“குடும்பத்தை எப்படி பாதுகாக்கறது? சிரிச்சி கொஞ்சி பேசி பாசமா அவங்களை காப்பாத்தலாம். கடுமையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வளையங்கள் போடலாம். நான் ரெண்டாவது வழியை கடைபிடிக்கிறேன். இவானுக்கு அது புரியும்” 

என் குடும்பமே எனக்கு உலகம்

அதன் எல்லை காவலன் நான்

இராணுவ நடைமுறைகள் இங்கே

சிறுதீங்கும் சிங்கபையனை அணுகிடாது

எல்லைகளை கவனித்தே உள்ளிருந்த

தொல்லைகளை கணிக்க தவறியவன்

“இவானோட சித்தி என்னை முரடன், கோபக்காரன்னு சொல்லியிருக்கலாம். ஆனா நான் என் அண்ணன் பையனை இந்த உலகத்துல எதை விடவும் அதிகம் நேசிக்கிறேன்”

“புரியுது, ஆர்யன் சார்! ருஹானா மேம் கூட இதே தான் சொன்னாங்க. நீங்க இவான் கூட பழகும்போது வேற ஆளா மாறிடுவீங்கன்னு”

பெண் அதிகாரி நல்லவேளையாக அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ‘ஓஹ்! இப்படி தான் சொன்னாளா? என்னை பத்தி இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்காளா?’ என ஆர்யன் மனம் அமைதியடைந்தது.

“ஆமா! இவான் விஷயத்துல என்னோட குணம், என்னோட தனித்தன்மை எல்லாமே பின்னாடி போய்டும்”

கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்துவிட்டு, கீழே இறங்கிய ஆர்யனை வேகமாக எதிர்கொண்ட ருஹானா “என்ன சொன்னாங்க?” என ஆவலோடு கேட்க, அவளை எந்தவித உறுத்தலுமின்றி கனிவாக பார்த்த ஆர்யன் “இன்னும் ஒன்னும் சொல்லல. ஆனா நல்லவிதமா தான் போச்சி” என்று பதிலளித்தான்.

ஆர்யனும், ருஹானாவும் முகம் நோக்கி பேசுவதை எரிச்சலுடன் சல்மா பார்க்க, “இனி என்ன ஆகும்? இவான் இங்க சந்தோசமா இருக்கான்னு அவங்க ஏத்துக்குவாங்களா?” என ருஹானா அடுத்த நிலைக்கு செல்ல, அவளுக்கு ஆர்யன் பதில் சொல்வதற்குள்  வக்கீல் “சட்ட நடைமுறைகள் முடிய நேரம் எடுக்கும். சீக்கிரமே நல்லது நடக்கும்” என்றார்.

நல்வாழ்த்துக்களை ரஷீத் சொல்ல அங்கே ஆனந்தம் தாண்டவமாடியது. “எப்போ இவான் வீட்டுக்கு வருவான்?” என ருஹானா வக்கீலிடம் கேட்க “நாளைக்கே கூட வரலாம்” என்று அவர் சொன்னார்.

“நாளைக்கா?” என ருஹானா ஆனந்த கண்ணீர் வடிக்க, அவள் சந்தோசம் கண்டு ஆர்யனின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.  

———-

லைலா செய்து முடித்திருந்த குக்கீசை எடுத்து இவானிடமும், ஹஸலிடமும் காட்டி “என்ன வாசனை பாருங்க!” என்று சொல்ல, தலையாட்டிய இவான் “அப்படியே என் சித்தி வாசனை! இதை முகர்ந்து பாருங்க” என ருஹானாவின் ஸ்கார்ப்பை லைலா முன்னே நீட்டினான்.

இவானை இரக்கமாக பார்த்த லைலா “இவான்! நீ உன் சித்தியை தேடுறீயா?” என கேட்க “ஆமா! ஆனா இதை நான் பிடிச்சிட்டு இருந்தா என் சித்தியை பிடிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கும்” என ஸ்கார்ப்பை சுருட்டி பிடித்து காட்ட, வெளியே நின்ற இரு சுட்டி பையன்களும் எட்டி பார்த்தனர்.

“நீ சீக்கிரமே உன் சித்தி கூட சேர்ந்துடுவே. வாங்க இப்போ நாம இதை சாப்பிடலாம்” என லைலா இருவரையும் அழைத்துப் போனார்.

———

ஹெமதுல்லாவின் தங்கை தௌலத் வாகிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். ‘ஒண்ட வந்த பிடாரி என் அண்ணனை சாக அடிச்சிட்டியே!’ என்று வாகிதாவின் கழுத்தை பிடித்து தௌலத் வெளியே தள்ள, ‘கமிஷனர் வாசிம் வந்ததும் சொல்லிவிட்டு செல்கிறேன்’ என்று வாகிதா அழுதும் தௌலத் அவளை உள்ளே விடவில்லை.

பகலெல்லாம் எங்கு போவது என தெரியாமல் சுற்றி திரிந்த வாகிதா, அந்தி சாயும் நேரம் ஒரு பூங்காவில் அமர்ந்து அழுதுக்கொண்டிருக்க, அவளை வீட்டில் காணாமல் தேடிய வாசிம் அவள் கைபேசி சமிக்ஞையை வைத்து அவள் இருக்குமிடம் அறிந்து அவளை தேடி வந்து சமாதானம் செய்து, பெரியப்பாவிற்கு அவர்கள் இருவரும் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தியும் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.

——-    

அம்ஜத்துக்கு கரீமா மாத்திரை கொடுத்து கொண்டிருக்க, அம்ஜத் “எனக்கு எப்படி தூக்கம் வரும்? என்ன நடக்கும்னு தெரியலயே?” என புலம்ப அங்கே வந்த சல்மா “நல்லா தூங்குங்க மச்சான். இவான் நாளைக்கு திரும்பி வர போறான்” என அக்காவை பார்த்துக்கொண்டே இகழ்ச்சி புன்னகையுடன் சொன்னாள்.

“என்ன நாளைக்கு வர்றானா!! நிஜமாவா?” சந்தோசத்தில் அம்ஜத் குதிக்க, “ஆமா! அப்படித்தான் வக்கீல் சொன்னார்” என உதட்டை சுளித்து சல்மா சொல்ல, வாயிலிருந்து வார்த்தை வராவிட்டாலும் கரீமாவின் முகத்தில் கடுப்பு ஏறியது.

அம்ஜத் உற்சாகமாக வெளியே செல்ல, கதவை தாளிட்ட சல்மா “ஆர்யனும், சூனியக்காரியும் அதிகாரிகளுக்கு திருப்தி தர பதில்களை சொன்னாங்களாம். அக்கா! என்ன இது? எத்தனை பெரிய முயற்சி செய்தோம். எவ்வளவு ரிஸ்க் எடுத்தோம்? எல்லாம் பாழா போச்சா?” என்று நொந்து கொண்டாள்.

நக்கல் சிரிப்பு சிரித்த கரீமா “என்ன செஞ்சாலும் இவான் இந்த மாளிகைக்கு வர மாட்டான். போனவன் போனது தான்” என்று சொல்ல, குழம்பி போன சல்மா “என்னக்கா சொல்றே? அது எப்படி நடக்கும்?” என்று கேட்க, “பொறுத்திரு சல்மா! நீயே உன் கண்ணால பார்ப்பே!” என அடக்கமாக புன்னகை செய்தாள்.

——-

ருஹானா குதூகலமாய் இவானின் அறையை அலங்கரிக்க, வழக்கம் போல ஆர்யன் வந்து கதவருகே நின்றான். அப்போது மிஷால் போன் வர வழக்கம் போல ஆர்யன் கோபம் கொண்டான்.

“சாரி மிஷால்! உன்கிட்டே பேச நேரமே கிடைக்கல. இவான் திரும்பி வர போறான்”

“இதுக்கு நான் சந்தோஷப்படறதா, வருத்தப்படுறதான்னு எனக்கு தெரியல, ருஹானா”

“நீ என்ன சொல்றே, மிஷால்?”

“இவான் உன்கிட்டே வர போறான்னு எனக்கு மகிழ்ச்சி தான். ஆனா நீ ஏன் அதிகாரிங்க கிட்டே அந்த முரடனை பத்தி சொல்லல? நீ இவானை காப்பாற்றி இருக்கலாம். உன்கூட கொண்டு வந்துருக்கலாம். அந்த மர்ம மாளிகைல இருந்து வெளியேறியிருக்கலாம். உனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை தவற விட்டுட்டே, ருஹானா”

“மிஷால்! இவானுக்கு நானும் தேவை அவன் சித்தப்பாவும் தேவை. இதை நீ புரிஞ்சிக்கோ” என ருஹானா சொன்னதை கேட்ட ஆர்யனின் உள்ளம் நெகிழ்ந்தது.

“மிஷால்! எனக்கு இப்போ வேலை இருக்கு, நான் அப்புறமா உனக்கு போன் செய்றேன். நீ போன் செய்ததுக்கு நன்றி” என ருஹானா வைக்கவும் அப்போது தான் வருபவன் போல ஆர்யன் உள்ளே வந்தான்.

“நீ இவானுக்கு கேட்ட பொம்மைலாம் நான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வந்துடும்” என ஆர்யன் சொல்ல ருஹானா நன்றியுரைத்தாள். அப்போது நஸ்ரியா ஓடிவந்தவள் ‘ஓவனில் ருஹானா வைத்த கேக் தயாராகிவிட்டது’ என சொல்ல ருஹானாவும் அவளுடன் வேகமாக வெளியே சென்றாள்.

ருஹானாவின் உற்சாகமும், ஆர்வமும் முக்கியமாக அவளது வார்த்தைகளும் ஆர்யனுக்குள் எதையோ நகர்த்த, அவனும் நிறைவாய் உணர்ந்தான். ஓடும் அவளையே பார்த்திருந்தான்.

———

விதவிதமாய் கேக்குகள், குக்கீஸ், பலகாரங்கள், பானங்கள் என ஏகப்பட்ட பண்டங்களை செய்து முடித்த ருஹானா அவற்றின்மீது சாக்லேட் துருவல்கள் போட்டு அலங்கரித்துக்கொண்டு இருந்தாள்.

“இன்னைக்கு இவ்வளவு வேலை செஞ்சி சோர்வாகிட்டேன்னா, நாளைக்கு எப்படி நீ இவானோட விளையாடுவே, ருஹானா?”

“இதெல்லாம் ஒரு வேலையே இல்ல, சாரா அக்கா! இவான் வந்துட்டா போதும். இன்னைக்கு நைட் தூங்காம கூட இருந்து வேலை செய்வேன்”

“இன்ஷா அல்லாஹ்! லிட்டில் சார் சீக்கிரம் திரும்பி வரணும்”

“இன்ஷா அல்லாஹ்!”

“சரி! நான் போய் படுக்கறேன், ருஹானா. நீயும் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு கொஞ்ச நேரமாவது தூங்கு”

“சரி தான் சாரா அக்கா. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி”

சாரா சந்தோசமாக அவள் தோளை தட்டி செல்லவும், ருஹானா வேலையை தொடர்ந்தாள்.

அப்போது உள்ளே வந்த ஆர்யன் சமையலைறையின் கண்கொள்ளா காட்சியில் திகைத்துப்போய் நின்றான்.

“நீ இன்னும் தூங்கலயா? கிச்சன்ல லைட் எரியவும் சாரா தான் இருக்காங்கன்னு நான் காபி கேட்கலாம்னு வந்தேன்”

“அவங்க இப்போ தான் படுக்க போனாங்க. நான் காபி போட்டு தரேன்”

ருஹானா காபி தயாரிக்க, கிச்சனை சுற்றி திரும்ப ஒருமுறை கண்ணை சுழற்றிய ஆர்யன் “இது எல்லாமே இவானுக்காகவா?” என்று கேட்டான். 

“ஆமா! எல்லாமே அவனுக்கு பிடித்தது” என அவள் சிரிப்புடன் சொல்ல, “ம்.. அவன் இதெல்லாம் பார்த்ததும் சந்தோசத்தில குதிக்க போறான்” என்று ஆர்யன் சொல்ல, ருஹானாவும் ஆனந்தமாக தலையாட்டினாள்.

——- 

‘இவான் பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும் ஸ்கார்ப்பை பிடுங்குவது தான் அவனை பழிவாங்க ஒரே வழி’ என முடிவு செய்து மெஹ்மத்தும், புராக்கும் அதை அபகரிக்க முயற்சி செய்ய, அதை நிறைவேற்றுவது அவர்களுக்கு இமாலய சாதனையாய் இருந்தது.

அந்த பிஞ்சு கையில் அத்தனை பலம் இருக்கும் என எதிர்பார்க்காத சற்று பெரிய பையன்கள் இருவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். என்றாலும் தளராமல் இருவரும் சேர்ந்து அதை இழுக்க இவான் புராக்கை தள்ளி விட்டான். ஸ்கார்ப்பை பத்திரமாக பின்னால் வைத்துக்கொண்டு கத்தினான்.

அவன் சத்தம் கேட்டு ஓடிவந்த லைலா மூவரையும் பிரித்துவிட்டு மற்ற இருவரையும் திட்டினார். ‘அடுத்தவர் பொருளை அபகரிக்க நினைப்பது தவறு’ என்று புத்தி சொல்லி புராக்கை அவன் அறைக்கு அனுப்பியவர், மெஹ்மத்தையும் படுக்க சொல்லி, இவானை ஆறுதல்படுத்தி படுக்க வைத்தார்.

லைலா சென்றதும் படுக்கையிலிருந்து எழுந்த மெஹ்மத் “அதை எப்படியும் நான் உன்கிட்டே இருந்து பிடுங்கி எங்கயாவது தூக்கிப் போட்ருவேன்” என்று சொல்ல, இவான் பயந்து போனான். மெஹ்மத் தூங்கும்வரை விழித்திருந்தவன் கண்களுக்கு மேசையில் இருந்த சாவி தென்பட்டது.

லைலா இவர்கள் சண்டையை விலக்க வந்தபோது பின்பக்க கதவை மூடி கொண்டு வந்த சாவியை மேசை மேல் வைத்தவர் திரும்ப எடுத்து செல்ல மறந்திருந்தார். இவான் மெல்ல எழுந்து அந்த சாவியை எடுத்தவன் சாவி கொண்டு கதவை திறந்து பின்புறமாக வெளியே வந்து அந்த சிறுவர் விடுதியிலிருந்து வெளியேறினான். வெளியே நட்ட நடுநிசியில் இருட்டு அவனை மிரட்டியது. 

(தொடரும்)