அதற்குள், பேசியத் தொகையை கொடுத்து காரை அனுப்பி வைத்திருந்தாள் மலர்விழி. கைகளில் ட்ராலியை இழுத்தபடியே உள்ளே வந்தவள், “பொண்டாட்டி லக்கேஜை எடுத்துட்டு வராளே, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவோம்னு மனுஷனுக்கு அக்கறை இருக்கா?” கணவனை இடித்தபடி முணுமுணுத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள்.

“ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நான் தானே லக்கேஜை கொண்டு வந்து தந்து ட்ரையின் ஏத்திவிட்டேன், இப்போ இறக்க ஹெல்ப் பண்ண.” அவளைப் போலவே முணுமுணுத்து கொண்டாலும் மனைவிக்கு உதவி செய்ய தவறவில்லை ராகவன்.

ராகவனின் வார்த்தைகள் தெளிவாக காதில் விழ, நின்றவள், “பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் தல, இனிமே ஒரு தடவை அதை ஞாபகப்படுத்தினாலும் கடிச்சி வச்சிடுவேன்” என்றாள் கடிப்பது போல ஆக்ஷன் செய்து.

“அது சரி… நீ செய்யுறவ தான்.” கனவின் ஞாபகத்தில் கன்னத்தை தடவினான் ராகவன்.

“எப்போ… எப்போ கடிச்சேன் நான்?” பரபரப்பாக கேட்டாள் மலர்விழி.

“அதை உனக்கு சொல்லுறதுக்காகத் தான், நாங்க காத்துக் கிடக்குறோமா? போவியா…” அலட்சியம் போலச் சொல்லிக்கொண்டே தங்கள் அறைக்குள் நுழைந்து லக்கேஜை வைத்த ராகவனுக்கு, மனைவி மக்களின் வரவில் அந்த வீடே சொர்க்கலோகமாக மாறியது போலத் தோன்றியது.

அதற்கிடையில் பிள்ளைகள் ஒவ்வொரு அறையாக நுழைந்து வெளியே வந்திருந்தார்கள். மலர்விழியும் வீடு முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு, “ம்ம்… பரவாயில்ல, நான் இல்லாமக்கூட வீட்டை நல்லாவே மெயின்டெய்ன் பண்ணுறீங்க” என்று சான்றிதழ் கொடுத்தாள்.

முறைத்தான் ராகவன், அதைப் புறந்தள்ளியவள், “இப்பிடி மசமசன்னு நின்னா ஆச்சா? இவ்ளோ தூரம், தனியா பிள்ளைங்களோட ட்ராவல் பண்ணி வந்துருக்கேன். ஒரு காப்பித்தண்ணி கூட கிடையாதா?” என்றாள் கேலியாக.

ஒரு மார்க்கமா வந்திறங்கியிருக்கும் மனைவியைப் பார்த்தபடியே சமையலறைக்குள் சென்ற ராகவன், ஃப்ரிட்ஜிலிருந்த பாலை எடுத்து அடுப்பில் வைத்தான்.

“எனக்கு டிக்காஷன் ஸ்ட்ராங்கா” என்றபடியே பின்னால் வந்தாள் மலர்விழி.

ராகவனோ, பாலைக் காய்ச்சி, அதில் போர்ன்விட்டாவைக் கலந்து பிள்ளைகள் குடிக்கும் பதத்திற்கு ஆற்றி எடுத்துக் கொண்டு மக்களிடம் சென்றான்.

“ஹ்ம்ம்… பொண்டாட்டி மேல ஒரு மரியாதையே இல்லாமப் போச்சு.” அலுத்துக் கொண்டபடியே கணவனுக்கு பிடித்த பதத்தில் இரண்டு கப்பில் காஃபியை கலந்தவள், ஒன்றை அவனிடம் நீட்டினாள். வாங்கிக்கொண்டான்.

தனக்கான காஃபியோடு வீட்டின் பின்பக்கம் ஆவலோடு சென்றாள் மலர்விழி.

ஆமாம்… ராகவனின் காதல் மல்லிகையைப் பற்றி அவன் உடன்பிறப்புக்கள் ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்ததில் அதைக் காணும் ஆவல் அவளிடம் அதிகமே.

அந்த மல்லிகையின் ஒற்றைப் பந்தலே, கணவன் தன்மீது வளர்த்து வைத்திருந்த நேசத்தின் அளவைச் சொல்லியது பெண்ணுக்கு.

கண்கள் கசிய ஆசையாக அதைத் தடவிக் கொடுத்தவள், அருகே கேட்ட பிள்ளைகளின் ஆர்ப்பரிப்பான குரலில் நிதானத்துக்கு வந்தாள்.

தலைவியின் வருகை தெரிந்திருந்ததோ என்னவோ, அந்த மல்லிகை வழக்கத்திற்கு மாறாக அன்று அதிகமாகவே பூத்திருந்தது.

மொட்டவிழ ஆரம்பித்த மல்லிகையின் மணம், சுற்றுப்புறம் முழுமையும் அதன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்திருக்க, ஆவலாக மொட்டுக்களை கொய்தாள் மலர்விழி. உடன் இணைந்து கொண்டான் பிள்ளைகளோடு அங்கே வந்திருந்த ராகவன்.

தன் சுடிதார் துப்பட்டாவில் மொட்டுக்களை சேகரித்திருந்த மலர்விழி, வீட்டுக்குள் வந்ததும் கால் நீட்டி தரையில் அமர்ந்து அதை நூலில் கோர்க்க ஆரம்பித்தாள்.

விரலில் நூலை சுழற்றி சுழற்றி பூவை கட்டிக் கொண்டிருந்த தாயைப் பார்த்த நாச்சி, “ம்மா… நானும்” என்றபடி கால்நீட்டி அமர்ந்துவிட, ஒரு துண்டு நூலைக் கையில் கொடுத்து, பூவைக் கோர்க்கவும் சொல்லிக் கொடுத்தாள் மலர்விழி.

ஆனால், அந்த பிஞ்சுக் கைகளுக்குள் பூ சிக்குவேனா என்று கண்ணாமூச்சி ஆடியது. அதை ஒத்துக் கொள்ள முடியாமல் உதடு பிதுக்கினாள் அவர்களின் குட்டி தேவதை.

“இப்பிடி இல்ல கண்ணம்மா” மகளை மடியில் தூக்கி வைத்து, அவள் கைகளைப் பிடித்து தானே மலர்விழி பூக்களை கோர்க்க, நாச்சியிடம் இப்போது சிரிப்பு.

மகனோ, அங்கே கிடந்த சிறிய சைக்கிளில் ஆரவாரமாக ஹாலை வட்டமிட்டான்.

எல்லாம்… எல்லாம்… பார்ப்பதற்கே கவிதையாக இருந்தது ராகவனின் கண்களுக்கு.

‘ஒன்றை அடைய இன்னொன்றை இழக்க வேண்டும். இது தானே உலக நியதி. உடன்பிறந்தவர்களின் வாழ்க்கைக்காக, ஐந்து வருட குடும்ப வாழ்க்கையை இழந்திருக்கிறேன்.’

இத்தனை நாட்களில், மனதை இப்படி சமாதானப்படுத்தியிருந்த ராகவன், நடந்த எதைச் சொல்லியும் மனைவியின் மனதை நோகடிக்க இப்போது தயாராக இல்லை.

தங்கள் அறையிலிருந்த குளியலறையில் பிள்ளைகளை குளிக்க வைத்து, தானும் குளித்து உடை மாற்றி மலர்விழி வெளியே வரும்போது சுடச்சுட இட்லியோடு காத்திருந்தான் ராகவன்.

“பரவாயில்ல… ஒத்தரோசா பிள்ளையை நல்லாவே வளத்துருக்காங்க.” கணவனைக் கேலி செய்த மலர்விழி, கட்டிவைத்த மல்லிகையை தலையில் சூடிக்கொள்ளும் முன் மகளைப் பார்த்தாள். அவளுக்கு ஏற்கனவே குடுமி கட்டி பூ வைத்து விட்டிருந்தான் ராகவன்.

“நான் தான் சொன்னேன்ல” என்று அதற்கும் சிரித்தாள். முறைத்தான் ராகவன்.

அந்த நேரம் ஜெயந்தியிடமிருந்து மலர்விழிக்கு அழைப்பு வந்தது‌. “அண்ணி… ஊருக்கு வந்துருக்கீங்களா? எங்ககிட்ட சொல்லவே இல்ல.” ஆரவாரமாக பேச்சைத் தொடங்கினாள் ஜெயந்தி.

“சர்ப்ரைஸ்” என்று பதில் சொன்ன மலர்விழி, “நான் தான் வர்றதை யாருக்குமே சொல்லலையே, அப்புறம் உனக்கு எப்படி தெரிஞ்சது ஜெயந்தி?” என்றாள் யோசனையோடு.

“அம்மா தான் சொன்னாங்க ண்ணி. அவங்களுக்கு பிள்ளைங்களைப் பாக்க ஆசையா இருக்குதாம். ஆனா தனியா அங்கவர தயக்கமா இருக்குப் போல. அதான் என்னைப் கூப்பிடுறாங்க” என்ற ஜெயந்தி, ‌

“நாங்க ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு திருநெல்வேலிக்கு வந்துருக்கோம். அதான் என்னால இப்போ வரமுடியல, நாளைக்கு வரேன் ண்ணி” என்றவள் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டாள்.

“என்ன சொல்லுறா ஜெயந்தி?” பேசியது தங்கை எனத் தெரியவும், கேட்டான் ராகவன். ‌

“நாங்க வந்திருக்கிறதை ஒத்தரோசா” என்றவள், கணவனின், “மலர்…” என்ற அதட்டலில், “உங்க அம்மா ஜெயந்தி கிட்ட சொன்னாங்களாம்” என்றவள், ஜெயந்தி சொன்ன மொத்தத்தையும் சொல்லி முடித்தாள்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தெய்வானை என்றால் மட்டும் மலர்விழிக்கு வேப்பங்காய் தான்.

சிறிது நேரத்தில் ஆனந்தி, கதிரேசன் இருவரிடமிருந்தும் அழைப்பு வந்தது. தங்கள் சந்தோஷத்தை அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆனந்தி, “அம்மா, பிள்ளைங்களைப் பார்க்க ஆசப்படுறாங்க ராகவா, வந்தா எதுவும் சொல்லிடாத டா” என்றாள் வேண்டுதலாக. அதற்கு பதிலேதும் இல்லை அவள் தம்பியிடமிருந்து‌.

பிள்ளைகளோடு இருவரும் அமர்ந்து உணவை உண்டு முடித்தார்கள். சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவி, கிச்சனை சுத்தப்படுத்தினாள் மலர்விழி. பிள்ளைகளை தூங்க வைக்க படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான் ராகவன்.

வேலை முடிந்ததும், முன்வாசல் கதவையும், பின்வாசல் கதவையும் தாழ் போட்டுவிட்டு படுக்கை அறைக்கு வந்தாள் மலர்விழி. தகப்பனின் இரு தோள்களிலுமாக பள்ளிகொண்டிருந்தார்கள் அவர்களின் பிள்ளைகள்.

இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு, கணவன், மனைவி இருவரும் தூங்கும் அளவிற்கு அந்த கட்டில் பெரியது இல்லை.

எனவே தரையில் பாய் விரித்து, அதில் படுத்த மலர்விழி,

“அதான், ரெண்டு பிள்ளைங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிடிச்சில்ல, கொஞ்சம் பெரிசா கட்டில் வாங்கி போட்டாத்தான் என்னவாம்? சரியான தத்தி வாத்தி.” முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று சத்தமாகவே சொன்னாள்.

மனைவி தன்னை சீண்டுகிறாள் என்பது அப்பட்டமாக புரிந்தது ராகவனுக்கு. தன் தோளில் கிடந்த பிள்ளைகளை மெதுவாக படுக்கையில் விட்டு அணைவாக தலையணைகளையும் வைத்த ராகவன், மனைவிக்கு அருகே வந்து படுத்தான்.

“ஆனாலும், இன்னைக்கு ரொம்ப பேசுது இந்த வாய்.” அலட்டிக் கொள்ளாமல் சொன்னவன், தண்டனை தருகிறேன் பேர்வழி என்று வழக்கம் போல பரிசுகளையேத் தந்தான்.

கணவனின் கைகளுக்குள் எந்த தயக்கமும் இன்றி அடைக்கலமாகிக் கொண்டாள் மலர்விழி. சற்றுநேரம், இருவருக்கிடையே மௌனமே உரக்கப் பேசியது.

அந்த மௌனத்தை முதலில் கலைத்தாள் மலர்விழி. “சாரி ராகவ், நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல. என்னயிருந்தாலும் நான் உங்களை விட்டுட்டுப் போயிருக்க கூடாது” என்றவளின் குரல் பிசிறடித்தது.

“சரி விடு… அந்த ஐந்து வருஷத்துக்கும் சேர்த்து வச்சி இனி வாழ்ந்துட்டாப் போச்சு.” ஆறுதலான குரலில் சொல்லியவனின் கைகள், தன் அணைப்பை அதிகப்படுத்தியது.

“இல்ல ராகவ்… நான் பிரச்சனையை ஃபேஸ் பண்ணாம, அதைவிட்டு ஓடுறதுலயேத் தான் குறியா இருந்திருக்கேன். ‌சரியான செல்ஃபிஷ் நான்.” இப்போது அழுகையில் லேசாக குலுங்கியது மலர்விழியின் உடல்.

மலர்விழியின் பேச்சில் தாங்கள் இழந்தது அத்தனையையும் ஞாபகம் வரத்தான் செய்தது ராகவனுக்கு. ஆனாலும் விட்டதை பிடிக்க முடியுமா என்ன? அதுவும் காலத்தை? எனவே தன்னைத் தேற்றிக்கொண்டு மனைவியையும் தேற்றும் முயற்சியில் ஈடுபட்ட ராகவன்,

“யாரோ, பாஸ்ட் ஈஸ் பாஸ்ட், அதப்பத்தி ஞாபகப்படுத்துனா கடிச்சி வச்சிடுவேன்னு சொன்னாங்களே? இப்போ அவங்களே பேசுறாங்க, நான் என்ன பண்ணட்டும் மலர்?” அப்பாவியாக அவளிடமே கேட்டான்.

கணவனின் முயற்சி புரிந்து, தன்னை மீட்டுக் கொண்ட மலர்விழி, “பேசாம நீங்களும் கடிச்சி வச்சிடுங்க ராகவ்” என்றாள் ராகமாக.

மலர்விழி சொல்லி முடிக்கும் முன், அவள் சொல்லியதை செய்து முடித்திருந்தான் ராகவன்.

“யோவ்… ஒரு பேச்சுக்கு சொன்னா, இப்பிடியா உண்மையாவே கடிச்சி வைக்கிறது?” தன் உதட்டைத் தடவியபடியே ராகவன் கொடுத்ததை திருப்பிக் கொடுக்க முயன்றாள் மலர்விழி.

அவளை லாவகமாக தடுத்த ராகவன், தன் மீதே அள்ளிப் போட்டுக்கொள்ள, மலர்விழியின் தாலிக்கொடி ராகவனின் மார்பில் வந்து விழுந்தது.

அதை கையில் அள்ளிக்கொண்டு பார்வையிட்டான் ராகவன். ‘ஆர்’ என்ற ஆங்கில எழுத்து டாலரோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது, அவன் மஞ்சள் கயிற்றில் அணிவித்த மாங்கல்யம்.

“ம்ஹூம்… நான் கட்டிய தாலியையே ஐந்து வருஷம் கழிச்சு, இன்னைக்கு தான் பாக்குறேன்.” ஒரு பெருமூச்சோடு சொல்லிய ராகவன், அந்த மாங்கல்யத்துக்கு அழுத்தமாக முத்தம் ஒன்றை வைத்தான்‌.

சிலிர்த்த மலர்விழி, அவன் காதில் கிசுகிசுக்க, “அடியேய்… அந்த தீச்சர் அப்பாவி டி. இந்த கலெக்டர்…” என்று சொல்லும் முன்னர், அவன் வாயை தன் வாயால் மூடியிருந்தாள் மலர்விழி.

மறுநாள் காலையிலேயே ஜெயந்தியோடு வந்துவிட்டார் தெய்வானை.

மலர்விழி பிள்ளைகளோடு வந்து இறங்கியதை பார்த்த நேரத்திலிருந்து அருகில் வந்து பேரப்பிள்ளைகளை கையில் அள்ளிக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் தான்.

ஆனால், அதைச் செய்ய முடியாமல் தயக்கம் தடைபோடவே, அருகில் இருக்கும் மகளின் தயவை நாடினார். அவளுக்கும் வர முடியாமல் போகவே, தெருவில் அங்குமிங்குமாக நான்கு தடவை நடந்து பார்த்தார். பிள்ளைகள் பெரிதாக அவர் கண்களில் தட்டுப்படவே இல்லை.

மறுபடியும் மகளுக்கு எடுத்து புலம்ப, “உங்க பிள்ள வீடு தானே ம்மா, போங்க, அண்ணா ஒண்ணும் சொல்லாது” என்றாள் ஜெயந்தி.

கொஞ்ச நஞ்சமா பேசினார், ஒன்றுமே இல்லை என்று உதறிவிட்டு மருமகளிடம் வருவதற்கு. எனவே மகள் வரும்வரைக் காத்திருந்து, இதோ வந்துவிட்டார்.

வீட்டுக்குள் வந்ததும் பிள்ளைகளைத் தான் தேடின அவர் கண்கள். பிள்ளைகளோ, “அத்த…” என்று ஜெயந்தியை கட்டிக் கொண்டவர்கள், “இது யாரு?” என்று தெய்வானையைக் காட்டிக் கேட்டார்கள்.

அந்த கேள்வியில் மரித்துப் போனார் தெய்வானை. ‘தன் மக்களை எல்லாம் புகைப்படங்கள் வாயிலாக மலர்விழி அறிமுகப்படுத்தி வைத்திருந்தது போலவே, தன்னையும், தன் கணவரையும் பேரப்பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்திருப்பாள்’ என்று உள்ளூர ஒரு எண்ணம் இருந்தது அவருக்கு. அந்த நம்பிக்கை சுக்கு நூறாகிப் போனதில் பேச்சற்று மௌனமாகிப் போனார் அந்த பெண்மணி.

குழந்தைகளின் கேள்விக்கு அண்ணனும் அண்ணியும் பதில் சொல்ல முயலாமல் போகவே, “பாட்டி” என்று பதில் சொன்னாள் ஜெயந்தி.

“இல்லடா செல்லங்களா… அப்பாம்மை, உங்க அப்பாவோட அம்மா. அதனால, அப்பாம்மை.” சட்டென்று தன்னை சுதாரித்துக்கொண்ட தெய்வானை தன்னுடைய உரிமையை நிலைநாட்ட முயன்றார்.

“அப்பாவோட அம்மாவா? எங்க அம்மா உங்க ஃபோட்டோவே எங்களுக்கு காட்டலையே?” முகவாயை ஒற்றை விரலால் தட்டியபடியே, அடுத்த சந்தேகத்தை எழுப்பினான் கபிலன்.

“உங்க அம்மாகிட்ட எங்க ஃபோட்டோ இல்லையோ என்னவோ, அதான் காட்டியிருக்க மாட்டாங்க. உங்களுக்கு தாத்தா கூட இருக்கார். வாங்க, அவர்கிட்ட உங்களைக் கூட்டிட்டு போறேன்” என்று பேரப்பிள்ளைகளின் கைகளைப் பிடித்தார் தெய்வானை.

குழம்பிப் போய் தகப்பனைப் பார்த்தார்கள் பிள்ளைகள் இருவரும். அவனோ, “கபிலா, அதோ, அணில் ஓடுது பாரு. போ… போய் பக்கத்துல பாரு” என்றான் பின்வாசலைக் காட்டி.

அணில் என்றவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வானையிடமிருந்து கைகளை உருவிக்கொண்டு பின்வாசலை நோக்கி பறந்து விட்டார்கள் இருவரும். கூடவே ஜெயந்தியின் மகளும் ஓடினாள்.

சூழ்நிலை மாறும் சூழல் தெரியவும் பிள்ளைகளின் பின்னால் சென்று விட்டாள் ஜெயந்தி.

அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் தானும் பின்வாசலுக்கு செல்ல முயன்ற தெய்வானை, என்ன நினைத்தாரோ, மலர்விழியிடம், “நல்லாயிருக்கியா?” என்றார் மெதுவாக.

எத்தனை முயன்றும் அவர் பார்வையை மலர்விழியின் முகத்திற்கு கொண்டு செல்லவே முடியவில்லை. ஒருவித பதட்டத்தில் முகமெங்கும் வியர்வை வேறு எட்டிப்பார்க்க, அந்த சூழ்நிலையில் பொருந்த முடியாமல் பின் பக்கம் செல்ல முயன்றவரை,

“ஐந்து வருஷத்துக்கு முன்னாடி பேசியது எல்லாம் மறந்து போச்சா ம்மா?” என்ற ராகவனின் குரல் தடுத்து நிறுத்தியது.

 மனைவியை அசிங்கம் என்றும் அவள் வயிற்றுப் பிள்ளைகள் தங்கள் வாரிசு ஆகிவிட முடியாது என்றும் தாய் பேசியதாக கோதை கூறிய வார்த்தைகள், ராகவனின் மனதில் அப்படியே தங்கிப் போயிருந்தது.

 இப்போது தன் பிள்ளைகளுக்காக வந்து நிற்கும் தாயைப் பார்க்கும் போது மறக்காமல் அது ஞாபகத்திற்கு வர, அந்த வார்த்தைகளை தன் வாயால் கூட சொல்லப் பிடிக்காதவனாக சூசகமாக கேட்டான்.

பிள்ளைகளை தன்னிடம் நெருங்க விடாததிலேயே, மகன் எதைச் சொல்கிறான் என்று தெய்வானைக்கு தெளிவாகவேப் புரிந்தது.

எனவே, “பழைய குப்பையை எல்லாம் கிளறாத ராகவா” என்றார் மெதுவாக.

“ஓஹ்… அப்போ நீங்க பேசுனது எல்லாம் குப்பைன்னு, நீங்களே ஒத்துக்கிறீங்களா?” கேலியாக கேட்ட ராகவன்,

“பெத்து வளர்த்த பிள்ளைங்க வாழ்க்கையில கல்யாண முடிவை நீங்க எடுக்க முடியாத சூழ்நிலை வரும்போது, கண்டிப்பா கோபம் வரும் தான், நான் இல்லைங்கல. அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா நீங்க?” என்றான் கோபமாக.

தெய்வானையின் மனமே சில நாட்களாக அந்த கேள்வியை அவரைப் பார்த்தே கேட்கத்தான் செய்கிறது.

 சரியாகச் சொல்லப்போனால் ராகவனின் பிள்ளைகள் என்று தன் மக்கள் அனுப்பித் தந்த புகைப்படங்களில், சிறுவயது மகனை அப்படியே பிரதி எடுத்தாற்போல இருந்த பேரனையும், தன் இளைய மகளின் சாயலில் இருந்த பேத்தியையும் கண்ட நேரத்திலிருந்து, இந்த கேள்வி அவரை அரித்து தின்று கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் சொன்ன வார்த்தைகள் வார்த்தைகள் தானே.

“காதல் திருமணம், அதுவும் கலப்புத் திருமணம் பிள்ளைங்க செய்யும் போது, பூ போட்டு ஆசீர்வாதம் பண்ணுற அளவுக்கு இன்னும் இங்க எல்லாம் மாறல ராகவா. அந்த நேரத்துல எனக்கு கண்மூடித்தனமான கோபம். என்னென்னவோ அபத்தமா பேசிட்டேன். இப்போ எம்பிள்ளைங்க வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் பெருசா எனக்கு தோணல. அதனால என் வறட்டு கௌரவத்தை எல்லாம் தூக்கி தூரப் போட்டுட்டு வந்துட்டேன்.” தன்னைப் புரிய வைத்து விடும் வேகத்தில் பேசினார் தெய்வானை.

“அப்பவும், மத்தவங்க உணர்வுகளை நீங்க புரிஞ்சிக்கல, உங்கப் பிள்ளைங்களுக்காகத் தான் எல்லாம், இல்ல?” முறுக்கிக் கொண்டு நின்றான் ராகவன்.