புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 4

மனநல மருத்துவர் இவானுக்கு உடல் பரிசோதனைகளை முடித்த பின், அவனை வரைய வைத்து அவன் உள்ள உணர்வுகளை தெரிந்துக் கொள்ள நினைக்க… இவான் சிரத்தையாக வரைந்து கொண்டிருந்தான்.. அந்த பெண் மருத்துவரும் அதை பார்வையிட… அவசரக்கார ஆர்யன், “என்ன நிலமை.. ஏதும் பிரச்சனை இல்லைல?” என விசாரித்தான்.. “இவான் சோர்வா இருக்கான்..  ஒரு பிளட் டெஸ்ட் எடுத்து பார்த்திடலாம்… வேற சில பரிசோதனைகளும் செய்யணும்” மருத்துவர் சொல்ல ஆர்யன் கவலையானான்..

“உங்களுக்கு தெரியுமா தெரியலையானு எனக்கு தெரியல.. அவன் உங்கள பார்த்து தான் வளர்ந்து இருக்கான்.. நீங்கதான் அவனோட ரோல் மாடல்.. அதனால நான் முதலில் ஒரு செஷன் உங்களோட பேசிடறேன்..” என்று டாக்டர் சொல்ல.. நானியை அழைத்து இவானை கவனித்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு ஆர்யனும், டாக்டரும் வெளியேறினார்கள்.. 

மாடியில் ஆர்யனின் தனிபகுதியின் உள்ளறை அவனின் படுக்கை அறையாக இருக்க.. முன்பகுதியானது வரவேற்பு அறையாகவும், அலுவலக அறையாகவும் பயன்படுத்தும் வகையில் விசாலமாக அமைந்திருந்தது.. அங்கே இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர்.. “உங்கள உருவாக்கின விசயங்கள் பத்தி நாம இப்போ பேச போறோம்.. உங்க கடந்த காலம், உங்க குடும்பம்.. இப்படி..“ டாக்டர் பேப்பர், பேனாவுடன் ஆரம்பிக்க.. ஆர்யன் முகம் மாறியது.. தொடக்கமே சரியில்லை போலவே.. 

“உங்களை பொறுத்த வரைக்கும் வாழ்க்கை என்றால் என்ன.. மூணு வார்த்தைல சொல்லுங்க” முதல் கேள்வி வர…

“பிறப்பு வாழ்வு இறப்பு” பதில் உடனே..

“அவ்வளவு தானா”

“ஆமா”

  

“இவான் உங்களுக்கு யாரு? 

“அவன் என் அண்ணன் பையன்..”. 

“வேற?”

“என் அண்ணனோட சொத்து”

“ஆனா அவன் சின்ன குழந்தையாயிற்றே?”

ஆமா”

“அவனை சின்ன குழந்தை மாதிரி நீங்க நடத்துறீங்களா?”

“என்னை நீங்க விசாரணை செய்றீங்களா?” கோவமாக கேள்வி வந்தது..

  

மன்னிக்கவும்.. நான் தெரிஞ்சிக்கத்தான்….“ என்ற டாக்டரை முடிக்க விடவில்லை

அவனுக்கு வாழ்க்கை பாடத்தை கத்து தரேன்… எப்படி சொந்தக்காலில் நிக்கனும்னு… எப்படி தைரியமானவனா வளரனும்னு சொல்லி தரேன்”

“அப்போ அவன் குழந்தைப்பருவம் என்ன ஆகும்?.. இந்த உலகத்த ஒரு குழந்தை கண்ணோட்டத்தில அவன் புரிஞ்சிக்க வேண்டாமா.?”

சரியான கேள்வி தான்.. ஆனால் பதில் வரவில்லையே.. கையில் பேனாவுடன் டாக்டர் ஆர்யன் முகத்தையே பார்க்க.. அவன் யோசித்து கொண்டேயிருந்தான்.. 

சரி, நான் இப்படி கேட்குறேன்.. இவான் வயசுல நீங்க எப்படி இருந்தீங்க.. அந்த பருவத்துல நீங்க எப்படி நடந்துக்கிட்டீங்க”…. அவ்வளவு தான்.. இவான் முகம் மிக கடுமையாக மாறியது.. உடல் இறுகியது.. இடதுகை மணிக்கட்டை கடிகாரத்தோடு சேர்த்து வலது கையால் பிடித்து கொண்டான்.. கோபத்தோடு சொன்னான்..

“என்னை பத்தி விடுங்க” 

    

“ஆனா நீங்க…” என்ற டாக்டரை இப்போதும் முழுதாக பேச விடவில்லை..

“நான் இவானுக்காக உங்ககூட பேசிட்டு இருக்கேன்”

 

“அவனுக்காக தான் நானும் கேட்கிறேன்… உங்க கடந்த கால பாதிப்புகளை நீங்க இவான் மேல காட்டியிருக்கலாம்.. அந்த பாதிப்பு இன்னும் உங்களுக்குள்ள இருக்கலாம்.. அந்த பருவத்தில பிடிக்காத எதுவும் நடந்ததா.. உங்க குடும்பத்தில.. இல்லன்னா உங்களுக்கு அப்படி ஏதும் நடந்ததா.. வேற உங்க பயம்?..” 

டாக்டர் கேட்க கேட்க.. ஆர்யனின் உடலெங்கும் ஒரு அதிர்வு ஏற்பட்டது.. மூச்சு வேகமாக வந்தது.. கருவிழிகள் அங்குமிங்கும் அசைந்தது.. மணிக்கட்டை இறுக பற்றி கொண்டான்.. அழும் ஒரு சிறுவன் அவன் மனக்கண்ணில் தெரிந்தான்.. பின்பு அந்த சிறுவன் யார் கால்களையோ கட்டிக்கொண்டான்.. கீழே ஒரு கைக்கடிகாரம் கிடந்தது… அதன் அருகே யாரோ தரையில் கிடந்தார்கள்.. அந்த சிறுவனும் இவனை போலவே இடது மணிக்கட்டை பிடித்து கொண்டான்..    

”மிஸ்டர் ஆர்யன்..! மிஸ்டர் ஆர்யன்..!“ என டாக்டர் அழைக்க விருட்டென்று எழுந்தவன், அவர் திகைத்து அமர்ந்திருக்க.. “இந்த செஷன் முடிவடைந்தது” என்று வேகமாக வெளியே நடந்து விட்டான்…. 

————–

வீட்டிலிருந்த பொருட்களையெல்லாம் லாரியில் அனுப்பிவிட்டாள், ருஹானா.. 

“என்னம்மா! எல்லாத்தையும் வித்துட்ட?” என வீட்டின் உரிமையாளர் கேட்க.. “ஆமா அங்கிள்! வீட்டை காலி செய்துட்டேன்.. இந்தாங்க போன மாத வாடகை” என ருஹானா பணம் கொடுத்தாள்.. அதை எண்ணி பார்த்த அவர் சொன்னார், “இது குறைவா இருக்கே… உன்னோட துக்கநாள்ல உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் பார்த்தேன்.. ஆனால் எட்டு மாசம் வாடகை பாக்கி இருக்கு..  யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொன்னார் உங்கப்பா.. அதனால்தான் நான் சொல்லல… அவருக்கு வர வேண்டிய பணம் வந்ததும் தர்றதா இவான் சொன்னார்” 

வருத்தமான ருஹானா கையில் இருந்த பணத்தையும் அவரிடம் கொடுத்து “சரி அங்கிள்! இதை வச்சிக்கங்க… மிச்சத்த நான் கொடுத்துடுவேன்.. இது என்னோட சத்தியம்..” என்றாள்.. “சாரிமா… என் குடும்பம் பெரிசு… இதை விட்டுக் கொடுக்கிற நிலமையில நான் இல்லை” என அவர் வருத்தப்பட.. “கண்டிப்பா மீதியும் கொடுத்துடுவேன், அங்கிள்.. ஆனா உடனே இல்லை.. நிச்சயம் மறக்க மாட்டேன்..“ என உறுதி கொடுக்க.. பணத்துடன் அவர் நகர்ந்தார்…  

ஒரே ஒரு சூட்கேஸ் மற்றும் ஒரு தோள் பையுடன் கிளம்பியவள்… அவர்கள் வாழ்ந்த வீட்டை திரும்பி ஒருமுறை நோக்கினாள்… பின்பு பெட்டியை இழுத்தபடி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள்…

————– 

பர்வீன் காபியை ருஹானாக்கு நீட்டியவாறே சொன்னார், “மகளே! நீ பிறந்து வளர்ந்தது இந்த வீட்ல… மடாபா உன் சொந்த ஊரா இருந்தாலும் அது ஒரு கிராமம்.. புது சூழ்நிலையில உன்னால எப்படி இருக்க முடியும்? கஷ்டமா இருக்காதா?”… 

லேசாக புன்னகைத்து ருஹானா பதிலளித்தாள், “கவலைப்படாதீங்க, பர்வீன்ம்மா! தாத்தாவோட வீடு பழசு தான்.. ஆனா அங்க என் கசின் இருக்காங்க.. நான் அவங்க கிட்ட பேசிட்டேன்.. அவங்களோட கபாப் கடையில எனக்கு வேலை தரேன்னு சொல்லியிருக்காங்க.. நான் இந்தக் கொடுமையான நாட்கள தாண்டித்தானே ஆகணும்” 

“இன்ஷா அல்லாஹ்! நீ இத விட்டு வெளியே வந்தா நல்லது தான்.. ஆனாலும் என்னால உன்னை நிம்மதியா அனுப்பி வைக்க முடியல… நான் வந்து உனக்கு எல்லாம் பார்த்து கொடுத்துட்டு வருவேன்.. ஆனா..” என பர்வீன் சொல்லவும்.. இடையிட்ட ருஹானா “பர்வீன்ம்மா! எனக்கு தெரியும், உங்களுக்கு சிகிச்சை போயிட்டு இருக்கு.. அது முடிஞ்சதும் நீங்க வாங்க.. இல்லனா நானே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்” “சரி! பத்திரமா போயிட்டு வா… ஆனால் இவான்?” என பர்வீன் கேட்க… அதற்கு ருஹானா பதில் எதுவும் அளிக்கவில்லை…

“சரி! நீ கவலைப்படாதே.. இதுதான் கடவுள் சித்தமா இருக்கலாம்.. நாம எப்படி மாற்ற முடியும்? அர்ஸ்லான் கூட போட்டி போட முடியாது.. விடு..

பார்! நம் நிலமைய… நீ அங்க தனியா இருக்க போற! நாங்க உன்னை நினைச்சிட்டே இங்க… 

உன் அப்பா உன் திருமணத்தை பார்க்க விரும்பினார்…” சொல்லிக்கொண்டே போன பர்வீன், “அட! மறந்திட்டேனே!” எழுந்து மேசையை திறந்து ஒரு ரசீதை எடுத்துக் கொண்டு வந்து “இது உன்னோட வாடகை ரசீது” என கொடுத்தார். 

“அடடா! நீங்க ஏன் கட்டினீங்க?” என சங்கடத்துடன் ருஹானா வினவ.. “இல்ல.. நான் கொடுக்கல.. எனக்கு இந்த விஷயம் தெரியாது.. தெரிஞ்சிருந்தா தன்வீரை கட்ட சொல்லி இருப்பேன்.. ஆனா மிஷால் தான் கொடுத்தான்… நன்றியுள்ள பையன்..” என பர்வீன் சொல்ல மேலும் சங்கடமானாள்.. “அவன் ஏன் கொடுத்தான்?

“அவனுக்கு உன் அப்பா மேல பாசம், மரியாதை… உனக்கும் தெரியும் தானே.. நல்லவன்  அவன்..“ என அவர் சொல்ல, “சரி! இந்த பணத்தை நான் அவன் ஹோட்டலுக்கு அனுப்பிடுறேன்” ருஹானா முடிவாக சொல்ல…. “ம்ஹும்! அப்படி செய்யாதே மகளே! அது மரியாதை இல்ல.. அவன் மனசும் கஷ்டப்படும்… இது பெரிய விஷயம் இல்ல.. உன் நிலைமை பார்த்து அவன் உதவியிருக்கான்… பிரார்த்தனை நாள் அன்னைக்கு கூட உணவு சப்ளை அவன்தான் செய்தான்.. அவனோட ஆளுங்க வந்துதான் எல்லா வேலையும் பார்த்தாங்கதாராள மனசு மிஷாலுக்கு.. அல்லாஹ் அவனுக்கு அருள் புரியட்டும்..என அவர் மிஷால் செய்ததற்கு நன்றி கூற… ருஹானா பர்வீனை பார்த்து தலையாட்டியபடி ‘இன்னும் எத்தனை பேருக்கு நான் நன்றிக்கடன் பட்டுருக்கனோ’ என எண்ணினாள்..

———-

 

கரீமா கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.. அழகான ஒரு சிறிய செடி தொட்டியுடன் அம்ஜத் உள்ளே வருகிறான்.. “கரீமா! இதை பாரு”.. கரீமாவுக்கு கோபம் வருகிறது “எதுக்கு இதை ரூம்க்கு கொண்டு வந்தீங்க?..” ஆனால் அவள் கோபத்தை கவனிக்காமல் அம்ஜத் சிரிப்புடன், “இது எவ்வளவு அழகா இருக்கு பாரு.. உனக்கு காட்டத்தான் எடுத்துட்டு வந்தேன்.. பச்சையா துளிர் விட்டு இருக்கு.. நானே இப்போ தான் பார்த்தேன்” என சொல்ல.. 

பல்லை கடித்துக்கொண்டு, “உங்க மேல, கீழ தரையெல்லாம் பாருங்க.. எவ்ளோ மண்ணா போச்சு.. இங்க பாருங்க உங்க கைய”.. என கரீமா சத்தமிட.. “யா அல்லாஹ்! நான் கவனிக்கல.. இப்படி பண்ணிட்டேனே! உன் அமைதிய கெடுத்துட்டேன்.. நான் போகவா..?” என போகாமல் அங்கே நின்றே அம்ஜத் கேட்க.. கடுப்பானவள் “அம்ஜத்! அதை உடனே வச்சிட்டு நேரா குளிக்க போங்க..” என்றாள்.. அம்ஜத் தப்பு செய்துவிட்ட பாவனையில் அவள் தோளில் கை வைத்து “சரி! சரி! சரி! நம்ம அமைதியைக் கெடுத்துக்க வேண்டாம்” என்று சொல்லி… அந்த செடித் தொட்டியை முக்காலி மேல் வைத்துவிட்டு ஒரு புன்னகையுடன், “அமைதி கெடுக்க வேணா!” என்று முக சுளிப்புடன் இருந்த அவளை மீண்டும் தொட்டு சென்றான்..  

தொட்ட இடத்தை தட்டி விட்டவள் போன் அடிக்கவும் எடுத்துப் பார்க்க.. யாரென்று கண்டு கொண்டதும் எச்சரிக்கையுடன் சுற்று முற்றும் பார்வையை செலுத்தினாள்.. 

“சொல்லு!” 

“நீங்க சொன்னபடி இவான் சித்தியை கவனிச்சிட்டு இருக்கேன்..”

“என்ன நடந்தது?”

“அவங்க சொந்த கிராமத்துக்கு திரும்புகிறாங்க, இரயில்ல..” 

“அப்படியா! போறாளா…? நல்லது” – சிரிப்பு முகத்தில்..

“ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு”

“என்ன?” – குழப்பம் இப்போது.. 

“அவங்க இரயிலுக்கு ரெண்டு டிக்கெட் எடுத்து இருக்காங்க.. ஒன்னு அவங்களுக்கு.. இன்னொரு டிக்கெட் யாருக்கு தெரியுமா?.. இவான் அர்ஸ்லாம்..”

“என்ன!!! இவான் அர்ஸ்லாமா! இவானா!” ஆச்சர்யம் முகத்தில்.. 

“இவானை கடத்திட்டு போறாளா” சந்தோஷம் இப்போது..

“சரி! அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கோ.. என்ன செய்றானு எனக்கு அப்பப்ப சொல்லு.. என்று சொல்லியபடி போனை வைத்தவள், யோசிக்க ஆரம்பித்தாள்… 

————–

ஆர்யன் தன் பழைய கைக்கடிகாரத்தை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.. எப்போதும் நேர்த்தியாக உடுத்தும் ஆர்யன், கையில் கட்டுவதோ இந்த பழைய மாடல் கடிகாரம் தான்.. காலநிலைக்கு ஏற்றார்போல், செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் மதிப்பு வாய்ந்த உடைகளை அணிந்தாலும் அவன் இந்த கடிகாரத்தை மட்டும் மாற்றுவதே இல்லை.. 

அவன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின.. சிறிது நேரம் கடிகாரத்தை கையில் வைத்திருந்தவன் பின் அதை மேசையில் வைத்துவிட்டு எழுந்து பக்கத்து அறைக்கு..  இவான் அறைக்கு..  வந்தான்..  

தூங்கும் இவானுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தவன், அவன் மேல் கை வைத்துக்கொண்டு “நீதான் இந்த உலகத்திலேயே விலைமதிக்க முடியாதவன்.. நீ சின்ன பையன்.. நீ இப்போ கஷ்டப்படுற.. ஆனால் சீக்கிரத்தில் சரியாயிடுவ.. கஷ்டத்த எப்படி சமாளிக்கிறதுனு கத்துக்குவே.. நான் உனக்கு எப்பவும் துணை நிற்பேன்.. நீ கீழே விழ நேர்ந்தா தாங்கி பிடிப்பேன்.. உன் சொந்த கால்ல நீ உறுதியா நிக்க கத்துத்தருவேன்.. நீ ஒரு சிறந்த அர்ஸ்லானா இருப்பே.. இவான் அர்ஸ்லான் உறுதியானவன்.. வலிமையானவன்..” என்று சொல்லியபடி அவன் கன்னத்தை தடவிக்கொடுத்து “உன்ன பார்த்து நான் எப்பவும் பெருமைப்படுவேன்…. சிங்கப்பையா.. எப்பவுமே” என்றபடி இவானை பார்த்தபடியே இருந்தான்..” 

————-