ருஹானா படியருகே வரும்போதே மேலிருந்து கீழே வந்த இவான் “சித்தி!” என செல்லமாக அணைத்துக்கொண்டான். “அன்பே! உனக்கு இன்னும் நல்லா சரியாகல. ரூம் விட்டு வரக் கூடாது. வா.. ஓய்வெடுக்கலாம்” என மறுபடியும் அவனை மேலே கூட்டி செல்ல படியேறும்போது அங்கே வந்த கரீமா, “என்ன ருஹானா? நீ உன் தோழனை கவனிக்காம இங்க என்ன செய்றே? நான் இவானை பார்த்துக்குறேன். நீ அங்கே போ“ என சொல்லி இவானை மேலே அழைத்து சென்றாள்.

 

ருஹானா தயங்கிபடியே திரும்பி வர, எதிரே வந்த ஆர்யன், “இன்னொரு முறை நீ இவானை சரியா கவனிக்கலனா,….. உனக்கு தந்த பொறுப்பை வேற யாருக்காவது கொடுத்தினா… அதுக்கு அப்புறம் நீ இவானை பார்க்கக்கூட முடியாது” என்று ஆணையிட்டு சொல்ல, ருஹானா திகைத்தாள். “நான் இவானை கவனிச்சிட்டு தானே…….“ அவள் சொல்ல வருவதை அலட்சியம் செய்து, “அப்புறம், உன் பழைய நண்பர்கள் இந்த வீட்டுக்கு வர்றதை நான் விரும்பல” என முகத்தில் அடித்தது போல சொன்னான்.

ருஹானா என்ன சொல்வது என தெரியாமல் முழிக்க, “நீ இங்க இருக்கணும்னா, இவானை எப்பவும் பார்த்துட்டே தான் இருக்கணும்” என ஆர்யன் கட்டளையிட, தலையாட்டியவளின் கண்கள் நீரில் மிதந்தன. அவள் கண்களை பார்த்தவன் விலகி செல்ல, இதையெல்லாம் பின்னால் இருந்து மிஷால் பார்த்துக்கொண்டே நின்றான்.

ஆர்யன் படியேறி செல்லவும் பெரிய பெரிய மூச்சுக்கள் எடுத்து ருஹானா தன்னை சமப்படுத்தினாள். அவளை நோக்கி வந்த மிஷாலை பார்த்து, “நான் நல்லா தான் இருக்கேன்” என சொல்ல, “இல்ல, நீ நல்லா இல்ல, ருஹானா” என கோபமாக சொன்னான்.  

 

“ப்ளீஸ் மிஷால்.  உனக்கு அப்புறமா நான் எல்லாம் சொல்றேன். அப்போ உனக்கு தெளிவா புரியும், நீ நினைக்கிற மாதிரி இங்க எதுவும் நடக்கலன்னு. ஆனால் இப்போ சொல்ல முடியாது”

 

“அப்போ எப்போ?”

“எனக்கு வெளிய வர சந்தர்ப்பம் கிடைக்கும் போது. உன் ஹோட்டலுக்கு நானே வரேன். அப்போ எல்லாம் சொல்றேன். இது என் வாக்கு. இப்போ நான் இவானை பார்க்க போகனும். எனக்கு தெரியும், நீ எனக்கு உதவி செய்யத்தான் வந்திருக்க. ஆனால் இப்போ நீ தயவு செய்து போ.” 

மிஷால் தயங்கியபடியே அவளை பார்த்து சொன்னான், “நீ வரேன்னு எனக்கு வாக்கு கொடுத்துருக்கே!”

“கண்டிப்பா வருவேன். இப்போ நீ போயிடு” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் அங்கேயே நின்றாள்.

அவளை அங்கே விட்டுச் செல்ல மனதே இல்லாமல் மிஷால் மெல்ல நடந்து வெளியே வந்தவன் வெளி கேட் அருகே நின்று திரும்பி பார்த்தான். ஆர்யன் வெளியே போக கிளம்பி காரில் ஏறுவதை பார்த்து ஆத்திரத்தில் கை முஷ்டியை இறுக்கினான். ஆர்யன் கார் நகர்ந்து வரும்போது சடாரென்று குறுக்கே போய் நின்றான். டிரைவர் உடனே பிரேக்கை அழுத்த கார் குலுங்கி நின்றது. 

“நிறுத்து!” என சொன்னவன், “இனிமேல் ருஹானாவை நீ கொடுமைப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். அவளை உன்கிட்ட விட்டு வச்சிருக்கவும் மாட்டேன்” என்று கத்தி சொன்னான்.

காரை விட்டு இறங்கிய ஆர்யன் மிஷாலை முறைத்துக்கொண்டே  கதவை அறைந்து சாத்தி நின்றான். ஆர்யனை நோக்கி அடிப்பதுபோல வேகமாக வந்த மிஷாலை ஒரு மெய்க்காப்பாளன் தடுத்து நிறுத்த, அவனை மிஷால் ஓங்கி குத்தினான். மற்ற காப்பாளர்கள் துப்பாக்கியை எடுத்து மிஷாலை குறிபார்த்தனர்.

ருஹானா சத்தம் கேட்டு ஓடி வந்தாள். கரீமாவும் சல்மாவும் கூட வெளிய வந்தனர். சாராவும், நஸ்ரியாவும் ஜன்னல் வழியாக பார்த்தனர். ஓடிவந்த ருஹானா மிஷாலை மறைத்தாற்போல் நின்று கொண்டாள். மிஷால் தான் முதலில் அடித்தான் என்பதை அவள் கவனிக்கவில்லை. நான்கு துப்பாக்கி முனைகளுக்கு நடுவே மிஷால் நிற்பதை பார்த்து பயந்து போய் அவனை காப்பது போல நின்று கொண்டவள், ஆர்யனிடம், “ப்ளீஸ் மிஷாலை விட்ருங்க“ என கெஞ்சினாள்.

 

ஆர்யன் தன் கையை நீட்டி இரு விரல்களை மட்டும் அசைக்க காவலர்கள் துப்பாக்கியை கீழே இறக்கினர். பின் ருஹானா மிஷாலிடம் அங்கிருந்து சென்று விடும்படி கெஞ்சினாள்.  “இந்த வேலை இன்னும் முடியல” என்று கூறி மிஷால் வெளியே செல்ல, தன் திட்டத்திற்கு மேலாகவே எல்லாமே செவ்வனே நடந்ததால் கரீமா அகமகிழ்ந்து போனாள்.

காரில் ஏறிக் கொண்டிருந்த ஆர்யனிடம் ருஹானா, “நான் உங்களை கெஞ்சி கேட்கறேன். மிஷாலை ஒன்னும் செய்திடாதீங்க” என சொல்ல, வழக்கம்போல ஆர்யன் அவளை கவனிக்காமல் காரில் ஏறி சென்றான். ருஹானா அழுதபடி அங்கேயே நின்றிருந்தாள்.

கரீமா யாருக்கோ போன் செய்து ஆட்களை அனுப்பி மிஷாலை அடித்து போட சொன்னாள். அவர்கள் அவள் சொன்ன காரியத்தை முடித்து அவளுக்கு தகவல் தெரிவித்தனர். அடித்த தகவல் கிடைத்ததும் “அடுத்து நான் சொன்னதை செய்” என்று மேலும் கட்டளைகள் பிறப்பித்தாள்.

பின் ருஹானாவை தேடி சென்ற கரீமா,  “உன்னை இந்த நேரம் தொந்தரவு செய்ய எனக்கு கஷ்டமா தான் இருக்கு.  நான் தான் மிஷாலை வர சொன்னேன். இங்க வரவைச்சு அவனுக்கு கஷ்டம் கொடுத்துட்டேன். இப்போ எங்க மீட்டிங்ல உணவு சப்ளை ஆர்டராவது அவனுக்கு வாங்கி கொடுக்கலாம். அந்த உதவியாச்சும் செய்யலாம்ன்னு மிஷாலுக்கு போன் செய்தேன். அவன் போன் லைன் கிடைக்கல. என்ன ஆச்சின்னு தெரியலயே” என குழப்பி விட்டாள்.

ருஹானாவும் மிஷால் நம்பருக்கு போன் செய்து பார்க்க போன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. மிஷால் ஹோட்டல் நம்பருக்கு போன் செய்ய அங்கே வேலை செய்யும் சதாம் போனை எடுத்தான். ருஹானா அவனிடம் மிஷால் விவரம் கேட்க. “அக்கா! மிஷால் அண்ணனை யாரோ அடிச்சிட்டாங்க” என சொன்னான். ருஹானா “என்ன?” என பதற, காயத்துக்கு மருந்து போட்டுக் கொண்டிருந்த மிஷால் போனை வாங்கிப் பேசினான்.

“சொல்லு ருஹானா”

 

“மிஷால்! நீ எப்படி இருக்கே? என்ன நடந்தது”

“நான் நல்லா தான் இருக்கேன், ருஹானா. மூணு, நாலு காயம் தான்”

 

“ஆர்யன் தானே இதை செஞ்சது.? எனக்கு தெரியும் கண்டிப்பா ஆர்யன் தான்”

 

பின்னாடி நின்ற கரீமா ஆனந்தமாய் சிரித்தாள். ருஹானா சொன்னதுக்கு பதில் சொல்லாத மிஷால் அவளை எச்சரித்தான். “பார் ருஹானா, நீ இனி அங்க இருக்க வேண்டாம். ஆர்யன் அர்ஸ்லான் ரொம்ப ஆபத்தானவன் நாம போலீஸ்ட்ட போகலாம். அந்த வீட்ல இருந்து உன்னையும், உன் அக்கா மகனையும் மீட்டுடலாம்.”

 

போலீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் ருஹானா பதறி, “மிஷால்! அப்படி செய்யாதே. போலீஸ்ட்ட போகாதே. நீ அப்படி செய்தால் இவானை நான் எப்பவுமே பார்க்க முடியாது. அவனை இழந்துடுவேன்.”

 

“அப்போ நாம சும்மா இருக்கலாம்னு சொல்றியா?” ஆவேசப்பட்டான், மிஷால்.

கரீமாவை விட்டு சற்று தள்ளி வந்தவள் “கூடிய சீக்கிரம் நான் இவானை தூக்கிட்டு வந்துடுவேன். உன்ன கெஞ்சி கேக்கறேன். போலீஸ்ட்ட போவாத. நீ எனக்கு உதவி செய்ய விரும்பினால் தயவு செஞ்சு இதை யார்கிட்டயும் சொல்லாதே. எனக்கு சத்தியம் செஞ்சிக்கொடு” என்று மன்றாடினாள்.

“சரி, நான் உன் விருப்பப்படி செய்றேன். ஆனா உனக்கு துன்பம் ஏதாவது நேர்ந்தா நீ உடனே எனக்கு சொல்லனும்” மிஷால் ஒத்துக்கொண்டான். அவளும், “நான் கண்டிப்பா சொல்றேன். மிக்க நன்றி மிஷால்” என்று சொல்லி போனை அடைத்து கரீமாவின் பக்கம் வந்தாள்.

 

கரீமா உடனே “என்ன நடந்தது? உன் நண்பனுக்கு ஒன்னும் ஆபத்து இல்லயே?” என கேட்க ருஹானாவும் உணமையை மறைத்து “இல்ல நல்லா இருக்கான்” என்று சொன்னாள். “சரி என் வேலைய நான் அப்புறமா பார்த்துக்கறேன் உன்னை தனியா விடறேன்” சொல்லி கரீமா உள்ளே சென்றாள்.

ருஹானாக்கு மிஷாலை நினைத்து ஆர்யன் மேல் கோபம் பொங்க வீறு நடை போட்டு உள்ளே சென்றாள். வெளியிலிருந்து ஆர்யனும் விரைவாக உள்ளே வந்து கொண்டிருந்தான்.  அவனை பார்த்துவிட்ட ருஹானா, “நில்லுங்க!” என அழுத்தமாக சொல்லவும், ஆர்யன் ஆச்சரியமாக அவளை பார்த்தான்.

“ஏன் இப்படி செஞ்சீங்க? உங்க கொடுமைக்கும், கொடூரத்துக்கும் அளவே இல்லயா?” என எடுத்த எடுப்பில் ருஹானா கோபமாக ஆர்யனிடம் கேட்டாள்.

ஒன்றும் புரியாமல் அவன் பார்க்க, “என்னை எது செஞ்சாலும் எனக்கு கவலை இல்ல. இவானுக்காக நான் என் உயிரையும் கொடுப்பேன். ஆனா மிஷால்? அவன் என்ன தப்பு செய்தான்?” என கேள்வி மேல் கேள்வியை அவள் அடுக்கினாள்.

‘என்னதான் இவ சொல்றா!’ என்று அவனும் பொறுமையாக கூர்ந்து கவனிக்க, “உங்களுக்கு பயந்து எல்லோரும் அமைதியா இருக்காங்க. ஆனா நான் அப்படி இருக்க மாட்டேன். யார் மேலயும் இரக்கம் இல்லாத முரட்டு மனுஷன் நீங்க” என அவள் மேலும் பேசிக்கொண்டே போக, ஆர்யனுக்கு கோபம் தலைக்கேறியது. 

“நீதி ஒரு நாள் உங்களுக்கு தீர்ப்பு வழங்கும். அது கூடிய சீக்கிரமே நடக்கும்.  அன்னைக்கு நான் இவானை தூக்கிட்டு போயிடுவேன்!” என அழுத்தமாக ருஹானா மிரட்டினாள். இவானை சொன்னதும் ஆர்யனின் கோபம் எல்லை மீறியது. அவள் கிட்டே நெருங்கி, “நீ தான் அந்த நீதியை கொண்டு வருவீயா?” லேசாக தலைசாய்த்து “இல்லனா அந்த பக்கி பயலா?” என கேட்கவும் ருஹானா முகம் சுளித்தாள்.

“நீ என்ன செய்ய போற ன்னு நானும் பார்க்கறேன்” என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே வேகமாக செல்ல, அழுது கொண்டே மறுபக்கம் ருஹானாவும் சென்றாள். மேலே மாடியில் ஓரமாக நின்றபடி சகோதரிகள் இருவரும் இந்த சண்டையை பார்த்து வெற்றி சிரிப்பு சிரித்தனர். “எல்லாம் உன் வேலை தானா அக்கா?” என சல்மா கேட்க, ஆமென கரீமா தலையாட்டினாள்.

———-

போலீஸ் கமிஷனர் அலுவலகம்…

போலீஸ் ஆபீசர் தன்வீருக்கு ஒரு போன் வந்தது, ருஹானாவும், அவள் அக்கா மகனும் ஆர்யன் அர்ஸ்லானால் மாளிகையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று. தன் சகோதரிக்கு ஆபத்து எனவும் பதறிய அவன், கமிஷனர் வாசிமிடம் உடனே தெரிவித்தான். “ஆர்யன் அர்ஸ்லானா? நாம உடனே நடவடிக்கை எடுப்போம், வா போகலாம்” என வாசிம் சொல்ல துரிதமாக கிளம்பினார்கள். 

————

அர்ஸ்லான் மாளிகை சமையலறை…

 

ருஹானா இவானுக்கு பழம் வெட்டி கொண்டிருக்கிறாள். சாரா ஒரு ஆப்பிள் பழத்தை நீட்டி “சின்ன சாருக்கு ஆப்பிள் ரொம்ப பிடிக்கும்” என்று சொல்ல அதை வாங்கி கழுவிய ருஹானா நிமிர்ந்து ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். 

கேட் தாண்டி இரண்டு வெள்ளை கார்கள் உள்ளே வர, வாசல் வரை வந்த காரிலிருந்து இறங்கிய தன்வீரை பார்த்ததும் அதிர்ந்து போனாள். ‘யா அல்லாஹ்! மிஷால், நான் அவ்வளவு சொல்லியும் நீ தன்வீர்ட்ட சொல்லிட்டியா? இது அந்த காட்டுமிராண்டிக்கு தெரிஞ்சா…’ என மனதில் பேசியபடி வேகமாக வெளிய ஓடி வர எதிரே ஆர்யன் வரவும் மிரள மிரள விழித்தாள்.

அவளது கலங்கிய தோற்றம் கண்டு அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்த ஆர்யன், “என்னாச்சி உனக்கு?” என கேட்டான். அவள் பதில் ஒன்றும் சொல்லாமல் நிற்க,  “இவானுக்கு உடம்பு சரியில்லயா?” என மீண்டும் கேட்டான். அதற்குள் அழைப்பு மணி ஒலிக்க.. ஜாஃபர் கதவு திறந்தான்.

“ஆர்யன் அர்ஸ்லானை பார்க்கனும். நாங்க போலீஸ்!” ஒரு காவல் அதிகாரி சொல்ல,  இருவரும் வாசலை பார்த்தனர்.  திரும்ப ஒருத்தரை ஒருத்தர் பார்க்க மாடி மேல்வளைவில் வந்து வஞ்சக சிரிப்புடன் கரீமா நின்றாள்.

கமிஷனர் வாசிம் அருகே சென்ற ஆர்யன், “நான் தான் அது. என்ன வேணும்? என கேட்டான். “ஆர்யன் அர்ஸ்லான்!” என்று சொல்லியபடி ஆர்யனை பார்த்து தலையாட்டிக்கொண்ட கமிஷனர் , “உங்க மேல ஒரு புகார் வந்திருக்கு. ருஹானாவையும், அவங்க அக்கா பையனையும் அடைச்சி வச்சி, கொடுமைப்படுத்துறதா..” என்றான்.

வாயை திறந்து அதிர்ந்து பார்த்த ருஹானா திக்பிரமை அடைந்து நின்றாள். திரும்பி அவளை பார்த்த ஆர்யன் கண்கள் இடுங்கின. நெற்றி சுருங்கியது. பார்வை அனலாய் அவள் மீது வீசியது.

 

சிட்டுகுருவியைக் காக்க 

அளித்த அனுமதியும்,

சகுனியின் சூழ்ச்சியால்

தண்டனையாய் காட்சிப்படுத்திட…

தோழியை மீட்க

காவலனை அனுப்பும் 

பால்ய தோழன்…..

குற்றம் சாட்டப்பட்டவனின்

பார்வை அவளை சாட

தத்தை விழிமொழியோ

தவிப்புடன்….

(தொடரும்)