ஆர்யன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், இவான் அறை திறந்து கிடப்பதை பார்த்து ருஹானா அங்கே இருக்கிறாளோ என மெல்ல வீம்புடன் எட்டி பார்த்தான். அறையில் யாரும் இல்லாததோடு இவானின் உடைகளும், அவன் விளையாட்டு பொருட்களும் காணாமல் அலமாரியும், மேசையும் வெறிச்சோடிக் கிடந்தன.
வேகமாக வெளியே வந்த ஆர்யன் வாசலுக்கு வந்து காவலாளியிடம் “இவான் சித்தி எங்கே?” என பரபரப்புடன் கேட்டான். “இப்போ தான் வெளிய போனாங்க” என அவன் பதில் சொல்லவும் காரை எடுத்துக்கொண்டு பறந்தான்.
சாலையில் ருஹானா நகரும் பெட்டியை இழுத்துக்கொண்டு தோளில் கைப்பையுடன் சென்று கொண்டிருந்தவள் ஒரு டாக்ஸியை கை காட்டி அழைத்தாள்.
டாக்ஸிக்கும், அவளுக்கும் இடையே வேகமாக காரை கொண்டுவந்து நிறுத்திய ஆர்யன் கீழே இறங்கி வந்தான்.
“அத்தனை எளிதா நீ இவானை கூட்டிட்டு போக முடியும்னு நினைச்சியா? நீ எங்கயும் போக முடியாது. வந்து கார்ல ஏறு”
“நான் வர மாட்டேன்” என ருஹானா நகர, அவள் முன்னே சென்று மறித்தவன் “உன்னை கார்ல ஏற சொன்னேன்” என ஆர்யன் கத்த “முடியாது. சட்டப்படி நான் இவனோட கார்டியன். நான் அவன் சித்திங்றதால அவனை என்கிட்டே கொடுக்க போறாங்க. நீங்க சொன்ன காரணத்துக்காக இல்ல” என சொல்லிவிட்டு மேலே நடந்தாள்.
அவள் கையை பற்றியவன், பெட்டியையும் பிடுங்கினான்.
“விடுங்க என்னை! என்ன செய்றீங்க?” என அவள் கத்த கத்த, பெட்டியை பின்னிருக்கையில் தூக்கி போட்டவன் அவளை காரினுள் தள்ளி கதவை அடைத்து அவனும் காரில் ஏறினான்.
“இவான் எனக்காக அங்க காத்திருக்கான். என்னை போக விடுங்க. என்ன செய்றீங்க? உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா?” என அவள் தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்க, காரை மாளிகையை நோக்கி திருப்பினான்.
மாளிகையை அடைந்து அவள் அறைக்கு அவளை ஆர்யன் இழுத்துவர “எனக்கு வலிக்குது. கையை விடுங்க” என அவள் கத்திக்கொண்டே வர “நீங்க முரடன். அதுக்கு இதுவே சாட்சி. என் பேக் கொடுங்க” என அவள் சொல்ல சொல்ல, அவளை அறையில் தள்ளிவிட்டு அவளுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவன் கதவை பூட்டிவிட்டான்.
“கதவை திறங்க. இது வன்கொடுமை. நான் போகணும். என்னை வெளிய விடுங்க” என அவள் கதவை தட்டி கத்தியதில் கரீமாவும், சாராவும் அங்கே ஓடி வந்தனர்.
“என்னை உள்ள வச்சி பூட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. கதவை திறங்க” என அழுதுக்கொண்டே ருஹானா கதவை உடைக்க, சல்மாவும், ஜாஃபரும் வந்துவிட்டனர்.
“இந்த கதவை யாரும் திறக்க கூடாது. இது என் உத்தரவு. இதை மீறினால் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்” என ஆர்யன் நால்வரையும் பார்த்து சொன்னான்.
கரீமா சந்தோசத்தை உள்ளே சாமர்த்தியமாக மறைக்க, சல்மாவால் அது முடியவில்லை. புன்சிரிப்புடன் பார்த்திருந்தாள்.
சாராவிடம் கைப்பையை நீட்டிய ஆர்யன் “இதை என் ரூம்ல கொண்டு வைங்க” என சொன்னவன் அறை சாவியை தனது கால்சட்டை பையில் போட்டுக்கொண்டான்.
போனை எடுத்து “இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லா லாயர்ஸும் என் முன்னாடி வரணும்” என பேசிக்கொண்டே சென்றான்.
“என்னக்கா நடந்தது?” என சல்மா தாங்க முடியாத குஷியோடு கேட்க “இரு, தெரிஞ்சிட்டு வரேன்” என சிரிப்புடன் சொன்ன கரீமா ஆர்யனை தொடர்ந்து சென்றாள்.
“எல்லா விவரமும் சேகரிங்க” என சொன்னபடி போனை நிறுத்திய ஆர்யனிடம் வந்த கரீமா “என்ன நடந்தது ஆர்யன்? இவானை பற்றியதா?” என போலிக் கவலையாக கேட்டாள்.
“அவளுக்கு இவானோட கஸ்டடி கொடுத்துருக்காங்க” என ஆர்யன் சொல்ல, இப்போது கரீமாவாலும் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. மலர்ந்த அவள் முகத்தை கவனிக்காத ஆர்யன் “இவானை என்கிட்டே இருந்து யாராலும் பிரிக்க முடியாது” என்று சொல்லி சென்றான்.
சகோதரிகள் இருவரும் இணைந்து நகைக்க அதை பார்க்க தான் யாரும் அங்கே இல்லை. இருவரும் வேடிக்கை பார்க்க ருஹானா அறைக்கு விரைந்தனர்.
ருஹானாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அங்குமிங்கும் அலைந்தவள் கதவை திறக்க ஏதாவது கிடைக்காதா என தேடினாள். ஒரு கம்பி கிடைக்க அதை சாவி துவாரத்தில் நுழைத்து திருப்பினாள்.
வெளியே நின்று முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அதை இருவரும் சத்தம் செய்யாமல் ரசித்துக்கொண்டிருந்தனர்.
“யாரோ வெளியே இருக்கீங்க. கதவை திறந்து விடுங்க. நான் உள்ளே இருக்கேன்”
“ருஹானா!” என அன்பொழுக கரீமா அழைக்க, உயிர் பிழைத்த நிம்மதியில் ருஹானா “கரீமா மேம்! எனக்கு உதவி செய்ங்க. கதவை திறந்துவிடுங்க” என்றாள்.
“ஆர்யன் சாவியை எடுத்துட்டு போய்ட்டான். யாரும் திறக்க கூடாதுன்னு சொல்லிட்டு போயிருக்கான். உனக்கு தான் அவனை பத்தி தெரியுமே! எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. உன்னை நினைச்சா பாவமா இருக்கு” என இரக்கமாக சொல்ல சல்மா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி நின்றாள்.
“அதெல்லாம் இப்போ முக்கியம் இல்ல, கரீமா மேம்! இப்போ இவானுக்கு தகவல் சொல்லி இருப்பாங்க. அவன் எனக்காக காத்திருப்பான். வெளிய போக எனக்கு உதவி செய்ங்க” என கதவில் காதை வைத்தபடி ருஹானா கெஞ்சினாள்.
“ஆஹ் ருஹானா டியர்! நான் என்ன செய்ய முடியும், சொல்லு! ஆனா கவலைப்படாதே! நான் ஏதாவது வழி கிடைக்குமான்னு பார்க்கறேன்” என ஆறுதலாக சொல்லிவிட்டு சத்தம் வராமல் நகைத்துவிட்டு இருவரும் அகன்றனர்.
அவள் கைத்தொலைபேசியும் கைப்பையோடு ஆர்யனிடம் சென்றிருக்க ருஹானா நிராசையுடன் சுவரில் சாய்ந்து அமர்ந்து கண்ணீர் விட்டாள்.
—–
“என்ன தன்வீர்! ஏன் கவலையா இருக்கே?” என கமிஷனர் வாசிம் வினவ “ருஹானாவுக்கு இவானோட கஸ்டடி கிடைச்சிருக்கு” என தன்வீர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அட! இது சந்தோசமான தகவல் தானே? அதுக்கு ஏன் இப்படி இருக்கே?” என வாசிம் கேட்டான்.
“இல்ல, அதுக்கு வாழ்த்து சொல்ல ருஹானாக்கு போன் செய்தேன். அவ எடுக்கவே இல்ல. சாதாரணமா என் அழைப்பை தவற விட்டாலும் கொஞ்ச நேரத்துல திரும்ப கூப்பிடுவா. அதான் பார்த்துட்டே இருக்கேன்”
“அந்த ஆர்யன் அர்ஸ்லான் இருக்கானே! அவனை மறந்திட்டியா? அவன் நேத்து மிரட்டிட்டு போனான் தானே?”
காவல் அதிகாரிகள் இருவரும் கிளம்பி காரில் வேகமாக வந்து அர்ஸ்லான் மாளிகைக்கு வந்து அழைப்புமணியை அடித்தனர். கதவை திறந்த கரீமாவிடம் அவர்கள் ருஹானா பற்றி விசாரித்தனர்.
“ருஹானாவை இப்போ பார்க்க முடியாது” என கரீமா திமிராக பதில் சொல்ல, ஜாஃபரும் அப்போது வாசலுக்கு வந்தான்.
“இங்க பாருங்க மேம்! நான் கமிஷனர் வாசிம். இப்போ நீங்க என்னை ருஹானாவை பார்க்க விடலனா இன்னும் பத்து நிமிடத்துல சர்ச் வாரண்ட்டோட வருவேன். உங்க வசதி எப்படி?” என வாசிம் அதிகாரமாக கேட்டான்.
கரீமா மாற்று சாவி கொண்டு வருமாறு ஜாஃபருக்கு உத்திரவிட, நண்பர்கள் இருவரும் உள்ளே வந்தனர்.
——-
ஆர்யனின் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் கூடியிருக்க “இந்த பேப்பர் தான் இவானை என்கிட்டே கொடுக்க முடியாதுன்னு சொல்லுதா?” என ஆர்யன் மேசைமேல் இருந்த ஆவணத்தின் மீது ஓங்கி அடித்தான்.
“அது இவானோட சித்திக்கு தந்த கஸ்டடி ஆர்டரோட பிரதி. அதுல குறிப்பிடப்பட்ட காரணங்களை நீங்க பார்க்க நினைப்பீங்கன்னு எடுத்துட்டு வந்தோம்” மூத்த வக்கீல் சொன்னார்.
“ஆர்யன் அர்ஸ்லான் ஒரு சின்ன பையனை வளர்க்க முடியாது. ஆனா ஒன்னுமே இல்லாத ஏழைப்பெண் தனியா அவனை வளர்க்க முடியும். அப்படித்தானே?” என ஆர்யன் அந்த கட்டிடமே அதிர கேட்டான்.
ரஷீத்தும், வழக்கறிஞர்களும் தலையை குனிந்து கொள்ள “என்ன செஞ்சாலும் பரவால்ல. இந்த முடிவை உடனே மாத்தணும். என்கிட்டே இருந்து அவளால இவானை பறிக்க முடியாது” என ஆர்யன் தீர்மானமாக சொன்னான்.
—–
அழுது கொண்டிருந்த ருஹானா தன் அறைக்கதவு திறப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள். தன்வீர் “பயப்படாதே, ருஹானா. நாங்க வந்துட்டோம்” என சொல்ல “தன்வீர்!” என அவனை வியப்புடனும், நிம்மதியுடனும் அழைத்த ருஹானா நடப்புக்கு வந்தாள்.
“இவான்! இவான் என்னை இந்நேரம் தேடிட்டு இருப்பானே!” என அவள் கவலைப்பட “வா ருஹானா அங்க போகலாம்” என வாசிம் அழைத்தான். அவர்களோடு நடந்தவளுக்கு போன் நினைவு வர, திரும்பி ஆர்யன் அறைக்கு ஓடினாள்.
கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் மேசை மேல் இருந்த அவள் கைப்பையில் இருந்து போனை வேகமாக எடுத்தாள். அப்போது கைப்பையில் இருந்த பொருட்கள் கீழே விழ, அவற்றை எடுத்து வைத்துக்கொண்டே லைலாவுக்கு அழைத்தாள்.
“மேம்! நான் வந்துட்டே இருக்கேன்” என பேசியபடியே வெளியே விரைய, கீழே விழுந்த அவளுடைய சிறிய பணப்பையை அவள் கவனிக்கவில்லை.
கரீமா, சல்மா மற்றும் பணியாளர்கள் தொடர வெளியே வந்த ருஹானாவின் முன்னே வாசிமும், தன்வீரும் நடந்தனர்.
அர்ஸ்லான் மாளிகையின் காவல் தலைவன் வாசிமை தடுத்து “ஆர்யன் சார் இல்லாத நேரத்துல ருஹானா மேமை நீங்க கூட்டிட்டு போக முடியாது” என சொல்ல “வழி விடு” என கடினமாக வாசிம் உத்தரவிட்டான்.
அவன் நகராமல் இடுப்பில் கை வைத்து துப்பாக்கியை எடுக்கும்முன் அவனை அடித்து வீழ்த்திய வாசிம் மற்றுமொருவனுக்கு குறி வைத்தவண்ணமே “தன்வீர்! ருஹானாவை காரில் உட்காரவச்சிட்டு நீயும் ஏறு” என்றான்.
தன்வீரும், ருஹானாவும் காரில் அமர்ந்தவுடன் துப்பாக்கியை இறக்காமல் அவனும் காரில் ஏற, தன்வீர் காரை ஓட்ட கார் கேட்டை தாண்டி எந்த சேதாரமில்லாமல் சென்றது.
அதை பார்த்துக்கொண்டே “இனிமேல் தான் பயங்கர விளைவுகள் நடக்கப் போகுது” என கரீமா சல்மாவிடம் சொல்லி கோணல் சிரிப்பை உதிர்த்தாள்.
——-
கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த ருஹானா “சித்தி!” என உற்சாக குரல் கேட்கவும் ஆவலாக திரும்பினாள்.
இவான் ஓடிவந்து அவளை கட்டிக்கொள்ளவும் “என்னுயிரே!” என அவளும் அவனை அணைத்துக்கொண்டாள்.
“நாம போக போறோமா, சித்தி?” என அவன் ஆர்வமாக கேட்க “ஆமா செல்லம்” என அவன் கையை பிடித்து முகர்ந்து முத்தமிட்டாள்.
ருஹானா இவானை தூக்கிக்கொண்டு அவனுக்கு முத்தமிட்டபடியே வெளியேவர, காத்திருந்த காவல் அதிகாரிகளின் முகமும் மலர்ந்தன.
“வா இவான்!” என தன்வீர் அவனை தூக்கி கொள்ள, வாசிம் ருஹானாவுக்கு வாழ்த்து தெரிவித்தான்.
——
வாசல் கதவை திறந்த நஸ்ரியா தலை குனிந்து நிற்பதை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஆர்யன் கரீமாவும், சல்மாவும் அங்கே சோகமாக நிற்பதை பார்த்தான்.
“என்ன நடந்தது?” என அவன் கேட்க, அதற்கு உடனே பதில் தராமல் அவன் கோபத்தை தூண்டிவிட முயன்ற கரீமா அவனை பாவமாக பார்த்தாள்.
ஆர்யன் வேகமாக படிக்கட்டில் ஏற, இவளும் பின்னாலேயே “ஆர்யன்!” என அழைத்தபடியே சென்றாள்.
காலியான ருஹானாவின் அறையை பார்த்து ஆர்யன் ஆங்காரமாய் நிற்க “ருஹானாவோட சகோதரனும், கமிஷனரும் வந்து அவளை கூட்டிட்டு போய்ட்டாங்க” என்று கரீமா சொல்ல, அவன் கை முஷ்டி சுவரில் வேகமாக இறங்கியது.
“நீங்க எப்படி அனுமதி கொடுத்தீங்க?”
“அந்த கமிஷனர் சர்ச் வாரென்ட் கொண்டு வருவேன்னு சொல்லி என்னை மிரட்டினான். நான் என்ன செய்ய முடியும்?” என பயந்தவள் போல கரீமா பாவனை செய்தாள்.
ரஷீத் அப்போது போனில் அழைத்து “ஆர்யன்! இவானோட சித்தி விடுதில இருந்து அவனை கூட்டிட்டு போய்ட்டாங்க. இனி நமக்கு இவான் கிடைக்கிறது கஷ்டம் தான்” என்று சொல்ல ஆர்யன் உறைந்து நின்றான்.