——–

——–

ஆர்யன் உறங்கிக்கொண்டிருக்க அதே கனவு இன்றும்.

பெட்டியுடன் புறப்பட்ட அந்த அழகிய பெண்ணை, “அம்மா! எங்கள விட்டு போகாதே!” என்று அதே சிறுவன் தடுத்து இழுத்தான். இரக்கமற்ற அவன் அன்னையோ அவனை கீழே தள்ளி விட்டாள். வெளியே சென்ற அவளை ‘அம்மா’ என இரைந்து சிறுவன் அழைக்க திரும்பிய அவள், “உன் அப்பாவை போல இருக்காதே!” என்று சொல்லிவிட்டு சென்று விட்டாள். கை முஷ்டி இருக்க மூடிய கதவை அந்த சிறுவன் தட்ட வேகமாக எழுந்த ஆர்யன் முகமெங்கும் வியர்வை வெள்ளமாய் இருந்தது.

அதற்குமேல் படுக்க பிடிக்காமல் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான். காற்றாட பால்கனியில் வந்து நின்ற ஆர்யன் இருட்டை வெறித்தான். தோட்டத்தில் ஏதோ அசைவு தெரிய அவனுக்கு ரஷீத் எச்சரித்தது நியாபகம் வந்தது. வேகமாக தன் முன்னறைக்கு வந்தவன், லேப்டாப்பில் கண்காணிப்பு கேமராவை கவனித்தான். ஒரு காவலாளி உறங்கிக்கொண்டிருக்க, மற்ற கேமராக்கள் அமைதியாக இருந்தது.

தன் கைத்துப்பாக்கியை கையில் எடுத்தவன் கவனமாக அடி மேல் அடி வைத்து கீழே இறங்கினான். ஒவ்வொரு பகுதியாக உற்று பார்த்துக்கொண்டே வந்தவன் காலடி சத்தம் கேட்க ஜாக்கிரதையானான். துப்பாக்கியை இறுக்கி பிடித்துக்கொண்டு ஒரு தூணின் பின் மறைந்துக்கொண்டு லேசாக எட்டி பார்த்தான்.

காலடி சத்தம் நெருங்க, பாய்ச்சலுக்கு தயாரானவன், அந்த உருவம் வெகு அருகே வந்ததும் முன்னே பாய்ந்து கையை பிடித்து துப்பாக்கியை நெற்றிப்பொட்டில் வைத்தான். “ம்ஹீம்” என்ற பயந்த சத்தத்துடன் ருஹானாவின் முகம் மெல்லிய வெளிச்சத்தில் அவன் முன்னே வர அதிர்ந்து போனான்.

அவளின் பெரிய அழகிய பச்சை வண்ண கண்களை மிக அருகே பார்த்து அவன் திகைக்க, தன்னை குறி பார்த்த துப்பாக்கியை பார்த்து அவள் மிரண்டாள். “இந்த நேரம் இங்க நீ என்ன செய்ற?” அவன் கேட்க, “தண்ணி… தண்ணி குடிக்க வந்தேன்” அவள் தடுமாற, “ரொம்ப சுத்தாதே” என்று அவளை அனுப்பிவிட்டு அவளையே பார்த்து நின்றான். பின் தன் கவனத்தை திருப்பி வீட்டை சுற்றி பார்வையிட்டான்.

——

காலையில் அலுவலகம் செல்ல தயாரான ஆர்யன் மேசையில் இருந்த துப்பாக்கியை பார்த்ததும் முந்தின இரவுக்குள்ளே சென்றான். பின்னால் நின்று அவன் மேல்கோட்டை அணிவித்த ஜாஃபர், “சார்! உங்க கவனம் தவறுதே! உங்க மனசுல என்னவோ ஓடுதே?” என கேட்டான்.

“ஜாஃபர்! நேத்து ராத்திரி பாதுகாப்பு வேலைல இருந்த செக்யூரிட்டியை வேலைய விட்டு தூக்கிடுங்க. அவன் நைட் தூங்கிட்டு இருந்தான். ஆபீஸ்ல சொல்லி அவனுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்து அனுப்பிடுங்க. எக்ஸ்ட்ராவாவும் பணம் கொடுக்க சொல்லுங்க” என்று ஆர்யன் கட்டளையிட்டான். கடமையில் இருந்து தவறியதற்காக பணிநீக்கம் செய்தது சரிதான். அதிக பணம் எதற்கு தருகிறான்? காரணம் அவனுக்காவது தெரியுமா?

சரியென சொல்லி ஜாஃபர் செல்ல, ஆர்யன் கைத்தொலைபேசி அழைத்தது. “என்ன! கமிஷனர் ஆபீஸ்க்கா? ஏன்? என்ன கையெழுத்து விட்டு போச்சி? நான் மட்டும் வந்தா போதுமா? சரி” என பேசி முடித்தவன் முன்னால் இருந்த துப்பாக்கியை தடவிக் கொடுத்தான்.

———-

வாசலில் கிளம்ப தயாராக நின்ற கார் முன்னே ஆர்யன் பார்த்துக்கொண்டு நிற்க, ருஹானா சோகமாக இருந்த இவானிடம், “கவலைப்படாதே அன்பே! சித்தி சீக்கிரம் திரும்பி வந்துடுவேன்” என விடைப் பெற்றாள். “கண்டிப்பா?” என இவான் உறுதி கேட்க, “இதோ வந்துடுவேன், பாரேன்” என சொன்னாள்.

கரீமா அங்கு நின்ற நஸ்ரியாவிடம் இவானை உள்ளே அழைத்துப் போக சொன்னாள். கவலையுடன் கரீமா, “ருஹானா! போலீஸ் வேலை இன்னும் முடியலையா? இன்ஷா அல்லாஹ்! எந்த பிரச்னையும் வர கூடாது” என சொன்னவள் மனதில் ‘நல்லா மாட்டிக்கிட்டு முழிக்கட்டும்’ என்ற ஆவல் ஓடியது.

ஆனால் இவர்கள் இருவரும் இப்படி காரில் ஒன்றாக செல்ல… இருவரும் ஒருவரையொருவர் நெருங்க… அவள் தான் காரணம் என்பதை கரீமா உணரவில்லை. அவளுக்கு தலையை மட்டும் ஆட்டிவிட்டு ஆர்யன் காரில் ருஹானா முன்னால் ஏறிக்கொண்டாள். கார் ஓட்டிகொண்டே அவள் பார்க்காதபோது அவனும், அவன் பார்க்காதபோது அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

காவல் நிலைய வாசலில் ருஹானாவை பார்த்த தன்வீருக்கு ஆச்சர்யம். ஆர்யன் முன்னே உள்ளே செல்ல அவளை நிறுத்தி வைத்து பேசிய தன்வீர், “என்ன ருஹானா, மறுபடியும் வந்துருக்கே?” என கேட்க, கையெழுத்து விட்டுப்போன விவரத்தை அவனுக்கு சொன்னாள். அப்போது அங்கே வந்த ஒரு பெண் காவல் அதிகாரி ருஹானாவின் நலம் விசாரிக்க ஆர்யன் திரும்பி பார்த்தான்.

‘எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்காளே..!’ எனும் வியப்பா அல்லது கடுப்பா… ஏதோ ஒன்று அவன் முகத்தில். இரு அதிகாரிகளும் வெளிய கிளம்ப, தன்வீர், ”அம்மா உனக்காக காத்திருக்காங்க” என சொல்லி விடைபெற்றான். தலையாட்டிய ருஹானா முறைத்தபடி நின்ற ஆர்யனுடன் இணைந்து கொண்டாள்.

வந்த வேலை முடித்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது ருஹானாவிடம் ஆர்யன் கேட்டான்.

“அந்த போலீஸ் ஆபீசர்ட்ட என்ன சொல்லிட்டு இருந்தே?”

“அது ஏன் நீங்க கேட்கறீங்க?”

“ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தியே!”

“சும்மா தான் பேசினோம்”

“என்னது! சும்மாவா?”

“நான் எதாச்சும் உங்கக்கிட்ட இருந்து மறைக்கிறேன்னு  நீங்க நினைக்கிறீங்களா?” அவளுக்கு குழப்பம்.

சிறிது நேரம் பதிலே இல்லை அவனிடம். பின் வெளிப்படையாக தன் சந்தேகத்தை வெளியிட்டான்.

“முதல்ல அந்த மிஷால். இப்போ இந்த போலீஸ்காரன். எத்தனை பேர் தான் உன்னை சுத்தி இருப்பாங்க?”

“என்ன பேசிறீங்க நீங்க?” அதிர்ந்த ருஹானா பொங்கி விட்டாள்.

“எனக்கு ஒரே ஒரு நிபந்தனை தான். உன் பழைய நண்பர்களை நான் பார்க்க விரும்பல. ஆனா நீ எப்பவும் உன் ஆண் நண்பர்களை சந்திச்சிட்டு தான் இருக்கே” வெறுப்பாக சொன்னான்.

“தன்வீர் என் உடன்பிறவா சகோதரன். அவன் அம்மா தான் என்னை பாலூட்டி வளர்த்தவங்க” என்று வேகமாக சொன்னவள் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.

கண்களை தட்டி விழித்தவன் நெஞ்சில் ஒரு மெல்லிய தென்றல் வந்து போனது. கடுப்பு நீங்கி அவளை திரும்பி பார்த்தான்.

அப்போது குப்பையை தள்ளிக் கொண்டு வந்த ஒரு முதியவர் குப்பை வண்டியை விட்டுவிட்டு திடீரென அவன் காரில் முன் வந்து விழுந்தார். ஆர்யன் சடன் பிரேக் அடிக்க, ருஹானா, “யா, அல்லாஹ்!” என அதிர்ந்தாள். சீட் பெல்ட்டை கழட்டி அவள் கீழே இறங்க முனைய, வெளியே பார்த்த ஆர்யன், சந்தேகப்பட்டு அவளை தடுத்தான்.

“நில்லு. கீழே இறங்காதே” வேகமாக சொன்னான்.

“ஏன், இறங்கினா என்ன?” அவளும் அதே வேகத்துடன் கேட்டாள்.

“கொஞ்சம் காத்திரு!” அவன் கத்த..

“ஏன் காத்திருக்கணும்? அங்க ஒருத்தர் செத்துட்டு இருக்கார்” இரக்கம் மேலிட அவளும் கத்தினாள்.

சுற்றுமுற்றும் பார்த்த ஆர்யன் மரங்களுக்கு இடையே ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டு கொண்டான். “இது எனக்காக விரிக்கப்பட்ட வலை” என்று தெளிவாக சொன்னான்.

“உங்களுக்கு சித்தபிரமை தான்” என்று கசந்து சொல்லியபடி கார் கதவை திறந்து கீழே இறங்கி அந்த முதியவரிடம் ஓடினாள்.

“இல்ல! போகாதே!” என்று கத்தியவனும், அவள் இறங்கியவுடனேயே இறங்கி அவள் பின்னால் ஓடிவந்தான்.

“அங்கிள், உங்களுக்கு ஒன்னும் இல்லயே. கண்ணை திறங்க, அங்கிள்” என அவள் மண்டியிட்டு அந்த முதியவரை கவனிக்க.. ஆர்யன் சுற்றுப்புறத்தை தன் கண்களால் சலித்தான்.

“நாம இவருக்கு முதலுதவி செய்யணும்” என்றபடி ஆர்யனை பார்த்த ருஹானா அவன் திரும்பி உன்னிப்பாக வேறு பக்கம் பார்த்திருப்பதை கண்டாள். பார்வையை திருப்பியவள் கண்ணுக்கு ஒரு துப்பாக்கி முனை தெரிந்தது. அது ஆர்யனை குறி வைத்திருந்தது.

துப்பாக்கியுடன் நடந்து வந்துக்கொண்டிருப்பவன் மேல் அவள் கவனம் திரும்ப, கீழே கிடந்த கிழவர் எழுந்து ஓட்டம் பிடிக்க, அதை பார்த்து ருஹானா தன் தவறை உணர்ந்து திகைத்தாள்.

அவள் திகைப்பை திகிலாக மாற்ற, மரத்தின் பின்னால் நின்றவன், எதிர்த்திசையில் கவனம் வைத்திருந்த ஆர்யனை நோக்கி சுட்டான். “இல்ல..!” என அலறிக்கொண்டே எழுந்த ருஹானா, ஆர்யனுக்கு முன்னே பாய்ந்தாள். அவள் சத்தம் கேட்டு ஆர்யன் சுதாரித்து திரும்பும்முன் துப்பாக்கி வெடித்தது.

ருஹானா தன்னை நோக்கி ஓடி வந்ததை பார்த்த ஆர்யன் என்ன நடக்கிறது என உணரும்முன் அவள் அவன் முன்னே வந்து துப்பாக்கிக்குண்டை வாங்கி இருந்தாள். ஆர்யன் அவளை தன் இடது கையால் பிடித்தவன், வலது கையால் இடுப்பிலிருந்து துப்பாக்கியை எடுத்து முன்னே நோக்கி படபடவென சுட்டான்.

தன் முன்னால் நின்ற ருஹானாவை அவன் கண்கள் விரிய பார்க்க, ருஹானா இடது பக்க இடுப்பிலிருந்து இரத்தம் வழிய தன் கையால் காயத்தை பிடித்தவள் அப்படியே சரிந்து அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

பெண்ணின் கருணை

சொல்பேச்சு கேட்கவில்லை..

சதி அறிந்தவனும் 

தனை மறந்தது ஏனோ?

மதி மயங்கிய வேளையில்

அந்தோ பரிதாபம்……!

காத்திருக்கும் பிஞ்சின்

நினைவின்றி தத்தம் 

உயிர் பணயம் வீணோ?

(தொடரும்)