புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 19

சல்மா என்ன முயற்சித்தும் அவள் காதலன் பதிலளிக்காத காரணத்தால் லண்டன் செல்ல முடிவு செய்து அதை அவனுக்கும் செய்தியாக அனுப்பினாள். பெட்டியை அடுக்கிக்கொண்டு இருக்கும்போது அவனாகவே போனில் அழைத்து ‘நமக்குள் எல்லாம் முடிந்தது, இனி என்னை பார்க்க வராதே’ என்று சல்மாவை பேசவிடாமல் அவனே பேசி முடித்து வைத்தான்.

பெட்டியை கொட்டி கவிழ்த்தவள் பெருங்குரலெடுத்து அழுதாள். சத்தம் கேட்டு ஓடிவந்து சமாதானப்படுத்திய கரீமாவை கட்டிக்கொண்டு அழுதாள். “ரெண்டு வருசம், அக்கா.. நாங்க அப்படி லவ் பண்ணோம். எப்படி என்னை விட்டு பிரிய முடிந்தது அவனால?”

“இதுவும் கடந்து போகும். அவன் என்ன உனக்கு வாழ்க்கை தர்றது? நான் உனக்கு தரேன், வளமான வாழ்க்கை. நீ இப்போ அமைதியா தூங்கு” என தங்கைக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்த கரீமா ருஹானாவை தேடிப் போனாள்.

சமையலறையில் ருஹானாவை பார்த்த கரீமா “என்ன ஆச்சி, ருஹானா? நீங்க ரெண்டுபேரும் காணாம போனதும் நான்கூட இவானை கூட்டிட்டு நீ போயிட்டேன்னு நினைச்சேன். நான் அதை தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆர்யனோட முரட்டு குணம் எனக்கு பழகி போச்சி. நீ ரொம்ப சின்ன பொண்ணு!” என்று ருஹானாவின் எண்ணத்தை அறிய முயன்றாள்.

“அவர் இருக்குற இந்த பயங்கர உலகம் எத்தனை கொடூரமானதுன்னு நான் இன்னைக்கு நல்லா புரிஞ்சிகிட்டேன். அந்த ஆட்கள்ட்ட இருந்து தப்பிச்சி ஓடும்போது நான் ஒரு முடிவெடுத்தேன். இவானை எப்படியும் காப்பாத்தணும். அந்த இருட்டு உலகத்திலிருந்து இவானை காப்பாத்தற ஒரே இடம் அவன் சித்தப்பாவோட இடம் தான். இவான் எதிர்காலத்தை பாதுகாக்க நான் நம்புற ஒரே ஆள் இவான் சித்தப்பா தான்” என்று ருஹானா உறுதியாக சொல்ல கரீமா திகைத்து நின்றாள்.

——–

அக்காவின் போனில் குறுஞ்செய்தி வந்த சத்தம் கேட்டு சல்மா அரைகுறை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். கரீமா தன் அறைக்கு ஓடிவந்த போது போனை இங்கேயே விட்டு சென்றதை கண்டு அதை எடுத்துக்கொண்டு அக்காவை நாடி சென்றாள். அதற்குள் மற்றுமொரு செய்தி மேலே வந்து விழுந்தது. அது தன் காதலனின் எண் என பார்த்து அதிர்ந்தவள், போனை திறந்து ஆராய்ச்சி செய்தாள்.

இருவருக்கும் நடந்த உரையாடலில் அக்காவின் திருவிளையாடலை அறிந்துக்கொண்டாள். நேரே கரீமாவிடம் சென்றவள் “ஏன் இப்படி செய்தே? என் வாழ்க்கையில தலையிட உனக்கு என்ன உரிமை இருக்கு? இரு.. இப்பவே போய் உன் எல்லா சதிகளையும் எல்லார்ட்டயும் சொல்றேன். எப்படி என் சந்தோசத்தை கெடுத்த மாதிரி மத்தவங்க வாழ்கையை கெடுத்தேங்றதை விவரமா சொல்றேன். உன்னை பழிக்குபழி வாங்குறேன்” என ஓடப் பார்த்தாள்.

கத்திய சல்மாவை இழுத்து வந்து அவள் படுக்கையில் தள்ளிய கரீமா “சல்மா! உன்னை விட பணம் முக்கியம்னு அவன் வாங்கிட்டு ஓடிட்டான். நீ ஒரு முட்டாள். கண்மூடித்தனமா அவனை நம்பி இருக்கே. அவன் உன் பணத்துக்காக தான் உன்கூட இருந்திருக்கான். இதே போல வேற பெண்களையும் அவன் ஏமாத்தி இருக்கான். அது உனக்கு தெரியுமா?” என ஆத்திரமாக கத்தினாள்.

சல்மா நம்பாமல் தலையசைக்க “இல்ல! நீ பொய் சொல்றே. அவன் என்னை ரொம்ப நேசிச்சான். நீ தான் அவனை ஓட விட்டுருக்கே” கதறியபடி சொன்னாள். “அப்படியா? அப்போ ஏன் உன் போனை அவன் எடுக்கல? என்கிட்டே பணம் வாங்கினதை உனக்கு சொல்லல?” கரீமா கேட்க சல்மா தலை குனிந்தது.

“நான் ஏன் இந்த பைத்தியக்கார கணவனையும், கோபக்கார ஆர்யனையும் சகிச்சிக்கிட்டு இங்க இருக்கேன்? என் இளமையை நான் வீணாக்கினேன், ஏன்? உனக்காக.. நமக்காக.. இந்த திரண்ட செல்வத்துக்காக…” கரீமா சொல்ல சொல்ல சல்மா அழுதுக்கொண்டே இருந்தாள்.

“ஆங்.. என் பிளான்லாம் போய் சொல்லு, எல்லார்ட்டயும்.. அதுக்கு முன்னே ஒரு நிமிஷம் யோசி. எப்படி பசி பட்டினில நாம தவிச்சோம்? இப்போ எப்படி இருக்கோம்? ஆடம்பர வாழ்க்கை.. லண்டன் படிப்பு.. இதுக்கெல்லாம் எனக்கு நன்றி சொல்லு. இனிமேல் நான் சொன்னபடி கேளு. ஆர்யன் மேல உன் பார்வையை திருப்பு” என்று சொல்லி வேகமாக கதவு சாத்தி கரீமா வெளியே சென்றாள். சல்மா தலையை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

———-

இவான் தூங்குகிறானா என்று பார்த்துவிட்டு கதவை மூடி வந்த ருஹானா எதிர்ப்பட்ட ஆர்யனை பார்த்தாள். தயங்கியபடி அவள் குட்நைட் சொல்ல அவனும் நின்று தலையாட்டியவன் மெல்ல அவளை பார்த்தபடி அவன் அறைக்குள் சென்றான்.

அவனிடம் ஏதோ வித்தியாசம் உணர்ந்தவள் மேலே நகராமல் அங்கேயே நின்றாள். அவன் அறைக்கதவையே பார்த்துக்கொண்டிருந்தவள் தலையை திருப்பும்போது கீழே சிந்திய இரு இரத்தத்துளிகளைப் பார்த்து அதிர்ந்தாள். அவன் அறைவாசலுக்கு சென்றவள் உள்ளே செல்லாமல் யோசித்தபடி அங்கேயே நின்றாள்.

இடது கையை பிடித்துக்கொண்டே தனது அறை படிக்கட்டில் இறங்கிய ஆர்யன் நெற்றியெல்லாம் வியர்வைத் துளிகள். வலியை பொறுத்துக்கொண்டு கோட்டை கழட்ட போனவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு கோட்டை மாட்டிக்கொண்டு திரும்பினான்.

மேல்படிக்கட்டில் நின்ற ருஹானாவை பார்த்து முகம் சுருக்கியவன் “என்ன வேணும் உனக்கு?” என கேட்டான். மெல்ல இறங்கியவள் “உங்களுக்கு காயம் பட்டுருக்கு, சரிதானே?” என திருப்பிக் கேட்டாள். “போ!” ஒற்றை வார்த்தை கட்டளை வந்தது. அதை மதிக்காமல் அவள் நெருங்கினாள். “உனக்கு கேட்கலயா? போ!” என்றான் மீண்டும் குரலை கடுமையாக்கி.

போவதற்கு திரும்பியவள் கண்ணுக்கு அவன் காலடியில் வந்து விழுந்த இரத்தத்துளிகள் தென்பட்டது. அவள் பார்வை சென்ற இடம் நோக்கி பார்த்த அவனும் இறுகிப்போனான். அவள் செல்லாமல் அங்கேயே நிற்க வெளியே ஜாஃபர் நடக்கும் ஒலி கேட்டது. திரும்பி பார்த்தவள் “ஜா…” என கூப்பிடுவதற்குள் ஆர்யன் ருஹானாவின் வாயை தன் கை கொண்டு அழுத்தமாக மூடி இருந்தான்.

கோபமாக உறுத்து விழித்தவன் ஜாஃபர் செல்லும்வரை அவளை பேசவிடாமல் அவள் வாய் மீது கை வைத்திருந்தான். பெரியதாய் விரித்து முறைத்திருந்த அவன் கண்கள், பயத்தால் அலைபாய்ந்த அவள் கண்களை அருகே காண காண இயல்பு நிலையடைந்து மென்மையானது.

ஜாஃபர் சென்றவுடன் அவன் கையை தட்டி விட்ட ருஹானா “ஒன்னு உதவிக்கு மத்தவங்களை கூப்பிடுவேன் இல்ல நானே முதலுதவி செய்வேன்” என்று தீர்மானமாக சொன்னாள். அவளை முறைத்து பார்த்தவன் திரும்பிக்கொண்டான். அவன் கோட்டை கழட்ட அவள் இழுக்க “நானே எடுக்குறேன்” என அவன் சொல்ல அவள் அதை காதில் வாங்கவே இல்லை. அவளே அவன் கோட்டை கழட்டி காயத்தை ஆராய்ந்தாள்.

காயம் கண்டு கவலைப்பட்டவள் “இது துப்பாக்கி காயமா, கத்தி காயமா?” என கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் நிற்க, திரும்ப காயத்தை பார்த்தவள் கண் கலங்க “பெரிய காயமா இருக்கே! டாக்டரை கூப்பிடலாம்” என்றாள். “டாக்டர் தேவையில்ல” வேகமாக வந்தது பதில்.

“ஆனா புல்லட்?”

“புல்லட் இல்ல!”

“ஆனா ஆழமான காயமா இருக்கு. இன்ஃபெக்ஷன் ஆகலாம். டாக்டர்ட்ட போறது நல்லது” அவனுக்கு பின்னால் நின்றபடியே பேசினாள்.

“இல்ல. இதை பத்தி யாருக்கும் தெரியக்கூடாது”

“இப்படியே ரத்தம் வெளிய போயிட்டு இருந்தா இன்னும் மோசமாகும். கண்டிப்பா உதவி தேவை” பதைப்புடன் சொன்னாள்.

“எனக்கு யார் உதவியும் தேவை இல்ல. உன் உதவியும் வேணாம்” லேசாக பின்னால் திரும்பி பார்த்து வேகமாக சொன்னான்.

முன்புறம் திரும்பிக்கொண்டவன் “இப்போ வெளியே போ!” என்றான்.

அவனை விசித்திரமாக பார்த்தவள் வேகமாக வெளியே போய்விட்டாள். செல்லும் அவளை பார்த்தபடியே நெற்றி வியர்வையை துடைத்தவன் உள்ளே சென்று துணி கொண்டு வந்தான். சட்டையை கழற்றி விட்டு துணியை எடுக்கும் வேளையில் கதவு தட்டப்படும் ஓசையில் திரும்ப ருஹானா கையில் மருந்து ட்ரேயுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.

மேல்சட்டை போடாத நிலையில் ஆர்யனை பார்த்தவள் பார்வையை சங்கடத்துடன் தழைத்துக் கொண்டாள். “நான் சொல்றது உனக்கு புரியாதா?” அவன் திரும்பி நின்றுக்கொண்டு தலையை மட்டும் திருப்பி முறைப்புடன் கேட்டான்.

“உங்க காயத்துக்கு மருந்து போடாம நான் இங்க இருந்து போக மாட்டேன். எனக்கு அடிபட்டபோது நீங்க என்னை பார்த்துக்கிட்டீங்க தானே? இப்போ நான் உங்களை கவனிப்பேன்” உறுதியாக சொன்னாள்.

அவன் சிந்தித்தவாறே அமைதியாக முன்னால் திரும்பிக்கொண்டான். கீழே இறங்கி அவன் அருகே வந்தவள் ”யாருக்கும் கடனாளியா இருக்க எனக்கு விருப்பமில்ல… அதும் முக்கியமா உங்களுக்கு? இல்லவே இல்ல” என்று தெள்ளத்தெளிவாக கூறினாள். அதைக் கேட்டு சடாரென திரும்பி அவளை கூர்ந்து பார்த்தவன் கண்களை தைரியத்துடன் ஏறிட்டாள்.

மனக்காயம் பற்பல

அள்ளி அள்ளி அளித்தவன்

காயம் கண்டிட….

உருகிய பெண் மனம்

இளகியே மருந்திட முனைய

மறுப்பதையும் மீறுகிறாள்..!

கேள்வியாய் பார்வை….

செய்நன்றியாய் ஒரு சேவை

என கூறிடும் பதில் பார்வை..!

இவை மட்டுமா

விழி பேசிய மொழிகள்….?

கடைசியில் ஆர்யன் தான் பார்வையை மீட்டுக்கொண்டு அமைதியாக அங்கிருந்த சோபாவில் போய் அமர்ந்தான். பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டே அவன் பின்னால் போய் அமர்ந்தவள் வெட்டுக்குத்தை பார்த்து கவலையடைந்தாள்.

பின் மெல்ல துணிவை திரட்டிக்கொண்டு துணி கொண்டு குருதியை துடைத்து அவள் பயன்படுத்திய மருந்திட்டு கட்டினாள். பின் அவன் சட்டையைக் கொண்டுவந்து கொடுத்தவள் அதை அவன் போடவும் பின்னால் நின்று உதவினாள்.

“இனி மத்ததை நான் பார்த்துக்கறேன்” என அவன் திரும்பாமல் சொல்ல, அவள் கிளம்பியபாடில்லை. ‘இன்னும் இவ என்ன செய்றா?’ என முதுகுக்கு பின்வரும் சத்தங்களை கேட்டபடியே அவன் யோசிக்க “இந்த ஆன்டிபையாட்டிக் சாப்பிடுங்க” என்று மாத்திரையையும் தண்ணீரையும் நீட்டினாள்.

“இது அவசியம் இல்ல” ஆர்யன் அலட்சியமாக சொன்னான்.

“உங்களுக்கு கட்டாயம் தேவை. சையத் சார் சொன்னாரே, இந்த மருந்து இல்லாம நான் குணமடைய முடியாதுன்னு. அப்படித்தானே உங்களுக்கும். நீங்க தான் ஆஸ்பிட்டல் போக விரும்பலயே”

அவளை திரும்பி பார்த்து முறைத்தவன் குனிந்து மாத்திரையை பார்த்தான்.

“நீங்க இந்த மருந்தை சாப்பிடலனா நான் இந்த ரூம் விட்டு போக மாட்டேன்” கண்களை உருட்டி மிரட்டினாள். அவளிடமிருந்து வேகமாக வாங்கியவன் மாத்திரையை போட்டு தண்ணீர் குடித்தான்.

பஞ்சு, மருந்துகளை ட்ரேயில் அடுக்கியவள் “நாளைக்கு காலைல வந்து நான் கட்டு மாத்துறேன்” என்று சொல்ல ஆர்யன் நன்றாக அவள் பக்கம் திரும்பி உற்று பார்க்க அவளும் அவனை பார்த்து தலையாட்டிவிட்டு சென்றாள். செல்லும் அவளையே பார்த்தவனுக்கு மனதில் ஒரு இதம் பரவுவதை உணர முடிந்தது.