அத்தியாயம்  – 4

அச்சுதனுக்கு இது பழகிய ஒன்றுதான். அவனை புதிதாய் பார்க்கும் யாரேனோ, இல்லை அவனோடு அருகில் நின்று பேசும் நபர்களோ என்று யாராக இருந்தாலும், பேச்சுக்கள் தடைபட்டு, அவர்களின் பார்வை அவனின் நெற்றி தழும்பில் பதிவது சகஜமே.

அதனால், அர்ச்சனாவின் இச்செயலை அவன் இலகுவாய் எடுத்துக்கொள்ள, அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகிப்போனது.

அச்சுதனின் கரத்தினை விடாது அவள் பற்றியிருக்க, அவனோ லேசாய் ஒரு அழுத்தம் கொடுத்து அவள் கரத்தை விடுவித்தவன் “இங்க எல்லாம் செட் ஆகிருச்சா அர்ச்சனா?” என்று பொதுப்படையாய் கேட்க,

“ஹா..! எ.. என்ன கேட்டீங்க?” என்றாள் அவன் கேட்டதின் அர்த்தம் புரியாது.

“இல்ல.. இங்க கிளைமேட், தண்ணி.. ரொடீன்ஸ் எல்லாம் செட் ஆகிருச்சான்னு கேட்டேன்…” என்று அச்சுதன் விளக்கி சொல்ல, அவளோ அவன் மீது படியும் பார்வையும், மனதையும் கட்டுப்படுத்தும் வழி தெரியாது தவித்துபோனாள்.

“ம்ம்ம்..” என்று தலையை மட்டும் ஆட்டி வைக்க, நல்ல வேலை, அதேநேரத்தில் அவளின் அலைபேசி மணி எழுப்ப “எக்ஸ்கியூஸ் மீ…” என்றவள், அலைபேசியை எடுத்துக்கொண்டு ஓடாத குறையாய் சென்றுவிட்டாள்.

இவர்கள் பேசியதை பெரிதாய் யாரும் கவனிக்கவில்லை என்றலும், நீலவேணி பார்த்துக்கொண்டே தான் இருந்தார். அர்ச்சனாவின் இத்தனை முக பாவனைகளை கண்டவருக்கு மனதினில் ஆசை எழாமல் இல்லை. ஆனாலும் மகனின் எண்ணம் அறிந்தவர் அந்த ஆசையை அப்படியே விழுங்கிவிட்டு, நடப்பதை வேடிக்கைப் பார்க்க,

அச்சுதனோ இது எதையுமே கவனித்தில் ஏற்றிக்கொள்ளாதவன் “என்னம்மா என்ன யோசனை?” என்று நீலவேணியின் அருகினில் அமர,

“ஒண்ணுமில்ல அச்சுதா.. சாப்பிட்டு மறக்காம மாத்திரை போடணும் நீ.. இப்போவே லேட்டாகிடுச்சு…” என்று வருந்த,

“ம்ம்..” என்றவன், சுமிதா அவனுக்கு பரிமாறிய உணவினை உண்ணத் தொடங்க, அடுத்து ஒரு பத்து நிமிடங்கள் கழித்துத்தான் வந்தாள் அர்ச்சனா.

“யார் அர்ச்சனா..?” என்று ரோஜா கேட்க,

“சித்தி ம்மா…” என்றவள், அவளது தட்டில் அமர, இப்போது முகம் அவளுக்கு இயல்பாய் இருந்தது.

உணவுண்ணும் நேரத்தில் பொதுவான பேச்சுக்கள் கூட குறைந்து, அனைவருமே உணவில் கவனம் செலுத்த, உண்டு முடிக்கவுமே, நீலவேணி அனிதாவின் பெற்றோர்களிடம் “எங்க வீட்டுக்கு வந்துட்டு போங்க…” என்று அழைப்பு விடுக்க,

அதுபோலவே சுரேந்திரனும் “எங்க வீட்டுக்கும் வந்துட்டு தான் போகணும்..” என்றிட,

“பின்ன என்ன நைட் டின்னர் இப்படியே ரெடி பண்ணிடலாம்…” என்று பிரசாந்த் பேச, அனிதாவோ அயர்வாய் அம்மாவைப் பார்த்தாள்.

ரோஜா என்ன எண்ணினாரோ, பாமினியிடம் “அண்ணி.. ஒரு சின்ன விஷயம்.. சொல்றேன்னு தப்பா எடுத்துக்கக் கூடாது.. நைட் நாங்க கிளம்புறப்போ, அனிதாவும் எங்களோட வரட்டுமே.. அர்ச்சனாவோட வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போனா அவளுக்கும் நல்லாருக்கும் தானே…“ என்றிட, வேகமாய் பிரகாஷ் அனிதாவைப் பார்க்க, அவளோ இதனை இப்போது தான் கேள்விப் படுவதுபோல் பார்த்து  நின்று இருந்தாள். 

பாமினியோ, கணவர் மற்றும் மகன் முகம் பார்த்தவர் “நாங்களுமே காலைல அதைத்தான் பேசிக்கிட்டோம் அண்ணி. நைட் பார்த்துக்கலாம்…” என்று பதிலைச் சொன்னவர், அனிதாவைப் பார்க்க, அவள் முகத்தினில் எந்த உணர்வும் இல்லை.

அர்ச்சனாவிற்கு இந்த பூடக பேச்சுக்கள் எல்லாம் வித்தியாசமாய் இருக்க, தலை வலிப்பது போலிருக்கவும், அவளது கவனத்தை வேறு பக்கம் திருப்பலாம் என்று பார்வையை திருப்ப, அச்சுதனும் கார்மேகமும் நின்று பேசிக்கொண்டு இருப்பது கண்ணில் பட்டது.

“அப்பாவோட என்ன பேச்சு?!” என்று யோசித்தவள் அப்படியே நிற்க, கார்மேகம் திரும்பிப் பார்த்தவர் “அர்ச்சு…” என்றழைக்க,

‘அச்சோ…’ என்று மனதினுள் பதறியவள் “டாடி…” என்றாள் அங்கேயே நின்றபடி.

“இங்க வா…” என்று அவர் அழைக்க,

“சொல்லுங்க டாடி..” என்றபடி அவர் அருகே சென்று நிற்க,

“தம்பி ஒரு ப்ராஜக்ட் கொடுத்திருக்கார்.. முன்னாடியே பேசினது தான். நீயும் இப்போ வந்துட்டியா. அதான் உன்னோடவும் இங்க நேராவே டிஸ்கஸ் பண்ணிடலாம்னு கூப்பிட்டேன்…” என்றிட,

“எ.. என்ன ப்ராஜக்ட்…” என்றாள் வேகமாய்.

“திருச்சி – தஞ்சாவூர் ரோட்ல நமக்கு ஒரு லேண்ட் இருக்கு அர்ச்சனா.. அந்த ஜ்வல்லரி  ஷாப் ஒன்னு கட்டனும்..” என்று அச்சுதன் இலகுவாய் பேச, அவளுக்கோ மூச்சு முட்டுவது போலிருந்தது.

“ஓ!” என்று மட்டும் சொன்னவள் “ப்ளான்ஸ் எதுவும் இருக்கா டாடி..” என்று பேச்சினை அவளின் அப்பா பக்கம் திருப்ப,

“இன்னும் ப்ளான் பண்ணல டா.. தம்பிக்கு சில விருப்பங்கள் இருக்கு.. நீயும் வந்து ஜாயின் பண்ண போறதானே.. நம்ம கம்பனிக்கு நீ பண்ற முதல் ப்ராஜக்ட் இதுவா இருக்கட்டுமே…” என்று கார்மேகம் சொல்ல,

‘டாடி…’ என்று உள்ளே பதறியவள், எதையும் வெளிக்காட்டாமல் “ம்ம் ஓகே…” என்றுமட்டும் சொல்ல, அவள் முகத்தினையே அத்தனை நேரம் பார்த்துக்கொண்டு இருந்தவன்

“மாமா.. ஐ திங் அர்ச்சனாக்கு இன்னும் இங்க எதுவும் செட்டாகல போல.. அன்னிக்கு விசேச வீட்லயும் டல்லா இருந்தாங்க.. இப்போவும் ஒருமாதிரி டிஸ்டர்பா இருகாங்க…” என்று சொல்லிட,

“இல்ல இல்ல.. ஐம் ஓகே…” என்றாள் வேகமாய்.

“அப்படி தெரியாலையே அர்ச்சனா…” என்றவன் “மாமா அர்ச்சனாவை கம்ப்பல் பண்ணவேணாம்.. அவளுக்கு விருப்பம் இருந்தா எடுத்து செய்யட்டும். இல்லைனா, நீங்க உங்க டீம் வச்சு முடிங்க…” என்றவன் “வீட்டுக்கு வந்துட்டு போங்க…” என்று சொல்லிவிட்டு செல்ல, அவளுக்குத்தான் ஒருமாதிரி ஆகிவிட்டது.

அவன் சென்றதுமே கார்மேகம் “என்ன அர்ச்சு.. என்னாச்சு உனக்கு? நானும் பாக்குறேன் என்னவோ போல இருக்க..?” என்று கேட்க,

“நத்திங் டாடி…” என்றாள்.

“இல்ல… என்னவோ இருக்குடா.. என்னாச்சு உனக்கு?” என்று கார்மேகம் பேச,

“டாடி நிஜமா எதுவும் இல்ல.. இங்க இப்போதானே வர்றேன்.. அதுவும் இத்தனை பேர். எனக்கு நிஜமா எப்படி நடந்துக்கணும்னு தெரியலை.. இவங்க எல்லாருமே டக்குன்னு கேசுவலா பேசுறாங்க. ஆனா என்னால அப்படி முடியலை…” என்றிட,

“அடடா.. அவ்வளோதானா.. போக போக சரியாகிடும்…” என்றவர்

“சரி வா பெரியவர் வீட்டுக்கு போயிட்டு அடுத்து சின்னவர் வீட்டுக்கும் போகணும்…” என்றிட,

“ம்மா…” என்றதும் ரோஜாவும் இவர்களோடு இணைந்துகொள்ள, அப்பா மகள் அம்மா மூவரும் நீலவேணியோடு நடந்தபடியே தோட்டத்து வழியாய் நடந்துச் செல்ல,

நீலவேணி “இப்படி சுத்தி தோட்டம் அமைக்கணும்னு ப்ளான் பண்ணது எல்லாம் அச்சுதன் தான்.. முதல்ல காம்பவுண்ட் குள்ள, மரங்கள் மட்டும் தான் இருந்தது. வீடுங்க சுத்தி செடி கொடி எல்லாம் எதுவுமில்லை. ஆனா அச்சுதன் தான் எப்படியோ இருக்குன்னு, தம்பிங்களோட சேர்ந்து எல்லாம் பண்ணான்…” என்று சொல்ல,

“அழகா இருக்கு ஆன்ட்டி…” என்றாள் அர்ச்சனா.

“ஆன்ட்டி இல்ல.. அனிதா பெரியத்தைன்னு சொல்லுவா.. நீ பொதுவா எங்க மூணு பேரையும் அத்தைன்னு கூப்பிட்டுக்கோ..” என்று நீலவேணி பேச,

“ம்ம் சரிங்கத்தை…” என்றவள் “நிஜமாவே அத்தனை கூலிங்கா இருக்கு.. வெயில் தெரியலை…” என்றிட,

“எல்லாம் பார்த்து பார்த்து பண்ணான்.. ஆனா அவனுக்குத்தான்…” என்று அவரது கட்டுப்பாட்டையும் மீறி பேச்சினை ஆரம்பித்தவர் “சாரிம்மா…” என்று வார்த்தைகளை விழுங்கிவிட்டார்.

ரோஜா கார்மேகத்திடம் அனிதாவை அழைத்துக்கொண்டு செல்வது பற்றி பேசிக்கொண்டே முன்னே நடந்துவிட, நீலவேணியும் அர்ச்சனாவும் தான் பின்னே நடக்க, நீலவேணியின் பேசினில் நின்று அவளைப் பார்த்தவள், என்ன எண்ணினாளோ, அவரின் கை பற்றி “எல்லாமே சரி ஆகும் அத்தை..” என்று உளமாரச் சொல்ல,

“சரி ஆகனும்.. ஆகிடனும்.. என் மகனும் குடும்பமா வாழறதை பார்க்கனும்…” என்றவருக்கு கண்கள் கலங்கி போனது.

அதனைப் பார்த்தவளுக்கு உள்ளம் உருகாதா என்ன?!

“அச்சோ.. என்ன இது..?!” என்று பதறியவள், எப்போதும் ரோஜாவிடம் அவள் செய்வதுபோல, நீலவேணியின் தோள் சுற்றி கை போட்டவள் “ரிலாக்ஸ்…” என்று சொல்ல, அச்சுதன் இதனை எல்லாம் அவனின் அறை ஜன்னலில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்தான்.

அம்மா யாரிடமும் இப்படி பேசி அவன் கண்டதில்லை.

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அம்மாவின் கரத்தினை பற்றிக்கொண்டு அர்ச்சனா பேசியதும், பின் நீலவேணி கண்களை துடைத்ததும், பின் அர்ச்சனா அவர் தோள் மீது கை போட்டு அவரை சமாதானம் செய்ததும் என்று பார்க்க பார்க்க அவனுக்கு நெற்றி சுருங்கியது.

‘என்ன நடந்து கொண்டு இருக்கிறது?!’ என்று யோசிக்கும் போதே,

“அச்சுதன்…” என்ற அழைப்போடு கார்மேகம் வீட்டினுள்ளே வர,

“ஆ..! வாங்க மாமா.. வாங்க அத்தை…” என்றபடி அறையினில் இருந்து வெளி வந்தவன் பார்வை அவர்களின் பின்னே செல்ல,

“உங்கம்மா நீங்க செடி வச்ச கதைகளை எல்லாம் அர்ச்சனா கிட்ட பேசிட்டு வர்றாங்க…” என்றார் ரோஜா.

அடுத்த நொடி அம்மா என்ன பேசி இருப்பார் என்பதனை அவன் யூகித்தவன் “உக்காருங்க மாமா.. அத்தை என்ன நின்னுட்டே இருக்கீங்க…” என்று அவர்களை அமரச் சொல்ல, அதற்குள் அர்ச்சனாவும், நீலவேணியும் கூட வந்துவிட்டனர்.

“என்னம்மா பேசி முடிச்சிட்டீங்களா?” என்று சாதாரணம் போல கேள்வி கேட்டவன், அம்மாவை கண்டனமாய் ஒரு பார்வை பார்க்க, அவர் அதனை எல்லாம் பெரிதாய் எண்ணவில்லை போல.

அர்ச்சனாவிற்கு தான் நீலவேணியை எண்ணி பாவமாய் இருந்தது. மகனது விபத்து, திருமணம் நின்று, கணவரும் உயிர் விட்டு, அந்த இக்காட்டான நேரத்தில் கூட, மனதை தளர விடாது, மகனை எப்படியும் மீட்டு விடவேண்டும் என்று வைராக்கியம் கொண்டு, இந்த நிலை வரை கொண்டு வந்து நிறுத்தியவருக்கு ஆசை   இருக்காதா, மகனும் குடும்பமாய் வாழ வேண்டும் என்று.

அச்சுதன் எண்ணம் சரியாகவே இருந்தாலும், உறுதியே இல்லாத ஒரு விசயத்தின் மீது நம்பிக்கை கொண்டு இப்படி அனைவரையும் அவன் வாட்டுவது சரியாக படவில்லை.

அர்ச்சனா இப்படி அவளுள்ளே சிந்தனையில் உழன்று கொண்டு இருக்க, அச்சுதன் பார்வையும் அவள்மீது தான் இருந்தது. நிச்சயம் அம்மா என்னவோ சொல்லியிருக்கிறார் என்பது புரிய,

“ம்மா.. நான் கிளம்புறேன்..” என்றவன் “நீங்க டிசைட் பண்ணிட்டு சொல்லுங்க மாமா… நேரமாச்சு நான் கிளம்புறேன்…” என்று பொதுவாய் சொன்னவன் கிளம்பியே விட்டான்.

பின்னே அவனுக்கும் ஒரு சங்கடம் இருக்காதா.. அர்ச்சனாவை இப்போதுதான் முதல்முறை காண்கிறான். அனிதாவின் தங்கை என்பதையும் தாண்டி அவளும் வயது பெண் தான். அவளிடம் போய் இந்த அம்மா அழுது வைத்து, அவள் என்னவோ யோசனையில் இருப்பது எல்லாம் அவனுக்கு எரிச்சலாய் இருந்தது.

அதற்குமேல் அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. அத்தனை என்னை இரவு உணவு முடித்து இவர்கள் எல்லாம் கிளம்பும் நேரம் வரைக்கும் கூட அச்சுதன் வரவில்லை. நீலவேணி மகன் மதியம் கிளம்பவுமே கண்டுவிட்டார், எதையோ மனதினில் வைத்துக்கொண்டு தான் செல்கிறான் என்று.

கார்மேகம் மதியம் போல அவரது தொழிலைப் பார்க்க கிளம்பியவர், இரவு எட்டுமணி போலவே திரும்ப வர, அதன்பிறகு அனைவரும் மீண்டும் ஒன்றுகூடி உண்டுவிட்டு கிளம்ப, பாமினி ரோஜாவிடம் “அனிதாவை கூட்டிட்டு போங்க அண்ணி. ரெண்டு நாள் அங்க இருந்துட்டு வரட்டும்..” என்றிட, இவர்களோடு அனிதாவும் வீட்டிற்கு வர,

வந்ததுமே அர்ச்சனா அக்காவிடம் கேட்டேவிட்டாள் “என்னக்கா தப்பிச்சா போதும்னு வந்துட்டியா?” என்று.

அனிதாவோ ஒரு பெருமூச்சை விட்டவள் “அட போ டி… தலை தீபாவளிக்கு கூட, பிரகாஷ் காலைல அங்க முடிச்சிட்டு தான் இங்க கூட்டிட்டு வந்தார். அதுவும் ஒரே நாள்ல தங்கிட்டு மறுநாளே கிளம்பிட்டோம்.. ஒரே ஊர் தானே எப்போன்னாலும் பார்த்துக்குறோம்னு பேச்சு…” என்றவள்

“ம்மா நல்ல காரியம் செஞ்ச நீ.. எல்லார் முன்னாடியும் கேட்ட.. எங்கத்தை கிட்ட தனியா கேட்டு இருந்தா, அதை இதை சொல்லி இருப்பாங்க…” என்று அம்மாவை மெச்ச,

“எனக்கு தெரியாதா எப்போ என்ன கேட்கனும்னு…” என்று ரோஜா புன்னகைக்க,

“ஓ! இது கூட்டு சதியா…” என்று கார்மேகம் இவர்களை கிண்டல் பேசியவர் “என்ன அர்ச்சு நீ ஏன் அத்தனை தயங்கின அந்த ப்ராஜக்ட் பண்றதுக்கு?” என்றார் மகளிடம்.

“என்ன ப்ராஜக்ட் பா?” என்று அனிதா கேட்க,

கார்மேகமும், அச்சுதன் புதிதாய் மற்றொருமொரு நகை கடை கட்டும் பணியில் இறங்கியிருப்பதைச் சொல்ல “ம்ம்ஹ்ஹும் அவைக்கு என்ன வேலை.. இருக்குற எல்லாரையும் டென்சன் பண்றது தான் வேலை…” என்று தங்கள் வீட்டினில் தானே இருக்கிறோம் என்று அனிதா பேச, அவள் அச்சுதனை அப்படி சொன்னது, அர்ச்சனாவிற்கு உவப்பாய் இல்லை.

“என்னக்கா இப்படி சொல்ற…” என்றவள் வேகமாய் கேட்க வந்த தொனியை, சற்றே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“பின்ன என்ன டி? அந்த பொண்ணு தனுஜா கண் முழிக்க சான்சே இல்லைன்னு டாக்டர்ஸ் எல்லாம் சொல்லிட்டாங்க.. அவங்க பேரன்ட்ஸ் கூட, இவரை கல்யாணம் பண்ணிக்கோங்க இப்படி இருக்காதீங்கன்னும் சொல்லிட்டாங்க.. இவர் கொஞ்சம் பிராக்டிகலா யோசிக்கனுமா இல்லையா?” என்று பேச,

“ம்ம்ம்…” என்று இழுக்க,

“சரி ரெண்டு பெரும் வாயடிக்கமா.. நேரமே தூங்கனும்…” என்று பெற்றவர்கள் அவர்களின் அறைக்குச் செல்ல, அனிதாவும் அர்ச்சனாவும், அவர்களின் அறைக்கு வர, அதாவது அனிதாவின் திருமணத்திற்கு முன்னே இருவரும் ஒரே அறையில் தான் இருந்தார்கள். தனி தனி அறைகள் இருந்தாலும், அக்காவும் தங்கையும் ஒரே அறையில் தான் உறங்குவது எல்லாம்.

அர்ச்சனா வெளிநாடு சென்றுவிட, அனிதாவிற்கும் திருமணம் நடக்க, அவர்கள் இருவரும் புழங்கிய அறை இப்போது அனிதாவும் அவள் கணவனும் வந்தால் புழங்கும் அறையாக மாறிட, இப்போது அர்ச்சனா தனக்கென்று மற்றொரு அறையை எடுத்துக்கொள்ள, சகோதரிகள் இருவரும் பேசியபடியே கட்டிலில் விழுந்தனர்.

பேச்சுக்கள் எல்லாம் அனிதா தான்.

இத்தனை நாட்கள் மனதினில் மூட்டைக் கட்டி வைத்தது எல்லாம் இன்று தங்கையிடம் அவிழ்த்துக் கொட்ட,

அர்ச்சனாவோ, அச்சுதன் விசயங்களை எல்லாம் கறந்துகொண்டு இருந்தாள்.

“அவ்வளோ லவ்வா க்கா?!” என்று கேட்கும் போதே, அவளுக்கு மனதினில் சுருக்கென்று இருந்தது.

“லவ்வெல்லாம் இல்லை.. நீ வேற..” என்று அனிதா சொல்ல,

“அதெப்படி உனக்குத் தெரியும்..?” என்று அர்ச்சனா கேட்க,

“அச்சுதன் மாமாவே சொல்லிருக்கார்… இது ஒரு தார்மீக உணர்வுன்னு. அதாவது இவர் யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு,  ஒருவேளை தனுஜா கண் விழிச்சு வந்து கேள்வி கேட்டுட்டா. அந்த பயம் தான் அவருக்கு.. வெளிய பில்டப் பண்ணிட்டு இருக்கார்…” என்றிட,

“அது நியாயமான உணர்வு தானே க்கா…” என்றாள் அர்ச்சனாவும்.

“அது அவரளவுல நியாயமா இருக்கலாம் அர்ச்சனா. ஆனா இது குடும்பத்தையே பாதிக்குது.. இப்போ எங்க வீட்ல எடுத்துக்கோ, பிரசாந்துக்கு அடுத்து பார்க்கணும்.. அவன் சும்மாவே பெரியண்ணன் கோண்டு. கண்டிப்பா பிரச்சனைகள் ஆகும். எங்களை எல்லாம் விடு.. பெரியத்தை பாவமில்லையா?” என்றிட, அர்ச்சனாவிற்கு பெருமூச்சு மட்டுமே வந்தது.

தனுஜா உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்றாகியபிறகு, அச்சுதன் கொஞ்சமேனும் இறங்கி வரவேண்டும். ஆனால் அதனை அவனுக்கு யார் புரியவைப்பது.