‘இவானுக்கு எல்லாமாக நீ தான் இருக்கியே!’ என ஆர்யன் உணர்ச்சிவசப்பட்டு ருஹானாவிடம் சொல்லிவிட்டவன், அவள் விழிப்பதைக்கண்டு சுதாரித்துக்கொண்டு “இவானுக்காக தானே நீ இங்க இருக்கே” என்று குரல் இறக்கி சொன்னான். பின் கடுமையை சேர்த்துக்கொண்டு “அவனை கவனிக்கறதுக்கு தான் நீ இருக்கியே தவிர அவனை கல்லறைக்கு கூட்டிட்டு போக இல்ல” என்று கண்களை சுருக்கினான்.
“ஆனா அவன் அம்மா…..” ருஹானாவை தொடர விடாமல் “அவன் எங்கயும் வர மாட்டான்” என்று சொல்லி விலகி சென்று விட்டான். செல்லும் அவனை பார்த்து “காட்டுமிராண்டி!” என பல்லைக் கடித்தவள் “எப்படியாவது நான் இவானை கல்லறைக்கு கூட்டிட்டு போவேன். இந்த சிறைல இருந்தும் வெளிய போகணும்” என கத்த அது தள்ளி நின்ற கரீமாவுக்கு நன்றாக கேட்டது.
கரீமா கீழே இறங்கி இவான் விளையாடிக்கொண்டிருக்கும் இடத்துக்கு செல்லும்முன் மளமளவென மனதில் திட்டங்கள் தீட்டிக்கொண்டாள். “கப்பல் அழகா இருக்கே!” என சொல்லியபடியே அவள் வரும்போது இவானுடன் கப்பல் செய்துக்கொண்டிருந்த ஜாஃபர் எழுந்து நிற்க இவான் அருகே அமர்ந்த கரீமா “கலர்கலரா நல்லா இருக்கு” என்றாள்.
“என் அம்மாக்கு!”
“அம்மாவுக்கா?”
“சித்தி கூட அம்மாவை பார்க்க போறேன். அப்போ இதை கொண்டு போவேன்”
“நல்ல செயல் இது. ஆனா கப்பல் மட்டும் போதாதே. நீ பூக்களும் கொண்டு போ”
“அப்படியா? அம்ஜத் பெரியப்பா எனக்கு தருவாங்க தானே?”
கரீமா தன் திட்டப்படி இவானை அம்ஜத்திடம் அனுப்பி வைக்க, அம்ஜத்திடம் பூச்செடியை வாங்கிக்கொண்டு அதை ருஹானாவிடம் காட்ட இவான் ஆர்வமாக வந்தான்.
அக்காவின் புகைப்படத்தை வருத்தமாக பார்த்துக்கொண்டிருந்த ருஹானாவிடம் சென்ற இவான் “பாருங்க சித்தி! அம்ஜத் பெரியப்பா கிட்ட கேட்டு அம்மாக்காக இதை வாங்கிட்டு வந்தேன்” என காட்ட…. ருஹானா “அழகா இருக்கே இது. பாரு இவான், இப்போ நாம அம்மாவை பார்க்க போகல. இன்னும் உன் சித்தப்பாட்ட அனுமதி வாங்கல. அவருக்கு வேலை அதிகம்ன்னு உனக்கு தெரியும் தானே? அவர் ஓகே சொன்ன உடனே நாம போலாம். சரியா?“ என இவானை தேற்றினாள்.
இவான் சோகமாக தலையாட்ட அவனை மகிழ்ச்சிப்படுத்த “வா.. கிச்சனுக்கு போய் லெமன் குக்கீஸ் செய்யலாம். நீ சித்திக்கு உதவி செய்றீயா?” என ருஹானா அழைத்து சென்றாள்.
——–
சல்மா தன் காதலனை தொடர்பு கொள்ள இடைவிடாது முயற்சித்து தோல்வியை தழுவி போனை விட்டெறிந்தாள். அதைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே உள்ளே வந்த கரீமா “இங்க நீ போன்ல பொழுதை கழிக்கிறே… அங்க அந்த சித்தி ஆர்யனை வளைக்க இவானை வச்சி பிரமாதமா நாடகம் போடுறா” என்று சொல்ல “என்னக்கா நடந்தது?” என சல்மா விசாரிக்க மேலே நடந்ததை கரீமா அவளுக்கு விவரித்தாள்.
“இவானுக்கு அம்மா இல்ல, அப்பா இல்லனு அவ சொல்றா. அதுக்கு ஆர்யன் அதான் நீ இருக்கீயேன்னு சொல்றான். இவானோட அம்மா இடத்துல அவளை நினைக்கிறான். இதுக்குத்தான் நான் உன்கிட்டே தலைபாடா அடிச்சிக்கிட்டேன். இவான் மூலமா தான் ஆர்யனை பிடிக்க முடியும்னு”
“அதான் எல்லாம் முடிஞ்சி போச்சே”
“எதுவும் முடியல. ஆர்யன் அவ மேல வச்ச நம்பிக்கையை உடைச்சி அவளை நம்பாம செய்ய வைக்கலாம்”
“எப்படிக்கா?”
“இவானையும், அவன் சித்தியும் தஸ்லீம் கல்லறைக்கு அனுப்பி வைக்கணும். இப்போ ஆர்யன் மேல இருக்கிற கோவத்துல அவ தப்பிச்சி ஓட முயற்சி செய்வா”
“அது அவளால முடியுமா?”
“முடியாது. கண்டிப்பா மாட்டிப்பா. அதுக்கு அப்புறம் ஆர்யன் அவளை எதுக்கும் நம்ப மாட்டான்.”
“இந்த மாளிகையை விட்டு அவ்வளவு லேசா அவ கிளம்பிடுவாளா?”
“இவான் மேல இருக்குற பாசத்துல கட்டாயம் செய்வா. அவளை கல்லறைக்கு அனுப்ப ஒரு வழி இருக்கு”
“என்ன செய்ய போறே, அக்கா?”
“அம்ஜத் கிட்டே இருக்கு அந்த வழி. ஆர்யன் இரும்புனா அம்ஜத் பஞ்சு. பஞ்சை வச்சி இரும்பை துடைக்கிறேன்” என்று சொல்லி கரீமா செல்ல, கீழே கிடந்த போனை எடுத்து சல்மா மீண்டும் தன் காதலனை அழைக்கலானாள்.
———
சமையலறையில் நஸ்ரியா உதவ ருஹானா மாவு பிசைந்துக் கொண்டிருந்தாள். சாரா விளையாட்டாய் பேசி இவானை உற்சாகப்படுத்த “லிட்டில் சார்! இந்த வெனிலாவும், லெமனும் சேர்ந்து என்ன வேலை செய்ய போகுதுன்னு பாருங்க…. இந்தாங்க இந்த வெனிலாவை மாவுல போடுங்க” என்று எடுத்து கொடுக்க, இவான் அதை கலந்தான்.
பின் ருஹானா எலுமிச்சை பழம் வெட்டிக் கொடுக்க இவான் அதையும் மாவில் பிழிந்தான். சாரா “பாருங்க சின்ன சார்! இப்போ வெனிலா சொல்லுது, ‘என்ன ஒரு வாசனை!’” என நடித்து காட்ட, ருஹானாவும், இவானும் சிரித்தார்கள். “இப்போ இதுக்கு பேர் என்ன தெரியுமா?” என சாரா கேட்க இவான் ஆர்வமாக பார்த்தான்.
“வெனிலெமோன்” என சாரா கையை அபிநயமாய் ஆட்ட இவானும் “வெனிலெமோன்” என பின்னாடியே கத்தினான். ருஹானா சிரிக்க நஸ்ரியா கிண்டல் செய்தாள். “வெனிலாவும், லெமனும் காதலர்கள், பாருங்க”
“வா இந்த மாவை உருட்டி கொடு” என சாரா சொல்ல நஸ்ரியா முகம் சுளித்தாள். “எனக்கு அந்த வேலையே பிடிக்காது” என நழுவப் பார்க்க, “உனக்கு எந்த வேலை தான் பிடிச்சி செய்வே! இந்தா பிடி” என சாரா கையில் திணித்தார்.
முனகிக்கொண்டே நஸ்ரியா செய்ய, இவானும் “அக்கா அது இப்படி செய்யணும்” என சொல்லி தந்தான். “நான் சித்திக்கு உதவும்போது அவங்க எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க” என அவன் செய்து காட்ட அங்கே வந்த ஜாஃபர் “என்ன நடக்குது இங்கே?” என கேட்க “நாங்க எல்லாரும் சேர்ந்து வெனிலெமோன் செய்றோம்” இவான் சொன்னான். அவன் மகிழ்ச்சியை பார்த்து நால்வரும் புன்னகை செய்தனர்.
——–
“அம்ஜத்! நீங்க இவானுக்கு கொடுத்த பூ அழகா இருந்ததே!” என பாராட்டியபடி கரீமா காய் நகர்த்த மாடித் தோட்டத்துக்கு வந்தாள். “அழகா இருந்ததுல, கரீமா. இதே தான் கொடுத்தேன்” என அம்ஜத் குஷியாகி காட்டினான்
“ஆமா அம்ஜத்! நல்ல விஷயம் தானே? இவான் அவன் அம்மா கல்லறைக்கு அதை எடுத்துட்டு போக போறான்”
அம்ஜத் முகம் வெளுத்தது.
“அவன் அம்மாக்கு குட்பை சொல்ல போறான். அது கண்டிப்பா செய்யணும் தானே?”
நின்று யோசித்த அம்ஜத் கரீமாவை பார்க்காமல் செடிகளுக்கு உரம் போட ஆரம்பித்தான்.
“குட்பை சொல்லலனா இவான் அவன் அம்மாவை தேடுவான் தானே!”
அம்ஜத் படபடப்புடன் வேலையை நிறுத்தாமல் செய்கிறான்.
“அம்மா முக்கியம், இல்லயா! இவான் கல்லறைக்கு போகணும். பூக்கள் கொடுக்கணும். பூக்கள் அமைதியை தரும். இல்லனா இவான் வருத்தப்படுவான். ராத்திரிலாம் அழுவான்”
அம்ஜத் மனதில் பதியும்படி அழுத்தி பேசினாள். அம்ஜத் கீழே அமர்ந்து முழங்கால்களை கட்டிக்கொண்டான்.
“உங்களுக்கு நல்லா தெரியுமே! உங்க சின்ன வயசை நினைச்சி பாருங்க. உங்க அம்மா உங்களை விட்டு போகும்போது நீங்க எவ்வளவு வருத்தப்பட்டீங்க”
கரீமாவை திரும்பி பார்த்த அம்ஜத் தலையை முழங்கால்களின் திணித்துக்கொண்டான்.
“நீங்க கூட ஆசைபட்டீங்க தானே, உங்க அம்மாவை கட்டி பிடிக்க?”
எழுந்து காதுகளை மூடிக்கொண்ட அம்ஜத் “நிறுத்து கரீமா நிறுத்து” என சொல்ல சொல்ல பேசிக்கொண்டே போனாள்.
“உங்க அம்மாவை போகாதேன்னு சொல்ல நினைச்சீங்க தானே?”
அம்ஜத் நடுங்க ஆரம்பித்தான்.
“நீங்க பட்ட துயரம் இவான் படக்கூடாது தானே?” என சொல்லி அம்ஜத் துடிப்பதை பார்த்தும் இரக்கமின்றி சென்று விட்டாள்.
கைகளில் இருந்த மண்ணோடு முகத்தில் அடித்தவன், காதுகளை மூடிக்கொண்டு “வேண்டாம் கரீமா நிறுத்து” என கத்தினான். கரீமாவின் சொற்கள் அவனுக்கு உள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது.
அம்ஜத் குரல் ஆர்யன் அறை வரை கேட்க, கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் “அண்ணா!” என ஓடி வந்தான்.
“பூக்களை பறிக்க கூடாது. சின்ன பசங்க கவலைப்பட கூடாது. அவங்க அம்மாக்கு குட்பை சொல்லணும்” என அம்ஜத் புலம்ப ஆர்யன் அவனை அணைத்துக்கொண்டான்.
“அண்ணா அமைதியாகுங்க! என்ன நடந்தது?” என ஆர்யன் கேட்க அம்ஜத் “சின்ன பசங்க மலர்களை போல. அவங்களை வாடவிடக் கூடாது. அவங்க அம்மாக்கு குட்பை சொல்லணும்” என சொல்லிக்கொண்டே இருந்தான்.
“நிதானம் அண்ணா!” என ஆர்யன் கவலையுடன் அவனை தட்டிக்கொடுத்து அணைத்துக்கொள்ள மேல்மாடத்திலிருந்து கரீமா சிரித்துக்கொண்டே பார்த்தாள்.
அண்ணனை உள்ளே அழைத்து வந்து மாத்திரை கொடுத்து அமைதிப்படுத்திய ஆர்யன் என்ன நடந்தது என கரீமாவிடம் விசாரித்தான். “இவான் அவன் அம்மா கல்லறைக்கு எடுத்துட்டு போக பூ வேணும்னு அம்ஜத்ட்ட கேட்டான். அவவளவு தான் எனக்கு தெரியும். அம்ஜத் எப்போ எப்படி நடந்துக்குவார்னு யாரால கெஸ் பண்ண முடியும்?” என கரீமா கழண்டுக் கொண்டாள்.
——-
“இதோ நம்ம குக்கீஸ் அழகா தயாராகிடுச்சி“ என சாரா ஓவனிலிருந்து எடுக்க இவான் குனிந்து அதை வாசனை பிடித்தான். “நம்ம செஃப் இவான் செய்ததாச்சே!” என ருஹானா சொல்ல “அப்போ நம்ம செஃப் இவான் சாரே முதலில் சுவை பார்க்கட்டும்” என சாரா சொல்லி சுடசுட ஒரு தட்டில் வைத்து கொடுத்தார்.
ஆர்யன் வந்து பின்னால் நிற்க, ருஹானா இவானை எச்சரித்தாள், “சுட போகுது செல்லம், பார்த்து சாப்பிடு”.
இவானை பார்த்து மென்மையாக தலையாட்டியபடி உள்ளே வந்த ஆர்யன், ருஹானாவிடம் “நீங்க போறீங்க. தயாராகுங்க” என சொல்ல ருஹானாக்கு எங்கே என புரிந்தும் ‘எப்படி இவன் சம்மதித்தான்?’ என குழப்பத்துடன் யோசித்தாள்.
“அம்மாவை பார்க்கவா?” என இவான் சிரிப்புடன் கேட்க ஆர்யன் அதற்கு பதில் சொல்லாமல் போனை எடுத்து ரஷீத்தை அழைத்து சிறந்த மெய்காப்பாளர்களை அனுப்ப சொன்னான். பேசி முடித்துவிட்டு இவானையும், ருஹானாவையும் பார்த்த ஆர்யன் “அவங்க உங்களை தொந்தரவு செய்யாம நிப்பாங்க, இவான் அவன் அம்மாக்கு குட்பை சொல்லிட்டு வரலாம்” என சொல்ல சாரா நிம்மதி பெருமூச்சு விட்டார்.