புயல் காற்றில் விளக்காகவே

அத்தியாயம் – 50  

விஷம் கக்கும் பாம்பை அசையாது பிடித்தபடி ஆர்யன் நிற்க, தட்டு தடுமாறி எழுந்து நின்ற ருஹானா கண்களை கூட தட்டி விழிக்காமல் ஆர்யனையே பார்த்திருந்தாள்.

“இங்க என்ன செய்றே? ஏன் என்கிட்டே சொல்லாம வந்தே?” என ஆர்யன் கடுமையாக கேட்க, “நான்… நான்.. இங்க.. இங்க.. உங்க காயத்துக்கு… மருந்து.. தேடி வந்தேன்” என திக்கி திக்கி பேசினாள். 

‘இவளை போய் சந்தேகப்பட்டேனே!’ என ஆர்யன் நெகிழ்ந்தாலும், அவளை தேடி தவிக்க விட்டதால் அவனுக்கு கோபமே மேலோங்கி இருந்தது. ஒன்றும் சொல்லாமல் கையிலிருந்த பாம்பை அவன் பார்க்க “அதை.. அதை என்ன செய்ய போறீங்க?” என ருஹானா கேட்டாள்.

“கொல்லப் போறீங்களா?” என அவள் திரும்பவும் கேட்க, “அதுக்கும் உயிர் வாழ்றதுக்கான உரிமை இருக்கு” என சொன்ன ஆர்யன் அந்த பாம்பை கீழே விட்டான். அது ஊர்ந்து வேறு பக்கம் செல்ல, ஆர்யனின் இந்த பரிணாமத்தில் ‘முன்பு இவனையா காட்டுமிராண்டி என நினைத்தோம்?’ என ருஹானா அசந்து போய் நின்றாள்.

இருவரும் இவான் இருக்குமிடம் வர, ருஹானா கொண்டுவந்த மூலிகைகளை ஒரு பாறையில் வைத்து ஒரு பெரிய கல் கொண்டு நசுக்கினாள்.

“சித்தி! என்ன செய்றீங்க?

“நான் மருந்து செய்றேன், அன்பே”

“எதுக்கு சித்தி?”

“உன் சித்தப்பாவோட புண்ணுக்கு போட”

மருந்தை கொண்டுவந்து ஆர்யனுக்கு போட வந்தவள் “இதை போடலாம். சீக்கிரம் குணமாகும்” என்றாள்.

“இது சரியாக்கும்னு எனக்கு தோணல. எனக்கு இது தேவையும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்” என ஆர்யன் கையை காட்ட மறுத்தான். 

“நாம முயற்சி செய்து பார்க்கலாமே! அதுல என்ன சிரமம்?”

ஆர்யன் அவளை முறைக்க, “உங்களுக்கு இன்பெக்ஷன் ஆகியிருக்குன்னு நினைக்கிறேன். காய்ச்சலும் இருக்கு. நெத்திலாம் எப்படி வேர்த்திருக்குன்னு பாருங்க” என மன்றாடினாள்.

அப்போதும் ஆர்யன் கையை காட்டவில்லை.

“சித்தப்பா! உங்களுக்கு உடம்பு சரியில்லயா?” என கேட்க, “இந்த மருந்தை போட்டா உன் சித்தப்பா நல்லாகிடுவார்” என்று ருஹானா தான் பிடித்த பிடியிலேயே நின்றாள்.

“நாம டாக்டர் கிட்ட போகலாமே, சித்தி?” 

“இப்போதைக்கு டாக்டர்ட்ட போக முடியாது, செல்லம்”

“அப்போன்னா நீங்க மருந்து போட்டுவிடுங்க சித்தி. சித்தப்பாக்கு சரியாகட்டும்”

பேசும் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்த ஆர்யன் சரியென தலையசைக்க, ருஹானா மருந்தை அவன் காயத்தில் மென்மையாக தடவினாள்.

அருகில் தெரியும் ருஹானாவின் அழகு முகத்தில் ஆர்யன் பார்வை நிலைக்க, ருஹானா கண்களை உயர்த்தி அவனை பார்த்துவிட்டு தலை தாழ்த்தி மூலிகையை பூசி விட்டாள்.

“சித்தப்பா! அதிகமா வலிக்குதா?”

“இல்ல அக்னி சிறகே!”

“சித்தி! உங்களுக்கு நினைவு இருக்கா? எனக்கு ஒருமுறை கீழ விழுந்து அடிபட்டபோது நீங்க ஒரு மருந்து தடவி விட்டீங்களே, எனக்கு உடனே சரியாகிடுச்சே. இப்போ அந்த மருந்து இங்க கிடைச்சா நல்லா இருக்கும்ல, சித்தி”

“ஆமா அன்பே! ஆனா ஒரு பிரிச்சனையை தீர்க்க ஒரேவழி தான் சரியா வரும்னு நாம நினைக்கக் கூடாது”

அது தனக்கான பேச்சு என புரிந்துகொண்ட ஆர்யன் அவளை கேள்வியாய் பார்க்க ‘ஆமா! உங்களுக்கு தான் இது’ என்பது போல ருஹானா அர்த்தமாய் அவனை பார்த்தாள்.

“நாம பலவழிகளில் முயற்சி செய்யலாம். இந்த மூலிகையும் உனக்கு தடவின மருந்து போல தான். இதும் குணமாக்கும்னு நம்புவோம்” என அவள் சொல்ல ஆர்யன் யோசிக்கலானான்.

‘வாழ்க்கையை இப்படியும் வாழலாம்’ என அவள் காண்பித்து கொடுக்கிறாள். அது அவன் மனதை சுற்றியும், மூளையை சுற்றியும் போட்டு வைத்திருக்கும் கேடயம் தாண்டி உள் புகுமா?

அந்தி சாயும் நேரம் வரை நடந்தவர்கள், இரவில் ஒரு பாதுகாப்பான இடத்தில் நெருப்பு மூட்டி தங்கினர். சித்தியின் மடியில் படுத்துக்கொண்டு எரியும் நெருப்பையே பார்த்துக்கொண்டிருந்த இவான் “சித்தி! காடு எவ்வளவு அழகா இருக்குல?” என சிலாகித்தான்.

“ஆமா, தேனே! மடாபால கூட அழகான காடு இருக்கு. நாங்க சின்ன பிள்ளைகளா இருக்கும்போது எங்க ஸ்கூல்ல அங்க தான் பிக்னிக் கூட்டிட்டு போவாங்க”

“மடாபா ரொம்ப தூரமா சித்தி?” என இவான் கேட்கும் நேரம் ஆர்யனும் கட்டைகளை சுமந்தபடி அங்கு வந்து சேர்ந்தான்.

“தூரம் தான் செல்லம்”

“எவ்வளவு தூரம் இருக்கும் சித்தி? நம்ம வீட்டுல இருந்து பூங்காக்கு போற தூரமா?”

“அதை விட ரொம்ப அதிகம் அன்பே”

இவான் முகம் சுருங்க “என்னாச்சு செல்லம்? ஏன் கவலையாகிட்டே?” என ருஹானா கேட்டாள்.

ஆர்யனும் இவானின் பதிலுக்காக காத்திருந்தான்.

“ஒருநாள் நாம மடாபா போகலாம்னு நீங்க சொன்னீங்க தானே, சித்தி?”

“ஆமா”

“அது அவ்வளவு தூரத்தில இருந்தா நாம போக வேண்டாம், சித்தி”

“ஏன் இவான் செல்லம்? தூரமா பயணம் செய்ய உனக்கு பிடிக்கலயா?”

“நாம அங்க போய்ட்டா, அம்ஜத் பெரியப்பாவை நான் எப்படி பார்க்க முடியும்? ஏன்னா அவர் வீட்டை விட்டு வெளியே போக மாட்டாரே!”

கையில் இருந்த கட்டைகளை கீழே போடாமல் அண்ணன் மகன் பேசுவதை கேட்டபடி நின்றிருந்த ஆர்யன் அவன் பெரிய அண்ணன் மேல் வைத்திருக்கும் அன்பை எண்ணி அப்படியே நின்றான். அண்ணனை விட்டு பிரிந்து செல்வது குறுகிய காலமே என்றாலும் தனக்கும் அது கடினமான செயலே என உணர்ந்து திக்குமுக்காடி போனான்.

அதற்குள் ஆர்யனை பார்த்துவிட்ட இவான், ருஹானாவின் மடியிலிருந்து எழுந்து “சித்தப்பா! நீங்க சொல்லுங்களேன். பெரியப்பா நம்மோட வர மாட்டார் தானே? அவரை விட்டு எப்படி போக முடியும்? தோட்டத்துல எனக்காக ஊஞ்சல் செஞ்சி தரேன்னு சொல்லியிருக்காரே! பெரிய ஊஞ்சல்! பூங்கால இருக்குறதை விட பெருசு! நாம ஊஞ்சல் மாட்டலாம்ல சித்தப்பா?” என ஆர்வமாக கேட்டான்.

“கண்டிப்பா மாட்டலாம்” என ஆர்யன் சொன்னதும் இவான் முகம் பூவாய் மலர்ந்தது. ருஹானா ஆர்யனை கேள்வியாய் நோக்க, இவான் கொட்டாவி விடுவதை பார்த்த ஆர்யன் அவனை தூங்க சொன்னான். ருஹானா அவனை மடியில் போட்டு தட்டி தூங்க வைத்தாள்.

மரத்தின் மீது சாய்ந்து அவளும் அப்படியே உறங்கிவிட, இடையில் இவான் புரண்டு படுக்கவும் கண்விழித்தவள் அவனுக்கு சரியாக போர்த்தி விட்டாள். எதிரே நெருப்பு அணைவது போல இருக்க, எழுந்து வந்தவள் அதில் சிறிய கட்டைகளை போட்டாள்.

“சரி!” என்று ஆர்யன் குரல் கேட்க, ஓசை வந்த திசை நோக்கினாள். ஆர்யன் திரும்பி நின்று போனில் பேசிக்கொண்டிருக்க, சில்வண்டுகள் மட்டும் ரீங்காரமிடும் அந்த ராப்பொழுதில் அவன் பேசுவது அவளுக்கு தெளிவாக கேட்டது.

“திட்டம் மாறிப்போச்சி. நாளைய சந்திப்பை ரத்து செஞ்சிடு”

“எனக்கு தெரியும். ஆனா இந்த விசயத்துல நான் மட்டும் முக்கியம் இல்லை”

“முதல்ல இருந்தே தப்பா தான் தொடங்கிட்டோம்”

“இப்போ சரிபண்ண பார்க்கணும்”

“சரி, நாளைக்கு நாம திரும்பவும் பேசுவோம்”

ஆர்யன் பேசியதை மகிழ்வுடன் கேட்ட ருஹானா நிம்மதியடைந்தாள். அவன் திரும்பி பார்க்கும்முன் வேகமாக சென்று பழையபடி சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

ஆர்யன் வந்து நெருப்பின் அருகே அமரவும், நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள்.   

காலையில் பறவைகளின் இனிமையாக கூவும் ஒலி கேட்டு கண்விழித்த ருஹானா, மடியில் இவானை காணாமல் வேகமாக எழுந்தாள். அருகில் ஆர்யனோடு இருக்கிறானோ என தேடினாள். 

இருவருமே கண்ணுக்கு புலப்படாததால் அவளுக்கு தூக்கிவாரி போட்டது. நடுங்கும் இதயத்தை கையில் பிடித்தபடியே சுற்றிலும் ஓடி ஓடி தேடினாள்.

அவள் படுத்திருந்த இடத்திற்கு அருகே ஒரு துண்டு காகிதம் சிறிய கல்லின் கீழ் இருந்தது. பாய்ந்து சென்று அதை எடுத்து பிரித்து படித்தாள்.

‘போலீஸை கூப்பிட முயற்சி செய்யாதே’ 

அவளுக்கு நடந்த உண்மை உரைக்க, மனமோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. போனை எடுத்து இயக்க முயல அது சக்தி இல்லாமல் அணைந்து போயிருந்தது.

என்ன செய்வது என திகைத்து அவள் நிற்க, அவள் அருகே இருந்த புதரின் மறைவில் ஒரு ஆள் நின்றுக்கொண்டு அவளையே கண்காணிப்பது அவளுக்கு தெரியவில்லை.

“இவான்” என கலங்கி நின்றாள்.

——-

தூங்கிக்கொண்டிருந்த இவான் கண்விழித்து பார்க்க, ஓடும் காரில் தான் இருப்பதை பார்த்து முன்னே எட்டி பார்த்தான். சித்தப்பா காரை ஓட்ட, சித்தி அருகினில் அமர்ந்திருக்கவில்லை. கண்களை நம்ப முடியாமல் நன்கு தட்டிவிழித்து உற்று பார்த்தான். அவன் தேடும் சித்தி அங்கே இல்லை. 

“சித்தப்பா! சித்தி எங்கே?” அவன் கேட்ட கேள்வியில் இறுகிப்போன ஆர்யன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“நாம எங்க போறோம்?” அதற்கும் பதில் வரவில்லை.

—— 

செய்வதறியாது திகைத்து நின்ற ருஹானாவிற்கு ஆர்யன் ‘11 மணிக்கு புறப்படுவோம்’ என பேசியது நினைவு வந்தது. உடலில் மின்சாரம் பாய்ந்தது போல அவளுக்கு மரத்துப் போயிருந்த உணர்வுகள் மீண்டு எழ, மின்னலென அவள் ஓட ஆரம்பித்தாள். அவள் பின்னால் நின்றிருந்தவனும் அவளை தொடர்ந்து ஓடினான்.

நெடுநேர ஓட்டத்துக்கு பின் சாலையை அடைந்த ருஹானா எதிரே வந்த காரை கையை காட்டி நிறுத்தினாள். அவரிடம் அவசர உதவி என கேட்டு போனை வாங்கி அவளது சகோதரன் காவல் அதிகாரி தன்வீருக்கு அழைத்தாள்.

“தன்வீர்! நான் ருஹானா பேசுறேன். இவானோட சித்தப்பா அவனை கூட்டிட்டு 11 மணி கப்பல்ல வெளிநாட்டுக்கு கிளம்பறார். அவங்களை நிறுத்தனும். எதாவது செய், தன்வீர்”

“ருஹானா! இப்போ 11 மணி தாண்டி 11.20 ஆகிடுச்சே! நீ எங்க இருக்கே?”

“நகரத்தை தாண்டி ஒரு காட்டுப்பகுதியில் இருக்கேன். இத்தனை நாள் நாங்க ஒன்னா தான் இருந்தோம். இன்னைக்கு நான் தூங்கிட்டு இருக்கும்போது எனக்கு தெரியாம இவானை தூக்கிட்டு போய்ட்டார். நீ எதும் செய்ய முடியாதா, தன்வீர்?”

“இந்நேரம் கப்பல் சர்வதேச எல்லைக்கு போயிருக்குமே! நான் என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்”

தன்வீர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே தன் பின்னால் வந்து நின்ற ஆளை பார்த்து ருஹானா திகைத்து போனாள்.

அர்ஸ்லான் மாளிகை பாதுகாவலரின் ஒருவன் தான் அவளை தொடர்ந்து வந்தது. ருஹானாவை விட்டு இவானோடு செல்லும் போது ஆர்யன் அவள் பாதுகாப்பிற்காக அவனை நியமித்துவிட்டு போயிருக்கிறான்.

பாதுகாவலன் கை காட்ட, பின்னே ஆர்யனின் கருப்பு நிற டொயோட்டா செக்வயா வந்து ருஹானா முன்னே நின்றது.

———

ஜோர்டான் நாட்டின் அகாபா துறைமுகம்.

கடலில் ஆடிக்கொண்டிருந்த கப்பல்களையும், கடற்கரையோரமாக அசைந்துக் கொண்டிருந்த படகுகளையும் பார்த்தபடி ஒரு பெஞ்சில் அமர்ந்து இவான் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஆர்யனை நோக்கி வந்த ரஷீத், பயணத்துக்கான ஆவணங்களை ஆர்யனிடம் அளித்தான்.