அர்ச்சனாவால் இன்னமும் கூட, அம்மா கூறியதை நம்பிடவே முடியவில்லை. இந்த காலத்தில் இப்படியா என்றும் எண்ண வைத்தது. அவளது பாவனையைப் பார்த்தே மகளின் எண்ணம் அறிந்த ரோஜா “என்ன அர்ச்சு நம்ப முடியலையா?!” என்று கேட்க,
“பின்ன, அந்த பொண்ணு இப்போவும் கோமால இருக்கிறது கஷ்டம் தான். ஆனா, இவர்.. இந்த அச்சுத்தன், எப்படி எந்த நம்பிக்கைல காத்துட்டு இருக்கார் ரோஸ்? அதுவும் டாக்டர்ஸ் முடிவா சொன்ன பிறகு?” என்று நம்பாமல் திரும்பக் கேட்க,
“அது என்னவோ அர்ச்சு. எல்லாரும் சொல்லிப் பார்த்துட்டாங்க. அவ்வளவு ஏன் தனுஜா அப்பா அம்மா கூட சொல்லியாச்சு, நீங்க உங்க வாழ்கையை பாருங்க அப்படின்னு. இந்த தம்பி கேட்ட பாடில்லை. ஆர்கன்ஸ் டொனேட் பண்ணுங்கன்னு கூட டாக்டர்ஸ் கேட்டுட்டாங்க. ஒரே பொண்ணு அவங்களுக்கு இப்படியே விடவும் மனசில்லை. வீட்ல வைச்சே அத்தனை வசதி பண்ணிருக்காங்க..” என்று ரோஜா பேசியபடி காலை உணவை மகளுக்கும் கணவருக்கும் எடுத்து வைக்க,
கார்மேகமோ “சம்பந்தி வீட்ல இருந்து போன் பண்ணாங்க. அர்ச்சனாவை ஒருதடவை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்று சொல்ல,
“அன்னிக்கே அனிதா மாமியார் சொன்னாங்க. கண்டிப்பா வீட்டுக்கு வரணும்னு. முறையும் அதுதானே. இவ இன்னும் அங்க எல்லாம் போகலை தானே…” என்று ரோஜாவும் சொல்ல,
“ப்பா, நான் இன்னும் நம்ம கம்பனிக்கு கூட வரல..” என்றாள் அர்ச்சனா முறைத்து.
“வரலாம் டா.. நீ வந்ததுமே, கன்ஸ்ட்ரக்ஷன் பொறுப்புகளை உன்கிட்ட குடுக்கனும்னு தான் நினைச்சிருக்கேன்…” என்றிட,
“ஏங்க..?” என்று குறுக்கே புகுந்தார் ரோஜா.
“நீ என்ன சொல்ல வரன்னு புரியுது ரோஜா.. ஹோட்டல் தொழில் பாக்குற பெரிய மாப்பிள்ளை வந்தாச்சு.. அப்போ அனிதாக்கு நம்ம ஹோட்டல்ஸ் குடுக்கிறது தான் உசித்தம். இவ ஆர்கிடெக்ட் அப்போ கன்ஸ்ட்ரக்ஷன் பார்க்கட்டும்…” என்றிட,
“நான் அதுக்கு சொல்லலை…” என்ற ரோஜா “இப்போ இருந்து மாப்பிள்ளை…” என்று ஆரம்பிக்கும் போதே,
அர்ச்சனா “ம்மா நான் சொந்தமா ஒரு ப்ராஜக்ட் எடுத்து நல்லபடியா செஞ்சு முடிச்சா தான் கல்யாண டாப்பிக் எல்லாம்…” என்று பேச்சினை முடித்து வைத்தாள்.
‘பார்த்தியா என் பொண்ண..’ என்பதுபோல் பார்த்த கார்மேகம் “சரி அனிதா வீட்டுக்கு எப்போ போறது?” என்று கேட்க,
“அனிதாக்கிட்ட பேசிட்டு சொல்றேன்..” என்ற ரோஜா, பெரிய மகளுக்கு அழைத்து பேச,
“ம்மா மதியம் லஞ்சுக்கு வந்துட்டு, நைட் வரைக்கும் இருந்துட்டு போங்கம்மா.. அப்படியே நானும் உங்களோட வர்றேன்.. அர்ச்சு கூட வந்து இருக்கணும் போல இருக்கு…” என்று சொல்ல, மகள் சொல்லாமல் சொல்லிய செய்தி ரோஜாவிற்கு புரிந்துவிட,
“மதியம் லஞ்சுக்கு வர சொல்லிருக்கா. நைட் வரைக்கும் அங்கதானாம்..” என்று ரோஜா சொல்ல,
“என்னது மதியம் போய், நைட் வரைக்கும் அங்கதானா?” என்ற அர்ச்சனா, “நோ வே ம்மா…” என்றவள் “டாடி வாங்க நம்ம கிளம்பலாம்…” என்று அப்பாவையும் துணைக்கு அழைக்க,
“இல்ல அர்ச்சு.. நீ கல்யாணத்துக்கும் வரல.. முறைன்னு ஒன்னு இருக்கு.. அங்க போனா, மூணு வீட்டுக்கும் போயிட்டு வரணும்.. நேரம் போறது தெரியாது. அனிதாவை நினை…” என்று அப்பாவும் சொல்ல, வேறு வழியில்லாமல் அர்ச்சனா சம்மதிக்க, அவளது மனதோ ‘அச்சுதன் வீட்டிற்கும் செல்லவேண்டுமா?’ என்று சம்பந்தமே இல்லாமல் யோசித்தது.
காலை உணவு முடித்து, அப்பாவோடு சிறிது நேரம் அமர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி பற்றி பேசிக்கொண்டு இருக்க, ரோஜாவிற்கு இருவரையும் கிளப்பிக்கொண்டு செல்வதற்கே நேரம் சரியாகிபோனது. செல்லும் போதே, மூன்று வீட்டிற்கும் தனி தனியே, இனிப்புகள், பழங்கள் என்று எல்லாம் வாங்கிச் செல்ல, அர்ச்சனா எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.
அம்மாவின் முகத்தில் பெரிய மகளை காணப் போகிறோம் என்று ஒரு தனி சந்தோசம் தெரிய, அர்ச்சனா செல்லும் வழியெல்லாம் கிண்டல் பேசிக்கொண்டே வந்தவள் மனது காரணமின்றி அச்சுதனை வேறு எண்ணிக்கொண்டது.
சம்பந்தமே இல்லாமல், அவன் தன்னோடு பேசுவானா? தான் அச்சுதனோடு எப்படி பேசுவது என்றெல்லாம் யோசனைகள் தரிகெட்டோட, மகளின் திடீர் அமைதி கண்டு
“என்ன அர்ச்சு..” என்று கார்மேகம் கேட்க,
“என்ன டாடி?” என்றாள் திரும்ப.
“என்ன திடீர்னு சைலன்ட் ஆகிட்ட? என்ன யோசனை…” என்றிட, ரோஜாவும் “அதானே என்ன யோசனை என் பொண்ணுக்கு…” என்று கேட்க,
“நத்திங் ம்மா.. நாளைக்கு கம்பனிக்கு போறதை பத்தி யோசனை பண்ணிட்டு இருக்கேன்…” என்று பேச்சின் திசையை மாற்றிவிட்டாள்.
அனிதாவின் வீடு வந்திட, கிட்டத்தட்ட பத்தடி உயரத்திற்கு இருந்த காம்பவுண்ட் சுவரும், அதற்கு மேல் பாதுகாப்பிற்காக இரண்டடிக்கு மின் கம்பிகள் எல்லாம் இணைத்து வைத்திருக்க, காம்பவுண்டினுள் இருந்த அழகிய தோட்டங்களும், தென்னை மரங்களும், மா மரங்களும், ஒரு பக்கம் முழுதாய் இருந்த வாழை மரங்களும் என்று ஏதோ நகரத்திற்கு முற்றிலும் மாறுபட்ட இடத்திற்கு வந்தது போல் காட்சியளித்தது.
பச்சை பசுமை தான்.. சுற்றிலும்…
அந்த அழகிய பசுமைக்கு நடுவே, தள்ளி தள்ளி மூன்று பங்களாக்கள். வெளி தோற்றத்தில் பார்ப்பதற்கு மூன்றும் ஒன்று போலவே இருந்தாலும், உள்ளமைப்பு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கட்டியிருந்தனர்.
கார்மேகம் காரினை நேராய் இரண்டாவது பங்களாவின் முன்னே சென்று நிறுத்த, அர்ச்சனாவின் பார்வையோ சுற்றிலும் இருக்கும் இயற்கை அழகினை பார்த்துக்கொண்டு வந்தது.
‘வாவ்…’ என்று அவளாது கண்கள் சொல்ல, இதழ்களோ ஒரு புன்னகையை பூசிக்கொள்ள,
“ம்மா.. அப்பா… அர்ச்சு…” என்று மூவரையும் ஒன்றுபோல் வந்து அணைத்துக்கொள்ள, அவளுக்கு அப்படியொரு சந்தோசம்.
அர்ச்சனாவோ “என்ன அக்கா, ரெண்டு நாள் முன்ன தானே பார்த்தோம்.. இப்போ இவ்வளோ எக்சைட் ஆகுற?” என,
“அட போ டி..” என்றவள், அம்மாவை பார்க்க
அவரோ ‘நான் பேசிக்கிறேன்…’ என்று கண்ணிமைத்தார்.
மகளோடு பேசியபடி பெரியவர்கள் முன்னே நடக்க, அர்ச்சனா ஒரு சிறு தயக்கத்தோடு அவர்களின் பின்னே செல்ல “வாங்க வாங்க சம்பந்தி…” என்று கார்மேகத்தை கட்டி அணைத்து வரவேற்றார் தாமோதரன்.
பாமினியும் “வாங்க அண்ணா.. வாங்க அண்ணி..“ என்றவர் அவர்களின் பின்னே வந்த அர்ச்சனாவை கண்டதும் “வா ம்மா…” என்று மனதார வரவேற்க, அவர்கள் முகத்தினில் தோன்றியிருக்கும் இந்த புன்னகை நிஜமாகவே மனதினில் இருந்து தான் வருகிறது என்பதனை அர்ச்சனாவால் உணர முடிந்தது.
அதே நேரம் பிரகாஷும் வந்தவன் பெரியவர்களை வரவேற்றுவிட்டு “வா அர்ச்சனா.. பார்ஸ்ட் டைம் எங்க வீட்டுக்கு வந்திருக்க…” என்று அவளை வரவேற்க,
“எப்படின்னாலும் வந்துட்டேன்ல மாமா…” என்றவள், அமெரிக்காவில் இருந்து, இவர்களுக்கு எல்லாம் வாங்கி வந்த பரிசுகளை கொடுக்க, எந்த பந்தா பாகுபாடும் இன்றி அதே புன்னகையோடு அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்டனர் அனைவரும்.
“என்ன பிரசாந்தை காணோம்…” என்று ரோஜா கேட்க,
“மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவான் அண்ணி…” என்ற பாமினி, அனிதாவை பார்க்க, வேகமாய் அவர்களுக்கு குடிப்பதற்கு பழச்சாறு கொண்டு வந்து கொடுக்க,
“விசேச வேலை எல்லாம் முடிஞ்சதா?” என்றார் கார்மேகம் பொது பேச்சாய்.
அடுத்தடுத்த பேச்சுக்கள், அர்ச்சனாவின் படிப்பு விபரங்கள், அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்றெல்லாம் தாமோதரன் அவளிடமும், கார்மேகத்திடமும் பேச, மற்றவர்களும் அவர்களின் பேச்சில் இணைந்து கொள்ள, அடுத்த அரைமணி நேரம் சென்றதே தெரியவில்லை.
அவர்கள் அப்படி.. இப்படி என்று அனிதா சொல்லியிருந்த கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அர்ச்சனாவிற்கு கண்ணில் படவே இல்லை. அனைவரும் இயல்பாய் இருப்பது போல் தோன்ற, அரைமணி நேரம் தாண்டியதும் சொல்லி வைத்தது போல, நீலவேணி வர, அவரோடு சேர்ந்து சுரேந்திரன் சுமிதா குடும்பமும் வந்தது.
அச்சுதன் வரவில்லை நீலவேணியோடு.
மீண்டும் வரவேற்பு படலம், நலவிசாரிப்பு படலம் எல்லாம் ஆரம்பித்து முடிய, மறுபடியும் அர்ச்சனாவிடம் பேச்சுக்கள் தொடங்க, அனிதாவோ ஒருவித பதற்றத்தில் இருப்பது போலவே இருக்க,
அர்ச்சனா அதனை கவனித்தவள் ‘என்னாச்சு?!’ என்று கண்களால் கேட்க,
நீலவேணி அதனைக் கவனித்தவர் “அது உன் அக்காக்கு நாங்க எல்லாம் வந்துட்டா டென்சன் வந்திடும்.. இப்படிதான் ஒருமாதிரி டென்சன் ஆகிடுவா…” என்று புன்சிரிப்போடு சொல்ல,
சுமிதாவோ “அனிதா இன்னும் புது பொண்ணு மோட்ல இருந்து மாறவே இல்லை..” என்று கேலி போல பேச, அர்ச்சனாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
அப்படித்தானே அனிதாவும் நடந்துகொள்கிறாள்.
தேவையில்லாத பதற்றம். அது எதற்கு என்று அர்ச்சனா எண்ணியவள், அக்காவிடம் தனியே பேசவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
அடுத்து சிறிது நேரத்தில் பிரசாந்தும் வந்துவிட, அந்த இடமே களைகட்டியது. இந்த கூட்டத்திலேயே பிரசாந்த் தான் பயங்கர ஜாலி டைப். அர்ஜுனும் அப்படித்தான். ஆனால் மற்ற அண்ணன்களை விட, பிரசாந்த் இருந்தால் தான் அர்ஜுனும் , பவஸ்ரீயும் இன்னும் வாய் திறப்பர்.
வந்தவன் நேரடியாய் “ஹாய் பாரின் ரிட்டர்ன்…” என்று அர்ச்சனாவின் முன்னே நிற்க,
‘என்னடா இது?!’ பார்த்தவள் “ஹாய்…” என்று புன்னகை சிந்த,
“அப்புறம் சொல்லுங்க எத்தன சென்ட் பாட்டில் வாங்கிட்டு வந்தீங்க? எத்தன சாக்லேட் பாக்ஸ் வாங்கிட்டு வந்தீங்க?” என்று கேட்க, அங்கிருந்த அனைவருக்குமே முகத்தில் மென்னகை தான்.
அர்ச்சனா அனிதாவைப் பார்த்தவள், பின் என்ன எண்ணினாளோ “இங்க குளிக்காம வெளிய போறவங்க இருக்காங்கன்னு எங்கக்கா என் கிட்ட சொல்லவே இல்லையே.. அதுபோல கிட்ஸ் இருக்கங்கன்னும் சொல்லலை…” என்று சொல்ல,
“ஆகா…” என்று தலையில் கை வைத்தவன் “ரைட்.. டேய் அர்ஜுன் இவங்க லேடி அச்சுதன்டா…” என்றிட, அர்ச்சனாவிற்கு திடுக்கென்று ஆனது.
நீலவேணி நொடியில் கண்கள் இடுக்கி, அர்ச்சனாவை பார்க்க, அவளோ குழப்பமாய் பார்க்க “எஸ்.. எங்கண்ணா இப்படித்தான் கவுண்டர் குடுப்பார்…” என்றவன்
“சாரி பெரியம்மா.. பழைய நியாபகத்துல பேசிட்டேன்…” என்றிட, நீலவேணி பெருமூச்சு மட்டுமே விட,
பவஸ்ரீயோ “பெரியம்மா அண்ணா வரலையா?” என்று கேட்க,
“வருவான். கிளம்பிட்டேன்னு சொன்னான்…” என்றார் உள்ளே போன குரலில்.
அச்சுதன் எத்தனைக்கு எத்தனை கேலி கிண்டல் என்று பேசுவானோ இன்று அதனை எல்லாம் மறந்து போனான். இறுகிப் போனான் என்றுதான் சொல்லவேண்டும். அவனது இயல்பே மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
சட்டென்று அனைவரிடமும் ஒரு சோகம் வந்து ஒட்டிக்கொண்டது போலிருக்க, அர்ச்சனாவிற்கோ, அவன் ஒருவனுக்காக, ஒருவனை எண்ணி இத்தனை பேர் வருந்துகிறார்கள் என்று நினைக்கும்போது அவன் தான் கொஞ்சம் மனம் மாறினால் என்ன என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மதிய உணவு நேரத்தில் கூட, அவன் நேரத்திற்கு வரவில்லை. மூன்று வீடுகள் தனி தனியே இருக்க, சற்று பின்னே கொஞ்சம் தள்ளி ஒரு சிறு வீடு போல் ஒரு அமைப்பும் இருந்தது. அதாவது மரத்தினால் ஆனா தூண்கள் வைத்து, அதற்கு மேலே கூரை வேய்ந்து, ஒவ்வொரு மரத் தூண்களிலும், வாசனை பரப்பும் கொடிகள் சுற்றப்பட்டு என்று ரம்யமாய் இருந்தது அவ்விடம்.
வீட்டினர் அனைவரும் ஒன்றுகூடி உண்கிறார்கள் என்றால், அவர்களுக்கான இடம் இதுதான்.
இது அச்சுதனின் ஏற்பாடு.
அது அர்ச்சனாவிற்கு தெரியாது. தெரியாமலே அர்ச்சனா இந்த இடத்தைப் பார்த்ததும் “வாவ்.. அழகா இருக்கு…” என்று சொல்ல,
“எல்லாம் எங்க அண்ணா ஏற்பாடு…” என்று பிரசாந்த் சொல்ல, அவளோ பிரகாஷை சொல்கிறான் என்றெண்ணி அவனைப் பார்த்து புன்னகைக்க,
“எங்க அண்ணா அப்படின்னு இங்க யார் சொன்னாலும், அது அச்சுதன் அண்ணா தான்…” என்றான் பிரகாஷ்.
“ஓ..!” என்றவள் பார்வையோ ‘இன்னும் ஏன் இவன் வரவில்லை…’ என்று சுற்றிலும் தேட,
அர்ஜூன் பார்த்தவன் “ யாரை தேடுறீங்க சின்ன அண்ணி…” என்று கேட்க, சட்டென்று அனைவரும் கேள்வியாய் அர்ச்சனாவைப் பார்க்க,
பவஸ்ரீ “அச்சு அண்ணா வந்தாச்சு..” என்றாள் சந்தோசக் குரலில்.
அவள் சொல்லி முடிக்கவில்லை, அர்ச்சனாவின் பார்வை நொடியில் அவன்மீது பாய, நீலவேணி இதனை எல்லாம் கவனித்துக்கொண்டு தான் இருந்தார். என்ன அவர் அர்ச்சனாவை கவனித்த காரணம் தான் வேறு.
எப்படியும் அனிதா சொல்லி, அர்ச்சனாவிற்கு அச்சுதன் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்று தெரியும். தன் மகனை யாரும் குறைவாய் எண்ணிவிட கூடாது என்பதில் அந்த தாய்க்கு மனது இப்படித்தான் அவ்வப்போது உள்ளே அடித்துக்கொள்ளும்.
அப்படியொரு சிந்தனையில் அர்ச்சனாவை பார்க்க, அவளின் பார்வையோ வேறு கதை சொன்னது. அவனைக் கண்டதுமே, காரணமின்றி அவளிடம் தோன்றிய பதற்றம், இத்தனை நேரமில்லாமல் அவள் கண்கள் காட்டிய ஒரு படபடப்பு, தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவர அவள் கொஞ்சம் அல்ல நிறையவே சிரமப்படுவது போலிருக்க, நீலவேணிக்கு ‘கடவுளே…’ என்று இறைவனை எண்ணிக்கொள்ள மட்டுமே முடிந்தது.
பின்னே, அச்சுதன் சரியாகி, தொழிலில் மீண்டும் கால் வாய்த்த நேரத்தில் இருந்து இப்போது வரைக்கும், அவனுக்கு பெண் கொடுக்க என்று யாரும் முன் வரவில்லையே. அவன் திருமணத்திற்கு தயாராய் இல்லைத்தான்.
இருந்தாலும் அவனை திருமணம் செய்யவும் யாரும் தயாராய் இல்லை.
‘அவனே சித்த பிரம்மை பிடிச்சவன்…’ என்று பொதுவாய் ஒரு பேச்சிருக்க, அச்சுதனை காணும் வயது பெண்கள் முதலில் ஆர்வமாய் பார்ப்பது போல் பார்த்தாலும், பின்னே அவனைப் பற்றி தெரிந்ததும் அவனை பரிதாபமாகத்தானே பார்த்துச் செல்வர்.
ஆனால் அர்ச்சனா அப்படிப் பார்க்கவில்லை…
அவனைக் கண்டதும் அவள் அவளது இயல்பில் இல்லை என்று நீலவேணிக்கு புரிந்துபோனது.
அச்சுதன் வந்ததுமே, இளவட்டங்கள் எல்லாம் அவனை சூழ்ந்துகொள்ள, அவர்களிடம் பேசிக்கொண்டே வந்தவன் “வாங்க மாமா… அத்தை…” என்று கார்மேகத்தையும் ரோஜாவையும் வரவேற்றவன்,
அடுத்து அர்ச்சனாவிடம் “ஹாய் அர்ச்சனா…” என்று கரம் நீட்ட, அவளோ திகைத்துப் போய் அவனைப் பார்த்து நிற்க, மெதுவாய் அவளது கரம் அவன் கரம் நோக்கி நீள,
“வெல்கம் ஹோம்…” என்று அவளிடம் அவன் பேசியது எல்லாம் அவள் செவிகளில் விழவில்லை.
அவனது நெற்றியில் இருக்கும் பெரிய தழும்பே அவனுக்கு எப்படி அடிபட்டிருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது. அவன் நெற்றி தழும்பையே பார்த்துக்கொண்டு இருந்தவள், பிடித்த கையை விட மறந்துபோனாள்.