவருக்கு சொத்து ஆசை இருக்குன்னு தெரியும். ஆனா அவர் இந்தளவு போவார்ன்னு நான் நினைக்கலை. சந்தோஷ் விருப்பப்பட்டு தான் துளசியை கட்டிக்கிறான்னு நினைச்சேன். ஆனா அதுக்கு பின்னாடி சொத்து இருக்குன்னு எனக்கு அப்புறம் தான் புரிஞ்சது”
“ம்மா. இல்லைம்மா. எனக்கு துளசியை பிடிக்கும். சொத்து எனக்கு வேணாம். துளசி எனக்கு வேணும்மா” என்று சந்தோஷ் எழுந்து கத்த ஆரம்பித்துவிட்டான்.
சுவாதி அவனை வெறுப்புடன் பார்க்க, நீதிபதி அவனை கட்டுப்படுத்த சொன்னார்.
“நாங்க சொல்ல வேண்டியதை எல்லாம் சாட்சியோட சொல்லிட்டோம் மை லார்ட். சொந்தத்தை காட்டி அம்மா, பொண்ணை ஏமாத்தியிருக்காங்க. துரோகம் மை லார்ட். எங்களுக்கு சொத்து வேணும்ன்னு கேட்டிருந்தா கூட தூக்கி கொடுத்திருப்பாங்க. ஆனா இப்படி நம்ப வைச்சு, கல்யாணம் பண்ணி, உடலளவுல மட்டுமில்லாமல், மனதளவிலும் அவங்களை கஷ்டப் படுத்தியிருக்காங்க.”
“சந்தோஷ் மாதிரி ஆளுங்க எல்லாம் எப்போவும் திருந்த வாய்ப்பில்லை. மோசடி கேஸ் தனியா பார்த்துகிறோம். உங்ககிட்ட வேண்டி கேட்கிறது துளசிக்கான விடுதலை. அவங்க அனுபவிச்ச கஷ்டம் போதும். அவர்களுக்கான சுந்தந்திரத்தை கொடுத்திடுங்க மை லார்ட்” என்று முடித்தான் தேவா.
தேவாவையே பார்த்திருந்த துளசி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துவிட்டது. என் அப்பா இருந்திருந்தால் எனக்காக இப்படி தான் நின்றிருப்பார்!
தீர்ப்பு பற்றி அவளுக்கு கவலையில்லை. எங்களுக்காக ஒரு ஜீவன்! உண்மையான அன்பை அந்த நொடி நேரில் கண்டாள்!
சரவணனிடம் உணர்ந்த அதே பாதுகாப்பு! இத்தனை வருடங்களாக அவள் மனதளவில் தேடி ஓய்ந்த கவசம்!
அப்பாவின் தங்கை குடும்பத்திடம் எங்களுக்கான சொந்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பரிசு துரோகம்.
ஆனால் அந்த துரோகத்தின் வழி தான் அவள் வைரவேல், தேவாவை உணர்ந்தாள்.
வைரவேலை தானே தான் மாமா என்றழைத்தாள். எனக்காக வந்து நிக்கிறார் என்ற உவகை, ஆர்ப்பரிப்பு அவளை சொந்தம் கொண்டாட வைத்தது.
இப்போது தேவாவிடம் அதே உணர்வை கண்டு, கண்ணீர் நிற்பேனா என்றது.
நீதிபதி அவளுக்கான விடுதலை அறிவித்தார். வளர்மதி மகளை அணைத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.
வைரவேல் மகனை அணைத்து தட்டி கொடுத்தார். வளர்மதி தன் மாணவனின் கைப்பற்றி கொண்டார்.
தேவா எல்லாவற்றையும் அமைதியாக ஏற்று கொண்டான். அவனுக்குள் ஆயிரம் போராட்டம்.
அவனின் நேசம் உண்மை. அந்த நேசம் அவளின் விடுதலையை கொண்டாட மறுத்தது.
நல்லவனை கல்யாணம் பண்ணியிருக்கலாம்!
ஆனால் அவளுக்கான நல்லது இந்த விடுதலை ஒன்று தான். அதனாலே ஒரே மூச்சாக நின்று பெற்று கொடுத்துவிட்டான்.
அலுவலகத்தில் துளசி அவனுக்கு முன் நின்றாள். நன்றி சொல்ல வேண்டும். ஆனால் வார்த்தை வருவேனா என்றது.
தன் முன் தவித்து, திணறி, கலங்கிய கண்களுடன் நிற்கும் பெண், அவனை துயரத்தில் தள்ளினாள்.
துளசி தன்னை சமாளித்து கொண்டவள், “தேங்க்ஸ்” என்றாள்.
‘போ’ என்று கையசைத்தான்.
துளசி அங்கேயே நின்றவள், “எனக்காக நீங்களும், மாமாவும் செஞ்சதை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன். நான் உங்களை வேணாம் சொல்லியும் எனக்காக நீங்க நின்னதுக்கு நன்றி மட்டும் சொல்லிட முடியாது”
“அன்னைக்கு நீங்க கேட்டீங்க என் அப்பாவை உங்ககிட்ட தேடுறேனான்னு. எனக்கு தெரியலை. அவருக்கு அப்புறம் எனக்கான கவசமா நீங்க இருக்கிறதை இன்னைக்கு நான் உணர்ந்தேன்”
“உங்களோட விருப்பத்துக்கான பொண்ணு நான் இல்லை. உங்க நேசம் வேற யாருக்கோ சேர வேண்டியது போல. நான்”
“ஏய் நிறுத்து” என்று தேவா அழுத்தமாக அவளை இடையிட்டான்.
“நன்றியோட நிறுத்திக்கோ. என் விருப்பத்தை பத்தி நீ பேசாத” என்றான்.
“என்னோட காதல், எனக்கு மட்டுமே சொந்தமானது. அதுல முழு உரிமையும் எனக்கே எனக்கு தான். நல்லா இருந்தாலும் சரி காதலிச்சே நாசமா போனாலும் சரி. அது என்னோட. நீ பேசாத. உனக்கு அந்த உரிமை இல்லை” என்று முடித்து கொண்டான்.