“எனக்கு எல்லா பூவும் பிடிக்கும். எல்லாமே அழகா இருக்குமே, சித்தி!”
“சரி, வா அன்பே! நாம அங்கே போகலாம்”
ஆர்யன் செவி கேட்கும் தூரம் விட்டு இருவரும் விலகி வந்திருந்தனர்.
“சித்தி, உங்களுக்கு எந்த பூ பிடிக்கும்”
“எனக்கு டெய்ஸி பூ ரொம்ப பிடிக்கும், செல்லம்”
“ஓஹோ! சித்தி நாம ஏரிப்பக்கம் போகலாமா? மீன் பார்க்கலாம்”
ருஹானாவும் சிறிது யோசித்தவள் அவனை கூட்டி வந்து ஏரிக்கரையில் அமர வைத்தாள்.
“என்னுயிரே! உன்னால எந்த பூ பிடிக்கும்னு சொல்ல முடியல தானே? அதே மாதிரி வாழ்க்கைல சிலசமயம் நமக்கு பிடிக்குதோ, இல்லயோ, சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும். கடினமான முடிவுகள் தான். உதராணமா.. உதாரணமா..“ மேலே பேச தயங்கியவள், இவான் புரியாது பார்க்கவும் “நீ யார் கூட இருக்க விரும்புவே? என்கூடவா? உன் சித்தப்பா கூடவா?” யோசித்தாலும் கேட்டுவிட்டாள்.
உள்ளம் அள்ளும் புன்னகை புரிந்த இவான் “ரெண்டுபேர் கூடவும்” என்றான்.
“அது முடியலன்னா… யார் கூட இருக்க ஆசை உனக்கு?”
இவானால் பதில் சொல்ல முடியவில்லை.
“இங்க இருந்து போகணும்ன்னா நீ யார்கூட வருவே?”
இவான் மௌனமே சாதித்தான். இப்படி ஏதாவது நடக்கும் என்று சந்தேகப்பட்டு இவானை தேடி ஓடிவந்த ஆர்யன் இதை கேட்டுவிட்டான்.
“பதில் சொல்லு, சித்தி செல்லம்! நீ என்னோட தானே….” பின்னால் வேகமாக வந்த ஆர்யனை பார்த்து அவளின் சொற்கள் அப்படியே தடைப்பட்டன.
ருஹானா மீது தீக்கனலை வீசிய ஆர்யன், இவானை தூக்கி கைகளில் பிடித்துக்கொண்டான். “உன்கிட்டே அப்புறம் பேசுறேன்” என அவளிடம் பல்லைக் கடித்துக் கொண்டு கூறிவிட்டு, இவானை கைபிடித்து வேகமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ருஹானாபயந்து போய் நின்றிருந்தாள்.
———
“என்னக்கா சொல்றே! ஆர்யன் மேலே போலீஸ்ல புகார் கொடுக்க வச்சிட்டியா?”
“நீ கவலைப்படாதே, சல்மா! ஆர்யனுக்கு எதும் ஆகாது. என்ன செய்யணும்னு தெரிஞ்சி தான் நான் செய்றேன். இனி எந்த வகையிலும் இவான் கஸ்டடி கேஸ்ல ஆர்யன் வெற்றி பெற முடியாது. அதான் நமக்கு வேணும். இந்த சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து வராது”
“கரீமா, சல்மா! என்ன பேசிட்டு இருக்கீங்க? ஆர்யனும் இவானும் எப்போ வராங்க? அவன்ட்ட இருந்து செய்தி வந்ததா?”
“வாங்க அம்ஜத் டியர்! நாளைக்கு ஆர்யனும் இவானும் வந்துருவாங்க. அவங்களை வரவேற்கற ஏற்பாட்டை பத்தி தான் பேசிட்டு இருக்கோம். நீங்க என்ன செய்ய போறீங்க?”
“ஆஹா! நான் மலர்கொத்து ரெடி செய்றேன்”
“வாங்க நாம போய் தோட்டத்துல பூக்களை தேர்ந்தெடுத்து வைப்போம். சல்மா! ஆபீஸ்ல இருந்து வந்துருக்கே, நீ போய் ஓய்வெடு”
“சரி அக்கா!”
——-
“இவான்! நீ உள்ளே போய்முகம் கழுவு” என வீட்டினுள் அனுப்பி வைத்த ஆர்யன் பின்னால் வந்து நின்ற ருஹானாவிடம் பொரிந்து தள்ளினான்.
“நீ.. நீ… இப்படி ஒரு அபத்தமான காரியம் செய்வீயா? இவானை என்கிட்டே இருந்து கடத்த பார்க்கிறியா? என்ன தைரியம் உனக்கு?”
அதற்குள் பயத்தை உதறி இருந்த ருஹானா “ஏன்? நீங்க மட்டும் என்ன? நீங்களும் அதே தானே செய்ய பார்க்கிறீங்க? என்னை நீங்க தான் இந்த நிலைமைக்கு தள்ளி விட்டீங்க! எனக்கு பைத்தியம் பிடிக்குது. என்ன செய்ய, என்ன நினைக்க… ஒன்னும் புரிய மாட்டேங்குது!” என கத்தினாள்.
ஆர்யன் பதில் சொல்லாமல் அவளை முறைத்து பார்க்க ருஹானா உள்ளே இருப்பதை எல்லாம் கொட்டினாள். “வேற நாட்டுக்கு தூக்கிட்டு ஓட முயற்சி செய்றீங்களே! அவன் என்னோட உயிர். என் அக்காவோட, என் அப்பாவோட வாரிசு. அவனை நான் போக விட மாட்டேன்”
“இவான் மேலே உண்மையிலேயே உனக்கு அன்பு இருந்தா, அவனை நீ தடுக்கக் கூடாது”
“முடியாது. நீங்க இவானை தூக்கிட்டு போக நான் விடவே மாட்டேன்”
“நீ மட்டும் இல்ல. ஆர்மியே என் எதிரே வந்து நின்னாலும் என்னை தடுக்க முடியாது”
எல்லையில்லா அன்பு ஒன்றே
எல்லை தாண்டிட துணிகிறது
இணையில்லாது தான்
இனியவளின் அன்பும்,
ஈடில்லா உறவும்…
எனினும் என்னுடன் மட்டுமே
இளையவனின் பாதுகாப்பு…!
அவள் கையை பிடித்து இழுத்து வீட்டின் உள்ளே தள்ளியவன், வெளியே நின்று கதவை பூட்டி தாளிட்டான்.
“என் அனுமதி இல்லாம இனிமேல் நீ எதுவும் செய்ய முடியாது. இந்த வீட்டை விட்டு வெளியேவும் போகக் கூடாது”
——
“அக்கா! என்ன, ஒரு தகவலும் வரல?”
“கொஞ்சம் பொறுமையா இரு, சல்மா”
“இவானை சமூகசேவை நிறுவன ஆட்கள் கூட்டிட்டு போய்டுவாங்க, தானே?”
“ஆமா, அவன் போயிட்டான்னா, அவன் அழகு சித்திக்கும் இங்க வேலை இல்ல. அவளும் நடையை கட்ட வேண்டியது தான்”
“இன்னைக்கு நைட்டே எல்லாம் முடிஞ்சிட்டா நல்லா இருக்கும் அக்கா”
“காத்திரு, சல்மா. இனி நம்ம ராஜ்யம் தான்”
——
இவானும், ருஹானாவும் சமைத்த இரவு உணவை கொண்டுவந்து வரவேற்பு அறை மேசையில் வைக்க ஆர்யன் கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தான்.
“சித்தப்பா! நாங்க ரெட் பாஸ்தா செஞ்சிருக்கோம். சித்தி உருளைக்கிழங்கை எனக்கு பிடிச்ச மாதிரி வறுத்து இருக்காங்க. வாங்க சாப்பிடலாம்”
ஆர்யன் ருஹானாவை கடுப்பாக பார்த்துக்கொண்டே “நான் போய் கை கழுவிட்டு வரேன், சிங்கப்பையா” என்று உள்ளே சென்றான்.
“வா, செல்லம் நாம உட்காரலாம்” என இவானை அருகில் ருஹானா அமர வைத்து உணவை தட்டில் பரிமாறினாள்.
ஆர்யன் வந்தபின் மூவரும் சாப்பிட துவங்கினர்.
“சித்தப்பா! நாம இங்க இருந்து போனதுக்கு அப்புறம் இந்த ஆடுகள்லாம் என்ன ஆகும்?”
“ஜோஹ்ரா பாட்டி பார்த்துக்குவாங்க, அக்னி சிறகே”
“ஆனா அதுல ரெண்டு ஆடு என்னோட ப்ரண்ட்ஸ் ஆகிடுச்சே! ஆமா தானே சித்தி?”
“ஆமா செல்லம்” எந்த உணர்வுமின்றி ருஹானா பதிலை சொன்னாள்.
“சரி சிங்கப்பையா” என ஆர்யன் ஒத்துக் கொள்ளவும் ‘ஒஹ்! அது எப்படி?’ என்பதுபோல் ருஹானா ஆர்யனை பார்க்க, அவன் முறைப்பு பார்வை ஒன்றை பதிலாக தந்தான்.
அப்போது போலீஸ் சைரன் ஒலி கேட்டது.
மூவரும் திடுக்கிட்டு விழிக்க, இவான் “சித்தி!” என பாய்ந்து ருஹானாவை கட்டிக்கொண்டான்.
“பயப்படாதே, செல்லம்!” என அவளும் அவனை அணைத்துக்கொள்ள, ஆர்யன் திரையை விலக்கி வழித் தடத்தை பார்த்தான். காவல் வண்டி ஒன்று வந்து கொண்டிருந்தது.
“என்னை கூட்டிட்டு போக வராங்களா, சித்தப்பா?” என நடுங்கியபடி இவான் கேட்க, ஆர்யனுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.
“சித்தி! என்னை அவங்களோட அனுப்பிடாதீங்க” என இவான், ருஹானாவை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
இவானை தூக்கிக்கொண்ட ஆர்யன் “நான் சொல்றவரை எந்த சத்தமும் செய்யக்கூடாது, சரியா?” என கேட்க, இவான் “சரி” என்றான்.
“யார் உள்ளே?” வெளியே இருந்து காவல் அதிகாரியின் குரல் உள்ளே ஊடுருவியது.
இவானை படுக்கையறைக்கு ஆர்யன் தூக்கி செல்ல, ருஹானா அப்படியே நின்றாள்.
“யாராவது இருக்கீங்களா? மன்னிக்கணும். கொஞ்சம் வெளிய வாங்க” மறுபடியும் குரல் கேட்க, ஆர்யன் தடுப்பின் பின்னே நின்று ருஹானாவை பார்த்தான்.
வெளியே நின்ற அதிகாரிக்கு ருஹானா மட்டும் பார்வைக்கு புலப்பட “மேம்! இங்க வாங்க” என கூப்பிட்டார்.
ருஹானா ஆர்யனை முறைத்து பார்த்து நிற்க, ருஹானா என்ன செய்வாளோ என ஆர்யன் அவளை பார்க்க, அதிகாரி திரும்பவும் அழைக்க, ருஹானா கதவை திறந்து மெல்ல வெளியே வந்தாள்.
“நாங்க ஒரு சின்ன பையனை தேடிட்டு இருக்கோம். அவன் இங்க இருக்கான்னு எங்களுக்கு தகவல் கிடைச்சது” ஒரு அதிகாரி ருஹானாவிடம் பேச, மற்ற அதிகாரியின் பார்வை வீட்டினுள் நோட்டம் விட்டது.
‘ஆர்மி தடுத்தாலும் தூக்கி செல்வேன்’ என்று ஆர்யன் சொன்னது ருஹானாவின் காதில் ஒலிக்க ‘நான் விடவே மாட்டேன்’ என ருஹானா சொன்னது ஆர்யன் கவனத்தில் இருந்தது.
வெளியே நடப்பதை வைத்துத்தான் அடுத்து தான் செய்யவேண்டிய செயலை தீர்மானிக்க வேண்டும் என்று, வெளியே கேட்கும் சிறு ஒலியையும் உற்று கேட்க ஆர்யன் காதை தீட்டிக்கொண்டு நின்றான்.
“நான் பேசினது உங்களுக்கு கேட்டுதா, மேம்? நாங்க இவான் அர்ஸ்லான்னு ஒரு சிறுவனை தேடுறோம். இங்க அப்படி யாராவது இருக்காங்களா?”