Advertisement

தன் கிராம சமையலை சொன்னதும் முகம் மலர்ந்த ருஹானா, “லெபெனியே சூப்பா?” என கேட்டாள். “ஆங்! அதே தான். என்ன ருசி!” என கரீமா சொல்ல, “இப்போ கூட நான் செஞ்சி தரேன்” என்று ருஹானா முன்வந்தாள். “இல்லல்ல. இப்போ சாரா சிக்கன் சூப் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நீ இன்னோரு முறை செஞ்சி கொடு. இப்போலாம் அகாபா சிட்டில மடாபா உணவுகள் கிடைக்கறதே இல்லை. நானும் என் தோழிகளும் முன்னெல்லாம் விரும்பி சாப்பிடுவோம்” என்று ருஹானாவை வளைத்தாள்.

“இங்க தான் என் தோழன் மிஷால் ஹோட்டல் வச்சிருக்கான். அருமையா மடாபா உணவுகள் செய்வான்” என வலைக்குள் போய் விழுந்தாள், ருஹானா. மிகையாக ஆச்சர்யப்பட்ட கரீமா “ஆஹ்! அப்படியா? நல்லதா போச்சி. நீ எனக்கு அந்த ஹோட்டல் முகவரி, போன் நம்பர் கொடு. எங்க அடுத்த கிளப் மீட்டிங்ல நான் அங்கயே உணவுக்கு ஏற்பாடு செய்றேன்” என்றாள்.

தன் நண்பனுக்கு ஒரு வசதியான வாடிக்கை பிடித்துக் கொடுத்த சந்தோசத்தில் ருஹானா, ஒரு தாளில் மிஷாலின் விவரத்தை எழுதி கரீமாவிடம் கொடுத்தாள். நன்றி சொல்லி கரீமா சந்தோசமாக விடைபெற, இருமும் இவானை கவனிக்க ருஹானா அவனிடம் விரைந்தாள்.

அறைக்கு வந்த கரீமாவின் மலர்ந்த முகம் கூம்பி போனது, தங்கை கைபேசியில் கவனமாய் இருப்பது கண்டு. சல்மா அக்காவை கண்டதும் போனை கீழே போட, “என்ன சல்மா, கிளம்ப இன்னும் எடுத்து வைக்கலையா?” என கரீமா பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.

“அக்கா, நீ உன் நேரத்தோட என் நேரமும் வீணாக்குறே. ஆர்யன் அவன் ரூமை விட்டு என்னை கழுத்தை பிடிச்சித்தான் தள்ளல. மத்தபடி என்கிட்டே ஒரு ஆர்வமும் காட்டல. நான் சின்ட்ரல்லா ட்ரெஸ் போட்டுட்டு போனா கூட ஆர்யன் என்னை நிமிர்ந்துகூட பார்க்க போறதுல்ல. நீ பார்த்தே தானே? அவனும், அந்த பொண்ணு கூட தான் இருக்கறான்” என சல்மா உண்மையை எடுத்து சொன்னாள்.

“அந்த பொண்ணை விடு. அவ அக்கா தஸ்லீம் மாதிரி அவளை ஒரு நொடியில வெளியே தூக்கி போடுறேன்” என கரீமா சொல்ல, “எப்படிக்கா?” என சல்மா கேட்டாள்.

“இதோ, இப்படி! இதான் அவள் வெளியே போகற டிக்கெட்” என்று மிஷால் விவரம் இருந்த தாளை காட்டி, “ஆர்யன் கூட இருக்கும்போது இப்படி போனை பார்த்துட்டு இருக்காதே” என சுட்டு விரலை நீட்டி எச்சரித்து சென்றாள். கரீமா சென்றவுடன், சல்மா நாக்கை தட்டிவிட்டு மீண்டும் போனில் தன் காதலனுடன் ஐக்கியமானாள்.

‘எதையும் சுடச்சுட முடிக்க வேண்டும்’ என்ற கொள்கையுடைய கரீமா, அடுத்து நேரே சென்றது, மிஷால் ஹோட்டலுக்கு. அவளை வரவேற்று உட்கார வைத்த மிஷாலை மேலும் கீழும் பார்த்தவள், ‘ஆள் நல்லாத்தான் இருக்கான். இதான் நமக்கு வேணும்!’ என்று நினைத்துக்கொண்டாள். ஒரு பெரிய ஆர்டர் கொடுக்க வந்ததாக சொன்ன கரீமா சாப்பிட்டு பார்க்க ஒரு இனிப்பு மாதிரியை கேட்டாள்.

இப்போதைக்கு பக்லாவா இனிப்பு மட்டுமே இருப்பதாகவும் ஆர்டர் செய்தால் எல்லா மடாபா உணவுகளையும் குறிப்பிட நேரத்தில் செய்து தருவதாக மிஷால் சொல்ல, கரீமா பக்லாவாவை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.

“நல்ல ருசி! ருஹானா சொன்னது சரிதான்” இப்போது மிஷாலுக்கு வலை விரித்தாள்.

“என்ன ருஹானாவா? அவளை எப்படி உங்களுக்கு தெரியும்?” மிஷால் ஆர்வமானான்.

“ருஹானா இப்போ அர்ஸ்லான் மாளிகைல தான் இருக்கா. நான் தஸ்லீமோட சொந்தம். என் பேர் கரீமா அர்ஸ்லான்”

“ஆமா, உங்கள மயானத்தில பார்த்தது நினைவு வருது” சோகமாக மிஷால் சொல்லவும் அவளும் கவலை முகமூடி போட்டுக்கொண்டாள்.

“ருஹானா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்கூட பிரியமா இருப்பா. நாங்க பேசிட்டு இருக்கும்போது மடாபா உணவை பத்தி சொன்னா. அவ தான் இந்த முகவரியும் கொடுத்தா. உன்ன பத்தியும் பெருமையா சொன்னா” அவனை குளிர வைத்தாள்.

புன்னகைத்த மிஷால் கேட்டான், “ருஹானா எப்படி இருக்கா?”

“முன்னே பாய்லர் ரூம்ல இருந்ததுக்கு இப்போ பரவால்ல. தனி ரூம் இருக்கு. சாப்பாடு கொடுக்குறாங்க” என வெடிக்கு தீ வைத்தாள்.

அதுவரை நின்று பேசிக்கொண்டிருந்த மிஷால் படக்கென கரீமா எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து பதறிப்போய் கேட்டான். “என்ன! பாய்லர் ரூம்லயா?”

“யா அல்லாஹ்! உனக்கு ருஹானா சொல்லலயா? நான் உனக்கு தெரியும்னு நினைச்சிட்டேன். நான் சொன்னேன்னு யார்கிட்டேயும் சொல்லிடாதே.” என பசப்பினாள்.

“இப்பவும் அங்க தான் அவளை அடைச்சி வச்சிருந்தாங்களா?”

“இல்ல. முதல்ல சில நாட்கள் தான் அங்க இருந்தா. இப்போ லேசா நிம்மதி அவளுக்கு. அதிகமா வேலை பாக்குறா. அவளை இன்னும் கொஞ்சம் நல்லா நடத்தலாம்”  முதலை கண்ணீர் வடித்தது.

“நான் அவளை பார்க்க இன்னைக்கே வரேன்” வருத்தம் அவன் முகத்தில்.

“நல்லது. ருஹானா சந்தோசப்படுவா. ஆனா இன்னைக்கு வேணாம். நாளைக்கு காலைல வா. நீ வரும்போது மத்த இனிப்பு மாதிரிகளும் கொண்டு வா” அவன் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.

சரியென மிஷால் சொல்லி கவலையில் மூழ்கவும், கரீமா வீட்டின் முகவரியும், வர வேண்டிய நேரமும் போனில் அனுப்புவதாக சொல்லி, எண்ணி வந்த காரியம் இனிதாக கைகூடி வந்ததை நினைத்து மகிழ்வுடன் விடைப்பெற்றாள்.

  ——–

ருஹானா சமையலறையில் இவானுக்கு சூப் எடுக்க வந்தவள், அம்ஜத் அங்கே வரவும் அவனிடம் பேசிக்கொண்டே சூப்பை சூடு செய்ய, சாராவும், நஸ்ரியாவும் கடைக்கு போய் அலைந்துவிட்டு அப்போதுதான் திரும்பினர். சாரா இவானுக்கு தான் சூப் எடுத்து தருவதாக சொல்ல, ருஹானா தானே பார்த்துக்கொள்வதாக கூறி அவருக்கு வேலையில் இருந்து சற்று விடுதலை கொடுத்தாள். அம்ஜத் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, நஸ்ரியா வேலை செய்ய அலுத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது வாயிற்காப்பான் ஒரு பார்சலை கொண்டு வந்து ஆர்யன் சாரிடம் சேர்ப்பிக்க சொல்ல, நஸ்ரியா எரிச்சலுடன் அதை வைத்துவிட்டு போகுமாறு சொன்னாள். மிகுந்த யோசனைக்கு பின் ருஹானா, சூப்புடன் அந்த பார்சலையும் எடுத்துக்கொண்டு படியேறினாள்.

படிகளில் அத்தனை தயக்கமாக வந்தவள், ஆர்யன் அறை வாசலிலேயே நெடுநேரம் யோசித்தாள். பின் வந்த வழியே செல்ல திரும்பியவள், கரீமாவின் எச்சரிக்கையும் மீறி மறுபடியும் கதவருகே வந்து உள்ளே வர அனுமதி கேட்டு கதவை தட்டினாள்.

ஆர்யன் வர சொல்லவும் உள்ளே காலடி எடுத்து வைத்தவளை பக்கவாட்டில் பார்த்துவிட்டு, அவன் செய்துக்கொண்டிருந்த வேலையை தொடர்ந்தான். “இந்த பார்சல் உங்களுக்கு வந்தது, அவசரம்னு சொன்னாங்க” என்று அதை மேசை மேல் வைத்தாள். ஆர்யன் நிமிர்ந்து எதோ சொல்ல வரும்போது அவள் போன் அடித்தது.

அவன் சொன்னபடி அவள் போனின் சத்தம் குறைத்து வைக்கவில்லை போலும். அவள் போனை மூடுவதை பார்த்தவன், “எடுத்து பேசு!” என்றான்.

“நான் அப்புறம் பேசிக்கிறேன். என் தோழன் தான், மிஷால்”

அந்த பேரை கேட்டால், ஆர்யனுக்கு ஏன் கோபம் வருகிறது என்று அவனுக்கே தெரியவில்லை. கண்கள் இடுங்க முகத்தை திருப்பியவன், கேட்டான். “இவான் சாப்பிட்டானா?”

“சூப் தயாரா இருக்கு. இந்த பார்சல் உங்களுக்கு தந்துட்டு நான் போய் அவனுக்கு கொடுக்குறேன்”

“எல்லாத்தையும் விட உனக்கு இவான் தான் முக்கியம்” என்றவன், எழுந்து பக்கம் வந்து போனை கண்ணால் காட்டி “போனை விடவும்” என்றான்

ருஹானா என்ன சொல்லுவது என புரியாமல் பார்க்க, அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் மேலும் பேசினான்.

“இவான் மேல அக்கறை இருந்தா அவனை நீ இப்படி தனியா விட மாட்டே. இப்படி தேவையில்லாத செயல்ல உன் நேரத்தை வீணாக்க மாட்டே” திரும்ப போனை சுட்டி காட்டினான்.

“இனிமேல் உன்ன நான் இப்படி பார்க்க கூடாது” என எச்சரித்தான்.

“கவலைப்படாதீங்க. நான் ஏற்கனவே….“ அவளை முடிக்க விடவில்லை.

“என்ன நீ?” என சத்தமாக கேட்கவும் அவளுக்கு கண்கள் கலங்கியது.

“பார்சல் கொடுத்திட்டல. நீ வெளிய போகலாம்” என சொல்லி அவன் மேசைக்கு திரும்பினான்.

சூப் கொண்டு வந்து வைத்த சித்தியை காணாது தேடிய இவான் சித்தப்பா அறைக்கதவு திறந்திருக்க லேசாக எட்டி பார்த்தான்.

“இவானுக்கு இன்னும் வியர்க்குது. இப்படி வியர்த்தா திரும்ப காய்ச்சல் வரும். இன்னைக்கு ராத்திரி வந்தா என்ன செய்றது?” கேட்க வந்ததை கேட்டுவிட்டாள்.

“இன்னைக்கு பூரா நல்லா சாப்பிட்டான்ல. பகல்ல அதிக காய்ச்சல் இல்லயே. ஒன்னும் ஆகாது. இரவு என்கூட வருவான். திரும்ப ஜுரம் வந்தா மறுபடியும் நீ குணமாக்கு” அவள் பக்கம் வந்து அழுத்தமாக ஆர்யன்.

“இன்னிக்கு அதிக குளிரா இருக்கு. பனி கொட்டுது” கவலையாக ருஹானா.

“இவானை தயார் செய். கடைசியா சொல்றேன். இவான் தயாரா இருக்கணும்”

இதுவரையில் கேட்டுக்கொண்டிருந்த இவான் அவன் அறைக்கு சென்று விட்டான்.

இருவரும் சிறிது நேரம் முறைத்துக்கொண்டு நிற்க, பின் ருஹானா தான் தோல்வியடைந்து வெளியே வந்தாள்.

——

ஆர்யன் கொடுத்து அனுப்பிருந்த வெண்ணிற சட்டையும் அதன் மேல் கருப்பு கோட்டும் இவானுக்கு போட்ட ருஹானா அவனுக்கு தலை வாரிக்கொண்டே கேட்டாள். “கண்ணே! நல்லா இருக்கே தானே?” இவானும் “நல்லா இருக்கேன் சித்தி!” என சொன்னான்.

இவானை போலவே அருமையாக உடுத்தியிருந்த ஆர்யனும் அங்கே வர, இவானை பார்த்து, “அக்னி சிறகே! அழகா இருக்கே நீ” என்று சொன்னவனின் அழகிலும் சிறிதும் குறைவில்லை. “ஆனா எதோ குறை இருக்கே, இதோ, இப்போ சரிசெய்றேன்.” என சொல்லி ஒரு கப்பல் பேட்ஜ் எடுத்து “இது உனக்காகவே வர வச்சேன்” என்று இவான் கோட்டில் மாட்டினான்.

இவான் மிகவும் மகிழ்ச்சியடைய அதை பார்த்து ஆர்யன் முகமும் மலர்ந்தது, முதன் முறையாக. “கரீமா அண்ணி தயாரா இருந்தா நாம போலாம். சரியா?” என்று இவான் கையை பிடித்துக்கொண்டான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நின்றிருந்த ருஹானா, “நான் சொல்றது கேளுங்களேன்” என ஆரம்பிக்க, “நீ இங்க இருக்கணும்னு நினைச்சினா, உன் எல்லையை தாண்டி வராதே” என முறைப்பாக சொல்லிவிட்டு இவானுடன் வெளியே நடந்தான்.

எதிரே வந்த கரீமா போட்டு வைத்த நாடகத்தை நடித்தாள். “இவானுக்கு ஏமாற்றம் தருவது தான் எனக்கு மிக வருத்தம்” என்று சொல்லி சென்று விட்டாள். “சித்தப்பா! எனக்கு கப்பல் காட்றேன்னு வாக்கு கொடுத்தீங்களே?” என இவான் கேட்க ஆர்யன் யோசித்தபடி நின்றான்.

———

கரீமா கீழே வரவேற்பு அறைக்கு வந்து அழகு நிலையத்தில் இருக்கும் சல்மாக்கு போன் செய்தவள், “திட்டப்படி எல்லாம் நடந்தது. ஆர்யன் கிளம்பிட்டான். நீயும் சீக்கிரம் விழா இடத்துக்கு போ. நான் வராததால இவான் வரல. நீ தனியா ஆர்யன் கூட விழாவை கொண்டாடு” என்று உற்சாகமாக சொன்னாள்.

கருப்பு நிற கோட்சூட்டில் கம்பீரமாக ஆர்யன் இறங்கி வந்தான். வெளிக்கதவருகே வந்து தன் கழுத்து பட்டையை சரிசெய்துக் கொண்டு நிற்கவும், கரீமா அவனிடம் சென்று, “ஆர்யன்! எனக்கு வருத்தமா இருக்கு. எனக்கு தெரியும். இது போல விழாக்கு போக உனக்கு பிடிக்காது. ஆனா இப்போ நீ தனியா எப்படி….“ என்று சொல்லும்போதே படிக்கட்டில் சத்தம் கேட்க பேச்சை நிறுத்தி மேலே பார்த்தவள், அதிர்ந்தாள்.

இவானை கையில் பிடித்தவாறே, ருஹானா பளிச்சென்ற கருப்பு நிற கவுனில், விரிந்த கூந்தல் வசீகரமாய் அலைஅலையாக அசைய, முகத்தில் லேசான ஒப்பனையுடன், பிரமிக்கத்தக்க அழகில் இறங்கி வந்துக்கொண்டு இருந்தாள். ஆர்யன் தலை உயர்த்தி நிமிர்ந்தவன் அந்த அழகியை பார்த்ததும் கண்களை இமைக்க மறந்தான். தலையும் தாழ்த்தவில்லை.

கருமை இனிமை கூட்ட

மலரவள் நேர்த்தி உடையில்

மயிலாய் ஒயிலாய் 

படிகளில் இறங்க இறங்க..

மெதுவாய் மிக மெதுவாய்

பார்வையில் ஒரு ரகசிய ரசிப்பு..!

(தொடரும்)

Advertisement