வாசிமின் பெரியப்பா ஹெமதுல்லாக்கு ‘ஆர்யன் அர்ஸ்லான்’ என்ற பெயரே காதில் வட்டமிட்டு கொண்டிருந்தது. அப்போது அங்கே வந்த தன்வீரின் அம்மா பர்வீன் அவரை அழைத்தது கூட அவர் காதில் விழவில்லை. பர்வீன் திரும்ப கூப்பிடவும் நினைப்புக்கு வந்த ஹெமதுல்லா அவரை வரவேற்று அமர சொன்னார்.

“வீடெல்லாம் பளபளப்பா இருக்கே! வாகிதா பார்த்த வேலையா இது?” என்று பர்வீன் வாகிதாவை பாராட்ட, அவள் புன்னகையுடன் அவருக்கு குடிக்க காபி கொணர்ந்தாள். அப்போது வாசிம் போனில் அழைக்க, ஹெமதுல்லா அவனுடன் பேச முன்னறைக்கு நகர்ந்தார்.

“என்ன வாசிம்! உன் வேலை முடிஞ்சதா?” என அவர் கேட்க, “என்ன பெரியப்பா உங்க குரல்ல சோர்வு தெரியுது, சாப்பிட்டீங்களா, இல்லயா?” போலீஸ்காரன் ஏதோ சரியில்லை என கண்டுபிடித்து விட்டான். “அப்போவே சாப்பிட்டேன், வாசிம். நான் நல்லா இருக்கேன். நீ சொல்லு. நீ ஏதோ ஆர்யன்னு சொன்னியே, அந்த விசாரணை நடத்திட்டியா?” என அவர் கேட்டார்.

“ஆமா, ஆர்யன் அர்ஸ்லான், அதெல்லாம் முடிஞ்சது, பெரியப்பா. ஆமா நீங்க ஏன் அதை கேட்குறீங்க?” வியப்பு அவன் குரலில். “இல்லப்பா, அவன மாதிரி வம்பு பிடிச்சவன் கூட கவனமா இருக்கணும்ல. உன் வேலை இப்படி பட்டது தான். நீ கவனமா தான் இருப்பே. இருந்தாலும் ஒரு எச்சரிக்கையா நானும் சொல்றேன்” என அவர் சொல்ல, “ம், அவர் மேல எந்த குற்றமும் இல்லன்னு தெரிய வந்துச்சி” என்று வாசிம் சொன்னான்.

“நல்லது. சரிப்பா. நீ உன் வேலைய பாரு” என்று சொன்ன ஹெமதுல்லா மெதுவாக சென்று அமர்ந்துக்கொண்டு ஏதோ நினைவுகளில் ஆழ்ந்தார்.

——-

காரை ஓட்டிக்கொண்டே ருஹானாவை திரும்பி திரும்பி பார்த்த ஆர்யன் “போலீஸ்க்கு போன்ல புகார் கொடுக்குறது எளிது தான், இல்லயா?” என கோப நையாண்டியாக கேட்டான்.

“எனக்கு புரியலயே!”

“எனக்கும் தான் புரியல. நீ ஏன் கொடுத்த புகாரை திரும்ப வாங்கினேன்னு!”

அவளும் அவனை திரும்பி பார்த்து முறைக்க, “போலீஸ் உன்ன விசாரிச்சதும் பயந்திட்டியா?” என நக்கல் செய்தான்.

“இவானைப் பத்தி மட்டும் நான் நினைக்கலன்னா…. இந்த புகாரை நெஜமா நான் கொடுத்திருந்தா… ஒரு அடி கூட பின் வாங்கியிருக்க மாட்டேன்” அவளும் திருப்பி கொடுத்தாள்.

“ஏன், உன்னை கொடுமைப்படுத்தினத்துக்கு நல்லா பழி வாங்கிருக்கலாமே?” அவன் எடுத்து கொடுக்க..

“என்னை எப்படி நடத்தினாலும் எனக்கு கவலை இல்ல. ஆனா நீங்க மிஷாலுக்கு செய்தது அநியாயம்” அவள் குரல் கலங்கியது.

“அவனுக்கு இன்னும் வேணும்” கடுப்பாக வந்தது அவனுக்கு.

“நீங்க செஞ்சது குறைவு. அப்படித்தானே?” வெறுப்பு அவள் குரலில்.

அவளுக்கு பதில் கொடுக்காமல் காரில் இருந்த ரேடியோவை முடுக்கினான். அதன் சத்தம் காதை அடைக்க, ருஹானா தைரியமாக அதை நிறுத்தினாள்.

“அப்பாவி ஒருத்தன் மேல உங்க ஆட்களை ஏவி விடறது நியாயமான செயலா?” அவள் பொரிந்தாள்.

“உன் சிந்தனையே தப்பு. நான் ஒருத்தனுக்கு தண்டனை கொடுக்கறதா இருந்தா நானே நேரிடையா சொல்லி செய்வேன். இவன் அதுக்கு அருகதையே இல்ல. நான் யாரையும் அனுப்பல” என ஆர்யன் ஆணித்தரமாக சொல்ல ருஹானா குழம்பினாள்.

      ———

அர்ஸ்லான் மாளிகை சமையலறையில் சாராவிடம் நஸ்ரியா, “என்னலாம் நடக்குது இந்த வீட்ல.! நாமும் எல்லாவிதமான நிகழ்ச்சியும் பார்த்துட்டோம் இங்க. இப்போ என்ன ஆகும்? ஆர்யன் சாரை சிறையில போட்ருவாங்களா?” என கேட்டுக்கொண்டிருக்கும்போது அங்கே வந்த கரீமா, “அது அவவளவு லேசுன்னு நினைச்சியா? எனக்கு ருஹானாவை நினைச்சா தான் பாவமா இருக்கு. அவளை ஆர்யன் கண்டிப்பா வீட்டை விட்டு துரத்திடுவான். அவ இல்லாம இவான் ரொம்ப வருத்தப்படுவான். அவன் நிலைமை என்ன ஆகுமோ?” என கவலை சொட்ட சொட்ட பேச, “அல்லாஹ் அந்த சூழ்நிலையை உருவாக்க மாட்டார்” என சாரா கடவுளை நம்பினார்.

அப்போது உள்ளே வந்த கருப்பு டொயோட்டா செக்வயாவை கண்ணாடி ஜன்னலில் கண்ட சாரா, “வந்துட்டாங்க! வந்துட்டாங்க!” என பரபரக்க கரீமா வாசலுக்கு ஓடினாள். உள்ளே வந்த ஆர்யனை பார்த்து அவள், “என்ன நடந்தது ஆர்யன்? ஒன்னும் பிரச்சனை இல்லயே. நாங்க ரொம்ப பயந்திட்டோம்” என கேள்விகளாக அடுக்க, ஆர்யன் பதில் சொல்லும்முன் உள்ளே வந்த ருஹானாவை பார்த்து ஸ்தம்பித்துப் போனாள்.

அடுத்த சில நிமிடங்கள் பேச முடியாமல் வாயடைத்து நின்றவள், “உன்ன பத்தி என்ன புகார் கொடுத்தாங்க? என்ன நடவடிக்கை எடுத்தாங்க?” என கேட்டாள். “ஒன்னும் இல்ல. தவறுதலா நடந்துருக்கு. எதும் பெருசா இல்ல. குழப்பத்தில் முடிந்தது” என ருஹானாவை பார்த்துக்கொண்டே சொன்னான். அவன் பார்வையை சந்தித்த ருஹானா “உங்க அனுமதியோட நான் போறேன்” என இருவருக்கும் இடையே புகுந்து வலது பக்க படிக்கட்டில் மேலே ஏறினாள்.

செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஆர்யனிடம் “பிரச்சனை முழுதா முடிந்ததா?” என கரீமா கேட்டாள். “இப்போதைக்கு முடிஞ்சது” என்று சொல்லி அவன் இடது பக்க படிக்கட்டில் மேலே ஏறினான். ‘தன் திட்டம் பாழானதே!” என கரீமா கண்களை உருட்டினாள்.

மிகவும் சோர்வுடன் தன் அறைக்கு வந்த ருஹானா போனை எடுத்து மிஷாலை அழைக்க முயன்றாள். பின் வேண்டாம் என முடிவெடுத்தவள் அவனுக்கு குறுஞ்செய்தியாக, “போலீஸ் வீட்டுக்கு வந்தது. ஆர்யன் மேல யாரோ என் பேர்ல புகார் கொடுத்துருக்காங்க. அது நீதான்னு எனக்கு தெரியும், மிஷால். இது எனக்கு உதவி இல்ல. சங்கடம் தான்” என டைப் செய்தாள்.

பின் ‘ஏற்கனவே அவன் என்னால துன்பம் அனுபவிச்சிட்டான். இன்னும் ஏன் அவனுக்கு தொந்திரவு?” என யோசித்து குறுஞ்செய்தியை அழித்தாள்.

———–

ஆர்யனை பார்க்க அவன் அறைக்கு ரஷீத் வந்து நின்றான். “புகார்?” ஆர்யன் கேள்வி வழக்கம் போல் ஒற்றை வார்த்தையில். “யார் கொடுத்ததுன்னு இன்னும் கண்டுபிடிக்க முடியல. போலீஸ் ரகசியமா வச்சிருக்காங்க” என ரஷீத் தோல்வியுடன் சொன்னான். அடுத்த ஒரு வார்த்தை கேள்வி வந்தது, “முடிவு?”. “இன்னும் ரெண்டு நாள்ல சொல்றேன்” என்று சொல்லி ரஷீத் நகராமல் நின்றான்.

அவன் தயக்கத்தை புரிந்து கொண்ட ஆர்யன் “வேற எதோ நடந்துருக்கு, ரஷீத். என்ன அது?” என்று கேட்க, “யாசின்ஸ்! அவங்க ஏலத்துல தோத்ததால அடுத்தடுத்து வம்பு செய்றாங்க. எதிர்பார்க்காத நேரத்துல தாக்குதல் வருது. உங்களை எதிரின்னு வெளிப்படையா அறிவிச்சிருக்காங்க. நாம மிக எச்சரிக்கையா இருக்கணும்” என ரஷீத் கலக்கமாக சொன்னான்.

அதை பொருட்படுத்தாமல் ஆர்யன், “நம்ம வேலைய நாம பார்க்கலாம்” என சொல்ல, “ஆர்யன்! இது ரொம்ப முக்கியம். அவங்க அதிக கோவத்துல இருக்காங்க. நெறைய பணம் இழந்துட்டாங்க. தொழில்ல இருந்து விலகுற கட்டத்துக்கு போய்ட்டாங்க” என்று ரஷீத் மேலும் எச்சரித்தான்.

“இவங்களுக்குலாம் பயந்தா தொழில் செய்ய முடியாது, ரஷீத்” ஆர்யன் முடிவாக சொல்ல, “சரி ஆர்யன், உங்களுக்கு தெரியாதது இல்ல” என்று சொல்லி ரஷீத் சென்று விட்டான்.

——

‘அக்கா மேல் மாடியில் இல்லை’ என்ற நினைப்பில் சல்மா தன் காதலனுடன் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தாள்.  ஆனால் மேலே எதையோ எடுக்க வந்த கரீமா தங்கையின் கொஞ்சலில் ஈர்க்கப்பட்டு கதவருகே வந்து நின்றாள்.

“ஆமா, ஆமா, இந்த வாரத்துல நான் கிளம்பி வந்துடுவேன். விடுமுறைக்கு அமெரிக்கா கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்க தானே? அவ்ளோ பணம் தேவையா? சரி, நான் ஏற்பாடு செய்றேன். இரவு கால் செய்றேன்” போனை அடைத்துவிட்டு சல்மா குளிக்க சென்றாள்.

உள்ளே வந்த கரீமா தங்கையின் போனை எடுத்து ஆராய்ந்தாள். அதில் கிடைத்த செய்திகள் அவளை இடியாய் தாக்க இடிந்து போய் அமர்ந்தாள்.

  ———

அரிசி சாதம் சமைக்க நஸ்ரியாக்கு கற்றுத்தந்து கொண்டிருந்த சாரா, “சாதம் மட்டும் குழைக்காம நல்லா வேக வைக்க தெரிஞ்சிக்கிட்டினா, நீ தான் சமையல்ல ராணி” என உத்வேகம் கொடுத்தார். நஸ்ரியாவுக்கு எப்போதும் போல சலிப்பு, அலட்சியம் தான்.

அப்போது அங்கே இவானை அழைத்துக்கொண்டு ருஹானா வந்தவள், “இவானுக்கு ரூம்லையே இருந்து போரடிக்குது. அதான் நாங்க உங்களை பார்க்க வந்தோம்” என சொல்ல, “வாங்க லிட்டில் சார், இப்போ உடம்பு நல்லா சரியாகிடுச்சா?” என இருவரும் சந்தோசமாக அவனை வரவேற்க இவான் முகத்திலும் இளநகை.

இவானை தூக்கி சமையல் மேடையில் அமர வைத்த சாரா, “நான் உங்களுக்கு ஒரு சூப் செய்து தர போறேன். அதை நீங்க சாப்பிட்ட உடனே பலசாலி ஆகிடுவீங்க. அது பேர் மேஜிக் சூப்..!” என நடனமாடியபடியே சொல்ல, இவான் குஷியானான்.

“கோழிய போட்டு எண்ணையும் உப்பும் கூடப்போட்டு கொதிக்க வச்சா, அப்படி வாசம் வரும்” என சூப்பின் மற்ற செய்முறைகளையும் சாரா குதித்துக்கொண்டே சொல்ல இவான் வாய்விட்டு சிரித்தான். அவன் நகைப்பு மூன்று பெண்களுக்கும் ஆனந்தத்தைத் தந்தது.

அதற்குள் சாராவை ஜாஃபர் ஏதோ வேலையாக அழைக்க, இவானுக்கு ‘சூப் செய்யாமல் எப்படி போவது’ என அவர் தயங்கினார். தான் செய்வதாக ருஹானா சொல்ல சாரா திகைப்பாக அவளை பார்த்தார். அவள் சமையல் மகாராணி என்று அவருக்கு தெரியாது, அல்லவா..!

“நீங்க தான் எப்படி செய்றதுன்னு சொல்லிட்டீங்களே, நான் செய்றேன். நீங்க போய் வேலைய முடிச்சிட்டு வாங்க” என ருஹானா சொல்ல, அவளை கனிவோடு பார்த்தார், சாரா. தன் பெரியம்மா சென்றதும் தான் தாங்கள் செய்துக்கொண்டிருந்த அரிசி சாதம் நஸ்ரியாவுக்கு நினைவு வந்தது. ‘ஐயகோ!’ என அவள் தலையில் கைவைக்க, ருஹானா அவளுக்கும் உதவ வந்தாள்.

“அடுப்பை குறைத்து வை, நஸ்ரியா. அரிசி வேகும்போது லேசா ஆலிவ் ஆயில் போட்டா ஒட்டாது, சாதம் பளபளப்பாவும் இருக்கும்” என சொல்லி ருஹானா செய்து காட்ட, நஸ்ரியா இவானின் கன்னம் கிள்ளி, “உன் சித்தி உன்னை மாதிரியே அருமையா இருக்காங்க” என பாராட்ட இவான் இதழ்களில் பெருமை புன்னகை.