புயல் காற்றில் விளக்காகவே

                                                                           அத்தியாயம் – 16

ருஹானாவின் உடல் உதறல் நின்ற பின்னும் ஆர்யன் அவளை படுக்கையில் விடாமல் கைகளில் ஏந்தியிருந்தான். கொடும் பாலைவனத்தில் மழைத்துளி விழுந்தது போல இருந்தது அவன் நிலை. கவிழ்ந்திருந்த அவள் இமைகளையே பார்த்திருந்தவனுக்கு, சையத்தின் சொற்கள் எதிரொலித்தது.

‘மனசுல சில ஆழமான இரணங்கள் என்னைக்கும் ஆறாதுன்னு நீ நினைச்சிட்டு இருப்பே. ஆனா புதுப்புது திருப்பங்களை வாழ்க்கை கொடுக்கும்ங்கறது உனக்கு தெரியாது.  அதன் மூலம் அந்த காயங்களும் ஆறிப் போகும். அதுல இருந்து வெளிய வந்தா உனக்கு புது வாழ்வும் கிடைக்கும்.

ஒன்றின் முடிவுல தான் இன்னொன்றின் ஆரம்பம் இருக்கு. ரோஜா என்னவோ ஒன்னு தான். சிலர் அதோட வாசனையை அனுபவிச்சி சந்தோஷப்படுறாங்க. சிலர் அதோட முட்களால பாதிக்கப்படறாங்க.’

சையத் வார்த்தைகளின் பொருள் ருஹானாவை பார்க்கும்போது ஆர்யனுக்கு இலேசாக புரிவது போல இருக்க, அவள் புருவம் சுளிக்கவும் அவளை நிதானமாக தலையணையில் படுக்க வைத்தான். அவள் மீது வைத்த கண் எடுக்காமல் அப்படியே பின்னால் நகர்ந்து நாற்காலியில் சாய்ந்தான்.

மனதில் இனிமையான காற்று வருடிய போதும் அவன் நெற்றி முழுதும் வேர்த்து இருந்தது. குனிந்து தன் கைகளை பார்த்தவன் கண்கள் விரிந்தது. அவளை ஏந்தும்போது இருந்தது போலவே அவன் கைகளும் விரிந்திருந்தது. அவள் மென்மை இன்னும் அவன் கரங்களில் ஒட்டியிருந்தது. அதை பொத்தி பாதுகாப்பவன் போல கைகளை மூடியவன் நிமிர்ந்து தன்னை பாதித்தவளை நோக்கினான்.

அவள் முகத்தில் மாற்றம் தெரிய வேகமாக எழுந்தவன் அவள் நெற்றியை தொட்டு பார்க்க குனிந்தான். அப்போது காலடியோசை கேட்கவும் நீட்டிய கையை மடக்கிக் கொண்டு நிமிர்ந்தான். உள்ளே வந்த சையத் இருவர் முகத்தையும் பார்த்தார். “ராத்திரி பூரா தூங்கலயா நீ?” என்று அவர் கேட்க ஆர்யன் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் தானே ‘ஒரு கணமும் தவறாமல் கவனி’ என்று சொல்லி போனவர். இப்போது இவன் தூங்காமல் கவனித்தால் வியப்பு காட்டுகிறாரே.! ஆர்யன் இரக்கம், கருணை ஏதும் இல்லாதவன், அதுவும் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்பது அவருக்கு தெரியும் தானே..! அவனே இப்படி கவனித்தால் அதிசயம் அல்லவா..!

ருஹானாவை பரிசோதித்த சையத், “பொண்ணுக்கு சுரம் இல்ல. ரத்தக் கசிவும் நின்னுடுச்சி. நல்லது. உன் கண்விழிப்புக்கு பலன் தான் இது, மகனே!” என்றார். நிம்மதியடைந்த ஆர்யன் மெதுவாக தலையாட்டினான். “கடவுளின் படைப்பை காப்பாற்ற தூக்கத்தை தியாகம் செய்வது சரிதான்” என்று அவர் மேலும் சொல்ல, விறைப்பான ஆர்யன் “அவள் இவான் சித்தி. இவானுக்காக நான் அவளை வீட்ல தங்க வச்சிருக்கேன். கொஞ்ச நாள்ல கிளம்பிடுவா” என்றான்.

“அல்லாஹ் அவளை உன்கிட்டே கொண்டு வந்துருக்கார்னா, அதுக்கு  கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்” என்ற சொன்ன சையத், ஆர்யன் பலமாக யோசிக்கவும் “நான் போய் தேவையான சாமான்களை எடுத்துட்டு வரேன். நீ இவளை பார்த்துக்கோ” என்று சொல்லி அகன்றார்.

மறுபடியும் ஆர்யன் நாற்காலியில் அமர்ந்து அவளை கவனிக்க, ரஷீத் அழைப்பு வந்தது. “சொல்லு ரஷீத்! சுட்டவனை பிடிச்சிட்டியா? என்ன செய்வியோ தெரியாது, அவனை கண்டுபிடி” என அவன் இரைந்த சத்தத்தில் கண்விழித்த ருஹானா அவன் பேச்சை கவனிப்பது தெரியாமல் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.

“அப்புறம் அந்த மிஷாலை அடிச்சவங்க யாருன்னு பார்க்க சொன்னேனே, இன்னுமா அந்த வேலை முடியல?” என கேட்டுக்கொண்டே ஆர்யன் திரும்ப ருஹானா கண்மூடிக் கொண்டாள்.

பேசிக்கொண்டே ஆர்யன் வெளியே செல்ல, ருஹானா கண் திறந்து தான் எங்கே இருக்கிறோம் என புரியாமல் சுற்றுமுற்றும் பார்த்து கை ஊனி எழ முயற்சித்தாள். வலியால் எழுந்திருக்க முடியாமல் படுத்தவள் சட்டையை தூக்கி இடுப்பின் காயத்தை பார்த்தாள்.

——

இவான் தன் சித்தியின் அறையில் தூங்கி எழுந்தவன், அங்கே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஜாஃபரிடம் கேட்டான், “அவங்க வந்துட்டாங்களா?”. ஜாஃபர், “இன்னும் இல்ல, லிட்டில் சார். வந்துட்டு இருப்பாங்க. நீங்க குளிச்சிட்டு வாங்க. காலை உணவு சாப்பிட போலாம்” என்று சொல்லி இவானை குளியல் அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே சென்றான்.

ஜாஃபர் ருஹானாவின் அறையில் இருந்து வெளியே வருவதை பார்த்த கரீமா காரணம் விசாரித்தாள். “சல்மா மேம் போனதும் சின்ன சார் சித்தி ரூம்ல போய் படுத்தார். ரொம்ப நேரம் தூங்கல. நான் அவருக்கு துணைக்கு இருந்தேன்” என ஜாஃபர் சொல்ல கரீமா முகம் மாறியது.

“சல்மாக்கு தலைவலின்னு சொன்னா. அதான் மாத்திரை போட்டு அவ ரூம்ல போய் படுத்துருப்பா” என கரீமா சப்பைக்கட்டு கட்டி சல்மா அறைக்கு விரைந்தாள். போனை கையில் வைத்துக்கொண்டே சல்மா உறங்குவதை பார்த்தவள் மெல்ல போனை உருவினாள். அதில் தன் காதலனை தேடி சல்மா கவலையாக அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளை வாசித்து மகிழ்ந்தவள், அதே இடத்தில் போனை வைத்துவிட்டு சல்மாவை எழுப்பினாள்.

எழுந்த சல்மா போனை திறந்துக்கொண்டே அக்காவிடம் என்ன என கேட்டாள். கரீமா “நீ சீக்கிரம் ரெடியாகி இவானை சாப்பிட வை. ஆர்யன் வரும்போது நீ இவானோட இருக்கணும்” என்று மிரட்டி அவளை குளியல் அறைக்கு அனுப்ப, சல்மா போனை பார்த்துக்கொண்டே சென்றாள்.

———

ருஹானா தன் பக்கத்தில் இருந்த போனை எடுத்து நேரம் பார்த்தவள், அதிர்ந்து போய் வேகமாக எழுந்தாள். அப்போது உள்ளே வந்த சையத் அவளை தடுத்தார், “இரு மகளே இரு. உனக்கு இன்னும் சரியாகல.” பின் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். “நான் சையத். நேற்று நீ சுய உணர்வுல இருந்திருந்தா, நேற்றே சொல்லியிருப்பேன்” என சொல்ல “நேற்றா?” என திகைத்தவள், “இவான்?” என கேட்டாள்.

“நீ இப்போ உன்னை கவனிக்கணும் மகளே! காயம் திறந்திட்டா கஷ்டமாயிடும்” என்ற சையத் அவளுக்கு ஒரு உடையும் கொடுத்தார் “மெதுவா இதை போட்டுக்கோ” என சொல்லி. அப்போது ஆர்யன் உள்ளே வர அவள் பேசுவதை கேட்டபடி அங்கேயே நின்றான்.

“நான் இவான் கிட்ட போகணுமே. என்னை பார்க்கலனா அவன் பயந்துடுவான். நான் அவனை விட்டு போயிட்டேன்னு நினைப்பான். என்னை போக விடுங்க” என ருஹானா கேட்க “அது கஷ்டமாச்சே! நீ ஓய்வு எடுத்தே ஆகணும். இல்லன்னா உன் காயம் பெருசாகிடும்” என சையத் தடுத்தார்.

“இல்ல.. இவான் தேடுவான். அவனுக்கு இன்னும் உடம்பு சரியாகல. நான் போறேன்” என அவள் பிடிவாதம் பிடித்தாள். இவானை பற்றி அவள் பேசுவதை கேட்ட ஆர்யனுக்கு அவள் இவான் மேல் வைத்திருக்கும் அன்பு இன்னும் புரிந்தது.

“எழுந்துக்காதே மகளே” என சையத் தடுக்க, “எனக்கு ஒன்னும் இல்ல” என ருஹானா எழ, ஆர்யன் உள்ளே வேகமாக வந்தான். “சையத் பாபா சொல்றது சரிதான்” என்று சொல்லி ருஹானாவை பார்க்க, “இவான் தனியா இருக்கான். என்னை தேடுவான். அவனை விட்டுட்டு நான் போயிட்டேன்னு பயப்படுவான். இனி என்னால இங்க இருக்க முடியாது” என அவள் ஆர்யனை பார்த்து உறுதியாக சொன்னாள்.

இருவரின் பார்வை பரிமாற்றங்களை சையத் புன்சிரிப்புடன் பார்த்திருக்க ஆர்யன் சரி என சம்மதித்தான். ருஹானா மெதுவாக எழுந்து உடை மாற்றி வெளியே வந்தாள். அவளுடன் நடந்த ஆர்யன் “உன் காயம் இன்னும் காயல. ரொம்ப வலிக்கும். இங்க தங்கியிரு” என இறுதியாக ஒருமுறை சொல்லிப் பார்த்தான். “சீக்கிரம் போகணும்” என ருஹானா சொல்லி அடி எடுத்து வைக்க கடினமான வலியால் முகம் சுளித்தாள்.

“பிடிச்சிக்கோ!” என்று ஆர்யன் தன் கையை நீட்ட, தயங்கியவள் அவன் கையை பற்றாமல் “வேணாம்” என அடுத்து அடி எடுத்து வைக்க முயன்று முடியாமல் நின்றாள். “நான் சொல்றேன்ல. பிடி” என்று கோபமாக இன்னும் அவன் கையை நீட்ட தயக்கத்துடன் அவன் முழங்கையை பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.

பின்னால் வந்த சையத், “மெதுவா மகளே!” என்றார். நடந்துக்கொண்டே ஆர்யன், “வீட்ல இது பத்தி யாருக்கும் தெரியாது. அப்படியே நீயும் நடந்துக்கோ” என சொல்ல சரியென தலை ஆட்டினாள். நடக்க நடக்க வலி அதிகரிக்க அவள் நின்றுவிட, ஆர்யன் அவள் முகம் பார்த்து, “என்னாச்சு, நடக்க முடியலயா?” என கேட்டான். “ஒன்னுமில்ல” ருஹானா அடி மேல் அடி எடுத்து வைத்தாள்.

முன்னால் வந்த சையத், “நான் சொன்னேன் தானே! இந்த வலி அடிக்கடி வரும். நீ ஓய்வா இருக்க வேண்டியது அவசியம்” என சொல்ல, “இன்னும் வலிக்குதா?” என ஆர்யன் கேட்டான். “பரவாயில்ல” என ருஹானா தலையாட்டினாள். சையத் ஒரு துண்டு காகிதத்தை ஆர்யனிடம் கொடுத்து “இந்த மருந்து வாங்கி கொடு. இருபத்திநாலு மணி நேரம் ரொம்ப கவனமா இருக்கணும். அவளை விட்டு  உன் கண் எடுக்காதே, ஆர்யன். ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டு கண்டிப்பா மாத்தணும்” அவர் செய்ய வேண்டியதை விளக்கி கொண்டிருக்கும்போதே ஆர்யன் தொலைபேசி அடித்தது.

அவன் போனை எடுத்து பேச விலகி செல்ல, சையத் கைத்தாங்கலாக ருஹானாவை நடத்திச் சென்றார். “நீங்க என் உயிரை எனக்கு திருப்பி தந்துருக்கீங்க. மிக்க நன்றி. இவானை பார்த்துக்க மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிங்க. நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுருக்கேன்” என ருஹானா நெகிழ்ந்து சொல்ல, “அல்லாஹ்க்கே எல்லா புகழும் சென்று சேரும். நான் என் கடமையை தான் செய்தேன். மற்றது அல்லாஹ் அருள்” என சையத் புன்னகைத்தார்.

“உங்க உதவியை நான் மறக்க மாட்டேன். என்னால உங்களுக்கு எத்தனை தொந்தரவு? இரவு முழுதும் என்னை பார்த்துக்கிட்டீங்க” என ருஹானா நன்றி தெரிவிக்க, “அது நானில்லை. உன் பக்கம் இருந்து உன்ன கவனிச்சது, ராத்திரிலாம் தூங்காம உன்னை பார்த்துக்கிட்டது அவன் தான்” என சற்று தள்ளி போனில் பேசிக்கொண்டிருந்த ஆர்யனை அவர் காட்டினார். ருஹானாவும் திரும்பி அவனை அதிசயமாக பார்த்தாள்.

தலையாட்டிக்கொண்ட சையத் “வா மகளே!” என்று அவளை காருக்கு அழைத்து சென்றார். ரஷீத்திடம் பேசி முடித்த ஆர்யன் தள்ளாடியபடி செல்லும் அவளை பார்த்தபடி பின்தொடர்ந்தான்.

———