ஆர்யன் ருஹானாவை பிடிவாதமாக அழைக்க, அதற்கும் மேல் பிடிவாதமாக ருஹானா வர மறுக்க, இருவரும் ஒருவரையொருவர் முறைத்து நிற்க, ஒரு தீர்மானத்துக்கு வந்த ருஹானா ஆர்யனை விட்டு விலகி தான் வைத்த பீங்கான் தட்டுக்களை எடுத்தாள்.
“நான் இங்க வேலை செய்றேன். என் வேலை இங்க இன்னும் முடியல. அது முடிஞ்சதும் நானே வருவேன்”
“என்ன இது? புது ட்ரிக்கா?”
கோபமாக அவன் புறம் திரும்பியவள் “என்ன ட்ரிக்?” என கேட்டாள்.
அதற்கு பதில் அளிக்காமல் ‘மறுபடியும் சொல்ல மாட்டேன். இப்போ நீ என்கூட வர்றே” என்று ஆர்யன் கட்டாயப்படுத்தினான்.
வெளியே சென்றிருந்த மிஷால் அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
“நான் தான் என் வேலையை முடிச்சிட்டு வரேன்னு சொல்றேன்ல” ருஹானா ஆர்யன் முகத்துக்கு நேராக சொன்னாள்.
“நீங்க என்ன செய்றீங்க இங்க?” மிஷால் ஆர்யனிடம் கேட்டான்.
‘உனக்கெல்லாம் நான் பதில் சொல்வேனா?’ என்பதுபோல் ஆர்யன் பார்க்க, ருஹானா இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
“இங்க என்ன செய்றீங்கன்னு நான் கேட்டேன்” மீண்டும் மிஷால் கேட்க ஆர்யனிடம் அதே அலட்சிய பார்வை.
உடனே ருஹானா “அவர் என்ட்ட பேச தான் வந்திருக்கார்” என மிஷாலிடம் சொல்லி “நீங்க கவலைப்படாதீங்க. நான் இவானை பார்த்துக்கறேன்” என ஆர்யனிடம் கூறினாள்.
மிஷாலிடம் இருந்து ருஹானா மீது ஆர்யன் பார்வையை திருப்ப, “நீங்க கிளம்பினீங்கனா நான் என் வேலையை பார்ப்பேன்” என அவள் சொல்லவும், இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆர்யன் கிளம்பி விட்டான். அவன் பின்னே செல்ல போன மிஷாலை கையைப் பிடித்து தடுத்த ருஹானா “இதோ வரேன்!” என்று சொல்லி வேகமாக வெளியே சென்றாள். அதற்குள் ஆர்யன் காரை எடுத்து சென்றுவிட்டான்.
உள்ளே வந்த ருஹானா “என்னை மன்னிச்சிடு, மிஷால். இது வேலை செய்ற இடம். இங்க எந்த வாக்குவாதமும் நடக்கக்கூடாது. இவானை பற்றி அவருக்கு கவலை. அதுக்காக தான் அவர் இங்க வந்தார்” என ஆர்யனை விட்டுக்கொடுக்காமல் பேசினாள். “உன்னை அவர் தொல்லை செய்ய கூடாதுன்னு நான் நினைக்கிறேன்” என மிஷால் சொன்னான்.
“சரி, மிஷால்! வேலையை முடிச்சிட்டு நான் கிளம்பறேன். இவானுக்கு பரிசுப் பொருள் வாங்கணும்” என ருஹானா நகர “ருஹானா! நாளைக்கு வருவே தானே!” என மிஷால் கேட்டான். “கண்டிப்பா வருவேன்” என்று சொல்லி ருஹானா உள்ளே செல்ல மிஷால் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
——-
ஆர்யன் அவனறை சோபாவில் அமர்ந்து கப்பல் பணியாளர்களின் கோப்பில் மாற்றங்களை குறித்துக்கொண்டிருக்க, ஜாஃபர் காபி கொண்டுவந்து அவன் எதிரே வைத்தான்.
ஆர்யன் ஒன்றும் சொல்லாமல் பார்க்க “டின்னர் வேணாம்னு சொல்லிட்டீங்க. உங்களுக்கு உணவு இங்க கொண்டு வரவா?” என ஜாஃபர் கேட்க, ஆர்யன் வேண்டாம் என தலையசைத்தான். அவள் மேல் உள்ள கோபத்தால் உணவை மறுத்தானோ?
——-
“ஏன் சித்தி, என்னை இன்னைக்கு சீக்கிரம் தூங்க வைக்கிறீங்க?”
“அப்போ தான் செல்லம் நாளைக்கு உன் பார்ட்டில நீ புத்துணர்ச்சியா இருப்பே”
“நாளைக்கு நிறைய பேர் வருவாங்களா?”
“ஆமா அன்பே!”
“அவங்களுக்கு என் பார்ட்டி பிடிக்கலனா என்ன செய்றது?”
‘ஏன் பிடிக்காது? கண்டிப்பா பிடிக்கும். அப்படியே பிடிக்காம போனாலும் நீயும் நானும் ஜாலியா விளையாடலாம். இவான் குட்டிக்கு ஐந்து வயசாக போகுது. பேபில இருந்து பாய் ஆக போறீங்க!” அவன் கலக்கத்தை போக்கி வேறு திசை திருப்பினாள்.
சிரித்த இவான் “ஸ்கூல் போக இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு” என ஆனந்தப்பட்டான்.
“சரி தூங்கு, தேனே. குட்நைட்” என சொல்லி ருஹானா அவன் தலையை தடவிக்கொடுக்கவும் இவான் கண்களை மூடிக்கொண்டான்.
பக்கத்தில் இருந்த தஸ்லீமின் புகைப்படத்தை பார்த்த ருஹானா “என் அன்பு அக்கா!” என்று கண்கலங்கினாள். கை தானாக இவான் டாலரை பிடித்துக்கொண்டது.
அக்காவை நினைத்து துக்கத்தில் மூச்சு முட்ட, வெளிக்காற்று வாங்க மாடியின் வெளிமாடத்திற்கு ருஹானா வந்து நின்றாள். தோட்டத்தில் சத்தம் கேட்க உற்று பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
அங்கே ஆர்யன் அம்பு விட்டுக்கொண்டிருந்தான். அடிக்கடி இடது தோளையும் பிடித்துக்கொண்டான். ஆனாலும் அம்பு எய்வதை நிறுத்தவில்லை.
“ஏன் இத்தனை கோபம்? தன்னோட காயத்தை கூட பொருட்படுத்தாம அப்படி எதுக்கு வருத்திக்கணும்?” என இவள் இங்கே சொல்லிக்கொண்டாள்.
ருஹானா தன்னோடு வர மறுத்த கோபத்தை அம்பில் காட்டிக்கொண்டிருந்த ஆர்யன், அவள் மேன்மாடத்தில் நிற்பதை பார்த்ததும் வில்லை தழைத்தான். அவளையே உற்று நோக்க, அவள் உள்ளே வந்துவிட்டாள்.
———
காலை உணவு மேசை..
“இவான் செல்லம்! நல்லா சாப்பிடு”
“நீங்க இல்லாதபோது நான் என்ன செய்றது, சித்தி? பார்ட்டிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கே!”
“அழகா படம் வரை, அன்பே! நஸ்ரியா கூட விளையாடு”
பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த நஸ்ரியாவும் சிரிப்புடன் தலையாட்டினாள்.
மௌனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆர்யனை ஒரு பார்வை பார்த்த ருஹானா “நீ மதியம் தூங்கி எழுறத்துக்குள்ள வந்துடுவேன், தேனே!”
இவான் முகம் சுருங்கியே இருக்க, ஆர்யன் ருஹானாவை பார்ப்பதை கண்ட கரீமா ‘தான் உள்ளே புக சரியான தருணம் இது’ என எண்ணி “ருஹானா டியர்! இன்னைக்கு ஒரு நாள் நீ போகலனா என்ன? உன் பாஸ்ட்ட நான் பேசி அனுமதி வாங்குறேன்” என ருஹானாவை சங்கடத்தில் விழ வைத்தாள்.
ஆர்யன் சாப்பிடுவதில் கவனம்போல் இருக்க, ருஹானா என்ன சொல்வது என யோசிக்க “இது இவானோட மிக முக்கியமான நாள். அம்ஜத் டியர்! நீங்க சொல்லுங்களேன்” என கரீமா குழியை ஆழமாக வெட்டினாள்.
“ஆமா, ஆமா, கரீமா சொல்றது சரிதான். நீ போகாதே, ருஹானா. எங்களோட இரு. நல்லா இருக்கும்” என அம்ஜத்தும் சொன்னான்
“ஆமா அம்ஜத் சார்! நல்லா இருக்கும் தான். ஆனா நான் இன்னைக்கு கண்டிப்பா போகணும்”
“ஏன் சித்தி?” இவான் கேட்க ஆர்யனும் சாப்பிடுவதை நிறுத்தி கவனமாக கேட்டான்.
“ஏன்னா என்னால மட்டுமே செய்ய முடிஞ்ச உணவுகளுக்கு இன்னைக்கு ஆர்டர் வந்துருக்கு, இவான்! நான் போகலனா அங்க யாரும் அது செய்ய முடியாது, செல்லம்”
“ஓ, அப்படியா?”
“ஆமா, அன்பே! நான் என் செல்லத்தோட பார்ட்டிக்கு கண்டிப்பா வந்துடுவேன்”
“நிச்சயமா வருவீங்க தானே, சித்தி?”
“கட்டாயம், என்னுயிரே!”
ஆர்யன் முள்கரண்டியில் ஒரு பன்னீர் துண்டை எடுத்து சாப்பிட, அவனை பார்த்த கரீமா ‘இதென்ன இவன் அமைதியா சாப்பிடுறான், இன்னும் கொளுத்தி போடுவோம்’ என நினைத்து “ருஹானா! எல்லா ஏற்பாடும் சல்மா செஞ்சிட்டா. உனக்கு ஒரு வேலையும் இல்ல. நான் இவானுக்காக தான் உன்னை இருக்க சொல்றேன்” என மேலும் அழுத்தி சொன்னாள்.
சாப்பிட்டு முடித்த ஆர்யன் எழுந்து நின்றான். அம்ஜத், கரீமா, சல்மா, இவான் அதோடு ருஹானாவும் ஆர்யனை பார்க்க “சீக்கிரம் வந்துடு!” அவளை உற்று பார்த்தபடி ஆர்யன் சொன்னான். நிம்மதியடைந்த ருஹானா சரியென தலையாட்ட அவனும் சென்றுவிட்டான். கரீமா சல்மாவை பார்த்து சிரித்தாள்.
——–
ருஹானா கிளம்ப தயாரானவள் கைபேசியை எடுத்து தன் கைப்பையில் வைத்தாள். வெளியே செல்ல போகும்போது தன் கட்டிலில் இருந்த ரோஸ்நிற துணிப்பெட்டியை பார்த்தாள். அதை திறந்து பார்க்க ரோஜா வண்ணத்தில் மிக மிக அழகிய உடை ஒன்று இருந்தது. குழப்பமாக யோசித்தவளுக்கு கரீமா தனக்கு உடை ஏற்பாடு செய்வதாக சொன்னது நினைவுக்கு வந்தது. பெட்டியை மூடியவள் வேலைக்கு புறப்பட்டாள்.
——
ஆர்யன் அறையில் ரஷீத்திடம் “புது டெண்டர் ஃபைல் கொண்டு வந்திருக்கியா, ரஷீத்?” என ஆர்யன் கேட்க ரஷீத் அதை எடுத்து மேசையில் வைத்தான். ஆர்யன் கேட்காத கேள்விக்கு பதிலாக “டிரஸ் கொண்டு வந்தாச்சி. ஜாஃபர் அவங்க ரூம்ல வச்சிட்டார்” என ரஷீத் சொல்ல ஆர்யன் சில கணங்கள் சிந்தித்தவன் “சீக்கிரமா ஃபைலை பார்க்கலாம்” என சொல்லி அதை கையில் வாங்கினான்.
“இது புது கம்பெனியோட டெண்டர். இதோட வழிமுறை புரிஞ்சிக்க கடினமா இருக்கு. இதுல இருந்து ஆரம்பிப்போமா?” என ரஷீத் கேட்க, ஆர்யனின் சிந்தனைகள் மீண்டும் எங்கோ சென்றன. அதை இழுத்து பிடித்துக் கொண்டு வந்து வேலையில் செலுத்தினான்.
———
வாசனை திரவியம் தெளித்துக்கொண்ட மிஷால் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டே கடிகாரத்தையும் பார்த்தான். வாசலுக்கும், சமையலறைக்குமாக நடை போட்டான். அங்கே தருமம் கேட்டு வந்த எளியவர் ஒருவருக்கு தாராளமாக பணம் கொடுத்தான்.
அதை பிரமிப்புடன் பெற்றுக்கொண்ட அவர் “அல்லாஹ் அருளால நீங்க நிறைய சம்பாதிக்கணும்” என சொல்ல, மிஷால் “ஆமின்!” என்றான். அவர் நன்றி சொல்லி செல்லவும் ருஹானா வேகமாக உள்ளே வந்தாள்.
“தாமதமாகிடுச்சா, மிஷால்?”
“இல்ல, ருஹானா.. ஆனா நீ லேட்டா வந்தாலும் ஒன்னுமில்ல. இது உன் இடமும் தான்” என மிஷால் சொல்ல ருஹானா புன்னகை செய்தாள்.
“நேத்து ஏதும் பிரச்னை இல்லயே?”
“அதெல்லாம் ஒன்னுல்ல, மிஷால்”
“ருஹானா! மறுபடியும் இதை நான் சொல்றது எனக்கே ஒரு மாதிரியா இருக்கு. ஆனா அந்த மனுசன் நிழல்ல நீ இருக்குறது எனக்கு சரியா படல”
“கவலைப்படாதே, மிஷால். எல்லாம் சரியா தான் இருக்கு. வா, கிச்சன் போலாம். வேலை இருக்கு” என அவள் முன்னே செல்லவும் மிஷாலும் சிரித்தபடி அவள் பின்னே சென்றான்.
“முதல்ல குருடோல்மா செஞ்சிடலாம்” என இறைச்சியை வேக வைத்தவள் எதையோ தேடினாள்.
“என்ன பார்க்குறே?”
“வெங்காயம் வேணும், மிஷால்”
“இந்தா! நீ வரும்முன்னே நான் வெட்டி வச்சேன்”
“நன்றி மிஷால்! இவான் பரிசு இங்க டெலிவரி கொடுப்பாங்க. உனக்கு ஒன்னும் சிரமம் இல்லயே?” வேலை செய்துக்கொண்டே இருவரும் பேசினர்.
“இதுல என்ன இருக்கு? நல்ல காரியம் செய்தே!”
“இன்ஷா அல்லாஹ்! அது அவனுக்கு பிடிக்கணும்”
“ஏன் சந்தேகம் உனக்கு? அவனோட சித்தி கொடுக்கறது எல்லாமே அவனுக்கு பிடிக்கும்”
“உனக்கு தான் நன்றி மிஷால்! உன்னால தான் இது சாத்தியமாச்சி”
“நான் தான் உனக்கு நன்றி சொல்லணும். எல்லாமே உனக்காக தான்…” என மிஷால் மேலே ஏதோ சொல்லும்முன் அவன் போன் அடித்தது.
கரீமா ஏற்பாடு செய்திருந்த ஆள் பெரிய ஆர்டர் கொடுக்க, மிஷால் அதை அடுத்த நாள் தருவதாக சொல்ல, அந்த ஆள் அன்றே வேண்டும் என கேட்டான். அதை கேட்டுக்கொண்டிருந்த ருஹானா ஒப்புக்கொள்ளுமாறு சைகை செய்தாள்.
போன் வாயை மூடிய மிஷால் “இது செய்ய நேரம் எடுக்கும், ருஹானா. பார்ட்டிக்கு உன்னால சரியான நேரம் போக முடியாது” என்று சொன்னான்.
“இன்னும் மூணு மணி நேரம் இருக்கே, மிஷால். செய்திடலாம். வாடிக்கையாளரை இழக்காதே!” என்று வற்புறுத்தி அதை ஏற்றுக்கொள்ள செய்தாள். அவள் சொன்னது போலவே செய்த மிஷால் தன் தொழிலில் ருஹானாக்கு இருக்கும் அக்கறையை கண்டு ஆனந்தமடைந்தான்.